IT company 3501990களின் தொடக்கத்தில், இந்திய அரசு உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைகளின் முக்கியப் பலனாகக் காட்டப்படுவது தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியும், அதனால் உருவாகிய வேலைவாய்ப்புகளும்தான்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் வருகையால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது கிராமங்களிலிருந்தும் சிறுநகரங்களிலிருந்தும் பட்டம் பெற்ற ஒருசாரரைப் பெருநகரங்கள் நோக்கி நகரச் செய்தது.

இவ்வாறு சென்னை, பெங்களூர், மும்பை, புனே, ஐதராபாத் எனப் பெருநகரங்களை நோக்கி நகர்ந்து, புதிய நடுத்தர வர்க்கத்தினராக உருவெடுத்த ஐ.டி. துறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வண்ணமயமாகத் தெரிகிறது.

ஆனால், நீர்க்குமிழ்களின் மீது பட்டுத் தெறிக்கும் வெளிச்சம் உருவாக்கும் நிலையற்ற வண்ணங்களே அவை. அன்றாட அலுவலகச் சூழலில் ஐ.டி. தொழிலாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். இருந்தாலும், அதில் முதன்மைச் சிக்கலாக இருப்பது பணிநீக்கங்கள்தாம்.

ஐ.டி. தொழிலாளர்களின் முதன்மைச் சிக்கலைப் புரிந்துகொள்ள, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு, அவை செயல்படும் விதம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

நிர்வாக அமைப்பும் செயல்பாடுகளும்

ஐ.டி. நிறுவனங்களில் உள்ள நிர்வாக அமைப்பு பிரமிடு (PYRAMID)  போன்றது. இந்த அமைப்பில், கீழ் இருக்கும் கடைநிலைப் பணிகள் 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். இடை நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஊழியர்கள் இருப்பர். இந்த நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடை நிலை ஊழியர்களை விடக் குறைந்தும், இதற்கும் மேல் பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தும் ஒரு பிரமிடைப் போன்ற கட்டமைப்பு இருக்கும்.

நிர்வாகரீதியாக இப்படி அமையப் பெற்றிருக்கும் நிறுவனங்கள், செயல்பாடுகளின் அடிப்படையில், அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த அணிகள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இருக்கும் ஒரு வாடிக்கையாளருக்காக மென்பொருள் எழுதுவது, அதில் ஏற்படும் பிழைகளைத் திருத்துவது, பிழைகளைக் கண்டுபிடிப்பது என அந்த மென்பொருள் பயன்பாட்டிற்குத் தேவையான வேலைகளைச் செய்யும்.

ஒரு வீட்டுச் சிக்கலில் மற்றொரு வீட்டுக்குத் தொடர்பில்லாமலும், கதவுகள் மூடப்பட்டும் இருக்கின்ற அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் போன்று இந்த அணிகள் செயல்படுகின்றன.

ஐ.டி. தொழிலாளர்களின் நிலை

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி என்பது 1990களில் மெதுவாகத் தொடங்கி 2000க்குப் பிறகான ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் கண்டது. இன்றைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தோராயமாக 35 லட்சம் (இந்திய அளவில்) தொழிலாளர்கள் நேரடியாக இந்தத் துறையில் வேலை செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் துறையில் வேலை பார்க்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சனநாயக, சமூகநீதிப் போராட்டங்களின் மூலம் கல்வி பெற்று எங்களைப் போன்றவர்கள் பொறியியல் படித்து ஐ.டி. போன்ற துறைகளில் வேலைக்கு வந்தோம். இவ்வாறு வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்தோ, சிறுநகரங்களில் இருந்தோதான் சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்கள் நோக்கிக் குடியேறினோம். இனிமேல் பெருநகரங்களில்தான் வாழ்க்கை என்றாகிப் போன லட்சக்கணக்கான தொழிலாளர்களை நோக்கி ஒரு சந்தை உருவானது. இந்தச் சந்தையின் காரணமாகப் பல வங்கிகள் ஐ.டி. ஊழியர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் எனக் கொடுத்து எங்களைக் கடனாளி ஆக்கியது.

ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இண்டர்வியு’ மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பணிக்குச் சேர்த்துக் கொள்வதாக மார்தட்டிக் கொள்ளும் நிறுவனங்கள், இதே ஊழியர்கள் அனுபவம் பெற்று அதிகச் சம்பளம் பெறும் நிலையை அடையும் போது, மறுசீரமைப்பு என்கிற பெயரில் வெளியேற்றுகின்றன.

கண்ணாடிக் கட்டடத்திற்குள் வேலை பார்க்கும் எங்களின் நிதர்சனங்கள் பொதுச் சமூகத்திற்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. நுகர்வும், தனிநபர்வாதமும் எங்களை உதிரிகளாக்கி நாங்கள் வளர்ந்த, எங்களை வளர்த்-தெடுத்த சமூகத்திலிருந்து பிரித்து வைத்-துள்ளன.

பெருகிவரும் பணிநீக்கங்கள்

பணிநீக்கம் என்பது ஐ.டி. துறையில் அன்றாட நிகழ்வாகிப் போன ஒன்று. கடந்த ஓராண்டு நிலவரத்தை எடுத்துக் கொள்வோமானால், 2014 சனவரியில் மறுசீரமைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்யத் தொடங்கியது ஐபிஎம் நிறுவனம், அதனை அடுத்து CISCO, YAHOO, BALLY TECHNOLOGIES எனத் தொடர்ந்து இப்போது டிசிஎஸ் 25,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

அத்தோடு ALTISOURCE, CITRIX போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்கின்றன. இவ்வாறு பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை--களைச் செய்து இப்போது ஐபிஎம் மீண்டும் தொடங்கியிருப்பதன் மூலம் ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்று தொடங்கியுள்ளது.

சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வந்த ""C-Cubed Solutions" ன்கிற நிறுவனம், அதனுடைய சென்னை, கோயம்புத்தூர் பிரிவுகளை மூடியுள்ளது. மூன்று நகரங்களிலும் சேர்த்து 1500க்கு மேற்பட்ட தொழி-லாளர்கள் வேலை பார்த்து வந்தனர். பெங்களூரில் தொடர்ந்து இயங்கி வந்தாலும், ஆட்குறைப்பு செய்து வருகிறது இந்நிறுவனம்.

பணிநீக்கங்கள் செய்யப்படும் விதமும், சொல்லப்படும் காரணங்களும்

ஆட்குறைப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சீனியர், ஜூனியர் விகிதத்தை மாற்று-வதாகும். அதற்காகக் குறைந்த எண்ணிக்கையில் சீனியர் ஆட்களை வைத்து அதிக எண்ணிக்கையில் ஜூனியர் ஆட்களை வைத்து அதிகமாக உற்பத்தியைப் பெருக்குவது, இதன் மூலம் அதிகச் சம்பளம் பெறும் நபர்கள் குறைவாகவும் குறைந்த சம்பளம் பெறும் நபர்கள் அதிகமாகவும் இருப்பர்.

இளம் வயதில் உள்ளவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை அதிக நேரம் வேலை வாங்க முடியும். குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். சீனியர் ஆட்கள் 30 வயதைக் கடந்தவர்கள், குடும்பத்திற்காக நேரம் செலவிட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள். எனவே அவர்களின் உழைப்பை அதிகமாகச் சுரண்ட முடியாது.

ஐ.டி. நிறுவனங்களின் பங்குகளை ஏற்றப் போக்கில் வைத்திருக்க, வரும் நிதி ஆண்டில் எதிர்பார்க்கும் லாபம்/வருவாய் என்று ஒவ்வொரு நிறுவனமும் அறிவிக்கிறது. இந்த உத்தேச வருவாயை அடைய முடியாத பொழுது, ஊழியர்களின் மடியில் கை வைக்கின்றனர். அதற்கு, மறுசீரமைப்பு என்று பெயரிட்டு மழுப்புகின்றன.

திறன் மதிப்பீடு அடிப்படையில் இதனைச் செய்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். இதனால் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடும் வாய்ப்பும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்தும் திறன் மதிப்பீட்டு முறைகளில் தவறுகள் நடப்பதே இல்லையா என்றால் அப்படியும் கிடையாது. ஒரு தொழிலாளர் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாற்றலாகிச் செல்லும் போதோ, ஒரு பெண் தொழிலாளி மகப்பேறு விடுமுறையில் செல்லும் போதோ, மருத்துவ விடுப்பில் செல்லும் போதோ நேரடியாக எந்த மதிப்பீட்டு ஆய்வுகளும் செய்யப்படாமல் மதிப்பீடு வழங்கப்படுகிறது.

நவீனத் தொழில்நுட்பங்களில் வேலை செய்கிறார்கள் என்றாலும், பொதுச் சமூகத்தில் நிலவும் சாதி, மத, மொழி மற்றும் இனப் பாகுபாடுகள் இங்கும் இருக்கின்றன. அதனடிப்படையிலும் திறன் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன.

அமைப்பாக்குவதில் உள்ள சவால்கள் - தனிநபர்வாதமும் நுகர்வுப் பண்பாடும்

* பணியிடத்தில் நிலவும் ஊழியர்களிடையிலான நம்பிக்கையற்ற, போட்டி மிகுந்த சூழல்.

* ப்ராஜெக்ட்- ஆகப் பிரிக்கப்பட்டிருக்கும் பணியின் இயல்பு.

* அழுத்தும் கடன் சுமை, நடுத்தர வர்க்கப் பின்னணி.

* நிறுவனங்களுக்காகச் சிந்திக்கும் படி பழக்கப்பட்டுள்ள எண்ணப்போக்கு.

* கறுப்புப் பட்டியல் (Black listing) குறித்த ஐயம் (National Skills Registry)

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் ( FORUM FOR IT EMPLOYEES- FITE )

டிசிஎஸ் நிறுவனம் 25,000 பேரைப் பணிநீக்கம் செய்வதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து, "We Are Against TCS Layoffs" என்கிற முகநூல் பக்கத்தை உருவாக்கி இந்தப் பணிநீக்கங்களுக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டோம். நீண்டகால நோக்கில் ஐ.டி தொழிலாளர்களை அமைப்பாக்குவதே உரிமைகளைப் பெற உதவும் என்கிற அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் என்னும் பெயரில் ஓர் அமைப்பைக் கடந்த திசம்பர் 29ஆம் நாள் உருவாக்கினோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மன்றத்தில் இணைந்துள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் என்று பொதுவாக பாதிக்கப்பட்ட ஊழியர்களே எண்ணி மலைத்துக் கொண்டிருந்த வேளையில், வெற்றிகரமாக முதல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தோம். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த வழக்கில், ஐ.டி. ஊழியர்களும் தொழிலாளர்களே.

அவர்களை பணிநீக்கம் செய்தது தொழில் தகராறு சட்டப்படிக் குற்றமாகும் என்று நாம் எழுப்பியிருந்த கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல், கர்ப்பிணிப் பெண் என்பதால் வேலை தருகிறோம் என்று மழுப்பி, ஜகா வாங்கியது டிசிஎஸ். முதல் வழக்கிலேயே வெற்றி! ஆனால், அது முழுமையான வெற்றி அல்ல என்பதை நாமும் அந்த ஊழியரும் உணர்ந்தே இருந்தோம்.

இதற்கிடையில், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என இறுமாப்புடன் ஊழியர்களின் வேலையைப் பறித்துக் கொண்டிருந்த டிசிஎஸ் நிறுவனத்தின் அடாவடிச் செயலை எதிர்த்து நாடு முழுவதும் நமது F.I.T.E உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். தாங்கள் தொழிலாளர்கள் என்பதையே உணராமல் இருந்த இந்த ‘ஒயிட்காலர்’ தொழிலாளர்களைத் தொழிலாளர் ஆணையரின் அலுவலகத்தை நாட வைத்தது F.I.T.E. ஆங்காங்கே, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நாடு முழுவதும் பணிநீக்கத்தை எதிர்த்து வெளிவரத் தொடங்கினர்.

ஹைதராபாத்தில் 2 ஊழியர்களுக்காகவும், மும்பையில் 9 ஊழியர்களுக்காகவும் அந்தந்த உயர் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளது F.I.T.E. சிறப்பம்சமாக, ஐதராபாத் உயர் நீதிமன்றம் ஐ.டி. ஊழியர்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வருகிறார்களா என்பதைத் தெலங்கானா அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது! F.I.T.E.-இன் சட்டப் போராட்டத்தில் இது மிக முக்கியமான உத்தரவாகும்.

சட்டப் போராட்டம் மட்டுமல்ல, ஊழியர்கள் அமைப்பாகிப் போராடுவதே நமது உரிமைகளை வென்றெடுக்கவும், நீண்டகால நோக்கில் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும் என்பதை F.I.T.E. உணர்ந்தே உள்ளது. அதை ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

ஏற்கெனவே, சமூகத்தில் தொழிலாளர்களை அமைப்பாக்கி, அவர்களின் நலன்களுக்காகப் போராடி வரும் முற்போக்கு சக்திகளோடு ஒன்றிணைந்து, பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டைக்கு எதிரான இந்தத் தொழிலாளர் போராட்டத்தில் F.I.T.E. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

Pin It