"வாழ்க்கையே போராட்டமாகி விட்டது' என்று புலம்புகின்றவர்களிடையே போராட்டத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் வெகு சிலரே. அதிலும் 30 ஆண்டு காலத்தைப் பிறரின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகச் செலவிட்டு,

தீர்க்கவே இயலாத கொடும் நோயிலிருந்தும் மீண்டெழுந்து தன் அடுத்தக்கட்டப் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்கள்.

தான் பங்கேற்ற 30 ஆண்டுகாலப் போராட்டங்களை வரிசைப்படுத்தி 1980 முதல் 1989 வரை; 1990 முதல் 1999 வரை; 2000 முதல் 2009 வரை என நாட்குறிப்பு போல தன்னுடன் பங்கேற்ற அனைவரையும் அவர்களின் பங்கையும் குறிப்பிட்டு "இறவா நாட்கள்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். இவர் இந்நூல் போராட்டங்களே அற்றுப்போய்விட்ட சமூகத் தளத்தில் கண்டிப்பாகப் போராடுகின்றவர்களுக்கான ஒரு கையேடாக விளங்கும் என்று உறுதியாகக் கூறமுடியும்.

அய்.இளங்கோவன் நடத்தியுள்ள போராட்டத்தால் பயன்பெற்றவர்கள் பேராசிரியர்கள் மட்டும் அல்லர்; மாற்றுத் திறனாளிகள், தலித் மக்கள், பெண்கள், மதச் சிறுபான்மையினர், மாணவர்கள், நலிவடைந்த மக்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். "இறவா நாட்களுக்கு அணிந்துரை எழுதியுள்ள இவருடைய மாணவர் யாழன் ஆதி மிகச் சிறப்பாக அவர் போராட்ட பாணியை விளக்கியிருக்கிறார் : “மக்களுக்கான எந்தப் போராட்டமெனினும் அதில் அவர் பெயர் இருக்கும். ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கும் அவர் கண்கள் அங்கே தீயுமிழும். சமரசமாகாத போர்க்குரல் தன் முன் கைகளை உயர்த்தி எழும். பேராசிரியரின் முழக்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பவர்களை வீறு கொள்ளச் செய்யும். அவரின் முன்மாதிரி நடவடிக்கைகள் போராட்டத்தில் பங்கேற்றும் யாரையும் பின்வாங்க வைக்காதவை. இறுதித் துளிவரை அந்தப் போராட்டத்தை நடத்தி முடிக்கும் விடாப்பிடியான அவருடைய நீதியின் மீதான பற்றுதல்தான் அவரை ஒரு போராட்டத்தின் அடையாளமாக வைத்திருக்கிறது.''

அநீதிகளை எதிர்க்கத் திராணியற்று வேடிக்கைப் பார்க்கும் இன்றைய தலைமுறையினருக்கு போராட்டத்தை ஒரு சமூகப் பண்பாடாக மாற்றியமைத்திருக்கும் பேராசிரியர் அய்.இளங்கோவனின் நூல், தமிழ்த் தரணியெங்கும் பரப்பப்பட வேண்டும்.         

– சுந்தர்

Pin It