2011 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அ.தி.மு.க.வின் வெற்றி ஆட்சியைக் கைப்பற்றியதோடு நில்லாமல், அது தி.மு.க.வில் பல சலசலப்புகளை உருவாக்கி உள்ளது.

1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க. 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 50 இடங்களில் வெற்றி பெற்று பலமிக்க எதிர்கட்சியாக செயல்பட்டது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா தனது பதவியைத் துறந்து முதலமைச்சராக பொறுப்பேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்.

 தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டினார்.

 சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாக்கினார்.

அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின் கலைஞர் தலைமையில் தி.மு.க. மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், இன்று ஆட்சியை இழந்ததோடு எதிர்க்கட்சித் தகுதியையும் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதுபோல் 1959 ஆம்ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. முதல் முறையாகப் போட்டுயிட்டு 100 இடங்களில் 45 இடங்களில் வெற்றிபெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியதோடு தி.மு.க.வின் முதல் மேயராக அ.போ. அரசு வாகை சூடினார். 2011 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி தி.மு.க.விடமே இருந்தது. (இடையில் சில ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை) தற்போது தி.மு.க. சென்னை மாநகராட்சியையும் இழந்ததை அடுத்து, அ.தி.மு.க.முதல்முறையாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றி அதன் மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்றுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல்களில் தி.மு.க. தோல்வி அடைந்ததோடல்லாமல் கட்சியில் பல சலசலப்புகளையும் உருவாக்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே, சென்னை மாவட்டதி.மு.க. செயலாளர்களில் ஒருவரான வி.எஸ். பாபு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்த பரிதி இளம்வழுதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு வி.பி.துரைசாமி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வுகள் தமிழகமெங்கும் உள்ள திமுக வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிதி இளம்வழுதி தி.மு.க.வின் தலைவர் கலைஞர் மு.க.வைப் போல் தொடர்ந்த 6 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர், இன்னும் சொல்லப்போனால் தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் ஒரே தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். எழும்பூர் தொகுதிமக்களிடையே முழு நம்பிக்கையுள்ளவராக இவர் திகழ்ந்துள்ளார். எனவேதான் மற்ற தலைவர்களைப் போல் தொகுதி மாறிப் போட்டியிட வேண்டிய நிலை அவருக்கு ஏற்படவில்லை. ஆறாவது முறையும் வெற்றிபெற்று வரலாறு படைத்திடவேண்டும் என்று விரும்பியவரை, சொந்தக் கட்சிக்காரர்களால் 200 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்கடிக்கப்பட்டார் என்ற செய்தி அவரைப் பெரிதும் பாதித்து இருக்கும். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் அவருடைய பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

1991 – 96 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஒரே ஒரு பிரதிநிதியாக தி.மு.க.வின் குரலைப் பதிவு செய்தவர் பரிதி. அதனால், பலதுன்பங்களை ஏற்றுக்கொண்டவரும் கூட, அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் ஆளும் கட்சியோடு அய்க்கியமாகித் தன்னை வளப்படுத்திச் சட்டப்பேரவையில் தி.மு.க.விற்கு பிரதிநிதிகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி இருப்பார்''

அப்படிப்பட்ட ஒருவரை, தேர்தலில் அவர் தோற்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், தி.மு.க. தலைமை, அவர்களுக்கு ஆதரவாக துணைபொதுச் செயலாளர் பதவியையும் அவரிடமிருந்து பறித்துள்ளது. அவரை ஆதரிக்கும் தி.மு.க. தொண்டர்கள் இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, பரிதிக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்றும் அச்சமடைந்துள்ளனர்.

தி.மு.க. சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி என்ற கருத்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அந்தக் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். அப்படியிருக்க, கட்சியில் சென்னை மட்டத்தில் 200 வட்டச் செயலாளர்களில் ஒரு வட்டச் செயலாளரோடு ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைக்காக 6 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவரை, சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக (பல நேரங்களில் சபாநாயகராகவும்) அமைச்சராக, கட்சியில் இளைஞரணி அமைப்பாளராக மாவட்டச் செயலாளராக, தலைமை செயற்குழு உறுப்பினராக, துணைப் பொதுச்செயலாளராக, தலைமை நிலையச் சொற்பொழிவாளராக தமிழகமெங்கும் கொள்கை பிரச்சாரம் செய்தவரை, நேரில் அழைத்து விசாரிக்காமல் அவரைப் பதவி நீக்க முடியும் என்றால், தி.மு.க.வில் உட்கட்சி சனநாயகம் இல்லையோ என்று மக்கள் கருதமாட்டார்களா? எனக் கேள்வியையும் எழுப்புகின்றனர்.

தி.மு.க. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக,

1961 ஆம் ஆண்டு ஈ.வி.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து வெளியேறி “தமிழ் தேசிய கட்சி'யைத் தொடங்கினார்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். வெளியேறி அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.

1974 ஆம் ஆண்டு சத்தியவாணி அம்மையார் வெளியேறி “தாழ்த்தப்பட்டோர் தி.மு.க.'' என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.

1977 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் வெளியேறி “மக்கள் தி.மு.க.'' என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.

1993 ஆம் ஆண்டு வைகோ வெளியேறி "ம.தி.மு.க.' என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.

தற்போது பரிதி வெளியேறி ஒரு புதிய கட்சியைத் தொடங்கினாலும் தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. காரணம். தி.மு.க.வில் இருக்கும் இலட்சோப இலட்சம் தொண்டர்கள் தங்கள் தலைவரை ஆளப்பிறந்தவராகவும், தங்களை ஆளப்படுபவர்களாகவுமே கருதுகின்றனர். இந்த நிலை தி.மு.க.விற்கு மட்டுமல்ல மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.

“நாடாளுமன்ற சனநாயகம் தோல்வியடைந்ததற்குக் காரணம் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஆளப்படுபவர்கள் ஒரு போதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாக இருந்து வருவதுதான்.'' என்றார் புரட்சியாளர் அம்பேத்கர்.

அதோடு “அவர்கள் ஒரு அரசாங்கத்தை அமைத்து அது தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகின்றனர் . எனவே, நாடாளுமன்ற சனநாயகம் என்பது மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒரு போதும் இருப்பதில்லை.'' எனக் கூறினார்.

இதற்குக் காரணம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சனநாயகத்தைப் பேணி வளர்க்க விரும்பாததே ஆகும். ஒருவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினால். அவர் இறக்கும்வரை அந்த கட்சியின் தலைவர் அவரே. அப்படி என்றால் அந்தக் கட்சியில் எப்படிப்பட்ட சனநாயகத்தை நாம் காணமுடியும்? இந்நிலை மாற ஒரு வழி உண்டு. அதாவது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் நிர்வாகியாகவோ அமைச்சராகவோ ஒருவர் 10 ஆண்டுகளுக்குமேல் பதவி வகிக்கத் தடைச் சட்டம் கொண்டு வந்தால், சர்வாதிகார எண்ணம் துடைத்தொழியப்பட்டு உண்மையான சனநாயகத்தை நாம் காண முடியும். ஆனால் இப்படி ஒரு சட்டம் இயற்ற நமது அரசியல் தலைவர்கள் உடன்படுபவர்களா? என்பது கேள்விக்குறியே. அமெரிக்க நாட்டில், குடியரசுத் தலைவராக ஒருவர் 8 ஆண்டுகளுக்கு மேல் (இருமுறை) பதவி வகிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசியல்வாதிகளே நம் நாட்டில் சனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்பது வெட்கக்கேடான செய்தியாகும்.

Pin It