(குஞ்சிதம் அம்மையார் தனக்கு எழுதியதாகக் குத்தூசி குருசாமியே எழுதிக் கொண்ட கற்பனை மடல்)

“வேலை வேலை!! வேலை!!! என்று முப்பதாண்டுகள் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல், அலுக்காமல், ஓய்வு பெறாமல் வேலை செய்தேன். வீட்டிலும் சரி; பொதுவிலும் சரி;உத்தியோகத்திலும் சரி! அயராது உழைத்தேன்.

ஓய்வெடுத்துக் கொள்! உடலைக் கவனித்துக்கொள்! என்று பல நூறு தடவைகள் சொன்னீர்கள்! ஆமாம்! ஆகையால்தான் நிரந்தரமாக ஓய்வெடுத்துவிட்டேன்!

நான் கிழிந்த துணியைத் தைத்து உடுத்தியே வாழ்க்கை நடத்திவிட்டேன், எனக்காக என்று உங்கள் வற்புறுத்தலினால் தவிர, நானாக, ஒரு உயர்ந்த உடையோ, அணியோ எதுவும் வாங்கிக் கொண்டதேயில்லை. பட்டுப்புடவை வாங்கும்போதுகூட இதை உடுத்திக் கொண்டு போகும்போது, பெரியார் பார்த்தால், "ரொம்ப ஜம்பம்' என்று சொல்வாரோ! என்று சொல்லிக் கொண்டே பயந்து பயந்து வாங்குவேன், உங்களுக்குத் தெரியாதா?

இதெல்லாம் எதற்காக எழுதுகிறேன்? என் பெருமைக்காக அல்ல. அதற்கு நான் ஒரு விநாடிகூட ஆசைப்பட்டவளல்ல என்பது 31 ஆண்டு 7 மாதம், 21 நாள் அதாவது 11,546 நாள் என்னோடு இணைபிரியாது வாழ்ந்து வந்த உங்களுக்குத் தெரியாததல்ல.

என்னைவிடச் சிக்கனமாக இனி வாழ்ந்தால்தான் உங்களால் தன்மானமுள்ள வாழ்க்கை நடத்த முடியும்; நம் பிள்ளைகளை உருவாக்க முடியும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். என் தற்பெருமைக்காக அல்ல.

நான் உங்களைப் போலவே உங்கள் துணையாகவே வாழ்க்கை நடத்திவிட்டேன். முப்பதாண்டுகளாக ஓடி ஓடிச் சருகு சேர்த்தேன். வியர்க்க வியர்க்க குச்சி பொறுக்கினேன். சுருண்டு சுருண்டு விழுந்து சுள்ளி பொறுக்கினேன். ஆனால் இவற்றைச் சேர்த்துக் குவித்துக்கொளுத்திக் குளிர்காய எனக்கு நேரமில்லை! ஆகவே போகிறேன்! உங்களை இந்தக் கொடிய உலகில் தன்னந்தனியாக விட்டுத்தான் போகிறேன்!

முப்பதாண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். ஒரு நாள் பொட்டு வைப்பதைப் பற்றி இருவரும் விவாதம் செய்து கொண்டிருந்தோம். பொட்டு வைப்பதும் மதச் சின்னந்தான் என்று வாதாடினீர்கள்; தொடர்ந்து சில நாள் விவாதத்துக்குப் பிறகு உங்கள் கருத்துச் சரி என்று எனக்குப் பட்டது. அன்று முதல் நெற்றிப் பொட்டை விட்டேன். இதன் பயனாக எத்தனையோ திருமணங்களில் பெண்கள் என் காலி நெற்றியைப் பார்த்து விட்டு என்னை விதவையாகக் கருதி பூ தராமல் விலகிச் சென்றதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள்! வீட்டிலும் கூட இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல தடவை என்றாலும் நான் ஒரு தடவையாவது சங்கடப்பட்டிருப்பேனா?

முப்பதாண்டுகட்கு முன்பு ராஜமகேந்திரபுரத்தில் இருந்தபோது தாலியைப் பற்றி இருவரும் விவாதித்தோம். அன்று உருவி எடுத்தேன் தாலியை! அது முதல் 1961 சூலை 30வரையில் எவருடைய மிரட்டலுக்காவது, தூற்றலுக்காவது, அஞ்சியிருப்பேனா? அதில் பெற்றோரின் அதிருப்தியைக்கூடச் சமாளித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினேன்.

உங்களைக் கணவராகக் கொண்டது முதல் ஒரு கோவிலுக்குள்ளும் சென்று வணங்கியதில்லை; ஒரு சடங்கையும் நடத்தியதில்லை. இதுமட்டுமா? உங்களைப் போலவே நானும் கடந்த பத்தாண்டுகளாக சினிமாவுக்கே செல்வதில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்!

இவ்வளவு ஏன்? ஒவ்வொரு அணுவிலும் உங்களுக்குத் துணையாக, நம் கொள்கையில் உறுதியாக உங்களுடன் வாழ்க்கை நடத்தி விட்டேன்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா? என்னைப் போல் நம் இயக்கத்தில் இருநூறு பெண்களாவது இருக்க மாட்டார்களா என்ற ஆசையால்தான். கடைசிவரையில் பச்சை நாத்திகராகவே– பகுத்தறிவுவாதியாகவே இருந்து விட்டேன். நீங்களும் இதைப்போல இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. உங்களால்தான் நான் இப்படியானேன்.

இறுதி மூச்சுவரையில் பணம் சம்பாதித்துக் கொடுத்து விட்டேன். இனி நீங்கள் பழைய "குருசாமி'யாகத்தான் வேண்டும்! வெறும் குருசாமிதான்!! அதற்கு நான் என்ன செய்வது, அத்தான்? ஆம்! கடைசித் தடவையாக, ஒரு அத்தான்!

ஆனால் ஒன்றுமட்டும் நினைவிருக்கட்டும், அத்தான்! மறுபிறவியில் நமக்கு நம்பிக்கையில்லை. ஆதலால் இப்பிறவியில் உங்களுக்கு இன்னொரு குஞ்சிதம் கிடைக்கமாட்டாள், அத்தான்! உஷார்! அத்தான்! போகிறேன் அத்தான்! இனி வரமாட்டேன், அத்தான்!

Pin It