21 ஆம் நூற்றாண்டிலும் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் காதல் திருமணங்களை (கலப்புத் திருமணங்கள்) எதிர்ப்பவர்களை நாம் காண முடிகிறது.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

என்று பாடிய பாவேந்தரின் பாடல் நினைவுக்கு வருகிறது. “சாதி இருக்கின்றது” என்று சொல்பவர்களும் இருக்கின்றார்களே என்று மனம் வருந்திப் பாடினார். இப்படிப்பட்ட சாதிவெறியர்களின் நடவடிக்கைகள் உலக அளவில் இந்தியாவுக்கு ஒரு அவப்பெயரையே உருவாக்கும். மேலும் காதல் திருமணங்களை எதிர்ப்பது என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கு எதிரானதாகும்.

சாதி வெறி பிடித்தவர்களால் “இளம் தளிர்கள்” தங்கள் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் வாழ்க்கையைப் பாதியிலேயே முடித்துக் கொள்கின்றனர். அதோடு அந்த இரண்டு குடும்பங்களும் சிதைந்து போகின்றன.

ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பிழைப்புத்தேடி எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் நமது முன்னோர்களை வஞ்சனையால் வென்று, நமது நாட்டின் அரசியல் செல்வாக்கைப் பெற்று, மடமை மலிந்த சமயக் கொள்கைகளையும், சாதி முறைகளையும் திணித்துத் தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.

சாதிப் பிளவுகள் மக்களிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டதால் அவர்கள் ஒன்றுபட்டு என்றென்றும் ஆரியக் கொள்கைகளை எதிர்க்க முடியாதவர்களாயினர். அதே நேரத்தில் தம்சாதி உயர்ந்தது அவர் சாதி தாழ்ந்தது என்ற மனோபாவம் தலைதூக்கித் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலையும் உருவாகியது.

“சாதி” எந்தெந்த மதத்தில் உண்டு என்று கேட்டால் "சாதி' இந்து மதத்தில் மட்டுமே உண்டு என்று அடித்துச் சொல்லலாம். கிறித்துவ மதத்தில் சாதி இல்லை, இசுலாம் மதத்தில் சாதி இல்லை. பவுத்த மதத்தில் சாதி இல்லை ஆனால் பிரிவுகள் உண்டு.

உலகில் மதச் சண்டைகள் உண்டு. ஆனால் சாதிச் சண்டைகள் இல்லை. சாதிச் சண்டைகள் நடைபெறும் ஒரே நாடு இந்தியாதான் என்ற பெருமை நமக்குண்டு.

நாம் எதைக் கண்டுபிடித்தோம் பெருமைபடுவதற்கு? நாம் கண்டுபிடித்தது எல்லாம் கடவுள், மதம், சாதி, மூட நம்பிக்கைகள், தெருவிற்கு இரண்டு கோயில்கள் இவைகள் தானே.

சாதிக்கு எதிராகப் புத்தர் தொடங்கி, திருவள்ளுவர், அவ்வையார், வள்ளலார், மகாத்மா புலே, நாராயண குரு, அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், ம. சிங்கார வேலர், திரு.வி.க, பாரதி, பாவேந்தர், காமராசர், அறிஞர். அண்ணா போன்ற பல தலைவர்கள் போராடியும் சாதியை அழிக்க முடியவில்லை. சாதி ஒரு ஆக்டோபஸ் போல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உலகில் எந்த நாட்டிலும் ஆண் பெண் இருபாலரும் தமக்குப் பிடித்தவர்களோடு இணைந்து வாழ உரிமை உண்டு. திருமணம் செய்தும் வாழலாம், திருமணம் செய்யாமலும் வாழலாம். அரசு இதில் தலையிடாது. ஏன் அவர்களின் பெற்றோர்களுக்கும் இதில் தலையிட உரிமை இல்லை.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முறை மேலை நாடுகளில் அதிகரித்து வருகிறது. பிடிக்கவில்லை என்றால் அமைதியாக பிரிந்து போகலாம். முகத்தில் ஆசிட் ஊற்றுவது அல்லது அடித்துக் கொலை செய்வது போன்ற கொடுமைகள் அங்கு இல்லை.

வயதுக்கு வந்த ஆண் – பெண் இருபாலருக்கும் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது தனித்து வாழப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். பெற்றோரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. படித்து முடித்து வேலைக்குச் செல்கின்றனர். வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். அங்கு 100 விழுக்காடு காதல் திருமணங்களே. மொழி, மதம், இனம், நாடு இவைகள் எதுவும் இவர்களின் வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதில்லை. இருவரும் புரிந்து கொள்கிற மொழியில் பேசி இணைந்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் 90 விழுக்காடு திருமணங்கள் பெற்றோர் பார்த்து அல்லது பெற்றோர் வலியுறுத்தி நடத்தும் திருமணங்களே. அதனால்தான் விவாகரத்துகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது 8.8 விழுக்காடு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன.

சென்னை குடும்ப வழக்குகள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டு போவதையும் கீழ்கண்ட புள்ளி விபரம் மூலம் நாம் அறிய முடிகிறது.

                 ஆண்டு                            பதிவான வழக்குகள்

                                2010                       –             4643

                                2011                       –             4600

                                2013                       –             4735

இதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று விசாரித்தால், அதற்கு நமக்குக் கிடைக்கும் ஒரே பதில் பெற்றோர்களால் நிர்பந்தித்து நடைபெறும் திருமணங்களே இதற்குப் பெரிதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தையும், சோதிடத்தையும் நம்பியே ஆண் பெண்ணை இணைக்கின்றனர். மனப்பொறுத்தம், உடல் பொறுத்தம் ஆகியவைகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

விவாகரத்து கோரும் விண்ணப்பங்களில் பல காரணங்கள் தெரிவித்தாலும், பெரும்பாலான வழக்குகளில் உண்மையான காரணம் தாம்பத்திய உறவில் திருப்தியின்மையே. முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்து கோர முன்வரமாட்டார்கள். தங்கள் "தலைவிதி' என்று நினைத்து வாழ்ந்து மடிவர். இப்போது நிலைமை அப்படியல்ல, பெண்கள் நன்கு படித்துச் சுயமாகச் சம்பாதிக்கத் தலைபட்டு விட்டனர். பெற்றோர்களின் நிர்பந்தத்தில் திருமணம் செய்து கொண்டாலும், ஒத்துப்போகவில்லை என்றால் விவாகரத்து கோருவதில் தயக்கம் காட்டுவதில்லை. எனவே காதல் திருமணங்களை எதிர்ப்பதைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். "சாதி', "கவுரவம்' இவைகள் ஒருபோதும் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படாது.

காதல் திருமணங்களுக்குப் பல தடைகள் இருந்தாலும் காதல் திருமணங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், சாதிகளை ஒழிக்கப் பல வழிகள் இருந்தாலும் அதில் கலப்புத் திருமணங்களும் ஒன்று என்பதால் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குத் தங்கப் பதக்கமும், சான்றிதழ்களையும் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

2010 ஆம் ஆண்டு மத்திய அரசு சாதியின் கொடுமைகளை மனதில் கொண்டு கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு ரூ. 50,000/ நிதி உதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அந்த திட்டத்தின்படி மாநில அரசு ரூ. 25,000/ மத்திய அரசு ரூ. 25,000/ ஆக ரூ. 50,000/ கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வழங்கி, பின்னர் மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து ரூ. 25,000/ அய் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் 10 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு இந்தப்பட்டியலில் இல்லை என்பது வேதனைக்குரியது. 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய தொகை ரூ.29,26 கோடி. இதில் மராட்டிய மாநிலம் ரூ.12.09 கோடியும், கேரளம் ரூ.5.37 கோடியும் ஆந்திரா ரூ.4.25 கோடியும் பெற்றுள்ளது. மத்திய அரசு அறிவித்ததே ரூ. 50,000/ ஆனால் கோவா அரசு ரூ. 1,00,000/ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு மண நிதி உதவி திட்டத்தின் மூலம் ரூ. 20,000/ வரை வழங்கி வருகிறது. மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றி ரூ. 50,000/ வழங்கினால் இளவரசன் – திவ்யா போன்ற கலப்பு மண இணையர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வழி ஏற்படும். கலப்பு மணத் தம்பதியினர்களுக்கு உடனடித் தேவை பொருளுதவியே.

சனநாயக நாட்டில் ஆட்சி செய்வது என்பது மக்களுக்காகத்தான் என்பது உண்மை என்றால், மனித சமூகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. எனவே சாதிவெறியர்களைப் பற்றி கவலைப்படாமல் பாரதி சொன்ன "காதல்' எனும் பயிரைக் காத்திட மத்திய மாநில அரசுகள் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முன்வர வேண்டும். குறிப்பாக,

கலப்புத் திருமணத் தம்பதியினர்களுக்கெனத் தனி வாரியம் அமைத்துத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்று அறிவிக்க வேண்டும்.

கலப்பு மணங்களை ஊக்குவிக்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். அந்தப் பிரிவில் கலப்பு மணம் புரிந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

கலப்புத் திருமணத் தம்மதியினர்களுக்காக வழங்கப்படும் நிதி உதவியை ரூ.1,00,000/ ஆக உயர்த்த வேண்டும். அதனையும் ஒரு வார காலத்தில் வழங்கிட வேண்டும்.

தொழில் செய்ய விரும்பும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு ரூ. 5 இலட்சம் வரை வட்டி இல்லாக் கடன் வழங்க வேண்டும்.

இப்படிப் பல திட்டங்களை அறிவிக்கலாம். அதற்குப் பின்பும் கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அகமண முறையைத் (சாதிக்குள் சாதி திருமணம்) தடை செய்திடல் வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் முன்வருமா?

Pin It

செவ்வாய்க் கிரகம் 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது.

சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் "பால்ய விவாகம்' என்னும் பெயரில் திருமணம் செய்து கொண்டிருந்த நம் சமூகம், இன்றைக்கு 30 வயதைக் கடந்த பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாமல் ஏங்கிக் கிடக்கிறது. அன்றைக்குப் பால்ய விவாகம், இன்றைக்கு முதிர் கன்னியர் பிரச்சனை. இன்றைக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்பதற்கு வரதட்சணை போன்ற காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டி இன்னொரு வேடிக்கையான காரணமும் இருக்கின்றது. பல பெண்களுக்கு ஜாதகத்திலே செவ்வாய் தோஷம் இருக்கின்றது. அதனால்தான் திருமணம் ஆகவில்லை என்று கூறுகிறவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

சமூகத்திலே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்குமானால், அதே மாதிரி செவ்வாய் தோஷம் உரிய மணமகன் கிடைக்கிற வரையிலே அவள் காத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவளுக்குத் திருமணம் செய்து விட்டால் அந்தப் பெண்ணுடைய கணவனுக்கோ அல்லது மாமியாருக்கோ உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடும் என்கிற ஓர் அச்சம் இருக்கிறது. அதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனாலும் மக்களிடையே அப்படியொரு ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொன்னால், புதன் தோஷம், வியாழன் தோஷம் எல்லாமும்கூட இருக்க வேண்டும். இன்னமும் சொன்னால் நெப்டியூன் தோஷமும்கூட இருக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் தோஷமில்லை. செவ்வாய் கிரகத்துக்கு மட்டும்தான் தோஷம் இருக்கிறது என்று நம்புவதற்கு என்ன காரணம்? செவ்வாய் கிரகத்தின் மீது நம்முடைய தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்று, உலகம் முழுதும் இருக்கிற மக்களுக்கும் அச்சம் இருக்கிறது. பல நாடுகள் செவ்வாயைக் கண்டு அஞ்சுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளோ, செவ்வாயை நல்ல நாள் என்று கருதுகின்றன. எனவேதான் அமெரிக்காவிலே பல நேரங்களிலே செவ்வாய்க்கிழமையில் தேர்தலை வைக்கிறார்கள். எப்போதும் தேர்தல் வைக்கிறபோது ஒருவருக்கு அது நல்ல நாளாகவும் அதுவே இன்னொருவருக்குக் கெட்ட நாளாகவும் அமையும். இருவரும் வெல்ல முடியாது. எவ்வாறாயினும், ஒரு நாளைக் கெட்ட நாள் என்று நம்புவதும், அதையே நல்ல நாள் என்று நம்புவதும் எல்லாம் மூடநம்பிக்கைதான்.

இப்படி ஒரு நம்பிக்கை, ஒரு அச்சம் ஏன் வந்தது என்று கேட்டால், மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் செவ்வாய் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதுதான் அதற்கான காரணம். அதனால்தான் பெயரையே செவ்வாய் என்று நாம் வைத்திருக்கிறோம். அந்தக் கிரகத்தைச் சுற்றிக் கூடுதலாகத் தூசுகள் இருக்கிற காரணத்தினாலே, அது சிவப்பாகத் தெரிகிறது என்பதுதான் அறிவியல் தருகிற செய்தி. ஆனால் சிவப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ ஆபத்து என்பதைப்போல நமக்கு ஒரு அச்சம் இருக்கிறது. அந்த அச்சம் வளர்ந்து செவ்வாய் தோஷம் என்பது வரைக்கும் வந்து நிற்கிறது.

செவ்வாய் தோஷம் என்பதற்கு ஜோதிடர்கள் தருகிற விளக்கம் என்ன என்றால் சிம்மராசியில், லக்கனத்தில், சந்திரனில் இதுபோன்ற வீடுகளில் செவ்வாய்க் கிரகம் இருக்குமானால், அது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம். அப்படிப் பார்த்தால் 100க்கு 50பேருக்குச் செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே அதிலிருந்து சில சலுகைகள், சில தளர்ச்சிகள் வழங்கப்படுகின்றன. அப்படி அந்தச் செவ்வாய் இருந்தாலும்கூட, செவ்வாயோடு உடன் சேர்ந்து ராகு அல்லது கேது, குரு, சனி, சூரியன் என்னும் ஐந்து கிரகங்களிலே ஒன்று சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று விலக்கி விடலாம். அப்படி விலக்கி விட்டதற்குப் பிறகும், 100க்கு 8.5 சதவீதம் பேருக்கு, அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட 2 மணி நேரம் பிறக்கிற குழந்தைகள் எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கும் என்பதுதான் ஜோதிடர்கள் தருகிற செய்தி.

அப்படிப் பார்த்தால், இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 பிள்ளைகள் பிறக்கிறார்கள். அது இன்றைக்குக் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு குறைந்திருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் என்று சொன்னால் ஒரு மணி நேரத்திற்கு 1800 குழந்தைகள் பிறக்கிறார்கள். 2 மணி நேரத்திற்கு 3600 குழந்தைகள் பிறக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் 3600 குழந்தைகள் செவ்வாய் தோஷத்தோடு பிறக்கிறார்கள் என்பதாக ஆய்வுகள் விளக்குகின்றன. அவர்களுள் ஏறத்தாழ 1800 குழந்தைகள் பெண்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அத்தனை குழந்தைகளும் செவ்வாய் தோஷச் சிக்கலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

செவ்வாய் எங்கே இருக்கிறது? பூமியிலே இருந்து 93 லட்சம் மைல்களுக்கு அப்பாலே இருக்கிறது. அதுதான் இருக்கிற கோள்களிலேயே நமக்குப் பக்கத்திலே இருக்கிற கோள். சூரியனுக்கும் நமக்கும் இடையில் புதன், வெள்ளி என்கிற இரண்டு கோள்கள் இருக்கின்றன. சூரியனுக்கு எதிர்த்திசையில் நமக்கு அடுத்ததாக இருப்பது செவ்வாய்தான். அடுத்த கிரகம் என்றாலும்கூட அது 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ஒரு ராக்கெட் 1000 கி.மீ. வேகம் என்று வைத்துக் கொண்டு போனாலும், அந்த இடத்தைப் போய் அடைவதற்கு ஏறத்தாழ 216 நாட்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலை நாடுகளிலே செவ்வாய் பற்றிய அச்சம் இருந்தாலும்கூட, செவ்வாய் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1960களிலே இருந்து செவ்வாயைப் பற்றி அறிவதற்கு அறிவியல் உலகம் முயன்று கொண்டிருக்கிறது. அங்குத் தண்ணீர் இருக்கிறதா அல்லது உயிர்கள், மனிதர்கள் வாழ்வதற்கு உரிய சூழல் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 1965 ஆவது ஆண்டுதான் முதல் முதலாக அமெரிக்க அனுப்பிய அந்த ஏவுகணை ஏறத்தாழ செவ்வாய்க்கு அருகிலே போய் 22 படங்களை எடுத்து அனுப்பியது. அதுதான் செவ்வாய் பற்றிய முதல் தகவல்.

22 படங்களை அந்தக் கலம் அனுப்பியது. அதற்குப் பிறகு பலமுறை முயன்று, திரும்பத் திரும்பத் தோல்விகளைக் கண்டதற்குப் பிறகு அதாவது சந்திரனில் கால் வைத்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1976 லே தான் முதன் முதலாக ஏவுகணை அங்கே போய் இறங்கிற்று. அதுவும் ஆளில்லாத ஒன்றுதான். ஆனால் இன்றுவரை மனிதர்கள் அங்கே போய் இறங்கவில்லை. நிலவிலே மட்டும்தான் மனிதன் கால் வைத்திருக்கிறான். செவ்வாயிலே அந்தக் கலம் மட்டும்தான் ஆளில்லாமல் போய் இறங்கியது 1976 இல்.

இரண்டு விண்கலங்கள் இறங்கி ஏறத்தாழ 1 லட்சம் படங்களை எடுத்து அனுப்பியிருக்கின்றன. இப்போது அந்தப் படங்களை இணைய தளங்களிலேகூட பார்க்க முடிகிறது. மிகப்பெரிய பள்ளத்தாக்குகள், குகை போன்ற பள்ளங்கள், இந்தியாவிலே இருக்கிற இமயமலையைக் காட்டிலும் பெரிய மலைகள், இப்படியெல்லாம் இருக்கிற ஒரு கிரகம்தான் அங்கே இருக்கிறது. அந்தக் கிரகத்துக்கும் நம்முடைய திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது என்கிற தெளிவு நமக்கு வருமானால், இந்த செவ்வாய் தோஷம் போன்றவற்றை எண்ணி நாம் அச்சப்பட வேண்டியதில்லை.

புதிய திருப்பம் என்ன என்றால் நம்முடைய நம்பிக்கைகளுக்கு அறிவியலைக் கொண்டு வந்து சேர்த்து முடிச்சுப் போட்டுச் சொல்வது. நாம் நம்முடைய ரத்தத்தைச் சோதனை செய்கிறபோது கீட.Nஞுஞ்ச்tடிதிஞு, கீட.கணிண்டிtடிதிஞு என்று சொல்வார்கள். ரத்தத்தில் யாருக்கெல்லாம் ஆர்.எச். இல்லையோ அவர்களுக்கு எல்லாம் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். பொதுவாக அறிவியலிலே ஒரு செய்தி உண்டு. ரத்தத்தில் ஆர்.எச். கணவன்–மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆர்.எச். இருக்கக் கூடாது. அதை இப்போது மாற்றிக்கொள்வதற்காக, ஊசிகள் எல்லாம் வந்து விட்டன என்பதை நாம் அறிவோம்.

அதையும் இதையும் முடிச்சுப் போட்டுச் சொல்வதைக்கூட அண்மையிலே பல ஆராய்ச்சிகள் மூலம் விளக்கி இருக்கிறார்கள். ஏறத்தாழ 100 பேரை ஆராய்ந்து பார்த்தால், அதாவது ஜாதகப்படி செவ்வாய் தோஷம் இருக்கிறவர்கள் ஆர்.எச். நெகட்டிவாக இருக்கிறார்களா என்று பார்த்தால், 98.4 சதவீதம் அப்படி இல்லை. 1.6 சதவீதம் அப்படி இருக்கிறது என்றால் அது தன்னிச்சையாக நடந்திருக்கிறது என்பதுதான் பொருள். ஆகையினாலே இது அறிவியல் சார்ந்த செய்தி இல்லை. செவ்வாய் தோஷம் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை வைத்துக் கொண்டு நம்முடைய பெண்களின் வாழ்க்கையை நாம் பாழடித்து விடக்கூடாது.

Pin It

முத்துலட்சுமி அம்மையாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை இவர் 1886 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் நாள் நாராயணசாமி, சந்திரம்மா தம்பதியினருக்கு, பெண்கள் அடிமைகளாக, புழு பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில் புதுமைப் பெண்ணாக பிறந்தார்.

தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் தொடங்கினாலும் 1902 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பெற்றோர் திருமணம் செய்து வைக்க விரும்பினாலும், முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்து படித்துத் தான் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் அவரின் தந்தையோ தனது ஓய்வூதியத்தில் மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்கும் நிலையில் இல்லை. அதோடு புதுக்கோட்டையில் ஆண்கள் படிக்கும் கல்லூரியே இருந்தது.

முத்துலட்சுமியின் நிலையை அறிந்த புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட வைரவத் தொண்டமான், முத்துலட்சுமியை ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணை பிறப்பித்தார். இதன் மூலம் ஆண்கள் கல்லூரியில் படித்த ஒரே பெண் முத்துலட்சுமி ஆவார். முத்துலட்சுமியுடன் படித்த மாணவர்களில் ஒருவர் சத்தியமூர்த்தி அய்யர் என்பது குறிப்பிடத் தக்கது.

கல்லூரியில் இண்டர் மீடியட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். மீண்டும் அவருடைய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தந்தையின் நண்பர் ஒருவர் முத்துலட்சுமியை மருத்துவம் படிக்க அறிவுறுத்தினார். அதன்படி 1907 ஆம் ஆண்டு முத்துலட்சுமி சென்னைக்கு அழைத்துவரப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். புதுக்கோட்டை மகாராஜா பொருளுதவி செய்தார். அந்தக் காலத்தில் மாணவர்கள் தங்கிப்படிக்க விடுதிகள் இல்லை. எனவே தந்தையின் நண்பர் பி.எஸ். கிருஷ்ணசாமி முத்துலட்சுமி தங்கிப் படிக்கத் தன் வீட்டுப் பக்கத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தந்ததோடு முத்துலட்சுமிக்கு ஆதரவாக இருந்தார்.

1912 ஆம் ஆண்டு முத்துலட்சுமி மருத்துவ தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றினார்.

மருத்துவராக பணியாற்றும்போதே, சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட் அம்மையார், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரோடு பழகும் வாய்ப்பு அம்மையாருக்கு ஏற்பட்டது.

டாக்டர் முத்துலட்சுமியைப் போல் 1913 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஊகீஇகு பட்டம் பெற்ற டாக்டர் டி. சுந்தர ரெட்டி என்பவரை மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்த பிரம்மஞான சபையில் 1914 ஆம் ஆண்டு “உங்களுக்குச் சமமான மரியாதையை எனக்கு நீங்கள் தரவேண்டும். என்னுடைய விருப்பங்கள் எதுவானாலும் அதற்கு நீங்கள் குறுக்கே நிற்கக்கூடாது” என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டார் அப்போது அவருக்கு வயது 28.

கணவன் மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மருத்துவராகப் பணியாற்றும் போதே ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும்

பாடுபட்டார். குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரக் காரணமாகத் திகழ்ந்தார். இதனைச் சாரதா சட்டம் என்று அழைப்பர்.

நீதிக் கட்சியின் தலைவரும், சென்னை மாகாண முதல்வருமான பனகல் அரசர், டாக்டர் முத்துலட்சுமியை மேற்படிப்புப் படிக்க இலண்டன் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். டாக்டர் முத்துலட்சுமி கணவர் மற்றும் குழந்தைகளுடன் இலண்டன் சென்றார்.

இங்கிலாந்தில் இருக்கும்போது 1926 ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரீசில் அகில உலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக முத்துலட்சுமி கலந்து கொண்டு உரையாற்றினார். அவரின் உரையில் “ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

1926 ஆம் ஆண்டு பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனால் மாகாண ஆளுநர் டாக்டர் முத்துலட்சுமி சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்தார். இதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் சட்ட மன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் இப்பதவியை வகித்த முதல் பெண்ணும் இவரே.

இவர் பதவியில் இருந்த காலத்தில் பல புரட்சிகரமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இருதாரத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவைகள் ஆகும்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட மசோதா சட்ட மன்றத்தில் கொண்டுவரப் பெரிதும் காரணமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஆவர். மேற்கண்ட மசோதாவைத் தாமதம் செய்வதற்குப் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்கலாம் என முடிவெடுத்து அதனை மகாத்மா காந்திக்கும் தந்தை பெரியாருக்கும் அனுப்பி அபிப்பிராயம் கேட்டார்கள். அதனைக் கண்டித்துத் தந்தை பெரியார் அவர்கள் 23.03.1933 இல் வெளிவந்த குடியரசு இதழில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்.

“பொது ஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோயில்களில் கடவுள்கள் பெயரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி, அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபச்சாரித் தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய, சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகு காலமாய் இருந்துவருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒருநாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரின அரசாங்கமாகவாவது ஒன்றிருந்தால், இந்த இழிவான கெட்ட பழக்கம், கடவுள் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காது என்றே சொல்லுவோம்”.

“நிற்க. இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் "பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும்' இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும் பொது மகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன், இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று இந்தியச் சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருக்கின்றது”.

“ஆகவே, இந்தச் சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே, நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கியமுமான காரியமாகும். ஆனால், அந்தப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க, சட்ட மெம்பர் ஆட்சேபனைகளைக் கிளப்பி, இதைப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தாமதப்படுத்திவிட்டது மிகவும் வருந்தத் தக்கதாகும். அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் வோட்டு கொடுத்தது மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியாளர்கள் இந்தக் காரியத்தைக்கூடச் செய்ய முடியவில்லையானால், பின் என்ன வேலை செய்யத்தான் அந்தச் சட்டசபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. "காங்கிரசுக்காரர்கள் சட்டசபையில் இல்லாததால் இச்சட்டம் நிறைவேறாமல் போயிற்று' என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி நமக்கு எழுதியிருப்பதைப் பார்க்க, நமக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருந்தது.

எப்படியானாலும், அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக்கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காது என்றே சொல்லுவோம்”.

சட்டமன்றத்தில் இதைப்பற்றி விவாதம் நடந்தபோது சத்திய மூர்த்தி தேவதாசி முறையை ஒழிக்கக்கூடாது என்று வாதாடினார். அப்போது முத்துலட்சுமி அம்மையார் எழுந்து “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று கேட்டதும் சட்டசபை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. 1930 இல் தொடங்கிய தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டம் 1947 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் சென்னை சட்ட மன்றத்தில் சட்டமாக்கப்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு மே திங்களில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அதில் பெண்கள் மாநாட்டிற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தலைமை தாங்கி ஆற்றிய உரை பெரியாரின் பாராட்டைப் பெற்றது.

1933 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிர்மாண ஊழியர்கள் மாநாட்டில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் ஆற்றிய உரை காந்தி அவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

1937 முதல் 1939 வரை சென்னை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக அம்மையார் பதவி வகித்து சென்னை நகரின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டார்.

1935 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கத் தனி மருத்துவமனை உருவாக்க வேண்டும் என ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இருந்தாலும் அவருடைய கனவு அவரின் பெரும் முயற்சியால் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நாள் அடையாரில் புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். 1954 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 18 ஆம் நாள் 12 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தற்போது 423 படுக்கைகள் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனையாக செயல்படுகிறது. அதில் 297 படுக்கைகள் ஏழைகளுக்கு இலவசமாகச் சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் 1,25,000 நோயாளிகள் தமிழகம் மட்டுமன்றித் தென் மாநிலங்களிலிருந்தும் வருகைதந்து சிகிச்சை பெறுகின்றனர்.

டாக்டர் முத்துலட்சுமியின் தொண்டைப் பாராட்டும் வகையில் அவருக்கு மத்திய அரசு “பத்மபூஷன்” விருதை வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசு அவரின் நினைவாக “டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்” என்ற பெயரில் கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு ரூ. 20,000/ வரை வழங்கி வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமியின் மூத்த மகன் இராம்மோகன் ஐஅகு திட்டக்குழு இயக்குனராகப் பணியாற்றினார். அவரின் இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி பெற்றோரைப் போல மருத்துவராக – புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பார்த்துக் கொண்டார்.

டாக்டர் முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவரின் தாயார் சந்திரம்மா இசை வேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் (தேவதாசி) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முத்துலட்சுமியின் தந்தை நடிகர் ஜெமினி கணேசனின் பெரிய மாமா ஆவார்.

1952 ஆம் ஆண்டு இராஜாஜி அவர்கள் அம்மையாரைச் சென்னை சட்ட மன்றத்தில் உறுப்பினராக மீண்டும் பணியாற்ற அழைத்தார். அம்மையாரோ தனக்கு வயது 67 ஆகிறது. எனவே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து புகழ்பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் 1968 ஆம் ஜீலை திங்கள் 22 ஆம் நாள் 82 ஆவது வயதில் மனநிறைவோடு தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அவர் மறைந்து விட்டாலும் அவருடைய தொண்டுகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அவ்வை இல்லமும், அடையார் புற்று நோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.

Pin It

நமது செய்தித்தாள்கள் காலங்காலமாகச் சிலருக்குச் சாதகமாகவும், சிலருக்குப் பாதகமாகவும் இயங்கி வருகின்றன. அவர்களின் தீர்ப்புகள் எப்போதும் திறமைகளை அடிப்படையாக வைத்து வருவதில்லை. வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் (அமைச்சரின்) பதவி விலகல் பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நல்ல விதமாகவும், வேண்டாதவர்களை மோசமாகவும் முன்னிறுத்துவதாகவே இது இருக்கும். இதுபோன்ற அணுகுமுறை என் விஷயத்திலும் நடந்தது.

அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியல் விளையாட்டுகளுக்கு நான் ஒருபோதும் உடந்தையாக இருந்ததில்லை. அதுபோலவே, துறைகள் காலியானால் அதைப் பிடுங்கிக் கொள்ள நடக்கும் போட்டிகளிலும் ஈடுபட்டது இல்லை. நான் பணி செய்வதில் மட்டும்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.

அரசின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதற்கான மற்றோர் செய்தி, அது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நடத்தப்பட்ட விதம் குறித்ததாகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டம் எந்தவிதப் பாதுகாப்பும் அளிப்பதில்லை என்பதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

தாழ்த்தப்பட்டோரின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்த வரையில், முன் எப்போதும் போலத்தான் இருக்கிறது. அதே சர்வாதிகாரம்; அதே அடக்குமுறை. முன்பு எப்போதும் இருந்து வந்த அதே பிரிவினை வாதம்தான் இன்னும் இருக்கிறது. சொல்லப்போனால், இன்னும் மோசமான வடிவில் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் இந்த இழிநிலைக்கு இணையாக, உலகில் வேறு எங்கேனும் உள்ளதா என்று எனக்குப் புலப்படவில்லை.

என்னைப் பெரிதும் அதிருப்தி கொள்ள வைத்தது மட்டுமல்லாமல், ஆர்வமிழக்கவும் வைத்தது என்னவென்றால், நம் நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை 1947 ஆம் ஆண்டு 15 ஆம் நாள், நாம் சுதந்திர நாடாக மாறத் தொடங்கியபோது, எந்த நாடும் நாம் நலிந்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நமது நண்பர்களாக இருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று நமது நண்பர்கள் நம்மை கைவிட்டு விட்டார்கள். நமக்கு இன்று எந்த நண்பர்களும் இல்லை. நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அய்.நா. அவையில் நமது தீர்மானங்களை முன் மொழியக்கூட யாரும் இல்லாத அளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பாதையில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.

நமது அயல் நாட்டுக் கொள்கையால், அதிகளவில் ராணுவ செலவுகள் செய்தும், பஞ்சத்தில் வாடும் கோடானு கோடி மக்களுக்கு உணவு வழங்க முடியாமல் தவிப்பதும், தொழில் துறைக்குப் பணம் புரட்ட சிரமப்படுவதும், நமது வளங்கள் எவ்வாறு சுரண்டப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்று தேவையானதை செய்ய முடியாமல் திணறிக்கொண்டு, மிகவும் நல்லவர்களாக இருக்க முயற்சிக்கும் நமது அயல்நாட்டுக் கொள்கை, எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ஓர் ஆண்டில் நாம் வரியாக வசூலிக்கிற 350 கோடி ரூபாயில் 180 கோடியை ராணுவத்திற்குச் செலவிடுகிறோம். இதற்கு இணையான வீண் செலவு வேறு எதுவும் இருக்க முடியாது. நமது அயல்நாட்டுக் கொள்கையின் விளைவாகவே இதன் வீண் செலவு ஆகிறது.

பாகிஸ்தானுடனான தகராறு, நமது அயல்நாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெரிதும் அதிருப்தியளிக்கிறது. பாகிஸ்தானுடனான நமது உறவு இரண்டு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்தில் உள்ள மக்களின் நிலை.

காஷ்மீர் பிரச்சினையையே நாம் எப்போதும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு போலியான பிரச்சனைக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். யார் சரி, யார் தவறு என்ற விவாதத்திலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். என் மனதுக்குட்பட்டவரை, யார் சரி என்பது உண்மையான பிரச்சினை அல்ல; எது சரி என்பதுதான் முக்கியம். இதை (முக்கிய கேள்வியாக) வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரிப்பதுதான் சரியான தீர்வு என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தியாவை நாம் எவ்வாறு பிரித்தோமோ அதே போலவே, இந்து மற்றும் புத்தமதப் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுத்துவிட வேண்டும் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியப் பகுதியைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரத்து முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை. அவர்கள் விருப்பப்படி அதை முடிவு செய்து கொள்ளட்டும்.

("பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 14,2 ஆம் பகுதி, பக்கம் : 1318.)

Pin It

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும் மதத்தின் பேராலும் விபச்சாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபட வேண்டுமென்பதாகப் பலர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகச் சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால் விபச்சாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும் அப்படிச் செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை.

ஏனெனில் இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும் அதற்குப் பின்பும் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய்த் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஏனெனில் அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்குக் கற்பு கெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்க முடியாது. ஆனால் அப்பெண்களுக்குத் தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வை கூட நிலத்தில் விழாமல் மேனாமினுக்காய் இருந்து வாழ்ந்து வரும் மாமாக்கள் என்று சொல்கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால் அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூலகர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும் இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும் கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும் நமது மற்றப் பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபச்சாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொடுமையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால் அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கஷியை நியாயம் என்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை தலைமுறையாகத் தங்கள் பெண்களை உதவி வர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன் அந்த தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம், எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாகத் தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபனை. அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும் கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபனை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவுக் காரியங்கள் போய் விழுந்துவிட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்றப் பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும் அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்றப் பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படிச் சொல்லுவதானது ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும், கடவுள் சித்தமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ்விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் பெண்களுக்குக் காவலும் கட்டுப்பாடும் நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பைக் கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உலகத்திலுள்ள எல்லா மதமும் பழக்கத்தில் அநியாயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால் இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இருபாலருக்கும் சரிசமானமான சுதந்திரமில்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

(குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.10.1927)

Pin It