இந்தி இயக்குனர் ராஜ்குமார் கிரானி த்ரீ இடியட்ஸ் (3 Idiots) திரைப்படத்தில் இந்தியக் கல்விமுறை மீது பல கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார். தமிழில் நண்பன் என்னும் பெயரில் அத்திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் சங்கர். அதே ராஜ்குமார் இப்போது பிகே (PK) திரைப்படத்தில் மதங்கள், கடவுள்கள், வழிபாட்டு முறைகளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

வேற்றுக் கோளிலிருந்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு வந்து சேர்கிறார் படத்தின் நாயகன் அமீர்கான். தனது கோளுடன் தன்னை இணைக்கும் இணைப்புச் சாதனத்தை (ரிமோட்) ஒரு திருடனிடம் பறிகொடுக்கிறார். அந்தச் சாதனத்தை மீண்டும் பெற்று தனது கோளுக்குச் செல்கிறார். இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.

இணைப்புச் சாதனத்தைத் தேடி பல மனிதர்களிடமும், காவல்துறையிடமும் செல்கிறார் அமீர்கான். அனைவரும் கைவிரித்ததோடு மட்டுமில்லாமல் பகவானிடம் (கடவுள்) முறையிடச் சொல்கிறார்கள். கடவுளைத் தேட ஆரம்பிக்கிறார் அமீர்கான். இந்துக் கோவில்கள், கிறிஸ்தவத் தேவாலயங்கள், இஸ்லாமிய தர்கா, சீக்கிய குர்துவாரா என அனைத்துத் தலங்களுக்கும் செல்கிறார். அனைத்து வழிபாட்டுமுறைகளையும் பின்பற்றுகிறார். ஆனாலும் கடவுளின் உதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைகிறார்.

ஒரு மதம் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது, மற்றொரு மதம் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது. ஒரு மதம் மாமிசம் உண்பதை ஏற்றுக் கொள்கிறது, மற்றொரு மதம் மாமிசம் உண்பதை மறுக்கிறது. ஒரு மதம் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்கிறது, மற்றொரு மதம் உருவ வழிபாட்டை மறுக்கிறது. எதுதான் உண்மையான மதம்? யார்தான் உண்மையான கடவுள்? என சிலைகளிடம் புலம்புகிறான் நாயகன்.

மிகவும் விரக்தியடைந்து ஒரு கட்டத்தில் ‘கடவுளைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள்’ எனத் துண்டறிக்கைகளை வினியோகிக்கத் தொடங்குகிறான். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகப் பணிபுரியும் கதாநாயகி அமீர்கானுக்கு உதவ முன்வருகிறார். நாயகன் தனது பாதுகாப்பு கருதி தான் வேற்றுக் கோளைச் சார்ந்தவன் என்பதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் நாயகியிடம் மட்டும் தெரிவிக்கிறான். இணைப்புச் சாதனத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் துணைபுரிகிறார் அவர்.

கடவுள் குறித்தும் மதம் குறித்தும் பல கேள்விகளைக் கேட்பதால் கதாநாயகனை ‘பிகே’ என்று அழைக்கிறார்கள் மக்கள். இந்தியில் ‘பிகே’ என்றால் குடித்துவிட்டு உளறுவதைக் குறிக்கிறது.

இறைவனை நோக்கிய வழிபாட்டுமுறையைத் தொலைபேசி அழைப்போடு ஒப்பீடு செய்கிறான் பிகே. “ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுக்கும்போது சில சமயம் தவறான இணைப்புக்குச் சென்றுவிடுகிறது. தவறான இணைப்பில் வருபவர் நம்மைத் தவறான திசையில் வழிகாட்டுகிறார். அதனால் உண்மையான இணைப்போடு நாம் பேச முடியாமல் போய்விடுகிறது. அதுபோலவே நாம் கடவுளை நோக்கி முறையிடுகிறோம். ஆனால் நடுவில் ஒரு தவறான இணைப்பு (ராங் நம்பர்) நம்மைத் திசை திருப்பிவிடுகிறது. அதனால் நம் கோரிக்கை கடவுளிடம் சென்றடைவதில்லை. கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வோர்தான் அந்தத் தவறான இணைப்பு” என மக்களிடம் தொலைக்காட்சி ஊடாக சொல்கிறான் பிகே.

amirkhan pk 600

பிகேவின் வாதத்தினை உணர்ந்துகொண்ட மக்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொள்வோரை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பிக்கிறார்கள். “மந்திரம் மூலம் தங்கச் சங்கிலி வரவழைக்கிறீர்களே! அதே மந்திரம் மூலம் உலகம் முழுக்க உள்ள ஏழ்மையை நீக்கிடலாமே! அதனை ஏன் செய்யவில்லை?” என இந்து சாமியா ஒருவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது.

“கிறிஸ்தவத்திற்கு மாறினால்தான் கடவுள்  (இயேசு) ஏற்றுக் கொள்வார் என்று கூறி மதமாற்றம் செய்கிறீர்களே! அப்படியானால் கடவுள் எம்மைப் படைக்கும்போதே கிறிஸ்தவனாகப் படைத்திருக்-கலாமே!” எனப் பாதிரியாரை நோக்கிக் கேள்வி கேட்கப்படுகிறது.

“மதத்தின் பெயரால் பெண்களின் கல்வியைத் தடை செய்கிறீர்களே! எந்தக் கடவுள் அவ்வாறு செய்யச் சொன்னான்?” என இஸ்லாமிய அடிப்-படைவாதிகளை நோக்கி இஸ்லாமியப் பெண்மணி கேள்வி கேட்கிறார்.

பயம்தான் கடவுளை நோக்கி ஒரு மனிதனைச் செல்ல வைக்கிறது என்பதை நிரூபிக்கிறான் பிகே. கல்லூரியில் தேர்வுக் காலத்தில் மாணவர்கள் பயத்துடன் தேர்வுக்கு ஆயத்தமாகிறார்கள். கல்லூரி வாயிலில் உள்ள மரத்தடியில் ஒரு கல்லை நட்டு சிவப்புச் சாயத்தைப் பூசிவிட்டு, சுற்றிலும் சில ரூபாய் நாணயங்களைப் போட்டு விடுகிறான். அந்தக் கல்லூரி மாணவர்கள் பலரும் அந்தக் கல்லைக் கடவுளாகக் கருதி கும்பிட ஆரம்பித்து, காணிக்கை செலுத்துகிறார்கள். இதனைத் தொலைக்காட்சியில் காணும் மக்கள் விழிப்படைகிறார்கள்.

தங்கள் இருப்புக்கு ஆபத்து வந்துவிட்டதை உணர்ந்த ஒரு பிரபலச் சாமியார் (கார்ப்பரேட் சாமியார்) பிகே குறித்து அவதூறுகளைப் பரப்புகிறார். “அவன் வேறு மதத்தைச் சார்ந்தவன். நம் மதத்தை அழிக்க நினைக்கிறான்” என்று சொல்கிறார். மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளின் சூழ்ச்சியைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். சாமியாருடன் நேரடி விவாதத்திற்கு செல்கிறான் பிகே.

“ஒருவன் சார்ந்திருக்கும் மதத்தை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்? டர்பன் அணிந்தால் சீக்கியன், பர்தா அணிந்தால் இஸ்லாமியன், காவி உடை அணிந்தால் இந்து என வெளித் தோற்றத்-தின் அடிப்படையிலும், உடைகளை வைத்தும்தான் மதத்தைத் தீர்மானிக்கிறீர்கள். இது இறைவனின் படைப்பு அல்ல, மனிதர்கள் உருவாக்கிக் கொண்டது. படைக்கும்போதே யாரையும் மத முத்திரையோடு இறைவன் படைக்கவில்லை” என சாமியார்க்குப் பதில் கொடுக்கிறான் பிகே.

“எல்லோருக்கும் தகப்பன் இறைவனே என்கிறீர்களே! எந்தத் தகப்பனாவது தன் பிள்ளையைத் தரையில் உருண்டு புரண்டு வேண்டச் சொல்வானா?” எனக் கேள்வி கேட்கிறான் பிகே.

“கடவுளைக் காப்பாற்றுகிறேன், மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில்தான் பல கலவரங்கள், குண்டுவெடிப்புகள், வன்முறைகள் நிகழ்கின்றன. யாரும் கடவுளைக் காப்பாற்றத் தேவையில்லை. கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார். எவனோ ஒருவன் கடவுளைக் காப்பாற்றப் புறப்பட்டு குண்டுவெடிப்பை நிகழ்த்தியதன் விளைவாக என் நண்பனை இழந்தேன். இன்று அவனது செருப்பு மட்டும் என்னிடம் இருக்கிறது. எல்லோரும் இவ்வாறு கடவுளைக் காப்பாற்றப் புறப்பட்டால் உலகில் மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். செருப்புகள் மட்டும் மிஞ்சும்” என நிறைவு செய்கிறான் பிகே.

உண்டியலில் பணத்தைப் போடுவது, தரையில் புரண்டு உருளுவது, உடம்பில் கீறல் போடுவது, தாயத்துகளை வாங்கிக் கட்டிக் கொள்வது , சிலைக்குப் பல லிட்டர் பாலை வீணடிப்பது எனப் பல பிற்போக்குத்தனங்களைப் படத்தில் கேள்விக் குள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் எந்தவொரு காட்சியும் ஆன்மிக நாட்டம் உடையவர்களின் மனத்தைப் பாதிக்கவில்லை. சினிமா அரங்குகளில் ஒலிக்கும் கரவோசையே சாட்சி. ஆன்மிகம் என்னும் பெயரில் பெரும் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் கார்ப்பரேட் சாமியார்களையும், மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளையும் அதிகமாக அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம். இவர்கள்தான் பிகே திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி கூச்சலிடுகிறார்கள். இவர்களின் கோரிக்கை மக்களிடம் எடுபடவில்லை. மக்களின் பலத்த ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கிறது பிகே திரைப்படம்.

பிகே திரைப்படத்திலுள்ள பல காட்சிகள் தமிழக மக்களுக்குப் புதிதாக இருக்காது. ஏனென்றால் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரங்களில் எழுப்பப்பட்ட பல கேள்விகள் தான் இத்திரைப்படத்திலும் இருக்கின்றன. “கடவுளை மற, மனிதனை நினை" என்கிற பெரியாரின் பொன்மொழியே படத்தின் சாராம்சம்.

“பிகே திரைப்படத்தினை எப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவார்கள்?” என்பதே படம் பார்த்து வெளிவந்த பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. பீகார், உத்திரப்பிரதேச மாநிலங்களில் பிகே திரைப்படத்திற்கு அம்மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்-தக்கது.

Pin It