மயிலாப்பூர் திருக்குளத்தில் குளிப்ப தற்கு
மக்களிலே சிலருக்குத் தடைசெய் தார்கள்!
உயிர்வாழும் தவளைகளும் குளிக்கும்; ஆனால்
உயிருள்ள சிலபேரைத் தடுத்து நின்றார்!
வயல்உழுத மாட்டுக்கு வைக்கோல் போதும்
வாழுகின்ற மக்களுக்கும் அதுவே தானா?
புயல்எழுந்து பேசியதாய் நாயர் பேச்சு
புழுக்களுக்கு வாயாக இருந்த காலம்!
யார்குளத்தை விற்றார்கள்? அதனை இங்கே
யார்வந்து வாங்கியவர்? அனைத்து மக்கள்
ஊர்குளத்தில் குளிப்பதற்கே உரிமை உள்ளார்
உயர்சாதி! இழிசாதி! ஒழிப்போம் என்று
தாரவாரத் மாதவன்நா யர்தான் கேட்டார்!
சட்டத்தின் கீழ்வரிசெ லுத்தும் மக்கள்
யாவர்க்கும் நடுங்காமல் எதிர்ப்பீர் என்றார்
அவர்செய்த பெருந்தொண்டை வணங்கு வோமே!
தீண்டாதார் தம் வீட்டில் வேலை செய்யத்
தெரிந்தேதான் மகிழ்ச்சியுடன் வாய்ப்பளித்தார்
ஆண்டிருந்த வெள்ளையரை நோக்கிச் சட்ட
ஆதரவை மேலவையில் கேட்டுப் பெற்றார்!
தூண்டிடவே சென்னைமா நகராட்சிக்குத்
தொண்டுசெய்யும் உறுப்பினராய்ப் பாடுபட்டார்!
வேண்டியவை பலசெய்ய "ஜஸ்டிஸ்' ஏட்டால்
விளக்குகிற ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்!
பாட்டாளித் துயர்பற்றி இங்கி லாந்துப்
பாராளு மன்றத்தில் முழக்க மிட்டார்!
கேட்டாரும் கலங்குகிற கேடு முற்றும்
கேள்விக்கே இடமின்றி எடுத்து வைத்தார்!
தீட்டாகும் கண்டாலே! என்று சொன்ன
சிலபேரை உலகின்முன் சிரிக்க வைத்தார்!
கூட்டாக நாமிருக்க முற்போக் காளர்
கூட்டத்தில் நாள்தோறும் பேசி வென்றார்!
Pin It