இடுப்புக்கு மேலே ஆடை இன்றி
 இருந்த பெண்களை – அன்று
 வருந்தும் கண்களை

அடுப்புக்குக் காவல் ஆக்கி வைத்த
 அவலம் போக்கினார் – அவர்கள்
 சுவடு நோக்கினோம்!

பொட்டுக் கட்டிக் குட்டுப் பட்ட
 புலம்பல் நிறுத்தினார் – அன்னை
 களத்தில் இறங்கினார்!

எட்டிப் பறிக்கும் இளைய கன்னி
 இழிவைத் துடைக்கவே – மூவலூர்
 வழியைப் படைத்ததே!

இராமா மிர்தம் இல்லா விட்டால்
 இருண்ட அறையிலே – ஒளி
 வருகை புரியுமா?

பாரா முகமாய்ப் பலரும் இருந்தார்
 பழைய நாளிலே – அவரோ
 உழைத்த தோளிவே!

வறுமை யோடும் பொறுமை யோடும்
 வாடும் பெண்களைச் – சாக
 ஓடும் பெண்களை

நிறுத்தம் சட்டம் நிலத்தில் ஆக்கி
 நிலைக்க வைத்தவர் – இந்தியைக்
 கலைக்க வைத்தவர்!

– ஆலந்தூர் முனைவர். கோ.மோகனரங்கன்

Pin It