தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் படிக்கும்போது பெண்களின் மீது உலகத்தில் வேறெந்தத் தலைவரும் இவ்வளவு அக்கறை எடுத்துப், பெண் விடுதலைக்கு முனைப்புடன் பாடுபட்டிருப்பார்களோ என்று நினைக்குமளவுக்கு வியப்யும், ஆர்வமும் நம்முன் உருவாகின்றன.
தந்தை பெரியார் என்றாலே கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமே பெரும்பான்மையோருக்கு நினைவு வரும். ஆனால் பெண்ணுரிமை போன்று பல்வேறு சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை அவர் மிகவும் எதார்த்தமாகவும் நடைமுறைகளுடன் ஒப்பிட்டும், தெளிவாகவும் எடுத்துரைத்ததைப் படித்தாலே அவரின் மனிதநேயம் புலப்பட்டு அனைவரையும் அவர் பால் ஈர்க்கும்.
பெண்ணின் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மனித சமுதாயம் மக்களுடன் கூடி வாழுகிற சமுதாயமே தவிர ஆளுக்கொரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டில் பூட்டி அடைத்து வைத்துக் கொள்கிற சமுதாயமல்ல'' என்கிற உணர்ச்சி பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதிக ஒற்றுமையும், காதலும் உள்ள புறாக்களும், காடைகளும், மைனாக்களும் ஜோடி ஜோடியாய் வாழ்கின்றனவென்றாலும், தங்கள் ஜோடி வாழ்க்கை தவறி வாழ்கின்றதில்லை. என்றாலும் மற்ற எல்லா நேரங்களிலும் எல்லாப் புறாக்களுடனும், காடைகளுடனும், மைனாக்களுடனும் கூட்டமாக கூடி வாழ்கின்றன. இந்தக் கூட்டு வாழ்க்கை உணர்ச்சி மனிதனுக்கும் வேண்டும். ஒருவரையொருவர் ஆசைப்பட்டு நேசங் கொண்டவர்கள், அந்த நேசத்திற்கும் நாணயத்திற்கும் பங்கமில்லாமல் வாழ்வதுதான் வீரம், மானம், நாணயம் என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டு பெண்களைக் கூண்டில் அடைத்து வைப்பது என்பது பெண்களுக்கு மானக்கேடு என்பதோடு ஆண்களுக்கும் இழிவு என்றும் ஆதங்கத்தோடு கூறுகிறார்.
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஒரு ஆணின் கண் அழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் சிந்தித்துப் பாருங்கள் என்று 1946ஆம் ஆண்டில் ஒரு திருமணவிழாவில் பேசுகிறார். பெண்ணின் படிப்பு கூட, நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு விளம்பரமாய்ப் பயன்பட்ட அளவிற்கு அவர்களை முன்னேற்றப் பயன்படவில்லை என்று பெண்ணை பி.ஏ. படிக்கவைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும் பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடும், அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே! இது தேசிய குற்றமாகாதா? என்றும் வினவுகிறார்.
கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் ஆகிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்யாமல் குறைந்த செலவில், குறுகிய நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
பெண்களுக்கான வேலை வாய்ப்பு பற்றி
பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றித் தன் எண்ணங்களைக் குறிப்பிடும் போது ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லா தொண்டுகளையும் பெண்களால் பார்க்க முடியும், உறுதியாய் முடியும் என்கிறார். 1946 ஆம் ஆண்டே பெண்களுக்குப் போலீஸ் வேலை கொடுக்கவேண்டும் என்று வாதாடிக் கேட்டிருக்கிறார். போலீசாருக்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்களென்றால், அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல, அவர்கள் கையில் உள்ள குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியை கொடுத்தால் வீரன் என்று சொல்லப்படுபவன் கூட அவரைக்கண்டு ஓட்டம் பிடிப்பான் என்பது நிச்சயம். பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் சில ஆண்டுகள் வரை அதிசயமாகத் தோன்றினாலும் நாளடைவில் இயற்கைக் காட்சியாகவே போய்விடும் என்று அன்று கூறியதை நனவாக நாம் இன்று கண்களால் பார்க்கிறோம்.
அரசு வேலைவாய்ப்புகள் அனைத்திலும் பெண்களுக்குரிய பங்கைத் தரவேண்டும். நகை பீரோக்களாகவும் உடை ஸ்டாண்டாகவும் இருக்கும் காலம் போக வேண்டும் என்கிறார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு மூன்று காரியங்கள் உடனே செய்யப்பட வேண்டும்.
முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும்.
இரண்டாவது நகைப்பேயை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும்.
மூன்றாவது இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டு துண்டாக நறுக்கிவிட வேண்டும்.
பெண்கள் எந்த வேலைக்காவது தகுதியற்றவர்கள் என்று கூறப்படுவதை உலக அனுபவமுடைய எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் உத்தியோகங்களிலே அமர்ந்து விடுவார்களேயானால் இம்மூன்று தேவைகளும் தாமாகவே படிப்படியாக நிறைவேறிவிடும். சமைப்பது, பிள்ளை வளர்ப்பது, குடும்பத்தை நடத்துவது ஆகிய மூன்று பொறுப்புகளும் பெண்களைச் சார்ந்தவைகளே என்ற மனப்பான்மையே ஒழிய வேண்டும். கூட்டுச் சமையல் முறை, பிள்ளை வளர்ப்பு நிலையம் போன்றவற்றால் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முழுநேரம் பணியாற்ற இயலும்.
குடும்பக் கட்டுப்பாடு பற்றிய பெரியாரின் கருத்துக்களைப் பார்ப்போம்
பிள்ளை பெறுவதில் கட்டுப்பாடு ஏன் வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.
முதலாவது தாய்மார்களின் உடல்நிலை
இரண்டாவது குடும்பத்தின் நிலைமை
மூன்றாவது நாட்டின் நிலைமை
ஒவ்வொரு பிள்ளை பேறுக்கும் தாயின் உடல்நிலை கெடுகிறது. பிள்ளைப்பேறுச் சாக்காட்டில் இந்தியா முன்னணியில் இருப்பது யாவரும் அறிந்ததே, குடும்பத்தி’ல அதன் வருமான சக்திக்குமேல் பிள்ளைகள் பெருகினால், அவர்களைச் சரிவரப் படிக்க வைக்க முடியாமல், வளர்க்க முடியாமல், அவர்களுக்குப் போதிய உணவின்றிப் பிச்சையெடுத்துக் கொண்டும், சோம்பேறிகளாகி நாளடைவில் குற்றவாளிகளாகித் தங்களுக்கும் சமூகத்திற்கும் கேடு செய்கின்றனர். மக்கள் பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க முடியாது என்பதால் மூன்று குழந்தை உள்ள தாய்மார்களுக்கு இலவச கர்ப்பத்தடைச் சிகிச்சை செய்யப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்றும், கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆபீசில் மாத்திரை விற்கப் போகிறார்கள் என்று 1950 ஆம் ஆண்டே எழுதியிருக்கிறார். அதைப் பின்னால் அரசு அறிவித்ததை நாமறிவோம்.
வரதட்சணைக் கொடுமை பற்றிக் குறிப்பிடும்போது
சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே வளரவேண்டும். பிறர் சொத்துக்கோ, சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைகூட அவர்களுக்குப் பிறகுதான் அடையவேண்டுமே தவிர சம்பாதிக்கக்கூடிய வயதிலும் கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருதவேண்டுமென்றால் மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக் கூடாது.
புதிய சட்டத்தின்படி பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் பங்குண்டு என்று ஆகிவிட்டது. ஆதலால் வசதியுள்ள பெற்றோரின் சொத்தில் விகிதாசாரப்படி பெண்ணுக்கும் வந்தே தீரும். இதைவிட்டு ஒரு இளைஞன் பட்டதாரியாகி விட்டதற்காக அல்லது வேலையிலிருப்பதற்காக அவனுக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணை அவன் கழுத்தில் கட்டி அப்பெண்ணின் மூலம் கூடுமான அளவு சொத்தையும் சுரண்டலாம் என்று பெற்றோர்கள் திட்டமிடுவது மனிதத்தன்மையற்ற செய்கையாகும். இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும், நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர்.
இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா?
நல்ல காரியம் செய்வதற்குத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும்; வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்கு செக்குமாடுகளே போதும். தமிழ்நாடு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும், வரதட்சணையை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
பெண்ணுக்குச் சொத்துரிமை பற்றிக் குறிப்பிடும்போது,
தகப்பன் இறந்து விட்டால் அந்தச் சொத்து ஆணுக்குத்தான் சேர வேண்டும் பெண்ணுக்கு இல்லை என்ற நிலை தொடர்ந்திருந்தால் ஆண் வரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் சமுதாயத்திலேய வேறு வசதி இல்லாமல், உரிமை இல்லாமல், அடிமை போல் நடத்தப்படுகிறார்கள்.
பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விட பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கிற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையே தங்களை ஆண்களுக்க அடிமையாக கடவுள் படைத்திருப்பதற்கு அறிகுறியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.எப்படியெனில் பெண் இல்லாமலேயே ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால் ஆண் துணை இல்லாமல் பெண் வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறனர். அவர்கள் அப்படிக் கருதுவற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைப் பேறுத் தொல்லை ஒன்றிருப்பதால், தாங்களே ஆண்கள் இல்லாமல் வாழமுடியும் என்பதை ருசுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். இங்கு பிறர் உதவியின் காரணமாக ஆணாதிக்கம் ஏற்பட்டு விடுகிறது. எனவே, உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும் என்று கூறுகிறார்.
இவ்வாறு பெண்ணின் விடுதலைக்காக எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து முழங்கிய காரணத்தால் அவரின் பல புரட்சிகரமான இக்கருத்துக்கள் இன்று செயல் வடிவம் பெற்று வருகின்றன. இன்று பெண் கல்வியில் முன்னணியில் நின்று பெரியார் சொன்னது போல் சாதிக்க இயலும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். பெண் போலீஸ் என்று மாவட்டந்தோறும் மகளிர் காவல் நிலையங்கள் வந்து விட்டன. இராணுவத்திலும், விமானப்படையிலும், கடற்படையிலும் பெண்கள் சாதனை புரிகின்றனர்.
குடும்பக் கட்டுப்பாட்டின் நன்மையையும் உணர்ந்து அதையும் பெருமளவில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். தமிழகத்தில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வந்து விட்டது. கூட்டுறவுகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 30 விழுக்காடு பதவிகள் வழங்கப்பட்டு விட்டன. இனி நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டு எங்கும், எதிலும் தங்களுக்கு உரிய இடத்தைப் பெண்கள் பெற்றால்தான் உரிமைப் போர் நிறைவேறும்.