கொடிகள் ஏந்தி ஊர்வலம் சென்று
கொண்டா டிடவா பிறந்தநாள் – சாதிக்
கொடியர் தம்மைக் கூண்டோ டழித்துக்
கொண்டாடு வோம்உம் பிறந்தநாள்!
கொடியங் குளமும் பரமக் குடியும்
கொஞ்சமும் இங்கே குறைந்ததா – சாதித்
தடியர் கட்சித் தாதாப் பயல்கள்
தந்திடும் தொல்லைகள் ஒழிந்ததா?
குடியர சென்றும் விடுதலை என்றும்
கொண்டாடிடுவர் நாட்டிலே – ஒரு
கொடிஏற் றிடவும் உம்முடை மக்கள்
அடிவாங் குதல்எக் கேட்டிலே?
அண்ணலே நீங்கள் அரசியல் சட்டம்
ஆக்கித் தந்தது உண்மையா – பல
திண்ணியக் கீழ்மைகள் தினம்தினம் தொடர்தல்
தேசத் திற்காம் புன்மையா?
மாதர் தம்மின் சொத்து ரிமைக்கு
மாண்புகள் சேர்த்தீர் அய்யனே – சேரி
மாதர்க் கிங்கே மற்ற சாதியால்
மாபெரும் கொடுமைகள் அய்யனே!
வன்கொடுமைக் கெதிர் சட்டம் யாவும்
வாய்ப்பேச் சில்தான் அய்யனே – நாம்
இன்னும் இன்னும் எத்தனைக் காலம்
இழிசா தியராய்... அய்யனே!
தெருக்கூட் டுவதும் மலம்அள் ளுவதும்
தீர்தல் எந்நாள் அய்யனே – இனி
ஒருகை பார்க்கத் துணிந்தார் மக்கள்
உம்மேல் ஆணை அய்யனே!