மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் இருந்து சுமார் ஆறுகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வில்லூர் கிராமம். தேவர், பிள்ளைமார், செட்டியார், பறையர், பள்ளர் உள்ளிட்டு சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும், காவல் நிலையம், கோவில்கள், ஊரணிகள், நெருக்கமான வீடுகளும், விசாலமான பாதைகளையும் கொண்ட பெரிய கிராமமாகவே உள்ளது.

இவ்வூரில் உள்ள 80% பேர் தேவர் சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள் நூறு குடும்பத்தினரே உள்ளனர்.

தீண்டாமை, சாதிய வன்கொடுமைகளை அதிக மாகக் கடைப்பிடிக்கும் மக்களாகவே அங்கு பெரும்பான்மையினராக உள்ள தேவர் சாதியினர் உள்ளனர்.

அதன்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி தங்கப் பாண்டியன் என்கிற தலித் இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு வழியாகச் சென்றார் என்பதற்காக, அவரை வழிமறித்து வில்லூர் ஊராட்சித் தலைவர் சுப்பு லெட்சுமியின் மகன் சக்திவேல் உள்ளிட்டு ஐந்து ஆதிக்கச் சாதி இளைஞர்கள் சேர்ந்து கொலைவெறித் தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும் தங்கபாண்டியனின் இருசக்கர வாகனத்தையும் பறித்து வைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த தலித் இளைஞர் தங்கப்பாண்டியன் காவல் துறையினரிடம் புகார் கொடுத்து முறையிட்டுள்ளார். இது விசயமாகக் காவல் துறையினர் மே 1ந் தேதி குற்றத்தில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி இளைஞர்கள் ஐந்து பேரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் மீட்டு தலித் இளைஞரிடம் கொடுத்துள்ளனர்.

இந்நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி வெறியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கத்தி, அரிவாள், கம்பு, இரும்புக் கம்பி போன்ற கொடூர ஆயுதங்களுடன் தங்கப் பாண்டியன் வீட்டை முற்றுகையிட்டு, கொலை வெறியோடு தாக்கத் தொடங்கியுள்ளனர்.

 தங்கப்பாண்டியன், அவரது அண்ணன் முருகன், அண்ணி பழனியம்மாள், அவர்களது குழந்தைகள் உள்ளிட்டவர்கள் தப்பிப் பிழைத்து வீட்டின் உள் பக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து மின்சாரத்தைக் கூட அணைத்து விட்டு ஒளிந்து கொண்டுள்ளனர். மேலும் இருளன் என்பவரின் வீட்டையும் தாக்கி, அங்கிருந்த இரண்டு மிதிவண்டி களையும் சேதப்படுத்தி அருகிலிருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளனர். இத்தாக்குதலில் முருகன், தங்கப் பாண்டியனின் வீடும் கடுமையாகச் சேதமாகியுள்ளது.

இப்பிரச்சினையின் தீவிரத்தையும், கொடுமையை யும் அறிந்த காவல் துறை கண்காணிப்பாளர், தாசில்தார், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வல்லூருக்குச் சென்று பார்வை யிட்டு அமைதிப்படுத்த முயன்ற நிலையில், மேற்படி அதிகாரிகளையும் சாதி வெறியர்கள் பெருங்கூட்டமாக வந்து தாக்கியுள்ளனர்.

மேலும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி யுள்ளனர். அதன் பின்னரே காவல் துறையினர் கலவரம் செய்தவர்களின் மீது தடியடியும், துப்பாக்கியால் சுட்டும் வழக்குப் பதிந்து கைது செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் காவல் துறையினர் சிலருக்கு இரத்தக் காயமும், கலவரத்தில் ஈடுபட்ட வர்களில் இருவருக்கு துப்பாக்கி குண்டு காயமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் காவல் துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் நிலைமை எதிர்கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.

வில்லூரில் நடந்த சிக்கல் குறித்து ஆய்வுக் குழுவினர் தேவர் சாதியைச் சேர்ந்த சிலரிடம், வினவியபோது, தாழ்த்தப்ட்டவர்கள் எப்போதும் எங்கள் தெருக்களின் வழியே மிதிவண்டி, மோட்டார் வாகனங்களில், ஏறிச் செல்லக் கூடாதென்றும், உணவகம், தேநீர்க் கடைகளில் தங்களுக்குச் சமமாக அமரவும் தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்கள்.

இதுபோன்ற நடைமுறைகளை தாங்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருவதாகவும், இதனை தலித் இளைஞர் தங்கப்பாண்டியன் மீறியதால்தான் அவரைத் தாக்கியதாகவும், இதற்காக காவல் துறையினரின் நடவடிக்கைகள் தவறு என்றும் கூறினார்கள். இருபத்தோராம் நூற்றண்டில் கூட மனிதத் தன்மை யற்ற ஆதிக்க வெறிக் கருத்தியலை ஆய்வுக் குழுவினரால் காண முடிந்தது.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஆய்வுக் குழுவினர் பேசியபோது, தீண்டாமைக் கொடுமைகள், சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து ஆதிக்கச் சாதியினரால் தங்களின் மீது திணிக்கப்படுவதாகவும், அடிமை வேலைகள் வற்புறுத்தப்படுவதாகவும் கூறினர். கர்ப்பிணிப் பெண்களையும் நோய்வாய்ப்பட்டவர் களையும், முதியோர்களையும் கூட வாகனங்களில் வில்லூரின் பொதுப் பாதைகளின் வழியே செல்வதற்கு ஆதிக்கச் சாதியினர் விடுவதில்லை என்றும், இன்றைய சூழலில் காவல் துறையினரின் பாதுகாப்பு இல்லை யெனில் தாங்கள் அனைவரும் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடுமென்றும், இயலாமையை மன வேதனையுடன் கூறினார்கள்.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களில் எவரேனும் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறி விடக் கூடாது என்பதிலும் சாதி வெறியர்களின் வெறியாக உள்ளது. உதாரணமாக கிராம நிர்வாக அதிகாரியாகச் செயலாற்றும் முனியப்பன் கூட தலித் என்பதற்காக வாகனத்தில் ஏறிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

 இதுபோன்ற சாதியக் கட்டுப்பாடுகளை, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள தங்கப்பாண்டியன் ஏதேச்சையாக மீறியதால்தான் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்தனர். இதேபோன்று வில்லூருக்குப் பக்கத்திலிருக்கும் ஊர்களிலும் குறிப்பாக உவரி என்கிற கிராமத்திலும் சாதிய வன்கொடுமைகள், தீண்டாமைக் கொடுமை களை தலித் மக்களின் மீது மேற்கொள்வதாகவும் கூறினர். இக் கூற்றுகள் அனைத்தும் ஆணித்தரமாக உண்மையாகவே ஆய்வுக் குழுவினருக்குப் பட்டது.

மேலும் ஆய்வுக் குழுவினர் காவல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, இப்பகுதியில் வில்லூரில் மட்டுமே இதுபோன்ற கொடுமைகள், சட்ட மீறல்கள் நடப்பதாகவும், ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் அனுமதிக்க மாட்டோம். மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

வில்லூர் சிக்கல் குறித்த கள ஆய்வுக் குழுவின் முடிவுகள் மற்றும் கோரிக்கைகள்:

1.     சாதிய தீண்டாமைக் கொடுஞ் செயல்களில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்களின் மீது சட்டப்படி சரியான நடவடிக்கை எடுத்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், தாசில்தார், கோட்டாட்சியர், உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் துணிச்சலான, நேர்மையான நடவடிக்கைகளை ஆய்வுக்குழு பாராட்டுகிறது.

2.     வில்லூர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு தொடர்ச்சியாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தலித் மக்கள் தங்களின் தற்காப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என ஆய்வுக்குழு கோருகிறது.

3.     தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் சுடு காட்டுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் வில்லூர் பொதுப் பாதை களில் தலித் மக்கள் சுதந்திரமாகச் சென்றுவர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனக்கோருகிறது.

4.     வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகளில் வாழும் தலித் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் எனவும், தீண்டாமை மற்றும் வன்கொடுமை செயல்களில் ஈடுபடும் சாதி வெறியர்களுக்கு அரசின் அனைத்துச் சலுகைகளையும் இரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

5.     வன்செயல்களில் ஈடுபடும் சாதி வெறியர்களை கண்டறிந்து, புரட்சிகர, முற்போக்குக் கருத்து களின் வழி சிறப்பு வகுப்புக்கள் நடத்தி அவர்களின் காட்டுமிராண்டித்தனம் மாறுவதற்கு அரசு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுக் குழுவில் த.ம.உ.க. ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பா.புகழேந்தி, பொருளாளர் வழக்கறிஞர் செம்மணி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், பாண்டியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் விடுதலைச் செல்வன், தேனி மாவட்டச் செயலர் தமிழ்கனல், த.ஒ.வி.இ. தோழர் இளையராசா ஆகியோர் பங்கேற்றனர்.

Pin It