மும்பை ரவுடி என்று வர்ணிக்கப்பட்ட பால் தாக்கரே மரணித்து விட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது அனைத்து மாநில ஊடகங்களும் இதை முக்கியச் செய்தியாக "லைவ் ஷோ' காட்டியதுதான் கொடுமை.

தமிழகத்திலிருந்து புதிய தலைமுறை உள்ளிட்ட  சில சேனல்களும் தங்கள் ரிப்போர்ட்டரை மும்பைக்கே அனுப்பி வைத்துப் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்குகளை லைவ் செய்து மகிழ்ந்தன. பால் தாக்கரே நாட்டு மக்களின் அன்பைப் பெற்ற மாபெரும் தலைவர் என்று எண்ணிக் கொண்டு அவரது புகழைப் பாடின ஊடகங்கள்.

அரசு மரியாதையுடன் பால்தாக்கரேவின் உடல்தகனம் செய்யப்பட்டது. தேசிய தலைவர்கள் முதல் பிரதேசத் தலைவர் வரை போலியாகப் பால் தாக்கரேவைப் புகழ்ந்து இரங்கற்பா பாடினர்.

அரசு மரியாதையுடன்  பால் தாக்கரேவின் ஈமச் சடங்குகள் செய்யப்படும் அளவிற்கு அவர் மக்கள் தலைவரா? நாடு போற்றும் நல்லவரா? வன்முறையின் வடிவமாகத்தான் நாட்டு மக்கள் பால் தாக்கரேவைப் பார்த்தனர்.

தாக்கரே உருவாக்கிய சிவசேனாவினர் வன்முறை வெறி பிடித்தவர்கள் என்பதை மும்பை காவல் துறை உணர்ந்து வைத்திருந்தால்தான் தாக்கரே இறந்த பின்பொது மக்கள் யாரும் அவசிய தேவையின்போது தவிர வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்களை வழங்கியது. மும்பையில் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

ஆனால் இவையெல்லாமே தாக்கரேவிற்கு மக்கள் மரியாதை தருகிறார்கள் என்ற ரேஞ்சுக்கு ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இதன் மூலம் சேனையினரின் வன்முறை வெறியின் மீது அச்சம் கொண்டு தான் மக்கள் வெளியே வரவில்லை என்ற உண்மையை மீடியாக்கள் மறைத்தன.

இந்த உண்மையை மீடியாக்கள் வெளிப்படுத்தியிருந்தால் அந்த நிமிடமே இப்படிச் செய்தி வெளியிட்ட மீடியாக்களின் அலுவலகங்கள் சிவசேனையினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அவை அறிந்து வைத்திருந்தன என்பது உண்மையிலும் உண்மை.

திரையுலகப் பிரமுகர்களும், தொழிலதிபர்களும், முக்கிய அரசியல்தலைவர்களும் கூட இந்த அச்சவுணர்வின் காரணமாகத்தான் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றனர்.

ஆனால் சிவசேனைகாரர்களின் அச்சுறுத்தலுக்கு ஆட்படாத ஆண்மை உள்ளவராக வெளிப்பட்ட ஒரே இந்தியர் என்று முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்சுவைச் சொல்லலாம்.

"இறந்தவர்கள் குறித்த நல்ல வார்த்தை சொல்வது என்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால் இறந்து போனார் என்பதற்காகக் கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்ல வார்த்தை கூற இயலாது...'' என்று யதார்த்தத்தை வெளிப்படுத்தினார். நீதியரசர் மார்க்கண்டேய கட்சு.

எவ்வளவு அர்த்தம் பொதிந்தவை இந்த வார்த்தைகள்? கட்சுவின் இந்த வரிகள் பால்தாக்கரேயின் சுயரூபத்தை அம்பலப்படுத்தவும், அவர் எந்த அளவிற்கு வெறுப்புக்குரியவர் என்பதை விளக்கவும் போதுமானவை.

தமிழர்களை மும்பையிலிருந்து விரட்டியடித்தார் பால்தாக்கரே. ஆனால் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரோ, "மாநில உரிமைகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்காதவர் பால்தாக்கரே.'' என்று தாக்கரேவைப் புகழ்ந்து தள்ளி விட்டார். தமிழர்கள் விரட்டிப்பட்டது தாக்கரேவின் மாநில உரிமை என்பதைக் கலைஞர் ஏற்றுக்கொள்கிறாரா?

தமிழர்களை மட்டுமல்ல... பிஹாரிகளை விரட்டியடித்தார்  பால் தாக்கரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் சதிராடினார். பிற மாநிலத்தவர்கள் மஹாராஷ்டிராவிற்கு வர வேண்டுமானால் விசா வாங்க வேண்டும் என்றார்.

டெல்லியில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன் என்று சொன்ன நடிகர் ஷாருக்கானை டெல்லிக்கே ஓடி விடு என மிரட்டினார். நான் முதலில் இந்தியன் அதன் பிறகுதான் நான் மும்பைக்காரன் என்று தேசிய ஒருமைப்பாடு பேசிய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை மிரட்டினார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் நடந்த கலவரத்தின் போது, தனது தொண்டர்களை விட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்தவழக்கை விசாரணை செய்த நீதிபதி கிருஷ்ணா அறிக்கையை வெளியிடக் கூடாது என்று அரசாங்கத்தை மிரட்டினார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சாமியாரிணி பிராக்கியா சிங்க, முன்னாள் இராணுவ அதிகாரி உபாத்யாய ஆகிய பயங்கரவாதிகளுக்குப் பின்னால் இந்துச் சமூகம் அணி திரண வேண்டும் எனப் பயங்கரவாதக் குரலை எழுப்பினார். – இப்படி பால் தாக்கரேவின் தேச விரோதச் செயல்களின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்லும்.

பால் தாக்கரேயின் இந்த தேச விரோத நடவடிக்கைகளுக்கு மரியாதை செலுத்தத்தான் அவரது உடலுக்குத் தேசியக் கொடி போர்த்தப்பட்டதா? உண்மையில் தேசியக்கொடி அவமானப்படுத்தப்பட்டுள்ளது, பால் தாக்கரே மீது போர்த்தப்பட்டதன் மூலம்! ....

– நன்றி : "சமுதாய மக்கள் ரிப்போர்ட்'

Pin It