இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது.ஆனால் முற்பகுதியிலேயே அதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. சந்திரனில் முதன் முதலாகக் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.விண்வெளியிலே முதன் முதலில் பறந்தவர்கள் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும்.ஆனால் இவர்கள் இரண்டு பேருமே இந்தக் களத்திற்குப் பின்னால் வந்தவர்கள்.
இந்தச் சிந்தனை முதலில் எந்த நாட்டில் தோன்றியது. எந்த விஞ்ஞானிகளிடமிருந்து அது வெளிப்பட்டது. எந்தநாடு முதல் முதலாக ராக்கெட்டைக் குறைந்தது 1000 மீ. தூரத்திற்குப் பறக்க விட்டுப் பரிசோதித்துப் பார்த்தது என்று கேட்டால் அந்த நாட்டினுடைய பெயர் இன்னமும் உலக வரலாற்றின் ஏடுகளில் சரியாகப் பதிவு செய்யப்படாமலிருக்கிறது. ஜெர்மனிதான் முதன் முதலில் இந்த ஆய்வுக்களத்தில் முன்னால் நின்றது. ஜெர்மனிக்குத்தான் இதில் ஒரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.
1903 ஆவது ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானம் பற்றிய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த முயற்சிகள் நடைபெற்று வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன.ஆனால் விமானங்களுக்கும் ராக்கெட்டுக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில் விமானங்கள் காற்று மண்டலத்துக்குள்ளே பறக்கின்றன. ராக்கெட்டுகள் காற்று மண்டலத்தைக் கீறி வெளியில் பிரபஞ்சத்துக்குப் போகின்றன. இதுதான் அதனுடைய அடிப்படையான வேறுபாடு.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த எருமன் என்கிற ஒரு விஞ்ஞானிதான் முதன் முதலாக ராக்கெட் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். 19 ஆம் நூற்றாண்டினுடைய இறுதியில÷யே அந்தச் சிந்தனைகள் வெளிப்பட்டன. ஆனாலும் அதற்கான முயற்சிகள் 1920 களிலே தான் நடைபெற்றன.
முதன்முதலாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு ராக்கெட் 1000மீட்டர் அதாவது 3000 அடிக்குச் செங்குத்தாக மேலே எழுந்தது. அதுவரையிலே விமானம் என்பதெல்லாம் ஊர்ந்து ஓடி எழுந்து பறப்பது. அதுதான் விமானத்தினுடைய அடித்தளம்.
ஆனால் ராக்கெட் என்பது நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக வானை நோக்கிப் பறப்பது. அப்படி முதன் முதலில் பறந்த ராக்கெட் ஜெர்மனியிலேயிருந்துதான் பறந்தது.அது 1931 பிறகு மெல்ல மெல்ல அந்தத் தொழில் நுட்பம் அங்கே வளர்ந்தது.ஹிட்லர் அந்தநாட்டுக்கு அதிபரானதற்குப் பிறகு ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்கு அவர் பேருதவிகளைச் செய்தார். அவருடைய நோக்கம் வேறாக இருக்கலாம்.
ஆனாலும் அந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் பேருதவிகளைச் செய்தார்.அதனுடைய விளைவு என்னவாயிற்று என்றால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனிதான் முதன் முதலாக இங்கிலாந்தை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான செய்தி.
ராக்கெட் தாக்குதலை முதன் முதலில் நடத்திய நாடு ஜெர்மனிதான்.ஹிட்லர் அதிபராக இருக்கிறபோது இங்கிலாந்து நாட்டின் மீது அந்த தாக்குதல் நடைபெற்றது.
ஆனால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்குப் பிறகு,அமெரிக்கர்களும் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் அந்தத் தொழில் நுட்பத்தை கையிலெடுத்துக் கொண்டார்கள்.அதுவும் சொல்ல வேண்டுமென்றால் சோவியத்துதான் இரண்டாவது உலகப்போரின் இறுதியில் ஜெர்மனியை வெற்றி கொண்டது.
அங்கே போன சோவியத்து விஞ்ஞான அறிஞர்கள் வீட்டோ என்கிற ராக்கெட்டையும் அதனுடைய தொழில் நுட்பங்களையும் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.
பிறகுதான் சோவியத்திலே விண்வெளி ஆய்வகம் வளர்ந்தது.அதைப்போல ஜெர்மன் நாட்டிலே இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் சிலர் உலகப் போரினுடைய தோல்விக்குப் பிறகு அமெரிக்காவிலே குடி புகுந்தார்கள். அவர்கள்தான் அமெரிக்காவிலே இந்த விண்வெளி ஆய்வை வளர்த்தார்கள்.
எனவே சோவியத்தில் வளர்ந்தது ஜெர்மனியிலே தொடங்கிய ஆய்வு அமெரிக்காவிலே உருவானது ஜெர்மனியில் இருந்து போன விஞ்ஞானிகள் கொண்டு போன ஆய்வு. ஜெர்மனி தான் அதனுடைய அடித்தளமாக இருக்கிறது.ஆனாலும் கூட அவற்றைப் பயன்படுத்திக் சோவியத்தும் அமெரிக்கர்களும் மிகப்பெரிய வெற்றியை இந்த அறிவியல் உலகத்திலே, விண்ணியல் உலகத்திலே அடைந்திருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது.
வரலாற்றிலே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய ஒரு சில நாட்கள் உண்டு. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி அதுதான் முதன் முதலாக விண் வெளியில் ஒரு ராக்கெட் சீறிப் பாய்ந்த நாள். ரஷ்யாதான் அதை அனுப்பிற்று. ஸ்புட்னிக் –1 என்று அதற்குப் பெயர்.
அந்த ஏவுகணைதான் முதன் முதலாக பூமியைச் சுற்றி வந்தது.அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஏவுகணைக்குள்ளே ஒரு நாயை வைத்து அனுப்பினார்கள். "லைக்கா' என்று அந்த நாய்க்குப் பெயர் பாருங்கள்.வரலாற்றில் முதன் முதலாக ஏவுகணையில் பறந்து காற்று மண்டலத்துக்கு வெளியே போன பூமியையைச் சேர்ந்த ஜீவன் ஒரு நாய்தான். ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு அந்த ஏவுகணையும்,அந்த நாயும் அப்படியே எரிந்துபோய் விட்டன. எனினும் அந்த முயற்சி ஒரு பெரிய வெற்றி பெற்றது.
பிறகு நான்கு ஆண்டுகள் ஆயிற்று. 1961 இல் மறுபடியும் சோவியத் ஸ்புட்னிக் – 2 என்கிற இன்னொரு ஏவுகணையை அனுப்பியது. முதன் முதலாக ஒரு மனிதன் பயணம் செய்தான், மிகத் துணிச்சலாக அந்த ஏவுகணையிலே. ஏனென்றால் முன்னாலே போன நாய் எரிந்து போயிற்று. இவன் திரும்ப வருவானா என்று தெரியாது. ஆனால் முதன் முதலாக ஒரு மனிதன் யூரிகாகரின் என்பது அவனுடைய பெயர்.அவன்தான் முதன் முதலாக விண்வெளியில் பயணம் செய்தான்.
அற்குப் பிறகு 62 ஆவது ஆண்டு விண்வெளியிலே எழுந்து நடந்தது. நடந்தது என்பதைவிட மிதந்துகாட்டிய முதன் பெண்மணி வாலன்டினா என்பதை நாம் அறிவோம். வாலன்டினாவினுடைய பெயர் இன்னமும் வரலாற்றில்,அறிவியலின் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம் அந்த பெண்மணிதான் முதன்முதலாக வான்வெளியிலே மிதந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியவர்.
சோவியத்துதான் விண்வெளி ஆய்விலே இப்படிப்பட்ட முயற்சிகளிலே முதல் வெற்றி பெற்றது.ஆனாலும் நிலவில் போய் கால்வைத்த பெருமை அமெரிக்கர்களுக்கு வந்துசேர்ந்தது. அடுத்தடுத்த முயற்சிகளில் அவர்கள் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் தொழில் போட்டி என்பது தொழில் நுட்பப் போட்டியாக, விண்வெளி ஆய்வு போட்டியாக அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியை அமெரிக்கர்கள் பெற்றார்கள்.
1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் முதன் முதலாக நிலவில் மனிதன் கால் வைத்த நாள். அது மூன்றுபேர் போனார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கெல் கால்வின் என்கிற மூன்று பேர் அந்த ஏவுகணையிலே பயணம் செய்தார்கள்.
அதிலே கூடப் பாருங்கள் மூன்றுபேரும் வான்வெளிக்குப் போனார்கள். ஆனால் மைக்கேல் கால்வின் அந்த ஏவுகணையிலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. இரண்டு பேர்தான் நிலவில் கால் பதித்தனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தான் முதன் முதலாகச் சந்திரனின் மீது கால் வைத்தார்.
உலகமே அந்த நாளைக் கொண்டாடியது.உலகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.
சந்திரனில் மனிதன் கால் வைத்தான் நிலவே வா...வா...என்று நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். நிலா... நிலா... ஓடிவா என்றோம். அது ஓடிவராது என்று தெரிந்தது. சந்திர பகவான் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.இல்லை சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம்,பூமியைப் போல அது இன்னொரு கிரகம் என்பதையெல்லாம் அந்த அறிவியல் ஆய்வு இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியது.
எனவே அன்றைக்குத்தான் மனிதர்கள் முதன் முதலாக நிலவிலே கால் வைத்தார்கள் என்பதைக் காட்டிலும் முக்கியமானது. ஜூலை மாதம் 24 ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார்கள்.என்பதுதான் இது விண்வெளி ஆய்விலே மிகப்பெரிய வெற்றிப்படி என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இதிலே மிகப்பெரிய பங்கு இருந்தாலும்கூட.இந்த விண்வெளி ஆய்வைத் தொடக்கி வைத்தது ஜெர்மனிதான் என்பதை இந்த நேரத்திலே நாம் நன்றியோடு நினைவுகூரவேண்டும்.