இசைப்பிரி யாவை சிதைத்த துன்பம்
இதயத்தைப் பிழியலையா – உன்தன்
இதயத்தைப் பிழியலையா?
அசையாப் பாறை மனமா – உனக்கிது
அழியாப் பழிஇலையா – மன்மோகன்!
அழியாப் பழி இலையா?

இராச பக்சே கொடியன் மேல்தான்
இத்தனை கரிசனமா – உனக்கு
இத்தனை கரிசனமா?
வீசி எறிந்தான் முள்வேளி வெளியில்
வெம்பிட எம் இனமா – கொலைவெறி
வேட்டையில் தமிழ் இனமா?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'
என்றவன் தமிழனடா –அவன்
எங்கள் பாட்டனடா!
சூதாய் அவனின் இனத்தை அழிக்கும்
சூழ்ச்சி நடக்குதடா – உன்தன்
துணைஅதற் இருக்குதடா!

கருணை இல்லாக் கயவன் நாட்டில்
"காமன் வெல்த்' கூத்தா – பல
கயவரையும் சேர்த்தா?
சொரணை இல்லா நீ அவனுக்குத்
துணையாய் போகின்றாய் – தேய்ந்த
துடைப்பம் ஆகின்றாய்!

கொடியவன் இராச பக்சே அவனைக்
கூண்டில் ஏற்றிடுவோம் – கூட, உன்
கொலைமுகம் காட்டிடுவோம்!
விடியலைத் தேடும் ஈழம் தன்னில்
விடுதலை நாட்டிடுவோம் – உனக்கும்
விலங்கைப் பூட்டிடுவோம்!

Pin It