சனவரி 26, 1950 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த சுதந்திரம் நீடித்து இருக்குமா? அல்லது மீண்டும் சுதந்திரம் பறிபோய் விடுமா? இந்தியா எப்பொழுதுமே சுதந்திரமான நாடாக இருந்ததில்லை என்பதல்ல.

பிரச்சனை என்னவெனில், இந்தியா தன் சுதந்திரத்தை ஒரு முறை இழந்து விட்டது; இரண்டாவது முறையும் அதுபோல தன் சுதந்திரத்தை அது இழக்க நேரிடுமா? எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்கப்போகின்றது என்ற எண்ணமே என்னை மிகவும் சிந்திக்க வைக்கின்றது.

26.1.1950 முதல், இந்தியா ஒரு குடியரசாகத் திகழவிருக்கின்றது. அன்று முதல் இந்தியா, மக்களுக்கான மக்களால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடாக விளங்கும். ஆனால், இந்திய குடியரசின் அரசியல் சட்டம் என்னவாகும்? அதையும் இந்த நாடு இழந்து விடுமா?

அரசியல் சார்ந்த நமது மக்களாட்சித் தன்மையை, சமூகத் தளத்திற்கும் மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத்திற்கு அடித்தளமாக சமூக ஜனநாயகம் விளங்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்கும். சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வாழ்வியல் நெறியே சமூக ஜனநாயகம். சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் இவை மூன்றும் தனித்தனி  அங்கமாகக் கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றிணைந்து விளங்க வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று இல்லையெனில், அது ஜனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்து விடும்.

சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தைச் சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் – சகோதரத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவ மற்ற சுதந்திரம் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். சுதந்திரமற்ற சமத்துவம், தனி மனித முயற்சிகளைப் பாழடித்துவிடும். சகோதரத்துவமற்ற சுதந்திரமும், சமத்துவமும் இயல்பான உறவை ஏற்படுத்தாது.

இந்திய சமுதாயத்தில் இரண்டு தன்மைகள் முழுவதுமாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். 1. சமத்துவம், சமூகத்தளத்தில், இந்திய படிநிலைப்படுத்தப்பட்ட – சமத்துவமற்ற சமுதாயமாகவே உள்ளது. இது ஒரு சிலரின் முன்னேற்றத்தையும் – பலரின் வீழ்ச்சிகளையுமே வெளிப்படுத்துகின்றது. பொருளாதாரத் தளத்தில், ஒரு சிலர் மட்டும்மே பெரும் செல்வத்துடன் வாழ்கின்றனர்; பலர் கடும் வறுமையால் வாழும் முரண்பாடு உள்ளது.

26.1.1950 அன்று, நாம் முரண்பாடான வாழ்க்கையில் நுழையப் போகின்றோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் – சமத்துவமற்றத் தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளியல் தளத்தில்  – ஒரு மனிதனின் அடிப்படை நெறியை மறுப்பவர்களாகவே இருப்போம்.

இதுபோன்ற ஒரு முரண்பட்ட வாழ்க்கை முறையை – நாம் எத்தனை நாட்களுக்கு வாழப்போகின்றோம்? சமூக, பொருளாதாரத் தளத்தில் இன்னும்எத்தனை நாளைக்கு நாம் சமத்துவத்தை மறுக்க போகின்றோம்? இதுபோன்ற மறுப்புகள் தொடர்ந்து நீடித்தால் – அரசியல் ஜனநாயகம் வீழ்வதைத் தடுக்க முடியாது.

இந்த முரண்பாடுகளை நாம் மிக விரைவில் களைந்தாக வேண்டும். இல்லை எனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் அடித்தட்டு மக்கள் – கடும் உழைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் ஜனநாயகத்தையே தகர்த்து விடுவார்கள்.

நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு போலித் தோற்றமாகும் என்பதே என் கருத்து. பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை – எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது. அப்பொழுதுதான் நாம் ஒரு தேசமாக ஆக வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி செயல்பட்டால்தான் அந்த இலக்கை அடைய முடியும்.

– 25.11.1949 அன்று, அரசியல் நிர்ணய அவையின் இறுதிக் கூட்டத்தில் ஆற்றிய பேரூரை,..

Pin It