காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கற்பனை செய்தது பாஜக! பாஜக இல்லாத தென்னிந்தியாவை உருவாக்கி விட்டார்கள் மக்கள்!!
கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றிருப்பது சாதாரண வெற்றி இல்லை, ஒரு சாதனை வெற்றி! ஒன்றிய அரசில் மட்டுமல்லாமல், மாநில அரசிலும் ஆளும் கட்சியாக இருந்த, அத்தனை அதிகாரங்களையும் தேர்தல் களத்தில் இறக்கிவிட்ட, சாதி, மத உணர்ச்சிகளைத் தூண்டிவிட்ட பாஜகவை, களத்தில் புறம் கண்டிருக்கும் காங்கிரஸ் பெரும் வெற்றியையும், நாடெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது!
மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்காமல், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால், வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டன. தேர்தல் முடிந்த பிறகு வெளிவந்த கருத்துக்கணிப்புகள் கூட, கர்நாடகத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்படக்கூடும் என்றும் தேர்தல் முடிவுகள் இழுபறியாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டன. அனைத்தையும் பொய்யாக்கி, அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது காங்கிரஸ்!
மதச்சார்பற்ற ஜனதா தளடத்துடன் கூட்டணி வைக்காதது பல விதங்களில் சரியானதுதான்! அவர்கள் மதச்சார்பற்ற என்று தங்களை அறிவித்துக் கொண்டார்களே தவிர, சாதி சார்பற்ற என்று எப்போதும் குறிப்பிட்டுக் கொண்டதில்லை. அது மட்டுமல்லாமல், அவர்களிடம் எப்போதும் ஒரு நிலையான தன்மையைப் பார்க்க முடிந்ததும் இல்லை. பாஜக எதிர்ப்பில் அவர்கள் உறுதியாக இருந்தது இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட, பாஜக வேட்பாளரான முர்முவுக்குத்தான் அவர்கள் வாக்களித்தார்கள். எனவே தனித்து நின்று பெற்ற இந்த வெற்றிதான் காங்கிரசுக்கும். கர்நாடக மாநிலத்திற்கும் நல்லது!2018 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுக்கும், இப்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. 2018ல் 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இப்போது எழுபது இடங்களுக்கும் கீழே வந்து விட்டது! அந்தத் தேர்தலில் வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இன்று 130 இடங்களைத் தாண்டி இருக்கிறது. இதனைச் சாதனை வெற்றி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது!
இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு வித்தியாசத்திலும் பெரும் வேறுபாடு இருக்கிறது. 2.3 சதவீதம் வாக்கு வித்தியாசம் மட்டுமே சென்ற தேர்தலில் இருந்தது. ஆனால் இப்போது பாஜகவை விட ஏறத்தாழ 7 சதவீதம் கூடுதலான வாக்குகளைக் காங்கிரஸ் பெற்றுள்ளது.
இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம், எது பின்புலமாக இருக்கக்கூடும் என்று எண்ணும்போது நமக்குச் சில விடைகள் கிடைக்கின்றன.
பாஜகதான் முதல் காரணம் என்று சொல்ல வேண்டும்! காங்கிரசின் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது, ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகும் உட்கட்சிக் சண்டைகளில் ஈடுபட்டது, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதாகச் சொல்லி ஏமாற்றியது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள், ஹிஜாப் உடை அணியக்கூடாது என்று சொல்லிச் சர்வாதிகாரம் செய்தது எனப் பல்வேறு காரணங்களால் பாஜக தன் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது! ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நியாயம் இல்லாமல் பறித்ததால் ஏற்பட்ட பரிவு ஆகியனவும் அவர் செல்வாக்கு கூடியதற்குக் காரணமாக இருக்கலாம்.
எப்படியோ நம் கழகத்தின் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் சொல்லி இருப்பது போல, திராவிட நிலத்திலிருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளது!
ஆள்கிறது திராவிடம்! அகன்றது ஆரியம்!!