குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலின் பதவிக்காலம் 2012 சூலை மாத இறுதியில் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க சூலை மாதம் 19 ஆம் நாள் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரசுக் கட்சியின் வேட்பாளராக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவில் முன்னாள் பராளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார்.

இக்கட்டுரை வெளிவரும்போது தேர்தல் முடிந்து பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று இருக்கலாம். யார் வெற்றி பெறுகிறார் என்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் இதுவரை பதவி வகித்த 12 பேர் என்ன செய்தார்களோ அதையேதான் வெற்றிபெறுபவரும் செய்யப்போகிறார். எனவே இதில் யார் வெற்றி பெற்றாலும் நமக்கு ஒன்றே.

இதுவரை பதவி வகித்த குடியரசுத் தலைவர்கள் 1. இராசேந்திர பிரசாத், 2. இராதாகிருஷ்ணன், 3. ஜாகீர் உசேன், 4. வி. கிரி, 5. பக்ருதீன் அலி அகமது, 6. சஞ்சீவி ரெட்டி, 7. ஜெயில் சிங், 8. ஆர். வெங்கட்ராமன், 9. சங்கர் தயாள் சர்மா, 10. கே. ஆர். நாராயணன், 11. அப்துல் கலாம், 12 பிரதிபா பாட்டீல்.

புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நம் நாட்டில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.

ஏற்றத்தாழ்வுகள் மறையுமா? தீண்டாமை ஒழியுமா?

வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவார்களா?

கிராமங்களில் குடி தண்ணீருக்காக அலையும் பெண்களின் அவலநிலை போகுமா?

கொலைக் குற்றங்கள் குறையுமா?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கற்பழிக்கும் கொடுமைகளிலிருந்து காப்பாற்றப்படுவார்களா?

குழந்தைகள் காணாமல் போவது நிறுத்தப்படுமா?

இல்லை, இல்லை எதுவுமே மாறப்போவதில்லை. பிறகு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?. ஆர்ப்பாட்டம் செய்வது மக்களல்ல. மக்களுக்கு இங்கு வேலை இல்லை. குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் மாநில சட்ட மன்ற உறுப்பினர்களுமே.

ஆர்ப்பாட்டம் செய்வது அரசியல்வாதிகளே! அவர்களுக்கு இது ஒரு “திருவிழா” எனவே கொண்டாடுகின்றனர். காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் சோனியா அறிவித்ததற்கு, தி.மு.க.வின் டி.ஆர். பாலு சோனியாவுக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டியது வேடிக்கையாக இல்லை. காங்கிரசுக் கட்சிதான் தி.மு.க., தி.மு.க.தான் காங்கிரசுக் கட்சி என்கின்ற நிலை வந்துவிடுமோ? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே அரசியல்வாதிகள் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், இந்திய அரசின் தலைவராவார். முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியல் சாசனப்படி இவர் ஒரு சடங்குமுறைத் தலைவர் ஆவார், இங்கிலாந்து ராணியின் பதவிக்குச் சமமாகக் கருதப்படுகிறார்.

இவரின் முக்கியப்பணி குடியரசு நாளில் கொடி ஏற்றுவது. வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்று விருந்தளிப்பது, தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது. முதல் பாராளுமன்றக் கூட்டத்தை தொடங்கி வைப்பது. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றப் முதல் கூட்டத்தில் அரசின் திட்டங்களை அறிவிப்பது. சுருங்கச் சொன்னால் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை ஒப்புதல் தருவது. வேறு எந்தத் தனிப்பட்ட அதிகாரமும் இவருக்கு இல்லை. எனவே, நமது குடியரசுத் தலைவரைப் "பொம்மை' என்றும் ரப்பர் ஸ்டாம் என்றும் குறிப்பிடுவர்.

1975 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும், அரசியல் எதிரிகளை அடக்குவதற்கும் அன்று பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது அவர்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டில் அவசரநிலையைக் கொண்டுவந்து. தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டதோடு, அரசியல் எதிரிகளைச் சிறையில் அடைத்து வேடிக்கைப் பார்த்தார். இதனால் அரசியல்வாதிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர்கள் பிரதமரின் கைப் பொம்மைகளாகவே இருப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

காங்கிரசுக் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திமு.க. தேசியவாத காங்கிரசு, அய்க்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தள், பகுஜன் சமாஜ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட்(மா) தேசிய மாநாடு, பார்வார்டுபிளாக் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரிக்கின்றன.

எதிர்க்கட்சி வேட்பாளர் பி. ஏ. சங்மாவை பா.ஜ.க., அ.தி.மு.க. பிஜுஜனதாதளம், அகாலிதளம் மற்றும் சில கட்சிகள் ஆதரிக்கின்றன.  சில கட்சிகள் இன்னும் முடிவு செய்யவில்லை. சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன.

ஆளும் காங்கிரசுக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற எந்த விலையும் கொடுப்பதற்கு அந்தக் கட்சி தயார். ஏனென்றால் சோனியா காந்தியைக் கண்மூடி ஆதரிப்பவரே குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரசுக் கட்சியின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி அல்லவா,  எனவே இப்பொழுதே அதற்கான சாலை சரியாகப் போடப் படுகிறது.

எனவே ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முன்வரும் கட்சிகள் நன்கு கவனிக்கப்படுவர். அவர்கள் கேட்பது கிடைக்கும். எனவேதான் இந்த ஆர்ப்பாட்டம்.

எதிர்கட்சி வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்கால அரசியலை மனதில் வைத்துக் காய் நகர்த்துகின்றனர்.இவர்களுக்கு இந்தத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் எந்தப் பயனும் இல்லை.

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர் 5 ஆண்டுகளுக்குக் குடியரசு மாளிகை எனும் "சொர்க்கத்தில்' (மதவாதிகளின்படி) குடும்பம் நடத்தலாம். அங்கு இல்லாதது எதுவும் இல்லை. எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல அங்கு ஆள் இல்லை. நினைக்கும்போது தனி விமானத்தில் குடும்பத்தோடு உலகைச் சுற்றி வரலாம். "ராஷ்டிரபதி பவன்' என்று அழைக்கப்படுகிற குடியரசுத் தலைவர் மாளிகை, பிரிட்டன் வைஸ்ராய்க்காக (ராணியின் தூதுவர்) 1912 முதல் 1929 வரை சுமார் 17 ஆண்டுகள் 4000 ஏக்கர் நிலத்தில் 2.00 லட்சம் சதுர அடி பரப்பில் நான்கு தளங்களோடு அலங்கரிக்கப்பட்ட 355 அறைகளுடன் கட்டப்பட்டதாகும். இவைகளின்றி விழாக்கள் நடத்த பல அரங்குகள் உண்டு.

இந்த மாளிகைக்கு பின்புறம் 15 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு "மொகல் கார்டன்' என்று பெயர். இந்தத் தோட்டம் குடிரயசுத் தலைவர் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய மட்டும் பயன்படுகிறது.

உலகத்தில் எந்த நாட்டுத் தலைவருக்கும் இவ்வளவு பெரிய மாளிகை ஒதுக்கப்படவில்லை, உலகத்தை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா தங்கி இருக்கும் வெள்ளை மாளிகை 55,000 ச.அடி பரப்பில் 132 அறைகளுடனேயே கட்டப்பட்டது. நமது குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதி அளவுக்குக் கூட வெள்ளை மாளிகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் மாளிகையைப் பராமரிக்க ஆண்டு தோறும் அரசு செலவு செய்யும் தொகை சுமார் ரூ.100 கோடி. ஆண்டு மின்சாரக் கட்டணம் ரூ.6.67 கோடி ஆண்டு முழுவதும் விருந்து உபசரிப்பு நடந்துக்கொண்டே இருக்கும். அதற்குச் செலவாகும் தொகை பலகோடி. குடியரசுத் தலைவர் உலக நாடுகளுக்கு சென்றுவர எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். பிரதிபா பாட்டில் தனது பதவிக் காலத்தில் 22 நாடுகளுக்குக் குடும்பத்துடன் பயணம் செய்து ரூ.205.00 கோடி செலவு செய்துள்ளார்.

குடியரசு மாளிகையைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட படை வீரர்கள், 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள். இவருக்குத் துணையாக நாடு முழுவதும் 30 கவர்னர்கள். ஆனால் இவருக்குத் தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை என்பது தான் வேடிக்கை.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் அனுபவித்தனர். சுதந்திரத்திற்குப் பின்பு அரசியல்வாதிகள் அனுபவிக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முன்பு மக்கள் எந்நிலையோ அதே நிலையில் சுதந்திரத்திற்குப் பின்பும்

வாழ்க குடியரசுத் தலைவர்! வெல்க சனநாயகம்!!