தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பாக 7.9.2014 அன்று சென்னையில் நடைபெறும் தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வேண்டுமாய்ச் சென்னை புழல் நடுவண் சிறையிலிருந்து தமிழ்நாடு விடுதலைப் படை தோழர்களாகிய நாங்கள் எங்களது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மடங்கல் 15 (செபுதம்பர் 1) தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில், பெரும் வீழ்ச்சியும், எழுச்சியும் உருவாகிய நாள். ஏனெனில் அன்றுதான் தோழர் தமிழரசன் அவர்களும், தோழர்கள் தருமலிங்கம், அன்பழகன், செகநாதன், பழனிவேல் முதலானோர் தமிழ்த் தேச விடுதலைக்கான வித்துகளாக விதைக்கப்பட்ட நாள்.

தமிழ் இனத்திற்காக, மொழிக்காக, மண்ணிற்காக, உரிமைகளுக்காக, எண்ணற்ற அறிஞர்களும், தலைவர்களும், பேசியும், எழுதியும், போராடியும் சிறை சென்றும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து உயிர் ஈகம் செய்துள்ளதை நாம் நன்றியுணர்வோடும், பெருமிதத்தோடும் நினைவுகூரும் இந்நாளில் அவர்கள் அனைவரும் விரும்பிய, எதிர் நோக்கிய அந்த இலட்சியக் கனவை அடைவதற்கு வரலாற்று அடிப்படையில் அறிவியல் வழியில் சரியானதொரு அரசியலை, நடைமுறைத் திட்டங்களை வகுத்து அதற்குத் தலைமையேற்று வழிநடத்திட முதன்மையான களப் போராளியாகத் தம்மையே ஈகம் செய்த முனைமழுங்கா வீரனாகத் தமிழ்த் தேசிய விடுதலைவானின் விடிவெள்ளியாகத் திகழ்கிறார் தோழர் தமிழரசன் அவர்கள். அவருக்கும், அவருடன் களமாடிய தமிழ்த் தேசியப் போராளிகள் அனைவருக்கும் எங்களின் புரட்சிகரமான வீரவணக்கத்தை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக மாந்த இன வரலாற்றில், தமிழ் இனத்தின் மொழியின் தோற்றத்தை அறுதியிட்டுக் கூற இயலாத அளவிற்கு மிகவும் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல, மிகப் பெரிய விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறு எந்த இனத்திற்கும் இல்லாத பல சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டது. தமிழ் மொழி, கலை, இலக்கியம், இலக்கணம், அறிவியல், மெய்யியல், மருத்துவம், வானியல், போர் மற்றும் தற்காப்புக் கலைகள், அறம் சார்ந்த குடும்ப வாழ்க்கை முறைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மாந்த இனத்திற்கே, முன்னோடிகளாகச் சிறந்து விளங்கிய நாம், இன்று அவலமானதொரு சூழலில் சிக்கியுள்ளதோடு, இக்கட்டான தருணத்தில் இருக்கிறோம் என்பதே இன்றைய உண்மை நிலையாகும்.

இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகப் பிற இனத்தவராலும், மொழியினராலும், நாட்டவராலும் அடிமைப்படுத்தப்பட்டும் சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் பொருளியல் வழியாகவும் அரசியல் வழியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டதால் சிந்தனை வழியில் உளவியல் வழியில் தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக மானம், வீரம், அநீதிக்கு எதிராகப் போராடுதல், ஒன்றுபடுதல் போன்ற தன்மைகள் அற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

தமிழர்கள் இன்று சாதி, மதம், கடவுள் வழிபாடு, தொலைக்காட்சி திரைப்பட மாயைகளிலும், சாறாயம், புகை, குட்கா போன்ற போதைகளிலும், சாதிக் கட்சிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களிடத்தும், திரைப்பட கதாநாயகர் களிடத்தும் தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு சீரழிந்து வருகின்றனர்.

இனப் பெருமைகளைப் பேசி, இன வாதத்தில் மூழ்கிக் கிடக்காமல் உண்மையான தமிழ் இனத்தின் வரலாற்றையும், தொன்மைகளையும் புரிந்து கொண்டு, அடுத்தக் கட்டமாக நாம் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்களை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்துவதே நம் முன்னுள்ள மிகப் பெரும் வரலாற்றுக் கடமையாகும்.

நாம் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும், நமது கண்முன்னே, நமது இனம், மொழி பண்பாடு சிதைக்கப்படுவதோடு நமது கனிம வளம், இயற்கை வாழ்வாதாரங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. நமது உரிமைகள் மறுக்கப்படுவதோடு ஒடுக்கவும் படுகிறது. ஈழத் தமிழர் சிக்கல் தொடங்கி, கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு, நரிமணம், கூடங்குளம், கல்பாக்கம் மீத்தேன், கெய்ல், நியூட்ரினோ போன்ற மக்கள் அழிவுத் திட்டங்களும், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்டோர் எனப் பல்வேறு சிக்கல்கள் தமிழகத்தில் நிலவுகின்றன. அனைத்துச் சிக்கல்களையும், முழுமையாகத் தீர்க்க வேண்டுமானால், பாட்டாளி வகுப்புத் தலைமையிலான முழுமையானதொரு வகுப்புப் புரட்சியின் மூலம் இறையாண்மை பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் குடியரசை நிறுவுவதன் வாயிலாகவே அனைத்துச் சிக்கல்களுக்கும் நிலையான ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும். அதைத் தவிர வேறு வழியேதுமில்லை என்பதுதான் எமது தெளிவான முடிவாகும்.

அந்த நீண்ட கால கடின இலக்கை அடைவதற்கு மிகப் பெரிய மக்கள் போராட்டமும், அளப்பரிய ஈகமும் செய்ய வேண்டியுள்ளது. தோழர் மாவோ குறிப்பிட்டது போல், "புரட்சி என்பது மாலை நேர கேளிக்கை விருந்தல்ல; மாறாக இன்னல்கள் நிறைந்த செங்குத்தான மலைப்பாதையில் பயணிப்பது போன்ற கடினமான ஒரு செயலாகும்.'

புரட்சிக்காகவும், விடுதலைக்காகவும் போராடும் நாம் ஒரு புறம் மக்களை அணி திரட்டுவதும், பல்வேறு அமைப்புகளை ஒரு முன்னணியின் கீழ் ஒன்றுபடுத்தும் அதே நேரத்தில், எதிரிக்கு எதிரான உறுதியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதும் மிக மிகத் தேவையானது. அந்தப் போராட்டத்தில் நண்பர்களை எதிரிகளை, இரண்டகர்களை, பிழைப்பு வாதிகளைத் தெளிவாக இனம் கண்டு அதற்கேற்ப சரியான ஒரு முடிவை மேற்கொள்ளவில்லையென்றால் நமது இலக்கை அடைய முடியாததோடு வரலாற்றில் பிழையைச் செய்தவர்களாகி விடுவோம் என்பதை இத்தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழ்த்தேசிய விடுதலை எய்த இறுதி இலக்கை, அடைவதற்கு முன்பு காலம், சூழல், தேவை, மக்களின் எண்ண ஓட்டம், முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு நமது நடைமுறையில் புதிய உத்திகளைக் கையாள்வது சரியான ஒரு முடிவாக இருக்கும் என்று நம்புகின்றோம். அரசு இயந்திரமும், அரசியல்வாதிகளும் நமது மக்களை அடிமை மனநிலையில் ஒருவித மயக்க நிலையில் தன்னலக் காரர்களாக, கோழைகளாக, உருவாக்கி வைத்துள்ள தோடு அநீதிக்கெதிராக ஆட்சியர்களுக்கெதிராக அணி திரண்டு போராடும் தன்மையை மழுங்கடித்து வைத்துள்ளனர்.

மக்கள் தங்களது சிக்கல்கள் அனைத்தும் தீர்வதற்கான ஒரே வழி சரியான, உண்மையான, தங்களுக்காகப் பாடுபடுகின்ற ஒரு சிறந்த தலைவனின் ஆட்சியதிகாரத்தின் கீழ் அமர்ந்து விட்டால் போதும். அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விடும் என்று வர்க்க சமூகத்தின் அரசியல் பின்னணி தெரியாத மயக்க நிலையில் உள்ளனர்.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் குறித்தும் வல்லரசிய ஆளுமை மற்றும் சுரண்டல், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கொள்ளை, இந்தியத் துணைக் கண்ட தரகு முதலாளிகளின் நிலை, தில்லி அதிகாரத்தின் அத்துமீறல்கள், ஆட்சியர்களின் அடக்குமுறைகள், அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்கள், அரசு எந்திரத்தின் கொடூரங்கள் குறித்தும், அதற்கான மாற்று வடிவங்களை, செயல் திட்டங்கள் குறித்தும் பல்வேறு புரட்சிகர அமைப்புகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், எழுதியும், பேசியும், செயல்பட்டும் வந்திருந்த போதிலும் பெருமளவில் மக்களின் ஆதரவும், அணி திரட்டலும் இதுவரை ஏற்படவில்லை என்பதும், மேற்கூறியவர்களுக்கு எதிராக மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இயலாததற்கு இரு தரப்பினரும் காரணமாக உள்ளனர்.

ஆளும் அதிகார வகுப்பினர், மக்களைத் தமக்கெதிராக அணிதிரண்டு போராடாதவாறு சட்டம், காவல்துறை, பண்பாட்டுச் சீரழிவு மற்றும் பல்வேறு அடக்குமுறை வாயிலாகவும், மறுபுறம், சாதி, மதம், கடவுள் வழிபாடு, திரைப்படம், மது, காமம் போன்ற போதையில் மக்களை மயங்கிக் கிடக்கவும் வைத்துள்ளனர்.

நம்மை ஆள்கிற இன்றைய அரசானது, நீதி, நிர்வாகம், காவல், பொருளாதாரம், சமூக ஒழுங்கு போன்ற அனைத்துத் தளங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும் லஞ்சம், ஊழல், அதிகார அத்துமீறல், தமிழின விரோதப் போக்கு, போன்ற தன்மைகள் தலைவிரித்தாடுகின்றன. சமூகம் சார்ந்த, தனிமை சார்ந்த உரிமைகளும் நலன்களும் நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, மறுக்கப்பட்டு வருகின்றது.

நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் இனத்திற்கும், பொதுமக்களுக்கும் பகைவர்களாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் இன்று தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றான சரியான தலைமையை எதிர்பார்ப்பதோடு புதியதோர் மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய நிலையில் தமிழ் இனத்திற்காக, மொழிக்காக, மக்களுக்காகப் பணியாற்றக் கூடிய தன்னலமில்லாத உண்மையான ஓர் அரசியல் கட்சி இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுகிறது.

தமிழகத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில், சரியான ஓர் இயக்கமோ, தலைமையோ இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுவது எந்த அளவு உண்மையோ, அதேபோன்று தமிழக அரசியல் சூழலில் தேச நலன், இன நலன், மொழி நலன் சார்ந்தை உண்மையான ஓர் அரசியல் கட்சி இல்லாத ஒரு வெற்றிடமும் நிலவுகிறது என்பதும் உண்மையே.

குறிக்கோள் நோக்கம் கொண்ட அரசியல் நடவடிக்கைகளும், அரசியல் தலைவர்களும் தேவையாக உள்ளதோடு, ஊழலற்ற, பழிவாங்கும் தன்மையற்ற, மன முதிர்ச்சி கொண்ட, மக்களின் நலனையும் தேச நலனிலும், இன நலனிலும் அக்கறை கொண்ட உறுதியும், ஆற்றலும் கொண்ட அரசியல் தலைவர்களும், அமைப்புகளும், இன்றைய தேவையாக உள்ளனர். இந்த இரண்டு கடமைகளும் தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்ற, நேசிக்கின்ற, ஒவ்வொரு தமிழர்களின் முன் நிறைவேற்றப்பட வேண்டிய வரலாற்றுக் கடமையாக உள்ளது

என்பதை இத்தருணத்தில் அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

* ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!

* புதியதோர் தமிழகத்தைப் படைத்திட அணியமாவோம்!

Pin It