இந்தியன் இரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC 1999 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் செயல்படத் தொடங்கியது. 2005 ஆம்ஆண்டு முதல் சுற்றுலா இரயிலை நடத்துகிறது. IRCTC யின் முக்கிய நோக்கம்

1. இரயில் பயணிகளுக்குத் தரமான உணவு வழங்குதல்

2. இரயில் பயணிகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குதல்

3. இரயில் பயணிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளுதல்

4. இரயில் பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் விடுதிகளை நடத்துதல் மற்றும் பல.

தென் இந்திய மக்களுக்காகப் பல சுற்றுலாக்களைக் குறைந்தக் கட்டணத்தில் IRCTC நடத்திவருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இச்சுற்றுலா மூலம் சென்று பார்த்து அனுபவிக்கலாம். இச்சிறப்பு இரயிலில் 7 மூன்றுஅடுக்குப் படுக்கை வசதி (3 TIER) கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம்.

26.09.2012 முதல் 05.10.2012 வரை 10 நாள் சுற்றுலா ரயில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது சுற்றுலாவைத் தொடங்கியது. அய்தராபாத், கோவா, கொச்சின், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மதுரை, கரூர், ஈரோடு, சேலம் வழியாகச் சென்னை வந்தடைந்தது.

இச்சுற்றுலாவில் 438 பேர் பங்குபெற்றனர். ஒவ்வொருரிடமிருந்தும் ரூ.5150/– கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இத்தொகை போகவர இரயில் கட்டணம், 10 நாட்களுக்கு மூன்று வேளை உணவு, காலை தேநீர், ஒவ்வொரு ஊரிலும் பேருந்து மூலம் சுற்றிப்பார்த்தால் மற்றும் தங்கும் வசதி ஆகியவை அடங்கும்.

இச்சுற்றுலாவில் கலந்து கொண்டோர் பெரும்பான்மையோர் மூத்த குடிமக்களே. இரயில் பயணிகள் அனைவரும் தங்கள் நாட்டைச் சுற்றிப்பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நிறைவேற்றப்பட்ட அருமையான பாராட்டுக்குரிய திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்திய மேனாள் இரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத் அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இச்சுற்றுலா மேலும் செம்மைபெற இரயில்வே பயணிகள் கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றக்கோரி IRCTC நிறுவனத்தை வலியுறுத்தலாம்.

3 Tier என்பதற்குப் பதில் 2 Tier பெட்டிகள்

IRCTC யின் இணைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டியில் 71 பேர் வீதம் 504 பேர் பயணம் செய்யலாம். நீண்ட பயணம்,சில நாட்கள் இரவு பகல் முழுவதும் பயணம் செய்ய வேண்டிய நிலை வரும். கீழ்ப்படுக்கையில் (L.B) உள்ள பயணி படுக்க விரும்பினால் நடுப்படுக்கை ஒதுக்கப்பட்ட (M.B.) பயணியும் படுக்க வேண்டும். கீழ்படுக்கை பயணி உட்கார விரும்பினால், நடுப்படுக்கை பயணியும் எழுந்து, உட்கார வேண்டும். ஒத்துப்போகவில்லை என்றால் சச்சரவே உருவாகும். 10 முதல் 15 நாட்கள் சுற்றுலா என்பதால் பயணம் செய்பவர்கள்விருப்பம் போல் படுத்துப் பயணம் செய்ய வசதி வேண்டும். அதற்குத் தற்போது உள்ள மூன்று படுக்கை வசதி (3 TIER) என்பதற்குப் பதில் இரண்டு படுக்கை வசதி (2 TIER) பெட்டிகளை இணைத்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இதற்காக மேலும் 2 பெட்டிகள் இணைத்தாலே போதுமானதாகும். 504 படுக்கை என்பதற்குப் பதில் 486 படுக்கைகள் இருக்கும். 18 படுக்கைகள் குறைவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்த சுற்றுலாவில் 438 பேரே பயணம் செய்தனர். இப்படிச் செய்தால் இட நெருக்கடி குறையும். உணவு பரிமாறுவதற்கும் வசதி ஏற்படும். கழிவறையைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படா.

பேருந்தின் தாழ்வான படிக்கட்டுகள்

இரயிலிருந்து இறங்கியவுடன் தங்கும் விடுதிக்கோ, அல்லது நகரைச் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கோ ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் அனைத்தும் புதியவை, சொகுசானவை. ஒரே ஒரு குறை பேருந்துகளில் ஏற இறங்கத் தாழ்வான படிக்கட்டுகள் சில பேருந்துகளில் இல்லை. வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தாழ்வான படிக்கட்டுகள் உள்ள பேருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யலாம்.

உணவு வழங்குதல்

மூன்று வேளை உணவும் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறது. தாமதம் என்பதே இல்லை. இருப்பினும் போதுமான காய்கறிகளைக் சேர்த்து வழங்கினால் பயணிகள் மேலும் மகிழ்வர். உணவு வழங்கும் போது தண்ணீர் செலவைக் குறைக்க பேப்பர் பிளேட்டுகளையும் வழங்க வேண்டும். உணவு வழங்கும் ஒரு சில ஊழியர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கின்றனர். அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளித்திடல்வேண்டும்.

காலையில் பக்திப்பாடல்கள் தவிர்த்தல்

பயணம் செய்பவர்களில் பெரும்பாலோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் காலையில் யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உள்ள சுப்ரபாதம் ஒலி பரப்புவது தேவை இல்லாதது. அதோடு உடன் பயணம் செய்யும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அதனை விரும்பமாட்டார்கள். அந்த இசை நாடாவைத் தவிர்ப்பது நல்லது.

பொருட்கள் வாங்க

பொதுவாகச் சுற்றுலாப் பயணிகள் வெளியூர்களுக்குச் செல்லும்போது ஏதாவது பொருட்கள் வாங்க விரும்புவதுஇயல்பு. எனவே, ஒவ்வொரு ஊரிலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது அதற்காக ஒதுக்க வேண்டும். சுற்றுலாவின் கடைசி நாளான 4.10.2012 அன்று காலை திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில் பிற்பகல் உயிரியல் பூங்கா மாலை கடற்கரை எனத் திட்டமிட்டதால் சுற்றுலாப் பயணிகள் எவரும் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இக்குறையைத் தவிர்த்திடல் வேண்டும்.ஒவ்வொரு சுற்றுலாவிலும் கடைசி நாள் பொருட்கள் வாங்க நேரம் ஒதுக்கிட வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்குச் சிரமம் தரும் ஊழியர்கள்

சுற்றுலாப் பயணிகளோடு, ஊழியர்களும் வந்த உட்கார்ந்துகொள்வது அல்லது படுத்துக்கொள்ளுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல. குறிப்பாகப் பெண் பயணிகளின் தனிப்பட்ட உரிமை பாதிக்கிறது. அதோடு சுற்றுலாப் பயணிகள் எந்தப் பொருளை எங்கே வைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சென்ற பயணத்தின்போது ஒரு அம்மையாரின் கைப் பை நள்ளிரவில் திருடுபோனது. அந்தப் பையில், பணம், கைப்பேசி, நகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனைத் தவிர்க்க கை கழுவும் இடங்களில் 5 அடி நீளம் 1.5 அடி அகலம் கொண்ட மரப்பெட்டிகள் அமைத்துக் கொடுத்தால் ஊழியர்கள் தங்கள் பொருட்களை அதில் வைத்துக் கொள்வதோடு இரவில் அதன் மீது படுத்து உறங்கலாம்.

இரயில் சுற்றுலா மேலும் வளர்ச்சியடைய இரண்டு முதன்மையான கோரிக்கைகள் :

1. இந்திய இரயில்வே நிர்வாகத்திற்கு

சுற்றுலா இரயில் குறித்த நேரத்தில் புறப்பட்டுக் குறித்த நேரத்தில் சென்றடைய வேண்டும். சுற்றுலா இரயில் சரக்கு இரயிலைப்போல பாவிக்கப்படுகிறது. எதிரே வரும்இரயிலுக்கு வழிவிட்டு ஒதுங்கி இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் பின்னாலே வரும் இரயிலுக்கும் வழிவிடவேண்டும் என்பது நியாயமற்றது. சரக்கு இரயில் மெதுவாக செல்லக்கூடியது. அதனை நிறுத்தலாம். சுற்றுலா இரயில் பிற வண்டிகளைப் போல் வேகமாக செல்லக்கூடியது. எனவே, சுற்றுலா இரயில்களைப் பல மணி நேரம் நிறுத்தி வைப்பதை இரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடர்ந்த காடுகளில் இரவு நேரங்களில் பல மணி நேரம் நிற்க வைப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதோடு ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் கூட நியமிக்காதது,

இரயில்வே நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் மீது எந்த அளவுக்குஅக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

2. I.R.C.T.C. நிறுவனத்திற்கு

பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் 50 விழுக்காடு I.R.C.T.C. நிறுவனம் எடுத்துக்கொண்டு மீதியுள்ள 50 விழுக்காடு தொகையே ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்படுகிறது. ஒப்பந்தக்காரர் அந்தத் தொகையில் 3 வேளை உணவு, காலை தேநீர், சுற்றிப்பார்க்க புதிய சொகுசுப் பேருந்துகள், தங்குவதற்கான இருப்பிடம், ஊழியர்கள் சம்பளம் ஆகியவை செலவு செய்து இலாபத்தையும் ஈட்ட வேண்டும். 7 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகை, விலைவாசி ஏற்றம் இதனால் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் மட்டுமே தனது செலவுக் கணக்கை அவர்களால் குறைக்க முடியும். அதனால் உணவின் தரமும், காய்கறிகளின் அளவும் குறைகிறது. I.R.C.T.C. நிறுவனம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தினால் பயணிகளுக்குத் தரமான காய்கறிகள் நிறைந்த உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இரயில் பயணிகள் முயல்வதைவிட மக்கள் பிரதிநிதிகளின் தமிழகம் புதுவை உட்பட 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்தால் கோரிக்கை வெற்றிபெறலாம்.

முன்வருவார்களா நமது பிரதிநிதிகள்?

(இக்கோரிக்கையை பரிந்துரைக்க இவ்விதழ் அனைத்து தமிழக / புதுவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.)

Pin It