முத்துலட்சுமி அம்மையாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை இவர் 1886 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் நாள் நாராயணசாமி, சந்திரம்மா தம்பதியினருக்கு, பெண்கள் அடிமைகளாக, புழு பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில் புதுமைப் பெண்ணாக பிறந்தார்.

தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் தொடங்கினாலும் 1902 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பெற்றோர் திருமணம் செய்து வைக்க விரும்பினாலும், முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்து படித்துத் தான் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் அவரின் தந்தையோ தனது ஓய்வூதியத்தில் மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்கும் நிலையில் இல்லை. அதோடு புதுக்கோட்டையில் ஆண்கள் படிக்கும் கல்லூரியே இருந்தது.

முத்துலட்சுமியின் நிலையை அறிந்த புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட வைரவத் தொண்டமான், முத்துலட்சுமியை ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணை பிறப்பித்தார். இதன் மூலம் ஆண்கள் கல்லூரியில் படித்த ஒரே பெண் முத்துலட்சுமி ஆவார். முத்துலட்சுமியுடன் படித்த மாணவர்களில் ஒருவர் சத்தியமூர்த்தி அய்யர் என்பது குறிப்பிடத் தக்கது.

கல்லூரியில் இண்டர் மீடியட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். மீண்டும் அவருடைய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தந்தையின் நண்பர் ஒருவர் முத்துலட்சுமியை மருத்துவம் படிக்க அறிவுறுத்தினார். அதன்படி 1907 ஆம் ஆண்டு முத்துலட்சுமி சென்னைக்கு அழைத்துவரப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். புதுக்கோட்டை மகாராஜா பொருளுதவி செய்தார். அந்தக் காலத்தில் மாணவர்கள் தங்கிப்படிக்க விடுதிகள் இல்லை. எனவே தந்தையின் நண்பர் பி.எஸ். கிருஷ்ணசாமி முத்துலட்சுமி தங்கிப் படிக்கத் தன் வீட்டுப் பக்கத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தந்ததோடு முத்துலட்சுமிக்கு ஆதரவாக இருந்தார்.

1912 ஆம் ஆண்டு முத்துலட்சுமி மருத்துவ தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றினார்.

மருத்துவராக பணியாற்றும்போதே, சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட் அம்மையார், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரோடு பழகும் வாய்ப்பு அம்மையாருக்கு ஏற்பட்டது.

டாக்டர் முத்துலட்சுமியைப் போல் 1913 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஊகீஇகு பட்டம் பெற்ற டாக்டர் டி. சுந்தர ரெட்டி என்பவரை மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்த பிரம்மஞான சபையில் 1914 ஆம் ஆண்டு “உங்களுக்குச் சமமான மரியாதையை எனக்கு நீங்கள் தரவேண்டும். என்னுடைய விருப்பங்கள் எதுவானாலும் அதற்கு நீங்கள் குறுக்கே நிற்கக்கூடாது” என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டார் அப்போது அவருக்கு வயது 28.

கணவன் மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மருத்துவராகப் பணியாற்றும் போதே ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும்

பாடுபட்டார். குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரக் காரணமாகத் திகழ்ந்தார். இதனைச் சாரதா சட்டம் என்று அழைப்பர்.

நீதிக் கட்சியின் தலைவரும், சென்னை மாகாண முதல்வருமான பனகல் அரசர், டாக்டர் முத்துலட்சுமியை மேற்படிப்புப் படிக்க இலண்டன் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். டாக்டர் முத்துலட்சுமி கணவர் மற்றும் குழந்தைகளுடன் இலண்டன் சென்றார்.

இங்கிலாந்தில் இருக்கும்போது 1926 ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரீசில் அகில உலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக முத்துலட்சுமி கலந்து கொண்டு உரையாற்றினார். அவரின் உரையில் “ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

1926 ஆம் ஆண்டு பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனால் மாகாண ஆளுநர் டாக்டர் முத்துலட்சுமி சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்தார். இதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் சட்ட மன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் இப்பதவியை வகித்த முதல் பெண்ணும் இவரே.

இவர் பதவியில் இருந்த காலத்தில் பல புரட்சிகரமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இருதாரத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவைகள் ஆகும்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட மசோதா சட்ட மன்றத்தில் கொண்டுவரப் பெரிதும் காரணமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஆவர். மேற்கண்ட மசோதாவைத் தாமதம் செய்வதற்குப் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்கலாம் என முடிவெடுத்து அதனை மகாத்மா காந்திக்கும் தந்தை பெரியாருக்கும் அனுப்பி அபிப்பிராயம் கேட்டார்கள். அதனைக் கண்டித்துத் தந்தை பெரியார் அவர்கள் 23.03.1933 இல் வெளிவந்த குடியரசு இதழில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்.

“பொது ஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோயில்களில் கடவுள்கள் பெயரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி, அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபச்சாரித் தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய, சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகு காலமாய் இருந்துவருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒருநாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரின அரசாங்கமாகவாவது ஒன்றிருந்தால், இந்த இழிவான கெட்ட பழக்கம், கடவுள் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காது என்றே சொல்லுவோம்”.

“நிற்க. இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் "பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும்' இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும் பொது மகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன், இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று இந்தியச் சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருக்கின்றது”.

“ஆகவே, இந்தச் சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே, நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கியமுமான காரியமாகும். ஆனால், அந்தப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க, சட்ட மெம்பர் ஆட்சேபனைகளைக் கிளப்பி, இதைப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தாமதப்படுத்திவிட்டது மிகவும் வருந்தத் தக்கதாகும். அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் வோட்டு கொடுத்தது மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியாளர்கள் இந்தக் காரியத்தைக்கூடச் செய்ய முடியவில்லையானால், பின் என்ன வேலை செய்யத்தான் அந்தச் சட்டசபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. "காங்கிரசுக்காரர்கள் சட்டசபையில் இல்லாததால் இச்சட்டம் நிறைவேறாமல் போயிற்று' என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி நமக்கு எழுதியிருப்பதைப் பார்க்க, நமக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருந்தது.

எப்படியானாலும், அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக்கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காது என்றே சொல்லுவோம்”.

சட்டமன்றத்தில் இதைப்பற்றி விவாதம் நடந்தபோது சத்திய மூர்த்தி தேவதாசி முறையை ஒழிக்கக்கூடாது என்று வாதாடினார். அப்போது முத்துலட்சுமி அம்மையார் எழுந்து “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று கேட்டதும் சட்டசபை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. 1930 இல் தொடங்கிய தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டம் 1947 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் சென்னை சட்ட மன்றத்தில் சட்டமாக்கப்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு மே திங்களில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அதில் பெண்கள் மாநாட்டிற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தலைமை தாங்கி ஆற்றிய உரை பெரியாரின் பாராட்டைப் பெற்றது.

1933 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிர்மாண ஊழியர்கள் மாநாட்டில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் ஆற்றிய உரை காந்தி அவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

1937 முதல் 1939 வரை சென்னை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக அம்மையார் பதவி வகித்து சென்னை நகரின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டார்.

1935 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கத் தனி மருத்துவமனை உருவாக்க வேண்டும் என ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இருந்தாலும் அவருடைய கனவு அவரின் பெரும் முயற்சியால் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நாள் அடையாரில் புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். 1954 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 18 ஆம் நாள் 12 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தற்போது 423 படுக்கைகள் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனையாக செயல்படுகிறது. அதில் 297 படுக்கைகள் ஏழைகளுக்கு இலவசமாகச் சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் 1,25,000 நோயாளிகள் தமிழகம் மட்டுமன்றித் தென் மாநிலங்களிலிருந்தும் வருகைதந்து சிகிச்சை பெறுகின்றனர்.

டாக்டர் முத்துலட்சுமியின் தொண்டைப் பாராட்டும் வகையில் அவருக்கு மத்திய அரசு “பத்மபூஷன்” விருதை வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசு அவரின் நினைவாக “டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்” என்ற பெயரில் கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு ரூ. 20,000/ வரை வழங்கி வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமியின் மூத்த மகன் இராம்மோகன் ஐஅகு திட்டக்குழு இயக்குனராகப் பணியாற்றினார். அவரின் இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி பெற்றோரைப் போல மருத்துவராக – புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பார்த்துக் கொண்டார்.

டாக்டர் முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவரின் தாயார் சந்திரம்மா இசை வேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் (தேவதாசி) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முத்துலட்சுமியின் தந்தை நடிகர் ஜெமினி கணேசனின் பெரிய மாமா ஆவார்.

1952 ஆம் ஆண்டு இராஜாஜி அவர்கள் அம்மையாரைச் சென்னை சட்ட மன்றத்தில் உறுப்பினராக மீண்டும் பணியாற்ற அழைத்தார். அம்மையாரோ தனக்கு வயது 67 ஆகிறது. எனவே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து புகழ்பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் 1968 ஆம் ஜீலை திங்கள் 22 ஆம் நாள் 82 ஆவது வயதில் மனநிறைவோடு தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அவர் மறைந்து விட்டாலும் அவருடைய தொண்டுகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அவ்வை இல்லமும், அடையார் புற்று நோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.

Pin It