ஆந்திரப் பிரதேசம் எனப்படும் தெலுங்கு தேசம் மூன்று வட்டாரங்களைக் கொண்டது: (1) கடலோர ஆந்திரம்;;; (2) ராயலசீமை; (3) தெலங்கானா (தெலுங்கானா என்பது தவறு. தெலங்கானா அல்லது தெலிங்கானா என்பதே சரி.) முதல் இரு வட்டாரங்களும் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் இருக்க, தெலங்கானா மட்டும் நைசாம் ஆண்ட ஐதராபாத் சமத்தானத்தின் பகுதியாக இருந்தது. நைசாம் மன்னனின் கொடுங்கோன்மை, படுமோசமான பிரபுத்துவ ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தெலங்கானா மற்ற இரு வட்டாரங்களை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது.

தெலங்கானா மக்கள் நைசாம் ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், தெலுங்கு பேசும் தம்மின மக்களோடு சேரவும் பேரவாக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாகவே 1928இல் ஆந்திர மகாசபை நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் பொதுமையரும் (கம்ய+னிஸ்டுகள்) பிற சனநாயகக் கொள்கையினரும் முதன்மைப் பங்காற்றினர். 1946இல் பொதுமைக் கட்சியின் தலைமையில் தெலங்கானா உழவர்கள் தொடுத்த கருவிப் போராட்டம் மன்னராட்சியை ஒழிப்பதையும், பிரபுத்துவ அமைப்பைக் கலைப்பதையும், மொழி வழிப்பட்ட தெலுங்கு தேசம் அமைப்பதையும், குறிக்கோள்களாகக் கொண்டிருந்தது. விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம் என்ற போராட்ட முழக்கத்தின் பொருள் இதுவே.

இதனை மார்சல் நேசமணி தலைமையிலான குமரி விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பு நோக்கலாம். திருவிதாங்கூர் மன்னராட்சியிலிருந்தும் மலையாள மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவது, ஒடுக்குண்ட மக்களைத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுவிப்பது, தமிழ்நாட்டுடன் இணைவது ஆகிய குறிக்கோள்களுக்காக இப்போராட்டம் நடைபெற்றது.

குமரி மக்கள் தமிழ்நாட்டோடு இணையப் போராடியது போலவே தெலங்கானா மக்கள் ஆந்திரத்தோடு இணையப் போராடினார்கள். இது தமிழ்த் தேசிய சனநாயகப் போராட்டம், அது தெலுங்குத் தேசிய சனநாயகப் போராட்டம்.

1948இல் நைசாம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் வீரத் தெலங்கானாவை அடக்க நேருவின் இந்திய இராணுவம் போலீசு நடவடிக்கை என்ற பேரில் தலையிட்டது. அதற்கெதிராக 1951 வரை ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது. அப்போதும் விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம் என்பதே குறிக்கோள் முழக்கமாக இருந்தது. கருவிப் போராட்டம் முடிவில் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மொழிவழிப்பட்ட விசாலாந்திரம் உருவாவதில் தெலங்கானா மக்களின் போராட்டப் பங்களிப்பே முதன்மையானது. புpற ஆந்திரப் பகுதி மக்களின் போராட்டமும் அதன் உச்சமாக பொட்டி சிறிராமுலுவின் பட்டினிப் போராட்டச் சாவும் மொழிவழி விசாலாந்திரம் (ஆந்திரப் பிரதேசம்) பிறக்க வழிகோலின.

மொழிவழி மாநிலங்கள் அமைத்தது சனநாயக வகையில் ஒரு முன்னேற்றமே என்பதில் அய்யமில்லை. தெலுங்கிற்கு விசாலாந்திரம், கன்னடத்திற்கு சம்யுக்த கர்நாடகம், மலையாளத்திற்கு அய்க்கிய கேரளம் என்று அமைந்த போது எஞ்சிய பகுதி தமிழுக்குச் சென்னையாகி, இப்போது தமிழ்நாடாகத் திகழ்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ம.பொ. சிவஞானம், மங்கலங்கிழார் தலைமையிலான வடக்கெல்லைப் போராட்டமும், நேசமணி தலைமையிலான தெற்கெல்லைப் போராட்டமும் மொழிவழி மாநில அமைப்புக்குத் துணை செய்தன.

அன்று விசாலாந்திரத்துக்காகப் போராடிய தெலங்கானா மக்கள் இன்று ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலம் ஆவதற்காகப் போராடுவது மொழிவழித் தேசியத்துக்கு ஏற்பட்ட தோல்வியா? என்ற கேள்வி எழுவது இயல்பே.

மொழிவழி மாநில அமைப்பு என்பது மொழி வழித் தேசியத்தின் ஒரு கூறாகிய ஆட்சிப் புல வரையறையின் தொடக்கப்புள்ளிதானே தவிர அத்தேசியத்தின் நிறைவுப் புள்ளியன்று. மொழி வழி மாநிலங்கள் மொழி வழித் தேசிய இனங்களின் தன்தீர்வு நோக்கி முன்னேறிச் சென்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறாமல் மொழிவழி மாநிலம் தேக்கமுற்று நிற்கும் போது அது தேய்ந்து தேய்ந்து இந்தியத் தேசியத்தின் தொங்குசதை ஆகி விடுகிறது. இதையே மாநில உரிமைகள் பறிக்கப்படுதல், மாநில அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர்.

வீரத் தெலங்கானா கருவிப் போராட்டத்தில் (1946-51) எழுப்பப்பட்ட முழக்கம்: விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம்! விசாலாந்திரம் வந்தது. மக்கள் - ராஜ்யம் மலர்ந்ததா? மக்கள் - ராஜ்யம் மலர இந்தியாவும் அதன் அரசமைப்பும் இடங்கொடா. விசாலாந்திரம் போதும் என்று பொதுமையரும் நிறைவுற்று விட்டனர். அவர்கள் தெலுங்குதேசத்துக்குத் தனி அரசமைப்பு உருவாகப் போராடவில்லை. தெலுங்குத் தேசிய இனத்தின் தன்தீர்வுக்காகப் போராடவில்லை. பிறகு எப்படி மக்கள் - ராஜ்யம் வரும்?

தெலங்கானாக் கோரிக்கை என்பது இந்தியத் தேசியத்துக்கும், அதன் கையடக்கமான ஆந்திர மாநில அமைப்புக்கும் எதிரானதே தவிர, எவ்வகையிலும் தெலுங்குத் தேசியத்துக்கு எதிரானது அன்று.

தெலுங்குத் தேச விடுதலைக்காகவோ, தெலுங்குத் தேசியக் கோரிக்கைகளுக்காகவோ கூட ஆற்றலும் வீச்சும் கொண்ட இயக்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் தனித் தெலங்கானா மாநிலக் கோரிக்கையால் தெலுங்குத் தேசியம் சீர்குலைந்து விடாது.

தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தைக் கொள்கை வழிநின்று எதிர்கொள்ள காங்கிரசு, பா.ச.க. போன்ற இந்தியத் தேசியக் கட்சிகளால் இயலவில்லை. இந்தியத் தேசியத்துக்கு வால் பிடிக்கும் மாநிலக் கட்சிகளான தெலுங்குதேசம், பிரசா ராஜ்யம் போன்ற கட்சிகளாலும் இயலவில்லை. இந்தியப் பொதுகை; கட்சி, (சி.பி.ஐ) மார்சியப் பொதுமைக் கட்சி (சி.பி.எம்) ஆகிய இடதுசாரிக் கட்சிகளும் தடுமாறித் தத்தளிப்பதைக் காண முடிகிறது. ஓன்றாயிருந்த பொதுமைக் கட்சி முதல் பொதுத் தேர்தலில் இதே தெலங்கானாப் பகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதை நினைக்கும் போது எப்படியிருந்த கம்ய+னிஸ்டுகள் இப்படி ஆகிவிட்டார்கள்? என்று இரக்கப்படாமலிருக்க முடியவில்லை. தேசிய இனவுரிமை அரசியலை முன்னெடுத்த போது வளர்ந்தார்கள். அதைக் கைவிட்டு இந்தியத் தேசியச் சோதியில் கலந்துவிட்ட பின் தளர்ந்து தேய்ந்து போனார்கள். இது அவர்களுக்குப் படிப்பினை, நமக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டையும் இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று சிலர் கோரியுள்ளனர். நான்கு மாநிலங்களாகப் பிரிக்கச் சொல்கிறவர்களும் உள்ளனர். இது கேட்டுத் தமிழ்த் தேசியர்கள் துணுக்குறத் தேவையில்லை. நாம் தமிழ்நாட்டை இருபதுக்கு மேற்பட்ட மாநிலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னாட்சி வழங்கித் தமிழ்நாட்டைக் கூட்டரசாக மாற்ற விரும்புகிறோம். ஆனால் அதற்கு முன் தமிழ்நாட்டின் இறையாண்மையை மீட்டாக வேண்டும். இந்திய அரசமைப்புக்குட்பட்ட அடிமை நாடாக இருக்கும் நமக்கு முதல் தேவை விடுதலைதானே தவிர மாநிலப் பிரிப்பு அன்று. தமிழ்த் தேசிய ஆற்றல்கள் வலுப்பெற்றுத் தமிழக இறையாண்மை மீட்புக்கான போராட்டத்தை வீச்சுடன் முன்னெடுக்கும் பொது இந்திய அரசமைப்புக்குட்பட்ட மாநிலப் பிரிப்புக் கோரிக்கைகளால் வேர்பிடிக்க இயலாது போகும்.

தெலுங்குத் தேசிய விடுதலைப் போராட்டம் இல்லாத சூழலில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை வலுப் பெற்று விட்டது. அதை ஏற்றுத் தனிமாநிலம் அமைப்பதனால் வலுக்குன்றப் போவது இந்தியத் தேசியமே தவிர தெலுங்குத் தேசியம் அன்று. இந்தியா மொழிவழித் தேசங்களாய் பிரிவதே மிக நன்றெனினும், அதற்கு உடனடி வாய்ப்பில்லாத போது வேறு வகையில் உடைவதும் கூட ஓரளவு நன்றே. வட்டார வழி உடைந்த பிறகும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மொழி வழித் தேசிய ஒற்றுமை உருவாக இயலும். சனநாயகத்துக்கும் சமூக நீதிக்குமான போராட்டத்தில் இந்த ஒற்றுமைக்கான தேவையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆந்திரப் பகுதி மக்கள் எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. ஐதராபாத் நகரத்துக்குச் சொந்தம் கொண்டாடும் இதே ஆந்திரத் தெலுங்கர்கள்தாம் ஒரு காலத்தில் மதராஸ் மனதே என்று சென்னைக்கு உரிமை கொண்டாடியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. இவர்களிடம்தான் நாம் திருப்பதியை இழந்தோம். இவர்களிடமிருந்து தான் திருத்தணிகையைப் போராடி மீட்டோம். இவர்கள்தாம் நம் பாலாற்றை அணைகட்டி மறிப்பவர்கள்.

தெலங்கானா கோரிக்கையைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டப்படி (உறுப்பு3) புது மாநிலம் அமைக்க இந்திய நாடாளுமன்றத்துக்கே அதிகாரம் உண்டு என்று தெரிந்தும், ஆந்திரச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றுவோம் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது ஏன்? தெலுங்குத் தேசிய இன மக்களைப் பிரித்தாண்டு தெலங்கானா கோரிக்கையைக் கிடப்பில் போடுவதே அதன் திட்டம். இந்தப் போக்கில் ஆந்திரத்தில் காங்கிரசு அழியப் போவதுதான் கண்ட பலனாய் இருக்கப் போகிறது.

ஈழத்துக்கு எதிரான இந்திய வல்லாதிக்கத்தின் சூழ்ச்சியால் தமிழினம் பெருந்துயர் அடைந்தது அண்மைய வரலாறு. அதே வல்லாதிக்கம்தான் இன்று தெலுங்கின மக்களைப் பிரித்து மோத விட்டுக் குருதி குடிக்கிறது.

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான பேராற்றலாக மொழிவழித் தேசியம் வளர்ந்தெழும் வரலாற்றுப் போக்கில் நம்பிக்கை வைத்துத் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்.

- தியாகு

Pin It