உலகத் தமிழினத் தலைவர் கலைஞர், குமரியில் வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் மாபெரும் சிலை அமைத்தபோது தமிழர் நெஞ்சங்களெல்லாம் மகிழ்ச்சிக் கூத்தாடின. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குச் சிறப்பான நினைவுச் சின்னம் எனக் கொண்டாடின. அதை விஞ்சும் அளவுக்கு மதுரையில் தமிழ்த் தாய்க்கு 100 கோடி செலவில் உலகிலேயே உயரமான சிலை அமைப்பேன் என செயலலிதா அறிவித்தபோது அவரது தமிழ்ப் பற்றைக் கண்டு தமிழ் கூறும் நல்லுலகமே வியந்தது.

அவரது அறிவிப்பின் முழுமையான பொருள் 26.06.2013 அன்று புரிந்தது. ஆம் அன்றுதான் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு வந்தது. முதல்கட்டமாக 320 அரசுப் பள்ளிகளில் ஒன்று, ஆறு, பதினொன்று ஆகிய வகுப்புகளில் ஆங்கிலமொழி வழிக் கல்வி தொடங்கும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இந்த ஆண்டில் இரண்டு, ஏழு, பன்னிரண்டு வகுப்புகளில் 3200 பள்ளிகளில் ஆங்கிலமொழி வழிக் கல்வி தொடங்கியுள்ளது. கூடாரத்திற்குள் தலையை நுழைத்த ஒட்டகம் ஒட்டு மொத்தக் கூடாரத்தையும், சரித்து விடுவதைப் போல் இனித் தமிழ்நாட்டில் தமிழுக்குக் கல்விக் கூடத்திலும் இடமில்லை என்பது தெளிவாகியது. இதன்மூலம் மேனாள் முதல்வர் செயலலிதாவின் தமிழ்ப்பற்று வெளிப்பட்டது.

school

"உன்னதமான தத்துவங்களுக்கு வைக்க வேண்டுமா உலை? ஒரு நிபந்தனை அதற்கு வை உலகிலேயே மிக உயரமான சிலை! இதோ தமிழன்னைக்கு உலகிலேயே உயரமான சிலை! பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு உலை!

தமிழக முதல்வரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஊடகங்களிலும், நாளேடுகளிலும் மேடைகளிலும் மயிர்க் கூச்செறியும் தருக்கங்கள் நடைபெற்றன.

"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாவேந்தரின் ஆவேசத்தோடு தமிழறிஞர்களும், கல்வியாளர்களும் கலைஞர்களும், எழுத்தாளர்களும் களம் இறங்கினார்கள். பாரதியின் கவிதை வரிகளில் தமிழ்த்தாய் ஒரு பேதையின் கூற்றாகக் கூறிய "புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறனும் தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச்சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் எனக்கொன்றிடல்' போன்ற வார்த்தைகளோடு தமிழ் வழிக் கல்விக்கு எதிராகக் கல்வியை ஒரு இலாபம் கொழிக்கும் தொழிலாகக் கொண்டுள்ளவர்களும் போர்க்கோலம் பூண்டனர்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'' என உணர்ச்சி வசப்படுவது மட்டும் தீர்வாகுமா? பள்ளிகளின் படிநிகராளியர்களாக உள்ள கட்டணக் கல்வி நடத்துவோரின் வியாபாரத் தந்திரங்களுக்கும் அவற்றின் குரல்களாகச் செயல்படும் முதல்வரின் தரப்பையும் மக்களின் முன் வெல்லும் வழிகள் என்ன?

களத்தில் இன்று உள்ள நிலைமையைச் சற்று பரிசீலிக்க வேண்டும்

1. நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி விளம்பரம் இப்படி மக்களிடம் கூறுகிறது. "தமிழ் மீடியத்தில் படிக்கிறது நம்ம நாட்டு நாணயம் மாதிரி. உள்நாட்டுக்குள்ளதான் செல்லுபடியாகும். இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறது முத்திரைப் பவுன் மாதிரி. உலகத்துல எங்கே போனாலும் செல்லுபடியாகும்.'

2. உலகத்தில் அதிக மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரிந்தால் உலகெங்கும் நாம் தொடர்பு கொள்ள முடியும்.

3. ஆங்கிலம் படித்தால் உலகமெங்கும் வேலை கிடைக்கும்.

4. இத்தகைய விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே ஆங்கில வழியில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

5. பல மாவட்டங்களில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெற்றோர்களிடமும் மகிழ்ச்சி நிலவுகிறது.

6. போதிய மாணவர் சேர்க்கை இன்மையால் மூடப்படுமோ என்று பயந்திருந்த ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் எல்லாம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன.

7. ஆசிரியர் அமைப்புகள் ஆங்கில வழிக் கல்விக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமைக்கு இது முக்கிய காரணம். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்போது உற்சாகம் வந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியின் முன்னும் ஆங்கில வழி வகுப்புகள் பற்றிய பதாகைகள் வரவேற்கின்றன. தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு அரசுப் பள்ளிகள் விளம்பரம் செய்கின்றன.

8. ஆங்காங்கே சிறிய அளவில் சிறைகளைப் போன்ற அறைகளிலும், வீடுகளிலும் நடைபெற்று வந்த தனியார் மழலையர் தொடக்கப் பள்ளிகள் பல இவ்வாண்டு மூடப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டன.

9. ஏற்கனவே நிலைப்பட்டு விட்ட மிகப் பெரும் தனியார் பள்ளிகளுக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏது மில்லை. அவை உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினரை வாடிக்கையாளராகக் கொண்டிருக்கின்றன.

10. பொருளாதாரத்தில் நலிந்துள்ளவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஆங்கில வழிக் கல்வியைப் பயிலக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று வரவேற்புக் கூறுவோரும் உள்ளனர்.

11. அதிமுக அரசு அறிவித்துள்ள ஆங்கில வழிக் கல்வித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக் கிறது.

12. பயிற்று மொழியையும், பள்ளியையும் தேர்ந்தெடுப் பது தனி மனித உரிமை என்கின்றனர் சிலர். இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது.

13. உயர் கல்வியில் குறிப்பாக மருத்துவம், பொறி யியல் கல்வியைத் தமிழில் கொண்டுவராமல் ஆரம்பக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துவது அர்த்தமற்றது என்கின்றனர் கல்வியாளர்கள் சிலர்.

14. தமிழ் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்குப் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. தமது இருப்பைத் தெரிவிக்கும் செயல்பாடாகவே அவை உள்ளன.

கடந்த 1967 முதல் 2014 வரையான 47 ஆண்டுக் கால ஆட்சியின் தமிழ் மொழிக் கொள்கை பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையின்றி ஆங்கில மொழி வழிக் கல்விக்கு ஆதரவான இத்தகைய ஓர் மனநிலை தமிழ்நாட்டில் எவ்வாறு தகவமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

பேராயக் கட்சி ஆட்சியில் நடைபெற்றது என்ன என்ற பரிசீலனையில் இருந்து தொடங்குவதுதான் நல்லது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சிப் பீடம் ஏற்ற 1956 டிசம்பர் 27ல் சட்டமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பி.இராமமூர்த்தி, "சட்டமன்றத்தில் இந்த நாள் தமிழ்நாட்டின் திருநாள். நமது தாய்மொழியை ஆட்சிப் பீடமேற்ற வேண்டுமென்ற தமிழ் மக்களின் நீண்டகால ஆசை இன்று நிறைவேறுகிறது. திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் ஆய்வுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காகவும் முதலில் வட்ட அளவில் அதைக் கொண்டு வந்து பிறகு மாநில அளவில் அது கொண்டு வரப்படுமென்றும் மசோதாவில் கண்டுள்ளது. அவ்வாறில்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் உடனடியாகத் தமிழ் பயன்படுமாறு அறிவிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்திய பேராயக் கட்சி ஆட்சியில்தான் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தி சி.சுப்பிரமணியம் "தமிழால் முடியும்' என்று ஒரு புத்தகமே எழுதினார்.

காமராசர் ஆட்சிக் காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள எல்லாச் சிற்றூர்களிலும் பள்ளிகள் தொடக்கப்பட்டன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வர மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இலவயச் சீருடைகளும், அளிக்கப்பட்டன. அவரது முயற்சியால் முதல்வர் பக்தவத்சலம் ஆட்சியில் சிற்றூர்ப்புற கல்வி தரமானதாக அமைய 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என அரசு ஆணை எண் 250 கல்வி நாள் 29.2.1964 பிறப்பிக்கப்பட்டது. பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத்தில் பல துறை நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுக் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி தொடங்கப் பெற்றது.

இந்திய அரசு 1965ல் ஆட்சிமொழியாக இந்தியைக் கொண்டுவர முயன்றபோது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமானது. அதைத் தொடர்ந்து 1967ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பேராயக் கட்சி தோற்றது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பேராயக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றியது. 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தது.

மும்மொழித் திட்டம் என்பதை இருமொழித் திட்டமாக்க இந்திய அரசு மொழிச் சட்டம் 1967 திருத்தப்பட்ட நிலையில் 1968 சனவரி 26 அன்று நடந்த விவாதத்தில் நீதி, நிர்வாகம், கல்வி என்ற மூன்று நிலைகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால் தமிழ் மக்களுக்கு அச்சம் இருக்காது. பயம் இருக்காது என்று மார்க்சிசுட் கட்சித் தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், என். சங்கரய்யா, தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி. ஆகியோர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினர்.

அண்ணா தமக்கேவுரிய வகையில் மழை பெய்கின்றபோது குடை கிடைக்காவிட்டாலும், மேல் துணியைத் தலையில் வைத்துக் கொள்வது போல் உடனடியாக இந்தி வந்து விடாமல் தடுக்க ஆங்கிலத்தை வைத்துத் தடுக்கிறோம் என பதிலளித்தார்.

அந்தக் குடை தமிழ்க் குடையாக இல்லாமல் போனதற்குக் காரணம் உலகத் தொடர்புக்கும், அறிவியல் அறிவு பெறவும் ஆங்கிலம் இன்றியமையாதது என திராவிட இயக்கத்தவர் மனங்களில் ஊறிக்கிடந்த கொள்கைதான்.

இந்த ஆங்கில மோகம், மனோபாவம்தான் தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டாலும், இந்தியின் இடத்தில் தமிழை வைக்க முன்வராமல் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடித்தது.

தமிழரின் மனங்களை ஆங்கிலத்திற்கேற்பத் தகவமைக்கும் பணியையே தொடர்ந்தார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இருந்த தகுநிலைப் (மெட்ரிக்குலேசன்) பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறைக்குக் கொண்டு வரப்பட்டன. மேலும் பல புதிய மெட்ரிக் பள்ளிகளை ஆளுங் கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களும் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கல்வி அமைச்சர் க.அன்பழகன் தம்பி க.அறிவழகன் இதற்கு உறுதுணையாக இருந்தார். 30 மெட்ரிக் பள்ளிகள் 500 ஆக உயர்ந்தன. கல்வியின் பெயரால் கொள்ளை ஊதியம் பெறும் தொழில் அரங்கேறியது.

அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செ.அரங்கநாயகம் தன்னாட்சிப் பள்ளிகள் என்ற பெயரில் காளான்களைப் போல் ஆங்கிலப் பள்ளிகள் தோன்ற வழிவகுத்தார். இவர் அளித்த உற்சாகத்தால் ஆளுங்கட்சியினரும் இவர்களது ஆதரவாளர்களும் ஆங்கில வழிக் கட்டணப் பள்ளிகளைத் தொடங்கினர். 1977 இல் 200 ஆகவும் 1992ல் 1000 ஆகவும், 2000ல் 2000 ஆகவும், இப்போது 4000க்கு மேலும் மெட்ரிக் பள்ளிகள் பெருகின.

ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி மாநகராட்சிப் பள்ளிகளிலும், அரசின் நிதி உதவிப் பள்ளிகளிலும் 1:20 ஆசிரியர் மாணவர் விகிதத்தில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருந்து தரமான கல்வி அளிக்கப்பட்டதால் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை.

சிற்றூர்ப்புறக் கல்வியைச் சீரழித்தால்தான் தங்கள் ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவார்கள் எனத் திட்டமிட்டு அரசை அணுகினர். திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் காலியான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டன. 1995ல் முதல்வர் ஜெயலலிதா 1:50 என ஆசிரியர் மாணவர் விகிதத்தை உயர்த்தி சிற்றூர்ப்புறப் பள்ளிகளை இயற்கை மரணமடைய வழிவகுத்தார்.

அப்போது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியோடு சேர்ந்து இதை எதிர்த்த கலைஞர் 1996ல் ஆட்சிக்கு வந்தார். மீண்டும் 1:20 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய 1:40 எதிர்ப்புக் கண்டன மாநாட்டில் கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுத் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தபோதும் கலைஞர் இந்தக் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து கல்வித்தரம் சீரழிந்ததால் ஓரளவு வசதிமிக்க மக்கள் தரமான கல்விக்காக மெட்ரிக் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய நிலையைத் திட்டமிட்டு உருவாக்கினார். ஈமுகோழி விற்பனை உத்தியைப் போன்ற ஆங்கில வழிக் கல்வி பற்றிய இவர்களின் விளம்பர டமாரச் சத்தத்தில் மக்கள் உண்மை நிலைகளை அறியாது அதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

தாய்மொழி வழிக் கல்வியின் இன்றியமையாமை பற்றிய ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்களின் கருத்துகள் மக்களைச் சென்றடையவில்லை.

1. நாடு விடுதலை அடைந்தபின் 1952ல் அமைக்கப் பட்ட ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆணைய மும், 1964ல் அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணைய மும், தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத் தின. 1986 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கல்விக்கான தேசியக் கொள்கையும் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி வழியிலேயே பயிற்றுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.

2. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் 160 மொழிக் குடும்பங்களைக் கொண்டுள்ள 22 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்:

அ) தாய்மொழி வழிக் கல்வியால் குழந்தைகள் விரைவாக வாசிக்கப் பழகுகின்றன. காரணம் மொழியின் கட்டமைப்பு பற்றிய அறிவு அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. எனவே சரியான முறையில் ஒலிக்க முடிகிறது. மேலும் நிறைய சொற்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆ) தாய்மொழியில் கற்பிக்கும்போது செலவு குறைகிறது.

இ) தாய்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறுப வர்கள் மிக எளிதாக இன்னொரு மொழியைக் கற்க முடிகிறது.

ஈ) சொந்தப் பண்பாட்டு அறிவு பாரம்பரிய அறிவு, சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் பள்ளியில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதனை புரிபவர்களாக இருக்கிறார்கள்.

3. 2010ல் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் மொழியியல் வல்லுநர்கள் தாய்மொழி வழிக் கல்வி, கற்கும் ஆர்வத்தை உருவாக்கி மாணவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதைப் பறைசாற்றினர்.

4. தாய்மொழி வழியாக அல்லாமல் வேறு மொழியின் வழியாகப் படிக்கும்போது, மூளை எப்போதும் மொழி பெயர்த்துக் கொண்டே இருக்கிறது. இப்படி இரட்டை வேலைச்சுமை காரணமாகவே புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் திறனோ, படைப் பாக்கத்திறனோ அடிபட்டுப் போகிறது.

4. தாய்மொழியில் கற்பவர்களே ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் பெறுவார்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பொறியியல், மருத்துவப் பாடங்களைக் கற்பிக்க 27 பாட நூல்கள் 70,000 கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து 16 ஆசிரியர்கள், 1997 சூன் மாதம் பயிற்சி பெற்றார்கள். தமிழக அரசு 5 பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி கற்பிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஏ.ஐ.சி.டி.ஈ. அனுமதி தரவில்லை என இத்திட்டம் கைவிடப்பட்டது. ஏ.ஐ.சி.டி.ஈ.க்கு தாய்மொழியில் கற்பிக்கக் கூடாது எனக் கூற உரிமை இல்லை. அதை மீறி அரசு செயல்பட்டிருக்க வேண்டும். அவசர நிலையின்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் வழிக் கல்வி வந்தால்தான் தமிழில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனை வளரும். நூல்கள், கலைச் சொற்கள், அகராதிகள் தாமாகவே வந்து சேரும். சந்தை இருந்தால்தான் சரக்குவரும்.

கணினிக்குப் பொருத்தமான மொழியாகத் தமிழ் இருப்பது பெருமை தருவதாகும். ஆனால் கணினிக்கெனத் தனியாக எழுத்துரு இன்னும் உருவாக்கப்படவில்லை. ஒரு பொதுவான தமிழ் விசைப் பலகை தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவயமாக மக்களுக்குத் தரவேண்டும்.

1960களில் சென்னைப் பல்கலைக் கழகம் முனைவர் ஏ.சிதம்பரநாதனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட ஆங்கிலம் தமிழ் அகராதிக்குப் பின் அரசுச் சார்பில் எந்த முயற்சியும் இல்லை. "உலகத்து மொழிகளிலேயே அதிகமான வேர்ச் சொற்களை உடைய மொழி தமிழே'' என்றார் மொழியியல் தந்தை முனைவர் லவினோ.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் சொற்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' என்றார் பாரதி.

இவற்றில் எதையுமே செய்யாமல் உதட்டில் தமிழும், உள்ளத்தில ஆங்கிலமுமாகத் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றிய தமிழினத் தலைவரையும், உடம்பே ஆங்கிலமாக நிற்கும் அம்மாவையும் நம்பி இனி எந்தப் பயனும் இல்லை.

இந்துத்வா சக்திகளுக்கு மதம் எப்படி ஒரு அணி திரட்டும் கருவியாக உதவுகிறதோ அதுபோல இவர்களுக்குத் "தமிழ் ஓர் அரசியல் அணி திரட்டலுக்கான கருவி' என்பதற்குமேல் தமிழுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மொழியைப் படைத்த மக்களே தம் மொழியைக் காக்கும் போரை நடத்தியாக வேண்டும். அது ஒன்றும் எளிதான காரியமன்று. கடந்த 40 ஆண்டுகளாக ஆங்கில மொழிக்கு இசைவான ஒரு மனநிலை தவறான தகவல்களால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நடுவில் நாம் அடிப்படை உண்மைகளைக் கொண்டு சென்றாக வேண்டும்.

1. உலகின் மொத்த மக்கள் தொகை 630 கோடி. இதில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெறும் 48 கோடிப் பேர் மட்டுமே. இது உலக மக்கள் தொகையில் வெறும் 8% தான். உலகில் உள்ள பிற அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் தாய்மொழிதான் பேசப்படுகிறது. இந்த நாடுகளில் ஆங்கிலம் செல்லுபடியாகாது.

2. ஆங்கிலம் பேசும் நாடுகள் பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே. இந்த நாடுகளிலும் ஆங்கில மொழி உச்சரிப்புகள் மாறுபடுகின்றன. எனவே இந்தியாவில் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் ஆங்கிலம் இங்கே செல்லுபடியாகாது. இந்த நாடுகளில் மேல்படிப்புப் படிக்க அல்லது வேலைக்குச் செல்ல அந்த நாடுகள் நடத்தும் TOFEL என்ற ஆங்கில மொழித் தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறாமல் அங்குச் செல்ல முடியாது.

3. நாமக்கல் பேருந்து நிலையத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஒலிபெருக்கி விளம்பரம் செய்ததுபோல் "இங்கிலீசு மீடியத்'தில் படிக்கிறது முத்திரைப் பவுன் மாதிரி அல்ல. உலகத்தில் ஆங்கில மொழி பேசும் நான்கு நாடுகளைத் தவிர வேறு எங்கே போனாலும் செல்லுபடியாகாது.

4. உலகத்தில் அதிக மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் அல்ல. சீன மொழிதான். ஆங்கிலம் தெரிந்தால் உலகமெங்கும் நாம் தொடர்பு கொள்ள முடியாது.

5. ஆங்கிலம் படித்தால் உலகமெங்கும் வேலை கிடைக்கும் என்பதும் தவறு. கடந்த சூன் மாதக் கணக்கு பிரிட்டனில் வேலை இல்லாதோர் 7.8% (25.1 இலக்கம் பேர்) அமெரிக்காவில் 14% (11.8 இலக்கம் பேர்) ஆஸ்திரேலியாவில் 5.7%, கனடாவில் 7.1%. ஆங்கிலம் கற்றால் உலகம் முழுவதும், இந்தி கற்றால் இந்தியா முழுவதும் பயன்படும், வேலை கிடைக்கும் என்பது ஒரு மயக்கமே.

6. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் ஆங்கில வழியில் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது தற்காலிகமானது. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிக்க மட்டுமே பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற எல்லாப் பாடங்களையும் ஆங்கில மொழியில் தரமாகக் கற்றுத்தர முடியாது. இதனால் விரக்தி அடையும் பெற்றோர்கள் மீண்டும் கட்டணப் பள்ளிகளையே நாடுவர்.

7. ஆசிரியர் அமைப்பு ஆங்கில வழிக் கல்விக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததும், உற்சாகம் பெற்றுள்ளதும் வடிந்து விடும். ஏனெனில் இப்போதுள்ள ஆசிரியர் மாணவர் விகிதத்தாலும் ஆங்கில மொழி வழிக் கற்பித்தலில் பயிற்சி இல்லாததாலும், அடிப்படைக் கட்டமைப்புக் குறைபாடுகளாலும் தரமான கல்வியைத் தர முடியாமல் போகும்போது ஏமாற்றமே இவர்களுக்கு மிஞ்சும்.

8. ஆங்காங்கே சிறிய அளவில் சிறைகளைப் போன்ற அறைகளிலும், வீடுகளிலும் நடைபெற்று வந்த தனியார் மழலையர், தொடக்கப் பள்ளிகள் பல இவ்வாண்டு மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதைப் போலவே அரசுப் பள்ளிகளும் மூடப்படும் சூழ்நிலை உருவாகும். அது ஏற்கனவே நிலைப்பட்டுவிட்ட மிகப் பெரும் தனியார் பள்ளிகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற முதல்வர் அம்மாவின் திட்டம் நடைமுறையாகவே உதவும்.

9. பொருளாதாரத்தில் நலிந்துள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றவர்கள் பயிலும் ஆங்கில வழிக் கல்வியைப் பயில கிடைத்துள்ள வாய்ப்பு என்பது கானல் நீரே. ஏனெனில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் அரசுப் பள்ளிகள் வெற்றிகரமாக இயங்க முடியாது.

10. உயர் கல்வியில் குறிப்பாக மருத்துவம், பொறி யியல் கல்வியைத் தமிழில் கொண்டுவராமல் ஆரம்பக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துவது அர்த்தமற்றது என்பது கவனிக் கத்தக்கது. எனவே அனைத்து நிலையிலும் கல்வி தாய்மொழியிலேயே அளிக்கப்படும். அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக ஆக்கப்படும் என்ற கொள்கை முடிவைத் தமிழக அரசு ஏற்கச் செய்வது தேவை.

11. பயிற்று மொழியையும், பள்ளியையும் தேர்ந்தெடுப்பது தனி மனித உரிமை என்கின்றனர் ஆங்கில மோகம் கொண்டவர்களும், மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகளும். இதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் இது ஒட்டுமொத்த சமூகப் பார்வையில் சரியல்ல என்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவராக இருந்த முகுந் துபேயின் அனுபவம் சான்றாகும். இவர் ஒரு கட்டத்தில் நியூயார்க் நகரில் பணியமர்த்தப்பட்டபோது தமது பிள்ளைகளை அருகமைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பள்ளி உள்ள பகுதி குற்றச் செயல்கள் நிறைந்ததாகவும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும் இருந்தது. இதனால் வேறு பள்ளியில் சேர்க்க எண்ணினாலும் இயலாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் அங்குள்ள விதிமுறைகள்தாம். "சமூக சமத்துவத்தை உறுதி செய்ய நேரிடும்போது தனி மனித உரிமைகள் அதற்கு இடையூறாக இருக்க முடியாது என்பதே அந்த விதிமுறைகளின் அடிப்படை நோக்கம் என்றார் துபே. இந்தக் கருத்து இங்கு பேசப்படும் தனி மனித உரிமைகளுக்கும் பொருந்தும் என்பதை மனம் கொள்ள வேண்டும்.

12. தமிழ் அமைப்புகள் நடத்தும் போராட்டங் களுக்குப் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. தமது இருப்பைத் தெரிவிக்கும் செயல்பாடாகவே அவை உள்ளன என்ற திறனாய்வு உண்மை நிலையை எதிரொலிக்கிறது. அறிவார்ந்த அணுகுமுறையின்றி, உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இவை கையாளப் படுகின்றன. எந்த மக்களை அணி திரட்ட வேண்டுமோ அந்த மக்களின் ஆங்கில மொழி வழிக் கல்விக்கு ஆதரவாகத் தகவமைக்கப்பட்ட மனங்களை வெல்லாமல் இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற மாட்டா!

1990களுக்குப் பிறகான தீவிர உலகமயம், தனியார் மய காலத்தில் பொருளாதாரம், தகவல் தொடர்பு நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்கு ஒற்றை மொழியை, ஒற்றை அரசை முன்வைக்கும் ஒருமைப்போக்கு தொடர்கிறது. தாய்மொழி வழிக் கல்விக்கான இயக்கம் ஒற்றை மொழியை முன்வைக்கும் கார்ப்பரேட் அமைப்புகளை எதிர்த்த இயக்கமாக, தனியார் மயத்தை ஆதரிக்கும் அரசுகளை எதிர்த்த இயக்கமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

கலைகளும், இலக்கியங்களும் தாய்மொழி வழிக் கல்விக்கான போராட்டங்களில் கருவிகளாக உருவாக்கப்பட வேண்டும். மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். சிற்றூர்கள்தோறும் நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து, வீதி நாடகங்கள், கதை யாடல்கள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கலை இரவுகள் முதலான கலை இலக்கிய வடிவங் களில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலத்திற்கு ஆதரவாகத் தகவமைக்கப்பட்ட மக்களின் மனங்களைத் தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாகத் தகவமைக்க வேண்டும். இது மிகவும் கடினமான பணி. ஆனாலும் இதைத்தவிர வேறு வழி இல்லை.

"காலனியவாதிகள் ஒரு சமூகத்தை அடிமைப் படுத்த வன்முறையை மட்டும் சார்ந்து நில்லாமல் மொழி மற்றும் பண்பாட்டுத் தளத்தில் அடிமைப் போக்கைப் பயிரிடுவதின் மூலமே வெற்றி பெற்றனர்'' என்றார் இத்தாலி நாட்டின் அந்தோனியோ கிராம்சி.

இன்றைய இந்திய, தமிழக ஆட்சியாளர்களின் உலகமயம், தனியார் மயம், தாராள மயம் என்ற மக்களுக்கும் எதிரான கொள்கைகளை முறியடிக்கும் இயக்கமாகத் தமிழ்மொழி வழிக் கல்வி இயக்கத்தை ஆக்குவோம்.

- செ.நடேசன், மேனாள் பொதுச் செயலர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

Pin It