தலைவர் அவர்களே, பெரியோர்களே! தோழர்களே! இன்று இந்த "சுயமரியாதை' மாதமிருமுறை இதழ் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையை வெளியிடும் பணியை எனக்கு அளித்ததற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையைத் திறந்து வைக்குமுன்பு இம்மாதிரி நிகழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த தோழர்களுக்குத் தனியாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இது ஒரு அதிசய சந்திப்பாகும். இங்கு மேடையில் இருக்குகின்ற நாங்கள் மூவரும் (சாமி சிதம்பரனார், எஸ்.இராமநாதன், எஸ். குருசாமி) பல மாநாடுகளில் இதைப் போலவே தலைவர் பெரியார் அவர்களுடன் உட்கார்ந்திருந்த காட்சி என் நினைவுக்கு வருகிறது. அவர்களுடன் கூட்டாக உட்கார்ந்த பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. வயது, அனுபவம் முதலியவைகளில் நான் முன்னாள் அமைச்சர் திரு. இராமநாதன், திரு. சாமி சிதம்பரனார் அவர்களுக்கு மிகமிகத் தாழ்ந்தவனே. நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே நீதிக் கட்சியில் சிறந்த சொற்பொழிவாளராகவும், பன்னீர்செல்வம், பெரியார் ஆகியோருக்கு வலது கரமாயுமிருந்தவர் தலைவர் சாமி சிதம்பரனார். மேலும் தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றவர், அவர் நிழலில்கூட நான் நிற்பதற்குத் தகுதி படைத்தவனில்லை. இதைப்போல்தான் திரு. இராமநாதன் அவர்களும். ஆசிரியர் தொழிலுக்கு நான்வர எனக்கு குரு.

அந்தக் காலத்தில் ஈரோட்டில் "ரிவோல்டு' என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்துகொண்டிருந்தபோது என் கல்லூரித் தேர்வை முடித்துவிட்டுப் பெரியார் அவர்களைச் சந்தித்துவிட்டுப் புறப்படவிருந்த என்னை, "நீதான் பரீட்சைகளை முடித்து விட்டாயே, நீயே அந்த "ரி வோல்ட்' என்ற பத்திரிகைக்குப் புரூப் ரீடராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்து பணியாற்றேன்' என்று என்னைக் கேட்டார், நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். அதுமுதல் இரவு பகலாக திரு. இராமநாதன் அவர்களுடன் இடைவிடாது பற்பல

விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளேன். நான் இந்த நிலைமைக்கு வர முதலில் பெரியார் அவர்களும், பிறகு அமைச்சர் இராமநாதன் அவர்களும்தான் காரணமாவார்கள். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற இராமநாதன் அவர்களின் நிழலில் நிற்கக்கூட நான் அருகதை அற்றவன்.

இன்று பழைய தலைவர்களைச் சந்திக்கவும், அவர்களிடையே இருக்கவும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட சுயமரியாதை இயக்கத்திற்கு திரு. இராமநாதன் அவர்களே பொதுச் செயலாளர். மேலும் நாங்கள் மூவரும் கலப்பு மணம் புரிந்தவர்கள். திரு. சாமி சிதம்பரனார் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி வாழ்க்கை வரலாற்றை என் கட்டாயத்தின் பேரில் என் வீட்டிலேயே பதினைந்து நாட்களில் புத்தகத்தை உருவாக்கினார்கள். அன்று நான் சர்க்கார் ஊழியனாயிருந்தேன். ஆங்கிலத்தில் ஜான்சன் வாழ்க்கை வரலாற்றினை பாஸ்வெல் நகைச்சுவைப்பட உருவாக்கியது போல் இப்புத்தகத்தை வெளியிட நான் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டேன். இவ்வாறெல்லாம் அன்று ஒன்றுபட்டுப் பணியாற்றி நாங்கள் நீண்ட இடைக்காலத்திற்குப் பிறகு சந்திப்பதிலே தனி மகிழ்ச்சியடைகிறேன்.

"சுயமரியாதை' என்று இந்தப் பத்திரிகை ஆரம்பித்த தோழர்களுக்குக் கொள்கையுடன் நல்ல துணிவும் வேண்டும். சுயமரியாதை என்பது திராவிட கழகத்துக்கு மட்டும் சொந்தமல்ல, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் எக்கட்சியும் சார்ந்திராதவர்களும் இருக்கலாம். வெளிநாடுகளிலும் சுயமரியாதை வேறு பெயர்களில் இருக்கிற உலகில் எந்த நாட்டைக் காட்டிலும் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் பாமர மக்களிடையேயும் நன்கு வேரூன்றி வருவதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் இடைவிடாத பிரசாரமாகும்!

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரலிருந்த காலத்திலேயே 1920 ஆம் ஆண்டில் தஞ்சையில் நடந்த காங்கிரசு மகாநாட்டில் வெள்ளையர்கள் போல் பார்ப்பனரும் நம் இனத்தை அழுத்துவதைக் கண்டு தீர்மானம் கொண்டுவர, அதில் தோல்வி கண்டு மீண்டும் 1925 இல் காஞ்சியில் திரு.வி.க.வைத் தலைவராகக் கொண்ட காங்கிரசு மாநாட்டில் அதே தீர்மானத்தைக் கொண்டுவர, அதைத் தலைவர் திரு.வி.க. எதிர்க்கவே, உடனே மகாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அன்று அவருடன்கூட வெளியேறியவர்களில் திரு. இராமநாதன் அவர்களும் ஒருவர்.

இன்றைய சுயமரியாதை இயக்கத்திற்குத் தாய் இராமநாதன் என்றால், தந்தை பெரியார் அவர்களாவார். இவர்கள் இருவரும் பெற்றெடுத்த குழந்தைதான் சுயமரியாதை இயக்கம். அன்று சுயமரியாதை இயக்கத்தைப் பரப்ப பல கஷ்ட நஷ்டங்கள் பட்டோம். அன்று "விடுதலை' தினசரியாய் வருவதற்கு, தந்தை பெரியார் அவர்களின் தளராத முயற்சியும் துணிவுமே காரணம். அந்தப் பத்திரிகை உலகில் இருபதாண்டுகள் அனுபவம் என்ற முறையில் ஒரு சில ஆலோசனைகளைத் தோழர்களுக்குக் கூற விரும்புகிறேன்.

பத்திரிகைத் தொழில் என்பது மிகவும் ஆபத்தானது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த நீதிக் கட்சித் தலைவர்களால் நடத்தப்பட்ட "ஜஸ்டிஸ்' என்ற ஆங்கிலஏடு, "திராவிடன்' என்ற தமிழ் ஏடு கூட பல கஷ்டங்களிடையே இன்று மவுண்ட் ரோட்டில் சினிமா தியேட்டராக இருக்கும் சர்.தியாகராய கட்டிடத்திலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்தது. பத்திரிகை உலகமே பார்ப்பனர் கையில்தான் இருந்து வருகிறது. காரணம், அவர்களுக்கு நன்கு விளம்பரம் கிடைக்கிறது. நம் பத்திரிகை "விடுதலை' எத்தனையோ கஷ்ட நஷ்டத்தில் நடந்து வருகிறது. விளம்பரம் இல்லாது பத்திரிகை நடத்துவது இரத்தமில்லாத உடலுக்கு ஒப்பாகும். முதலில் நம் தமிழர்களிடையே காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பழக்கம் இராது. இன்னும் சொல்லப் போனால் திரு. இராமசாமி முதலியார் அவர்களால் தலையங்கம் எழுதப்பட்டு வெளிவந்த "ஜஸ்டிஸ்', "திராவிடன்' போன்ற ஏடுகள் நீதிக்கட்சித் தலைவர்கள் இல்லங்களில் அட்டைகூட உடைக்காது அப்படியே அடுக்கி வைத்திருந்ததை நானே கண்டுள்ளேன். ஏஜெண்டுகளும் பொறுப்பாகப் பணம் அனுப்பி வைக்க மாட்டார்கள். பிறகு ஏன் சாகாது?

இத்தகைய கஷ்டங்களிலும் தந்தைபெரியார் அவர்கள் இன்னும் விடுதலையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். உதாரணமாகப் பெரியார் அவர்கள் இந்தியன் பாங்க் 7 கிளைகளாக இருந்த அந்தக் காலத்திலிருந்தே ரூபா 10,000, 20,000 என்று போட்டு வருகிறார்கள். இன்று இந்தியன் பாங்க் 130 கிளைகள் கொண்டு நடக்கிறது. ஆனால், அப்பாங்கின் டைரக்டர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் தமிழர்களாக இருந்தும் விடுதலைக்கு ஒரு விளம்பரமும் இதுநாள்வரை தராது, பார்ப்பனப் பத்திரிகைகளுக்குத்தான் அதிகம் தருகின்றனார்கள்.இதை எதற்காகச் சொல்லுகிறேனென்றால், தமிழர்க்கு நன்றியுணர்ச்சியே கிடையாது.

அதேபோல்தான் ஏதோ ஒரு டிபார்ட்மெண்டைப் பற்றி விடுதலையில் எழுதினால் அன்று வந்து வாங்குவார்கள். பிறகு மீண்டும் எழுதினால் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள்.அதற்குப் பிறகு அடுத்த முறை எழுதினால்தான் வாங்குவார்கள். நம்இனமே இப்படித்தான் இன்று இருக்கிறது. தன் குடும்பத்தையே காப்பாற்ற முடியாத தமிழன், எங்கே தன் இனத்திற்குப் பாடுபடப் போகிறான்?

நான் நினைத்தால் என் இருபதாண்டு பத்திரிகை அனுபவத்தைக் கொண்டு நான் மாதத்தில் நம் விடுதலையை ஒரு லட்சம் பேர்கள் படிக்கக் செய்ய முடியும். அதைக் கொள்கையுள்ளவர் எவர் படிப்பர்? அதே போல் தந்தை பெரியார் அவர்களும் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களைப் போல் வாணிபத்தில் கோடிக் கணக்காகச் சம்பாதிக்க முடியும். எப்படியாவது கொள்கையை விற்று நடந்தால்அம்மாதிரிச் செய்ய முடியும். ஒரு நாள் விளம்பரத்தால் அலுவலகத்திற்கு மூன்று மாதச் சம்பளம் கொடுக்க முடியும். அதற்கு அனைவரும் நமக்கு விளம்பரம் தரும்படி கொள்கையை மறந்து பத்திரிகையை மாற்ற வேண்டும். அம்மாதி எழுதாதுதான் 3, 4 பத்திரிகைகள் தோல்வி அடைந்துவிட்டன. எப்படி கற்பைக் காக்கும் ஒரு பெண் கஷ்டப்பட்டு காற்கறி விற்று வாழ்க்கையை நடத்தும் போது, ஒரு தாசி கற்பை துச்சமென எண்ணி உல்லாச வாழ்க்கை நடத்துகிறாளோ அதுபோல்தான் இதுவும். இன்று பத்திரிகை உலகம் தாசி உலகம் போல் ஆகிவிட்டது.

பத்திரிகைகள் எல்லாம் ஒருவரின் சொந்தப் பொறுப்பில் நடத்துவது நல்லது. உதாரணமாக திரு. இராமநாதன் அவர்களது அச்சகத்தில் அடித்தால் அவரது நண்பரைத் தாக்கினால் அவருக்குப் பிடிக்காது. கூட்டுறவு முறையிலும் அதேபோல்தான். நண்பருக்கு நண்பர் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆகவே, அது அவ்வளவு ஒத்து வருவது மிகவும் கஷ்டம். நண்பர்கள் சுலபத்தில் சண்டை பிடித்துக் கொள்ளவேண்டுமென்றால் கூட்டுறவு முறையைக் கையாளலாம். ஆகவே, இவைகளிலிருந்து தப்பித்து "சுயமரியாதை' இதழை நடத்துகின்ற தோழர்கள் தொடர்ந்து நடத்துவராயின் அவர்களுக்கு அது ஒரு மாபெரும் வெற்றியென்றே கூறுவேன். அது மிக அபூர்வமென்றே கூறுவேன்.

கூட்டுறவு முறையிலும் ஒருவர் பொறுப்பேற்றுச் சர்வ சாக்கிரதையுடனும், மிகவும் நெஞ்சத்துணிவோடும் நடத்த வேண்டும். மேலும், "சுயமரியாதை' ஏடு கூடியமட்டும் அரசியல் இல்லாது பகுத்தறிவுக் கொள்கைகளை நிறைய எழுதுவது நல்லது.

சிறப்பாக பெரியார், சாமிகைவல்யம் ஆகியோர்கள் கட்டுரைகளை வெளியிட்டால் நல்ல பலன் தரும்.

அத்துடன் "சுயமரியாதை' இதழில் மாற்றுக் கட்சியிகளை அவசியமற்று கண்டிக்காது கொள்கைகளை நல்ல ஆதாரத்தோடு விளக்கி எழுதினால் கட்டாயம் நல்ல பலன் அடையும்.

அத்துடன் கணக்கில் – பணத்தில் சாக்கிரதையாக இருந்து ஒவ்வொரு வெளியீடும் அதிக்மாக்க முயற்சிக்க வேண்டும் அடுத்த ஆண்டில் இதே "சுயமரியாதை' ஏடு வார ஏடாக வெளிவருமாறு செய்வீர்களாயின் நான் மிகவும் பெருமைப்படுவேன். இப்பத்திரிகை விழாவினை யொட்டி, நானும்தலைவர் சாமி சிதம்பரனார், முன்னாள் அமைச்சர் திரு. இராமநாதன் அவர்களும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு என் நன்றி. எனக்குப் பேச வாய்ப்ளித்த தலைவர், பத்திரிகையின் ஆசிரியர்கள், செயற்குழு உறுப்பினர் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றியினைக் கூறிக்கொள்கிறேன். வணக்கம்.

(18.9.1960 சென்னை மயிலாப்பூர், தெற்கு மாடவீதி இராஜேசுவரிப் பள்ளியில் திரு. சாமி சிதம்பரனார் தலைமையில் நடைபெற்ற "சுயமரியாதை' வெளியீட்டு விழாவில் திரு. சா. குருசாமி ஆற்றிய உரை)