பஸ்சை விட்டு இறங்கியதும் இடது பக்கமாக பிரிந்த மண்ரோட்டில் சுமைதாங்கி நின்றிருந்தது. நடந்தேன். வேலிக்காட்டிலிலிருந்து ஓணான் குறுக்கே ஓடியது. டீ குடிப்பதற்கும் வழியில்லை. சட்ரஸில் ஏறி இறங்குகையில் ஒரு நிமிடம் பகீரென்றது. சுதாரித்துக் கொண்டு பார்ததால் பாம்புச் சட்டைதான் காற்றில் ஆடி என்னைப் பயமுறுத்தியிருக்கிறது. வளைவில் திரும்பியதும் பின்னால் சத்தம் வரத் திரும்பினேன். காற்றைக் கிழித்துக் கொண்டு சைக்கிள் ஒன்று வந்தது. முன்பின் தெரியாதவராக இருந்தும் சினேகபாவமாக சிரித்தார். என் உதட்டிலும் சிரிப்புத் தொற்றிக் கொண்டது. கிராமியப் பண்பாட்டு அடையாளம்.
‘சைக்கிள்ள வாங்களேன்''
‘இல்ல சார். ஓங்களுக்கு எதுக்கு செரமம்?
‘இதில் என்னா சார் செரமம். பஸ்ஸில்லாத இந்த ஊருக்கு யாரு வந்தாலும் நாங்க செய்யிற கடமதான் ஏறுங்க''
ஏறிக் கொண்டதும் கேட்டார்.
‘எங்க எறையாங்குடி போறீங்களா?''
‘இல்லீங்க வெண்மணிக்குப் போற÷ன்.''
‘அங்க யாரப் பாக்குறதுக்கு?
‘ஒரு ஜோலியாப் போறேன். ஏங் கேக்குறீங்க''
‘இல்ல. நீங்க ஒண்ணும் தப்பா நெனக்காதீங்க''
‘நா எறையாங்குடி வரைக்கும் போறேன். அப்பால நீங்க நடந்துதா போவணும்'
தான் டெல்லியில் வேலை பார்ப்பதாகவும், லீவுக்கு வந்திருப்பதாகவும் சொன்னார். என் மனசும் கபடமின்றி திறந்து கொண்டது.
‘பத்திரிகையில வேல பாக்குறேன். வெண்மணி பத்தி கத எழுதறதுக்காவ அந்த ஊர்ல சில பேர பாத்து பேசறதுக்காக போறேன்.
‘ அது பெரிய கதங்க, கூலிப் பிரச்சனையில நாப்பத்துநாலு பேர வச்சி கொளுத்துன கொடும ஊரெல்லாம் பொட பொடச்சி நாங்க கூட வந்து பாத்தம். எரியிற வீட்டிலருந்து தப்பிச்சிலாம்னு சிலபேரு தலய வெளில நீட்னப்ப தடிக்கம்பால ஆளுக அடிச்சி தீயில தள்ளுனதாகவும், சின்னக் கொழந்தய ஒரு தாய் பொழச்சிகிட்டும்னு வெளில வீசினப்ப அதயும் தூக்கி நெருப்புல போட்டு கொளுத்தினதாகவும் பேசிகிட்டாங்க பாவிக.''
‘அவன் ஒரு காமப்பேயி. அப்டிதாங்க ஒருக்கா கூத்து நடத்த வந்த ஆட்டக்கார பொம்பளய கெடுத்துட்டதால அதிர்ச்சியில மயங்கி விழுந்து செத்துட்டாளாம். ஆட்டம் பாக்கப் போனவுகள்ளாம் அடிச்சிபுடிச்சிக்கிட்டு ஓடியாந்தாகலாம். தாத்தா சொல்லிருக்காங்க'
பேசிக்கொண்டே வந்த அவர் தான் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டதும், ‘வரட்டுங்களா? ஒங்க கத புத்தகமா வந்ததும் படிக்கணும்னு ஆசையா இருக்குங்க'' என்று விட்டு சைக்கிளைத் திருப்பினார்.
நடப்பது சிரமமாயிருந்தது. குறுகலான பாதை. இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து சாய்ந்திருக்கும் கருவேல மரங்கள்.
முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை. அங்கங்கே சில நாய்கள், ஆடுகள், இவ்வளவுதான். தெற்கத்திக் கீதாரிகளின் பனைமட்டைக் குடிசைகள் சின்னச்சின்ன கவட்டைக் குச்சிகளால் தூக்கிச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன.
நின்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். தொலைவில் ஒரு ஆள் வருவது தெரிந்தது.
நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். அவரும் வேகமாகத்தான் வந்திருப்பார் போலிருக்கிறது. கிட்டே நெருங்கியதும் பேச ஆரம்பிப்பார் என்று எண்ணினேன். என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. தோளில் காவித்துணி மூடிய தவில் தொங்கிக் கொண்டிருந்தது. நாற்பது, நாற்பத்தைந்து வயதிருக்கும். மேளக்காரர்களுக்கே உரிய பம்பை கிராப். மீசை மழிக்கப்பட்ட முகத்தில் ஏதோ வித்தியாசமான உணர்வுகள். தலை கலைந்திருந்தது. பின்பக்கம் சட்டை கிழிந்து தொங்கியது.
சிறுவயதில் இந்த மாதிரி ஊருக்குள் தவில் கொண்டு வருபவர் பின்னாலேயே ஓடி அவர் வாசித்து முடிக்கிற வரை இருந்து கேட்டு ரசித்திருக்கிறேன். தவிலிலிருந்து வருகிற அந்த ‘கும்கும்’ இசை மனதை மயக்கும். அதிலேயே லயித்துப் போகிறவர்களுக்கு தான் அது புரியும்.
சித்ரா பவுர்ணமிக்கு எட்டுக்குடிக்குக் காவடி கூட்டிப் போகும் எங்கள் ஊர்க்காரர்கள் கூட போன அனுபவம் உண்டு. திருக்குவளை முனையில் நின்று கொண்டால் விடிய விடிய விதவிதமாக கலை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். சிக்கல் சிங்காரவேல் பார்ட்டி அடித்தால் அடி விண்விண்ணென்று விழும். இடது கையில் குச்சி பிடித்த மாதிரியே தெரியாது. ஏதோ குச்சி பறக்கிற மாதிரி தெரியும். அந்த வேகத்தில் குச்சி சுழன்று அடிக்கும். திருவாளப்பட்டி கலியமூர்த்தி அடிக்கிற அடியில் ஒரு லயிப்பு இருக்கும். ஆப்பரக்குடி செட்டு அடிக்கிற அடியில் தூங்குகிற எல்லாரும் எழுந்து விட கூட்டம் நெரிசலாகிவிடும்.
இரவு முழுக்க கச்சேரிகளை காவடி ஆட்டங்களைப் பார்த்து விட்டுத் தூக்கக் கலக்கத்தில் வண்டியில் வருகையில் காதுக்குள் ‘டும்டும்'மென்ற தவில் அடிக்கிற ஓசை கேட்கும்.
அதுபோலவே பலவிதமாக வீட்டில் பலகையில் அடித்துப் பார்த்து சந்தோஷப்படும் மனது. காலம் பூரா காசுக்கும், பணத்துக்கும் தாளம் போடுறோமே வூடான வூட்ல தாளம் போடலாமா? என்கிற ஏச்சு வரும்.
அமைதி எங்கும் வியாபித்திருந்தது.
‘எங்க கச்சேரிக்குப் போயிட்டு வர்றீங்க போலிருக்கு?
‘அட அத ஏங்கேக்குறீங்க?
கச்சேரி பொல்லாத கச்சேரி.
நெனப்பு தெரிஞ்ச நாள்ளருந்து தொழில கையில எடுத்துக்கிட்டேன். அன்னிலேந்து இன்னிவரக்கும் நிம்மதியில்லாமத்தானுங்களே காலந்தள்ள வேண்டியிருக்கு? சரி இந்தக் கத ஒங்களுக்கு என்னத்துக்கு?
‘இல்ல சும்மா சொல்லுங்க'.
இன்னிக்கு எந்தப் பாவி மொவத்துல முழிச்சிப் போனேனோ மொக்கன கேடுகெட்டுத் திரும்புறேன்... காரி... முண்டச்சி... எல்லாம் ஒரு பொம்பளயால தானுங்க!
இடுப்பிலிருந்து வெற்றிலை மடிப்பைப் பிரித்து வெற்றிலை போட்டுக் கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.
வடக்குவெளி மாரியம்மங்கோயில்ல காப்பு கட்னதுமே கைநீட்டி அட்வான்சு வாங்கிப்புட்டேங்க. அவங்களும் பெரிசா ‘தங்கையா பார்ட்டியாரால் வாலிபர்களின் சொப்பன சுந்தரி தஞ்சை சுந்தரியின் கரகாட்டம் நடைபெறும்னுட்டு'' நோட்டீஸ் அடிச்சி ஒட்டிப்புட்டாங்க.
எப்பயும் போல நாங்களும் தயாரா முன்னாலேயே போயி சேந்திட்டம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்திட்டு. ஆச்சு மணி ஒம்பதாச்சு. பத்தாச்சு. பதினொன்னும் ஆயிட்டு.
எளவட்டங்கள்ளாம் தண்ணில மெதந்திச்சி. ‘புளிச்'சென்று வெற்றிலைச் சாற்றை இரண்டு விரல்களுக்கிடையில் துப்பிவிட்டு தொடர்ந்தார்.
‘எங்கப்பா சுந்தரிய காணம்?'' கேள்வி
ஆச்சுங்க எப்பிடியும் வந்துடும்ங்க.
வந்த ஒடன ஆடவுட்டுடலாம்ங்கிற கணக்குல நாங்களும் வாசிச்சிக்கிட்டு இருந்தோம்.
எங்கடா தங்கையா... தஞ்சாவூர்ப் பார்ட்டிய இன்னாங்காணும்? பூசாரி கேட்டார்.
என்னன்னு தெரிலிங்களே.
‘என்னடா கைநீட்டி அட்வான்சு வாங்கிட்டு தெரிலகிரிலன்னு சொல்ற?'' யாரோ ஒருவர் கூட்டத்தில் கத்த இவர் பேச சுற்றி வளைத்துக் கொண்டு அடிக்கத் தொடங்கி விட்டனர்.
கேட்டதுமே என்னவோ போலாகி விட்டது எனக்கு. நல்ல வேளையா பூட்டுங்க, அடிச்சதுல சட்ட கிழிஞ்சாலும் பரவால்ல. ஒதடு கிழிஞ்சதும்கூட வலி தெரில. ஆனாக்கா இந்தத் தவுல கிழிச்சிருந்தா சரிபண்ண எங்க போவன் பணத்துக்கு? அந்த மட்டுக்கும் கெட்ட காலத்’துலயும் ஒரு நல்லகாலம் தானுங்களே!
சொல்லிக் கொண்டே வந்த தங்கையாவின் முகத்தில் மேலும் கவலைகள் படர்ந்திருந்தது.
இவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தவாறே நடந்தேன்.
‘ஏதோ எளவட்டத்திமிர் ஒடம்புல இருக்கிற வர இந்த ஆட்டக்கார பொம்பளங்களுக்கு சீசனுக்குத் தக்கன காசு பணம் கையில பொழங்கும். அதுக்கு அப்பால அதுங்க பாடு திண்டாட்டம்தான். செலபேரு பிச்சை எடுக்கறதும் பொய்க்கா குதிர ஆடுற சிலதுக ‘ஜிம்ட்ட நாட்ட’களா மாறிடுறதும் இந்தத் தொழிலோட தலவிதிங்க'' காளியப்பாராவு தந்த பேட்டியை அசைபோட்டபடியே நடந்தேன்.
‘அப்டீ என்ன ‘சுந்தரி' பேர்ல அவ்ளோ விசேஷம்'' தங்கையாவிடம் கேட்டேன்.
ஆளு நல்ல அழகு. அது மட்டுமா? அதோட கட்டான ஒடம்ப கண்டா காவி உடுத்துன சாமியாருக்குக் கூட சபலந்தட்டும். மயில்டான்சு, பொக்காகுதிர, கொறத்தி ஆட்டம், கரகாட்டம் எல்லாத்துலயும் அப்டி ஒரு தெறம பூந்து வெளயாடும். கரகத்த தலயில வச்சிக்கிட்டு கீழ கெடக்கிற ஊசிய கண்ணால எடுக்கிறது; ஒரு பானய கீழ கவுத்து அதுமேல படுத்துக்கிட்டு சுத்தி சுத்தி ஆடுறது உருட்டுப் பலவ மேல நின்னுகிட்டு கரகத்த ஆடுறது, ஒளக்கமேல கரகாட்டம் ஆடுறது. இப்டி பல முறையில் ஆடுற ஆட்டத்துக்கு அம்புட்டு காசு குமியும். அதுமட்டுமா? மலேயா, சிங்கப்பூர்லாம் கூட போயி ஆடிட்டு வந்தாச்சுங்களே அது?
நடந்தோம். காற்று சில்லென்று முகத்தில் படர்ந்தது ஆசுவாசமிருந்தது. வயல்வெளிகளில் தகரக் காற்றாடி வைத்து நண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள்.
தலைச்சும்மாட்டில் பானையைப் பிடித்தபடி வந்த ஒரு அம்மாவிடம் பதனீ இருக்குங்களா? என்று விசாரித்து விட்டு, அய்யா பயனீ சாப்டுவீங்களா? கேட்டார் தங்கையா. நான் ஆமோதித்ததும் ஆளுக்கு இரண்டு தம்ளர் பதனீர் சாப்பிட்டோம். சில்லரை தர முன் வந்தபோது பிடிவாதமாக மறுத்து விட்டார். எங்கூருக்கு வந்திருக்கீய நாங்கதா ஒங்களுக்கு வாங்கித்தரணும். சொன்ன அவரை சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அடி உதை பட்டு இவ்வளவு சிரமத்திலும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் இவரது இயல்பும், கிராமியப் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தன.
நடப்பது கூட சுமையாய்த் தெரியவில்லை. ஆனால், தங்கையா மௌனமாகி விட்டார். அவரது மௌனம் சங்கடமாக இருந்தது. களத்து மேட்டிலிருந்து கருக்காய்களையும், குப்பைகளையும் சுழற்றி சுழற்றி அள்ளி வீசிய சூறைக்காற்றால் எதிரில் ஒரு கலங்கலாக தெரிந்தது. நானும் கொஞ்சம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.
இப்படித்தான் எங்கூர் உத்திராசு கோயில்ல நடந்த திருவிழாவப் பத்தி ரகு சொன்னது நினைவுக்கு வர பலவிதமான உணர்ச்சிகள் எனக்குள் நடையில் வேகம் குறைந்து விட்டது எனக்கு.
ஊர் எல்லையில் காவல் தெய்வமாகி வீற்றிருக்கும் உத்திராபதி கோயில் ரொம்ப பிரசித்தம். ‘ரொம்ப உக்கிரமானவுரு. கோயிலாண்ட வந்ததும் வெள்ளக்காரங் குதிரையேயே ஓடவுடாம பண்ணிப்பிட்டாரு உத்திராசையா. அப்புறமா கிராமத்து கணக்குப்புள்ள உத்திராசயா ஒனக்கு ஒரு குதிர செஞ்சி வக்கச் சொல்றேன். இப்ப தொரய போவுடு'ன்னு வேண்டிக்கிட்டதும்தான் செஞ்சு வைச்சானாம். பெரியவர் குப்புசாமி சொல்ல, ‘ஆமா வெள்ளக்காரம் ஓடிப்போனது போல குதிரயும் ஓடிப் போயிட்டுதாக்கும்?'' என்பார் இராவணன்.
‘ஓய் ஒனக்கென்னய்யா நீரு கருப்பு சட்டக்கார்ரு அப்டிதாம் பேசுவீரு''
பத்துப்பாஞ்சு வருஷத்துக்கு முன்னால் அங்கு வூடுவாசலே கெடயாது. ஒரலு இடிக்கிற சத்தம் வரப்புடாது. தீட்டுப் பொண்ணு அண்டப்புடாதுன்னு ஏகக் கெடுபிடி, நடுராத்திரி சாமி உலா வருவாருன்னு யாரும் அந்த நேரத்தில் நடமாட மாட்டாங்களாம். எல்லாரும் பயப்புடுற பெரியப்பாவுக்கே தனியா கோயில் பக்கம் போவ பயமாயிருக்குமாம். தன்னக் கூப்பிட்டுக்கிட்டுத்தாம் போவாருன்னு சுவையமுதன் சொல்வாரு.
பத்தாம் வகுப்புலர்ந்தே பரிச்ச நேரங்கள்ள அங்கதாம் படிப்பேன். மத்தியான சாப்பாட்டுக்கு போம்போது உச்சி உறுமற நேரத்தில் அங்க எப்டிதா போவுது இந்தப் புள்ள என்று பயப்படுவார்கள். சமயங்களில் இலக்கியக் கூட்டங்கள், விழாக்கள் முடிந்து ஊர் திரும்புகையில் மணி பன்னென்டு, ஒண்ணாயிடும். ‘அது' வழியா ஏந்தா இத்தன மணிக்கு வருதோ இந்தப்புள்ள? என்பார்கள் பார்ப்பவர்கள்.
ஆடு மாடுகளுக்குச் சீக்குப்புணி வரும்போது ஆடு, மாடு செலக நேந்துகிட்டுவப்பாக. ஒரு செலயயும் எந்த எடத்துல காணல. எல்லாம் இந்த மாட்டுக்காரப் பயலுக ஒடச்சிப்புட்டானுவ என்று ஏசிக்கொண்டிருப்பார்கள் பெரியவர்கள். கம்பீரமாக கதாயுதத்தோடு உத்திராபதி காட்சியளிப்பது பயங்கரமாக இருக்கும். ஊரிலேயே பலபேருக்கு உத்திராபதின்னுதா பேரு. சுருக்கமாக உத்திராசு.
அப்டியாப்பட்ட கோயில்ல போன மாசம் திருவிழா நடத்தணும்னு துடியா துடிச்சி எளவட்டங்கள்ளாம் புதுக்கோட்டயிலேந்து ஜேசுராசு பார்ட்டிய கூப்ட்டு கலைநிகழ்ச்சி நடத்திருக்கானுவ. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பொறவு பொம்பளக ஒக்காந்து பார்க்க முடியாத படி விரசம் உச்சகட்டமானதும் கணபதி மாமா கடுசா திட்டிப்புட்டு காறித் துப்பிட்டு வந்ததாகவும், எளவட்டங்களைத் தவிர பாக்கி எல்லாரும் கிளம்பி வந்திட்டதாகவும் ராசையா சொன்னார்.
அது ஏண்டா கேக்குற எல்லாப்பயலுகளும் சேந்து மோளக்காரனுங்களுக்கும், அந்த ஆட்டக்கார பொம்பளகளுக்கும் தண்ணிய ஏகத்துக்கும் ஊத்திவுட்டுப்டானுவ. போத தலக்கார்னனும் அவ டூபீஸ்ல ஆட ஆரம்பிச்சிட்டா.
இவுனுவோ கூட சேந்து கூத்தடிக்கிறனென்னா? அன்பளிப்பு பணத்த போயி போயி அவ பாவாடையிலயும், ஜாக்கெட்லயும் ஊக்கு வச்சிக் குத்திவுடுறதென்னா? அடச்சே கொஞ்சம் கூட சகிக்கிலைப்பா.
‘ஆக நீயும் முழுசா இருந்து பாத்தேன்னு சொல்லு.'
‘அட யார்ரா இவன் நா இருந்து தான ஆவுனும், மைக்செட் நாந்தானடா கட்டிருந்தேன்.'
‘என்னா பேசாமலே வாறீங்க? ஏதோ யோசனைப் போல?'' கேட்டார் தங்கையா.
ஒண்ணுமில்ல சும்மாதா.
ஏதேச்சையாக கவனித்தேன். அவரது உதட்டில் ரத்தக் காயம் உறைந்திருந்தது. எதிரில் வேகமாக ஒருவர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. நெருங்கியதும் தங்கையா நின்றார். எதிரில் வந்தவரை முன்னமே தங்கையாவுக்குத் தெரியும் போல,
‘வாப்பா. இது ஒங்களுக்கு நல்லாருக்கா? எம்மானத்தை வாங்கிப்புட்டியளே. காசு வாங்கும்போது மட்டும் ஓந்தங்கச்சிக்கு வாயெல்லாம் பல்லா இருந்திச்சி. பணத்துக்குப் பணமும் போயி அடி வாங்கி அவஸ்த்தப்பட்டதுதா மிச்சம்.''
‘இந்த மாதிரி பண்ணா நாளப் பின்னா தொழில எப்படி பாக்கிறது. அக்கம்பக்கத்துல கேள்விப்பட்டா இன்னம் அடுத்தடுத்த எடுத்துல கூப்பிடுவாகளா?'' பொரிந்து தள்ளினார் தங்கையா.
வந்தவர் ஏதோ சொல்ல எத்தனித்த போது தொண்டை அடைத்தது.
‘என்னா கட்டமணி அப்படியே நிக்கிற நாம்பட்ட அவமானத்தப் பார்த்து ரசிக்கிறீகளா நீங்கள்ளாம்? என்றுவிட்டு ஏதேதோ கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருந்த தங்கையாவை இடைமறித்தது வந்தவரின் விம்மல்.
நேத்து மத்தியானமே இங்க வராதுக்குதா அக்காவும் நாங்களும் கௌம்புனோம்.
‘நெஞ்சுவலி வந்து மச்சான ஆசுபத்திரில சேத்தோம். முடிஞ்சி போச்சு'' என்று விட்டு அழுது அரற்றியவரைப் பார்த்து தங்கையாவுடன் நானும் ஸ்தம்பித்து நின்றிருந்தேன்.