ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் மாநாடா? ஒரு போதும் அனுமதியோம், தமிழ் ஈழம் கோரித் தீர்மானமா? அனுமதிக்கமாட்டோம். "ஈழம்' என்ற சொல்லை மாநாட்டில் பயன்படுத்தத் தடை விதிப்போம் என அரசு அறிவிக்கிறது. இலங்கை அரசா? இல்லை, நமது இந்திய அரசே! இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது, தாக்கிது அனுப்புகிறது. ஏன்? எதற்காக? இலங்கை அரசின் இறையாண்மையைப் பாதுகாக்க போகிறார்களாம் இந்திய அரசின் உயர் அதிகாரிகள்.

மேலும், தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் படைகளுக்குத் தமிழகத்தில் மத்திய அரசு பயிற்சி அளிப்பதை ,ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் அதிமுகவும், தி.மு.க.வும், ம.தி.மு.க.வும்மற்றும் பல கட்சிகளும், இயக்கங்களும் குரல் கொடுத்தபோது தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் “இலங்கை நட்பு நாடு. எனவே சிங்கள வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் எனத் தமிழர்களுக்கு எதிராக இறுமாப்புடன் அறிவிக்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பல்லம் ராஜு. இதிலிருந்து என்ன புரிகிறது, இந்திய அரசுக்குத் தமிழர்களைவிடச் சிங்களவர்களே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

2009 ஆம்ஆண்டு இலங்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு தொடர்ந்த போரில் அந்நாட்டு முப்படைகளும் களம் இறங்கி, ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கணவனை இழந்து விதவைகளானோர், பெற்றோரை இழந்து அனாதைகளானோர், கை கால்களை இழந்து உடன் ஊனமுற்றோர் பல ஆயிரம் பேர். மூன்று இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப் பட்டனர். சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்தரவதை செய்யப்பட்டோர் எண்ணிக்கையை எவரும் அறியார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அய்ரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டுவந்தபோது இந்தியா இலங்கைக்குப் பல பொருளாதார உதவிகளை அறிவித்தது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் செய்த இராசபக்சேவைக் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது இந்திய இலங்கைக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டிக் கொடுத்தது.

போரின்போது இலங்கை அரசு மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளது என உலக நாடுகள் குற்றம் சாட்டியபோது இந்திய அரசு மாபாவி இராசபக்சேவைக் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து அந்தக் கொலைகாரனைக் கவுரவித்தது.

அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு தனது அறிக்கையில் “முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்குப் போதுமான அளவு தனிமை வழங்கப்படவில்லை. அவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் போதும், குளிக்கும்போதும் இராணுவத்தினர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர் என்றும் “உணவு, உறைவிடம் அல்லது முகாம்களில் பிற உதவிகள் பெறுவதற்கு எங்கள் பாலியல் இச்சைகளுக்கு உடன்பட்டால் உங்களுக்கு உதவுகிறோம்'' என்றும் கூறியதாக அறிக்கை விவரிக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள், கொடுமைகள், உலக நாடுகளின் கவனத்திற்குச் சென்ற பின்னும், இந்தியாவில் சோனியா தலைமையிலான காங்கிரசுக் கட்சி ஆட்சி இலங்கைக்கு வெண்சாமரம் வீசுகிறது.

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சாம் இராசப்பா ‘The Statesman ' என்ற ஆங்கில இதழில் எழுதியுள்ள தனது கட்டுரையில் “சோனியா தனது கணவன் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்க்கவே விடுதலைப்புலிகளை அழித்திட இலங்கை அரசுக்குப் பச்சைக்கொடி காட்டினார். அதோடு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்தார்'' என்றும் “முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக இலங்கை அரசு மீது சர்வதேச நீதி மன்றம் விசாரிக்கும்போது இந்தியா அதிலிருந்து தப்பிக்க முடியாது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த நிலை? யார் அந்த ஈழத்தமிழர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஓடிவந்த நாடோடிகளா? அல்லது இந்தியாவி

லிருந்து இலங்கைக்குப் பிழைக்கச் சென்றவர்களா? இல்லை இல்லை. அவர்கள் இலங்கையின் பூர்வ குடிகள். சிங்களவர்களுக்கு இலங்கையில் வாழ என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு.

“1600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தை 44 ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன் சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன்'' என்று இலங்கை வரலாற்று நூலான "மகாவம்சம்' குறிப்பிடுகிறது.

இராசராச சோழனின் மகன் இராசேந்திர சோழன் கி.பி.1017 இல் இலங்கை மீது படையெடுத்து சிங்கள அரசனான மகிந்தனைக் கைது செய்து முழு இலங்கையையும் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாகப் பிரகடனப்படுத்தினான் என்பது வரலாறு.

ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியா வரும்போது வட இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவி இருந்தனர். ஆரியர் சிந்து வெளியை அழித்துப் படையெடுத்தபோது, வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் தெற்கு நோக்கிப் பரவினர்.

கி.பி.300 முதல் 900 வரையில் தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர்களாலும், கி.பி.900 முதல் 1200 வரை தென் இந்தியா முழுவதும் சோழ மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட தமிழர்களை இன்றுஇந்திய அரசு கேவலப்படுத்துகிறது. நாளை தமிழகத்தில் வாழத் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று காங்கிரசுக் கட்சி கூறும். தமிழகக் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் அதனை ஆமோதிப்பர்.

இந்தியாவில் இன்று ஒரு கட்சி ஆட்சி இல்லை. நாளையும் ஒரு கட்சி ஆட்சி நடைபெற வாய்ப்பில்லை. காங்கிரசுக் கட்சி தலைமையில் பல மாநில கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் தலைமை தாங்குகிற காங்கிரசுக் கட்சி கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. தமிழர்களுக்கு எதிராக ஆட்சி செய்யத் தயங்குவதில்லை. இதற்குப் பின்னும் "இந்தியா' தமிழர்களின் நாடுதான் என்ற எண்ணம் மேலோங்குமா?

சங்க காலத்தில் தமிழர்கள் சேரர் என்றும், சோழர் என்றும், பாண்டியர் என்றும் பிரிந்து மோதி அழிந்தனர். தந்தை பெரியாரால் அறிஞர் அண்ணா அவர்களால் இன உணர்வை ஊட்டி வளர்த்த திராவிட இயக்கம் இன்று "அ.தி.மு.க.' என்றும் தி.மு.க. என்றும் ம.தி.மு.க. என்றும் பல கட்சிகளாகப் பிரிந்து மோதிக் கொள்வதில் யாருக்குப் பயன்?

கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டது, நடத்துவது தமிழர்களுக்குத்தான் என்பது உண்மையானால், தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டிட, தமிழர்களுக்கு என ஒரு நாடு உதித்திட, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதியும், ம.தி.மு.க. தலைவர் வைகோவும் தம் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி அரசியல் இலாப நட்டங்களை மறந்து, ஒரே மேடையில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் "இந்திய அரசு ஆடித்தான் போகும்.

அயல் உறவுக்கொள்கையில் மாற்றம்தான் ஏற்படும். ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெறுவர். தமிழகத் தமிழர்கள் பெருமிதம் கொள்வர். உலகத் தமிழர்கள் நம்மை என்றும் போற்றுவர்.

அப்படி இல்லை என்றால் “தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தமிழர்களின் இருண்டகாலம்' என எதிர்கால வரலாறு பதிவு செய்யும்.

Pin It