பத்திரிகை ஆசிரியர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு முரண்பட்ட கொள்கைகளை உடையவர்களாய் இருந்தாலும், ஒரே தொழிலில் ஈடுபட்ட சகோதரர்களே ஆவார்கள். இத்தொழில் மிகக் கண்ணியமும், பெருந்தன்மையும், விசால புத்தியும் உடைய ஒரு தொழிலாகும். பத்தரிகை உலகில் தினசரி, வாரம், மாதம் முதலிய வெளியீடுகள் உண்டு. தினசரிப் பத்திரிகை ஆசிரியர் மற்றொரு தினசரிக்கும், வார வெளியீட்டின் ஆசிரியர் மற்றொரு வார வெளியீட்டிற்கும் – இவ்வாறாக மாற்றுப் பத்திரிகைகள் அனுப்பித்தங்கள் தங்கள் கருத்துக்களை ஒன்றுபடுத்துவதோ, சீர்தூக்கிப் பார்ப்பதோ உலக இயற்கையும், பத்திரிகை உலகத்தின் வழக்கமும் ஆகும்.

சிற்சில சமயங்களில் சில ஆசிரியர்கள் அதிகப் பெருந்தன்மையோடு பிறருடைய சொற்ப விலையுள்ள பத்திரிகைக்காகத் தமது அதிக விலையுள்ள பத்திரிகையைக் கூட மாற்றுப் பத்திரிகையாக அனுப்பியதுண்டு. உதாரணம் வேண்டுமானால், நாம் "ரிவோல்ட்' பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் வாராந்திரப் பத்திரிகையாகிய ரிவோல்ட்டுக்கு "பெங்காலி' என்ற தினசரியை மாற்றாக அனுப்பினார்கள். இம்மாதிரியே இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்ரிக்கா முதலிய இடங்களிலிருந்தும், வட இந்தியாவில் பல பாகங்களிலிருந்தும் நமது கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளையுடையதும், சந்தாவிலும் கூட அதிக வித்தியாசமுள்ளதுமான பத்திரிகைகள் நூற்றுக் கணக்காய் மாற்று வந்து கொண்டிருக்கின்றன.

இது பத்திரிகை உலகிலுள்ள ஒரு பரஸ்பரப் பெருந்தன்மையாகும். ஆனால் நமது "புதுவை முரசு'  விஷயத்தில் கொள்கை வேறுபாடு என்கிற ஒரே காரணத்தால் மாத்திரம், சைவக் கூட்டத்தில் சேர்ந்த சிற்சில பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகாசிரியப் பெருந்தன்மையோ, கண்ணியமோ, நாகரிகமோ, பரந்த நோக்கமோ எள் மூக்கத்தனையும் இல்லாது மாற்றுப் பத்திரிகை அனுப்பப் பயப்படுகின்றனர். இதில் இரண்டொரு "வீரர்கள்' யாம் (குருசாமி – வேலு) ஆசிரியராய் வந்த பிறகு மாத்திரம் மாற்றுப் பத்திரிகையை நிறுத்திக் கொண்டனர்.

இவர்களது தைரியம் என்னே! கொள்கைகளுக்கும் தனிப்பட்ட நபருக்கும் பயப்படும் இவர்களும் பத்திரிகைத் தொழில் ஆசை வைத்திருக்கிறார்களே! என்னே! ஆச்சரியம்! மாற்றுப் பத்திரிகை அனுப்பினால் கொள்கையைத் தெரிந்து கண்டனம் செய்வார்கள் என்று பயந்து விடுவதானது, பூனை தனது கண்ணை மூடிக் கொண்டு திருட்டுப் பால் குடிப்பது போலாகிறது! என்னே, இப்புலவர் மக்களின் அறிவீனம் இவர்கள் பத்திரிகைத் தொழில் ஈடுபட்டும், புராதனப் புலமைத் தொழிலின் சிறுமதியும், பொச்சாப்பும், புறங்கூறுதலும்,தமது பொய் வாழ்க்கைக் கேற்ற அச்சமும், பேடித்தனமும், அழுக்காறும், பலகீனமும் பங்காளித்தனமும் போகவில்லையே! "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக்கொண்டு ....போகுமல்லாது, வேறு என்ன செய்யும்.''

(குறிப்பு : பத்திரிகைத் தொழிலிலேயே வெகு ஆண்டுகளாக இருந்து வரும் நம்மால் விரோதக் கொள்கையை உடைய இரண்டொரு ஆசிரியர்கள் மாத்திரம் பெருந்தன்மையோடும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்னார்களுக்கு இது விஷயத்தில் நமது பாராட்டுதலைக் கூறாமல் இருக்க முடியாது).

- எஸ். குருசாமி, 9.2.1931

Pin It