பிறந்தாருள் எல்லோரும் பீம்ராவ் ராம்ஜி
 பேசியதைக் கேட்காத காலம்! வீட்டைத்
திறந்தாருள் எல்லோரும் தீண்டாமைக்குத்
 தேர் இழுத்துப் பொங்கலிட்டு வழிபட்டாரே!
இறந்தாருள் சேர்க்காமல் தாழ்த்தப்பட்டோர்
 இருக்கட்டும் எனப்பெரிய மனம் வைத்தாரே!
அறந்தானா எனக்கேட்டோர் இந்தியாவில்
 அம்பேத்கர்! ஈரோட்டார்! இருவர் தானே?

"சத்தாரா' ஊரிலவர் நடந்த போதே
 சமுதாயச் சாக்கடையை அறிந்து கொண்டார்!
முத்தாரம் புரளுகின்ற செல்வர் காலில் 
 மூன்றுமுறை விழுந்தெழுந்த மக்கள் கண்டார்!
எத்தாலும் பெறமுடியா உயர்வைச் சாதி
 எனும் பெயரால் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டோர்
குத்தாலும் உதையாலும் குனிந்தவர்க்கே
 குரல் கொடுத்த அம்பேத்கர் என்றும் வாழ்க!

சட்டமெல்லாம் ஆராய்ந்தே அமைத்த மேதை!
 சந்துபொந்துக் குள்சாதி புகுந்து கொண்டான்
திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என்று
 திசையெட்டும் முழக்கமிட்ட பாபா சாகேப்!
வட்டமிடும் கழுகுகளை இந்த நாட்டு
 வரலாற்றில் அடிக்கடிநாம் காணுகின்றோம்!
கொட்டமிடும் நரிகளுக்கு வாழ்வே இன்றிக்
 குடிசைகளும் கோலோச்ச வைத்தார் அண்ணல்!

இருளெங்கே இருக்கிறது? சொல்லுங்கள்! ஓர்
 எலி எங்கே வாழ்கிறது? சொல்லுங்கள்! நம்
பொருளெங்கே மறைகிறது? காணுங்கள்! வாய்ப்
 பூட்டெங்கே தெரிகிறது? புகலுங்கள்! எச்
சுருளெங்கே விரிகிறது? துரத்துங்கள்! எத்
 துறைகளிலும் தீண்டாமை மாய்க்கச் சட்ட
அருளெங்கே? அம்பேத்கர் எழுதி வைத்தார்!
 அதை எடுத்துப் புரட்டுங்கள்! வெற்றி காண்பீர்!

- முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Pin It