சமூக விழிப்புணர்வு

"ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மனமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கிதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.


இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்கு தகுதியுடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்."

- பெரியார் ஈ.வே.ரா.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சாதி, மத எதிர்ப்புக் கருத்துக்களையும், பெண் உரிமைக் கருத்துக்களையும் எதிர்ப்புக்களை கண்டு அஞ்சாமல், தன் உடல் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இரவு பகல் பாராமல் மக்கள் தொண்டாற்றியவர் தந்தை, பெரியார். தான் வாழும் காலத்திலேயே தனது கருத்துக்களை பிறர் நூல்கள் வெளியிட்டுக் கொளள இசைவளித்தவர். ஆனால் பெரியாருக்குப் பின் அவரது கருத்துக்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முழுமையாகப் போய்ச் சேராத நிலை இருக்கிறது. இந்துத்துவ சக்திகள் நாடெங்கும் வலுப் பெற்று வரும் இந்நேரத்தில், இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம், பெரியாரின் சொத்துக்களுக்கு மட்டுமல்ல, பெரியாரின் கொள்கைகளுக்கும் ஏகபோக வாரிசாக செயல்பட்டு வரும் கி.வீரமணிதான்.

பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதை சமுதாயப் பணியாகக் கொள்ள வேண்டிய கி.வீரமணி ஒரு பக்கம் பொறியியல் கல்லூரி, கல்வியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரி என கல்வி வணிகத்தில் இயக்கத்தை திசை திருப்பி விட்டுள்ளார். மறுபக்கம் அறக்கட்டளைகள், தன்னார்வ குழுக்கள் என இவரது செயல்பாடு பெரியாரின் கருத்துக்ணகளைப் பரப்புவதைத் தவிர பிற தளங்களில் பரந்து விரிந்து சென்றுள்ளது. இந்தச் சொத்துக்களைக் காப்பாற்றும் பொருட்டும், தனது செயல்பாடுகளுக்கு அரசினால் எவ்வித ‘இடையூறும்’ ஏற்பட்டு விடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இவரது அரசியல் பணியும் இருக்கிறது. ஆகவே ஜெயலலிதா, கருணாநிதி என யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை வலிந்து ஆதரிப்பதும், அவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை முதல் ஆளாக நின்று வரவேற்பதுமாக இருக்கிறார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பொழுது, அதற்கு எதிராக பெரியாரின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எதிர்த்தாக்குதல் நடத்தினர், ஆனால் கி.வீரமணியோ, ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று அறிக்கை விட்டார். தனது தலைவரை வேதாந்தி தரக் குறைவாக விமர்சித்த பொழுது கொதித்தெழுந்த கடைக்கோடி திமுக தொண்டனின் உணர்ச்சியில் சிறிய அளவு கூட தனது தலைவர் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பொழுது வராமல் மரத்துப் போய்க் கிடந்தார் கி.வீரமணி.

அதே போல பெரியாரின் கருத்துகளைப் பரப்ப வேண்டிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமோ ஆதினங்களே பாராட்டும் வண்ணம் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகளை நூலாக வெளியிட்டு மகிழ்கிறது.

இவ்வாறு பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள் சிலருக்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டிருக்க, பெரியாரின் கருத்துக்களோ யாருக்கும் பயன்படாமல் பெரியார் திடலில் தூசு படிந்து கிடக்கிறது.

பெரியாரின் கொள்கைகளாக இதுவரை வெளி வந்திருப்பது ஆனைமுத்து தொகுத்த பெரியாரின் சிந்தனைகள் மூன்று தொகுதிகள் மட்டுமே. இதைத்தான் அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றனர். இன்னும் யாருக்கும் தெரியாத கருத்துக்கள், விபரங்கள், குடியரசு, புரட்சி முதலிய ஏடுகளில் உள்ளன. அதை தொகுப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காத கி.வீரமணி, தற்பொழுது தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதை நூலாக வெளியிட முயற்சி எடுக்கும் பொழுது அறிவுசார் சொத்துரிமை என்று கூறி அதை வெளியிடாமல் தடுப்பதற்கு நீதிமன்றம் சென்றுள்ளார். பகவத் கீதை, ராமாயணம் போன்ற புராணக் குப்பைகள் எவ்வித தடையும் இல்லாமல் பலராலும் பரப்பப்படும் பொழுது பெரியார் வழியில் நடப்பதாகக் கூறும் கி.வீரமணி பெரியார் கருத்துக்களை தானும் பரப்பாமல் பிறரது முயற்சிகளுக்கும் குழி பறிக்கும் வேலையைச் சரியாகச் செய்கிறார்.

இந்தப் பிரச்னைக்கு ஒரே வழி. பெரியாரின் எழுத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்குவதுதான். இதன் மூலமே பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்டெடுத்து அவரது கருத்துக்களை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க முடியும். ஆனால் இந்தப் பணியை கி.வீரமணியிடமிருந்து ‘சமூக நீதி காத்த கி.வீரமணி’ விருது பெறும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.

(தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் கி.வீரமணி, ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது அவருக்கு ‘சமூக நீதிக்கான பெரியார்’ விருதை வழங்கினார். ஆக, ஆசிரியர் கி.வீரமணியும் ஜாதி பார்த்துதான் விருது வழங்குகிறாரே?)

 

Pin It

இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.

மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது. சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.

முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.

ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது. 1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.

இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.

1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.

2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.

Pin It

தாலாட்டுப் பாடல்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளைக் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், அக்கால மக்களின் வாழ்வியல், சமூகவியல், பொருளாதாரம், பண்பாடுகள், தொழில் மரபுகள், நாட்டு நடப்புகள், சில வரலாற்று உண்மைகள் போன்றவை பதிவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மின்னணு இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய கால கட்டத்தில் நாம் பல கலாச்சாரக் கூறுகளை இழந்து வருகிறோம். அப்படி நாம் இழந்த இலக்கியச் செல்வங்களில் தாலாட்டுப் பாடல்களும் ஒன்றாகும்.

இயந்திரமயமான வாழ்க்கை, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, தனிக்குடித்தன வாழ்க்கை, அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கிடைத்திருக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தாலாட்டுப் பாடல் பாட வெட்கப்படும் நகரத்துப் பெண்களின் மனப்பான்மை, தாலாட்டுப் பாடல்களை மனதில் நிலை நிறுத்தி மீண்டும் ராகத்தோடு பாட இயலாத நிலை போன்ற காரணங்களால் தாலாட்டுப் பாடல்கள் இன்று வாய்மொழி மரபில் இருந்தும் விடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிராமந்தரங்களில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்த தாலாட்டு பாடல்கள், வட்டாரத்துக்கு வட்டாரம், ஜாதிக்கு ஜாதி, சிற்சில மாற்றங்களுடன் பாடப்பட்டு வந்தது.

தாய் என்ற அன்புக் கடலில் விளைந்த வலம்புரி முத்துக்கள் போன்ற இந்த தாலாட்டுப் பாடல்களில் தாய்மையின் பாசமும், பரிவும் நிறைந்து காணப்படுகின்றது.

பெண்கள் தாலாட்டும் போது இசை லயமும், ஓசை ஒழுங்கும், எதுகையும், மோனையும், இடையடித் தொடைகளும், உவமையும் உருவகமும், உள்ளுறையும் எப்படியோ அவர்களின் பாடல்களில் மிக இயல்பாய் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.

சிலநேரங்களில் தன் சொந்த சோகங்களையும் சுய வாழ்வின் அவலங்களையும், நேரடியாகவும் மறைமுகமாகவும், குறிப்பாகவும், குறியீடாகவும் சொல்ல, தாய்மார்கள் தாலாட்டுப் பாடல்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

அந்தக் காலக் குழந்தைகள் முதன் முதலில் தாயின் தாலாட்டுப் பாடல்களைத்தான் கேட்டது. இந்தக் காலக் குழந்தைகள் முதன் முதலில் சினிமாப் பாடல்களைத்தான் கேட்கின்றன.

அந்தக் காலத்தில் பிறந்த அனேகக் குழந்தைகளுக்கு குடிக்க தாய்ப்பால் கிடைத்தது. இந்தக் காலத்து குழந்தைகள் பலருக்குக் குடிக்கப் புட்டிப்பால்தான் கிடைக்கிறது.

தாலாட்டுப் பாடலில் உள்ள இசை குழந்தையைத் தூங்க வைக்கிறது. பரிச்சயமான தாயின் குரலில் குழந்தை தன்னை மறந்து நித்திரை கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால் தாலாட்டுப் பாடலின் பொருளும், சொற் சுவையும், கவி இன்பமும், அதைக் கேட்கும் பெரியவர்களையும் சொக்க வைக்கிறது.

‘தால்’ என்றால் ‘தொட்டில்’ என்று பொருள். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடும் பாடலை தாலாட்டுப் பாடல் என்று அழைப்பது மிகவும் பொருத்தம்தான்.

தாலாட்டுப் பாடல்கள் ‘ஆராரோ’ என்றோ ‘ராரீரி..’ என்றோ ‘ரோரோ’ என்றே வெற்றிசைக் சொற்களுடன் ஆரம்பிக்கின்றது. தாய் தாலாட்ட ஆரம்பத்தில் இருந்து குழந்தை கண்ணயர்ந்து தூங்கும் வரை, தாலாட்டுப் பாடலின் நீளம் அமைகிறது. தாலாட்டுப் பாடலின் நீளம் சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி கூடவோ குறையவோ செய்கிறது.

தாலாட்டுப் பாடல்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளைக் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், அக்கால மக்களின் வாழ்வியல், சமூகவியல், பொருளாதாரம், பண்பாடுகள், தொழில் மரபுகள், நாட்டு நடப்புகள், சில வரலாற்று உண்மைகள் போன்றவை பதிவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சில தாலாட்டுப் பாடல்கள் தாயின் குலப் பெருமை, மாமன்மார் மகிமை, பாட்டனாரின் வீரதீரம், பிறந்த வீட்டு சிறப்பு, புகுந்த வீட்டு நிலை, பிறந்த ஊரின் பெருமை பற்றி பேசுகின்றன.

எதார்த்தத்தை சில தாலாட்டுப் பாடல்கள், பேசுவதைப் போலவே, மிகைக் கற்பனைகளையும் புனைவுகளையும் பற்றிச் சில தாலாட்டுப் பாடல்கள் பேசுகின்றன. சில பாடல்கள் நீதி சொல்லும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

ஒரே குழந்தையைத் தாய் தாலாட்டும் போது ஒரு விதமாகவும், அதே குழந்தையை அக்குழந்தையின் அத்தை தாலாட்டும் போது வேறு விதமாகவும், சித்தி தாலாட்டும் போது வேறு விதமாகவும், பாட்டி தாலாட்டும் போது இன்னொரு விதமாகவும் வித விதமாகப் பாடுகின்றார்கள். சில வீடுகளில் ஆண்கள் தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைப்பதையும் நான் கேட்டிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

சில தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். ஒரு தாய் தான் தாலாட்டும் போதே தன் குழந்தையைப் பறவைகள் பலவும் தாலாட்டும் என்று பாடுகிறாள். இயற்கையை நேசிக்கும் கவியுள்ளத்தையும், பறவைகளையும், வண்டுகள் உள்ளிட்ட உயிரினங்களை நேசிக்கும் தாயுள்ளத்தையும் இந்தத் தாலாட்டு பாடலில் நாம் காண முடிகிறது.

மயிலாடும் சோலையிலே
மாடப்புறா தாலாட்ட..
வண்டாகும் சோலையிலே
வண்ணப்புறா தாலாட்ட...
செண்டாடும் சோலையிலே
சேடியறும் தாலாட்ட...
குயில் கூவும் சோலையிலே
கோடி சனம் தாலாட்ட
கொஞ்சும் கிளி ரஞ்சிதமே
கோமகனே நீயுறங்கு....!
வெள்ளி விளக்கெரிய
விடி விளக்கு நின்றெரிய
தங்க விளக்கெரிய
தனி விளக்கு நின்றெரிய
நீலப் பொன் தொட்டிலிலே
நித்தம் நீ நித்திரை செய்...

பூக்களைக் கொண்டே ஒரு வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அப்படிக் கட்டிய வீட்டினுள் நுழைந்தால் அங்கு எப்படிப்பட்ட வாசனை இருக்கும். இந்தக் கற்பனையே சுகமாகத்தான் இருக்கிறது. இனி, பாடலைப் பாருங்கள்.

முல்லைப்பூ கட்டிடமாம்
முழத்துக் கொரு உத்திரமாம்
மூடித் திறந்தால்
மல்லிகைப்பூ வாசனையாம்!
தாழம்பூ கட்டிடமாம்
தளத்திற்கொரு உத்திரமாம்
சாத்தித் திறந்தால்
சாதிமல்லி வாசனையாம்!

தாய் தன் குழந்தைக்கு எப்படி எல்லாம் தொட்டில் கட்ட வேண்டும், தொட்டில் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறாள் பாருங்கள்.

பட்டாலே தொட்டில்
பவளத்தால் கொடிக்கயிறு
பட்டுத் தொட்டிலிலே - என்
பாக்கியமே கண் அசறு...
பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
பாக்கு மரம் வெட்டி
பளபளப்பாய் தொட்டில் செய்து
பளபளக்கும் தொட்டிலிலே - என்
பாலகனே கண் அசறு...! - என்று

தொடரும் இப்பாடலில் பால் மரத்தில் தொட்டில் செய்வது பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. பால் மரத்தில் (ஆலமரம், இலுப்பை பரம் போன்றவற்றில்) தொட்டில் செய்து அதில் பாலகனைப் போட்டு ஆட்டினால் தாயின் மார்பில் வற்றாமல் பால் சுரக்கும் என்ற நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை இப்பாடலில் பதிவாகியுள்ளது.
எத்தனை வகையான மரங்களைக் கொண்டு தொட்டில்களைச் செய்யலாம் என்ற செய்தியை அத்தாய் அடுத்து வரும் பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றாள்.

அஞ்சு மரத்தாலே,
பஞ்சமரத் தொட்டில் செஞ்சு
அங்கம் குளிர
ஆயிரம் தான் தீர
அருமை மகனை
ஆதரவாப் போட்டாட்ட

என்கிறாள். இனி பஞ்ச மரம் (ஐந்து மரங்கள்) எவை எனப் பட்டியலும் இடுகிறாள்.

நீண்ட மரம் நெல்லி,
நெடு மரம் மா, இலுப்பை,
ஆண்ட பலா மரம்
அரு¬மான தேக்கு மரம் என
ஐந்து மரம் பலகையால்
அழகான தொட்டில் செய்து

எனப்பாடிவிட்டு இனி செய்த தொட்டிலுக்கு இருபுறமும் தூண் எப்படி இருக்க வேண்டும் என்றும் அதே பெண் அடுத்த பாடலில் விவரிக்கிறாள்

கரும்பு வெட்டி மொழி நறுக்கி,
கணுக்கணுவாய் தூண் நிறுத்தி
தூணுக்கொரு தொட்டில் கட்டி
துரைமகனைப் போட்டாட்ட...

என்று தொடர்கிறது, தாலாட்டுப் பாடல்.

ரசனை மிக்க கவிதை அனுபவத்தை இப்பாடல்கள் தருகின்றன. கற்பனையின் கொடி முடியில் நின்று, கனவுகளின் மொழி நடையில், எப்படிப் பாடுகிறாள் பாருங்கள், ஒரு கிராமத்துப் பெண்.

தங்கச் சங்கு கழுவி
தட்டிலே பாலாத்தி
பாலமுதம் பருக வந்த
பசுங்கிளியை யாரடிச்சா...?

சந்தையிலே முல்லைப்பூ
ஆஞ்சரமாய் விற்கிறதாம்.
முல்லைப்பூ வாங்கப்போன
செல்லக்கிளியை யாரடிச்சா...?

மாமன் அடிச்சானோ...
மல்லிகைப் பூங் கொத்தாலே
அத்தை அடிச்சாளோ,
அரப்பூக் கம்பாலே,
பாட்டி அடித்தாளோ...
பாலுத்தும் சங்காலே..
தாத்தா அடித்தாரோ...
தங்கப் பிரம்பாலே

- என்று அடுக்கடுக்காய், சளைக்காமல் பாடிக் கொண்டே போகிறாள் அப்பெண். கடைசியில்,

யாரடித்தார் நீ அழுதாய்...?
அடித்தாரைச் சொல்லி அழு
நீரடித்து நீர் விலகாது
நிம்மதியாய் தூங்கி முழி...

என்று பாடுகின்றாள். ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது ஒரு கிராமத்துப் பழமொழி. நீரை நீரால் அடித்தால் வலிக்காது என்பது ஒரு நுட்பமான பதிவாகும்.

மேலே பாடல் வரிகளில் நுட்பமான ஒருவித குடும்பப் பதிவும் உள்ளது. குழந்தையை அத்தை அரளிப்பூச் செண்டாலும், பாட்டி பாலூத்தும் சங்காலும், தாத்தா தங்கப் பிரம்பாலும் அடித்ததாகப் பாடுகிறார்.

தங்கப் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்கும், பாலூத்தும் சங்கை ஒரு கயிற்றில் கட்டி, அதைக் கொண்டு குழந்தையை அடித்தாலும், குழந்தைக்கு வலிக்கும், அரளிப்பூக் கம்பால் அடித்தாலும் பிள்ளைக்கு வலிக்கும், மல்லிகைப்பூக் கொண்டு அடித்தால் குழந்தைக்கு வலிக்காது.

குழந்தைக்கு மாமன் என்றால் தாய்க்கு சகோதரன் முறை வரும். குழந்தைக்கு அத்தை என்றால், தாய்க்கு நாத்தனார் அல்லது மதினியார் முறை வரும். குழந்தைக்குத் தாத்தா என்றால் தாய்க்கு மாமா முறை வரும். குழந்தைக்கு பாட்டி என்றால் தாய்க்குஅத்தை முறை வரும். தன் சகோதரன் மட்டும் மல்லிகைப் பூங் கொத்தைக் கொண்டு அடித்தானோ...? என்று தாய் கேட்கிறாள். தன் சகோதரன் மேல் உள்ள பாசத்தை அத்தாய் இப்பாடல் மூலம் சொல்லாமல் சொல்கிறாள். அதே சமயம், தன், மாமன், மாமி மற்றும் நாத்தனார், மதினி மேல் உள்ள வெறுப்பையும் சொல்லாமல் இப்பாடல் மூலம் சொல்கிறாள்.

கடைசியில் யாரடித்தார் என்ற கேள்விக்கான விடையையும் அதே பாட்டில் சொல்லி புதிர்க் கேள்விகளுக்கு விடையும் தருகிறாள், அத்தாய். இனி, அப்பாடலைப் பார்ப்போம்.

ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனாக அழுதான்
அம்மா மடிதேடி...

என்று பாடி முடித்து விடுகிறாள்.

தாலாட்டுப் பாடல்கள், கற்பனைகளின் ஊற்றாக, நயம் மிக்க கவிதைகளாகத் திகழ்கின்றன. இத்தகைய இலக்கிய வரிகள் இன்று காற்றில் கலந்த கானல் வரிகளாக மாறிவிட்டன.

கிராமத்து மக்களின் வாழ்வியலில் இருந்து கூட இன்றைய காலகட்டத்தில் தாலாட்டுப் பாடல்கள் விடைபெற்று விட்டன. இத்தகைய தாலாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதும் அவைகளைத் தொகுப்பதும், பகுப்பதும், ஆய்வுகளுக்கு உட்படுத்துவதும் ஒருவித இலக்கியச் சேவையாகும்.

பெண்கள் பாடும் இத்தகைய தாலாட்டுப் பாடல்களை ஒளிப்பதிவு செய்து அவைகளைக் குறுந்தகடுகளாக வெளியிட யாராவது முன் வந்தால் நல்லது. அப்படிச் செய்தால் தலைமுறைகளைத் தாண்டியும், தாலாட்டுப் பாடல்கள் நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது.

- (தடங்களைத் தேடுவோம்.)

Pin It

 

உலகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளின் ஆதர்ச புருஷர் மசனாபு புகோகா. 95 வயதில் கடந்த மாதம் 16ம் தேதி காலமானார்.

நவீன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளுக்கு மாற்றாகவும், அதிக பலன் தருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதாகவும் இயற்கை வேளாண்மை திகழும் என்பதை பெரிய அளவில் நிரூபித்துக் காட்டியவர் புகோகா. அவர் பரவலாக்கிய இயற்கை வேளாண்மையை சிறு விவசாயிகளும் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

உணவு உற்பத்திதான் மனித நாகரிகம் வளர்வதற்கான அடிப்படையாக இருந்தது. உலகின் அனைத்து துறைகளிலும் தொழிற்புரட்சி மாற்றங்களை உருவாக்கிவிட்டது. தொழில்மயமாக்கம் காரணமாக உலகம் முழுவதும் நவீன வேளாண்மை பரவிவிட்டது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேதி உரங்கள் கொட்டப்படும் ஒரு துறையாக வேளாண்மை மாறி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த உயர் தொழில்நுட்ப வேளாண்மை லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஊட்டசத்து குறைவு, உணவு சார்ந்த பல்வேறு நோய்கள், உடல்நல பாதிப்புகள் என்று அதன் மோசமான பாகத்தை தற்போது அனுபவித்து வருகிறோம்.

‘மௌன வசந்தம்‘ என்ற புத்தகம் மூலம் ரேச்சல் கார்சன் என்ற பெண் சுற்றுச்சூழல் நிபுணர் மேற்கண்ட விஷயங்களை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். சரி, அப்படியானால் நவீன வேளாண்மைக்கு மாற்று என்ன?

இயற்கை வேளாண்மைதான். இயற்கை வேளாண்மையில் பெரும் புரட்சி நிகழ்த்தியவர் ஜப்பான் இயற்கை வேளாண் அறிஞரான மசனாபு புகோகா.

தாவர நோய்கள் தொடர்பாக பயிற்சி பெற்றிருந்த புகோகா, தொடக்க காலத்தில் யோகோஹாமா சுங்கத் துறையில் தாவர கண்காணிப்பாளராகச் செயல்பட்டார். மற்றொருபுறம், சுயமாக அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் ஒரு கட்டத்தில் ‘இயற்கையை புரிந்து கொள்வது மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது’ என்று முடிவுக்கு வந்தார்.

அவர் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிப்போடும் வகையில் 25 வயதில் புதிய பார்வையைப் பெற்றார். வேலையைத் துறந்தார். வீட்டை விட்டு வெளியேறி தந்தையின் ஆரஞ்சு தோட்டத்துக்குப் போனார். ஜப்பானின் தெற்கு தீவான ஷிகோகுவில் அயோ என்ற ஊரில் அந்த தோட்டம் அமைந்திருந்தது. அங்கு ஓர் எளிமையான விவசாயியாக 70 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துள்ளார். இந்தக் காலம் முழுவதும் பயிர்களை வளர்க்க அவர் எந்த வகையிலும் மெனக்கெடவில்லை என்பதுதான் நமது சிந்தனைக்குரிய விஷயம்.

‘’எதையும் சரியாக உணர்ந்துவிட்டால், மிகக் குறைவான வேளாண் நடைமுறைகளே தேவைப்படும். நவீன வேளாண்மை மூலம் இயற்கையின் சுய சமநிலைப்படுத்தும் நடைமுறைகளை தொந்தரவு செய்வது பலவீனமான, வேதிப்பொருட்கள சார்ந்த பயிர்களையே உருவாக்கும். மேலும் இது நிலம், நீர், காற்று என அனைத்து இயற்கை வளங்களையும் மாசுபடுத்தும்.’’ என்று கடுமையாக எச்சரித்தார்.

புகோகா தனது வயல்களை உழுததில்லை, களை பிடுங்கியதில்லை, களக்கொல்லி அடித்ததும் இல்லை. அவர் வரிசையாக விதைகளை நடவில்லை, மாறாக நிலத்தில் ஆங்காங்கு தூவினார். இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் அல்ல கலப்பு உரம் எதையும் வயலில் இடவில்லை. மாறாக தன் அரிசி மற்றும் பார்லி வயல்களில் வைக்கோல்களைத் தூவினார்.

புகோகாவின் நெல் மற்றும் பார்லி வயல்களில் வளர்ந்த வலிமையான பயிர்கள் தீவனப்புல், பூச்சிகள், பறவகள், சிறு விலங்குகள் என்று மற்ற உயிரினங்களுடன் வாழிடத்தை பகிர்ந்து கொண்டன. அவை வெறுமனே ஒரே பயிரைக் கொண்ட பச்சைப் பாலைவனமாக இல்ல. அவரை பழத்தோட்டங்களில் ஆரஞ்சு மரங்களின் கீழே புற்கள், மூலிகைகள், காய்கறிகள் போன்றவை கூட்டாகவும் இயற்கையாகவும் வளர்ந்தன.

புகோகா வலியுறுத்திய ‘எதையும் செய்யாமல் இருக்கும்’ வேளாண்மை, நவீன வேளாண் தொழில்நுணுக்கங்களுக்கு நேர் எதிராக இருந்தது. அத்தனைக்குப் பிறகும் அவரை வயல்களில் பயிர்களும், பழங்களும் உயர் தொழில்நுட்ப பண்ணைகளைவிட செழிப்பாக வளர்ந்தன, அதிக மகசூல் கிடைத்தது. பயிர்கள், பழமரங்கள் மட்டுமின்றி சத்தான காய்கறிகளும் கிடைத்தன.

ஒரு காட்டில் மரங்கள், செடிகொடிகள், புதர்கள், மூலிகைகள் கூட்டாக செழித்து வளருவதைப் போல புகோகாவின் வயல்களில் அனைத்து வகை தாவரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன. புகோகாவின் அடிப்படை கொள்கையே இயற்கையை சீர்திருத்தி பலன்களை சுரண்டுவது அல்ல, இயற்கைக்கு இசைவாகச் செயல்பட்டு அதிக பலன்கள பெறுவதான்.

அவரை வேளாண் முறை மூலம் விவசாயிகளுக்கு பெருமளவு ஓய்வு நேரம் கிடக்கிறது. மூலப்பொருள்கள், முதலீடு அதிகம் தேவையில்லை. சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதில்லை. இதெற்கெல்லாம் மேலாக இந்த முறை லாபம் ஈட்டுவதாகவும் உள்ளது. சுகாதார அக்கறை கொண்ட 21ம் நூற்றாண்டின் நுகர்வோருக்கு புகோகாவின் வேதிநச்சு கலக்காத உணவு பெரும் மதிப்புமிக்கது என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.

1978ம் ஆண்டு அவரை ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது அவரை வேளாண் முறை தொடர்பாக உலகம் முழுவதும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. அதிகம் தொழில்நுட்பத்தைச் சாராத, இயற்கைக்கு இசைவானது அந்த வேளாண் முறை புகழ்பெற்றதாக கை மாறியது. மாணவர்கள், விஞ்ஞானிகள், வேளாண் பணியார்கள் அந்த முறையால் உந்தப்பட்டு பின்பற்ற ஆரம்பித்தனர். வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் புகோகா தனது வேளாண் முறையை கற்றுக் கொடுத்துள்ளார். 1988ம் ஆண்டு சமூக சேவைக்கான ராமன் மகசேசே விருதை அவர் பெற்றார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாக ஆரம்பித்த காலத்தில் அவரை வேளாண் முறையைப் பற்றி பரவலாக பேசப்பட்டது. ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991ம் ஆண்டே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசின் வேளாண்மைத் துறைகூட முழுமையான நவீன வேதி வேளாண்மைக்கு பதிலாக, குறிப்பிடத்தக்க அளவு இயற்கை வேளாண் நடமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

‘இயற்கை அனைத்தையும் வாரிவழங்கும் தாய் போன்றது. அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. அரசுகள் அக்கறையுடன் செயல்பட்டு நில வளத்தை ஆரோக்கியமாகப் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எப்பொழுதும் திகழும்,’’ என்ற புகோகாவின் வார்த்தைகள் இன்னொரு ‘பசுமைப்புரட்சி’ வந்தாலும் மாறாதவை.

Pin It

10.06.1998

வல்லிக்கண்ணன்,
10, வள்ளலார் குடியிருப்பு,
லாயிட்ஸ் சாலை,
சென்னை 600 005.

திரு. தி.க.சிவசங்கரன்,
21-ணி, சுடலை மாடன் கோவில் தெரு,
திருநெல்வேலி  627 006.

பிரிய சகோதரரே வணக்கம். நேற்றும், இன்றும் உங்கள் கடிதம் இல்லை. எனவே, எனது 1ஆம் தேதிக் கவர் கிடைத்த தகவல் தெரியவில்லை.

அந்தக் கவருக்குப் பின்னர் 6ஆம் தேதி கார்டும், 9ம் தேதி இன்லண்டுக் கடிதமும் அனுப்பினேன்.

இன்று விசேஷமான விசேஷங்கள் இருப்பதால் இந்தக் கடிதம். இல்லையெனில், கடிதம் எழுத எனக்கு உற்சாகம் இராது. இன்று அதிகாலையில் சிந்தாதரிப்பேட்டை பாலகிருஷ்ணன் வந்தார். மே 26 அன்று. அதே நாளில் தான் ‘தீபம்’ அச்சுக்கோப்பாளர் ராது துரை மயக்கமுற்று, பாத்ரூமில் விழுந்து கிடந்து, பின் நண்பர்களால் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, செத்துப் போனராம். உடம்பைப் பெற யாரும் இல்லாததால், அது ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறதாம். ராஜதுரை காலமானார் என்ற சேதி ‘தினமணி’ 2ஆம் தேதி இதழில் வந்ததாம். (அதை நான் படித்தேன். ஆனால் அது நம்ம ராஜதுரை என்று எனக்கு விளங்கவில்லை. ‘மூலிகை முரசு’ ஆசிரியர் எனத் தரப்பட்டிருந்தது. வேலூர் ‘மூலிகை மணி’ பத்திரிகையாளர் பரம்பரையாக இருக்கும் என்று எண்ணிவிட்டேன்.)

‘சின்னக்குத்தூசி’ திருவாரூர் தியாகராஜனை ஒரு நாள் பார்க்கக் கூட்டிப் போகிறேன் என்று பால கிருஷ்ணன் சொல்லியிருந்தார். அதுக்காகத்தான் இன்று வந்தார். உங்கள் கடிதம் வந்ததையும் காட்டினார். ஆட்டோவில் அழைத்துப் போனார். திருவல்லிக்கேணி, வல்லப அக்கிரகாரம் லாட்ஜூக்கு தியாகராஜனுக்கு டி.பி. (செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது).மூல நோய் உண்டு. ‘ரத்தத்தில் சர்க்கரை’ வியாதியும் கூட. சிகிச்சைகள் பெற்று வருகிறார். ஆள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறார். மெலியவில்லை.

8.15 மணிக்கு அருகில் உள்ள சி.சு.செல்லப்பாவை பார்க்கப் போனேன். ஜனவரி கடைசி வாரம், லாயிட்ஸ் ரோடு கிளினிக்கில் பார்த்தது. 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிளினிக்கில் தங்க நேர்ந்ததாம். பிறகும் சிகிச்சை பெற்றாராம். மூன்று டாக்டர்களிடம், பிழைக்க மாட்டார் என்று சொன்னார்களாம். மகன், மற்றும் உறவினர்கள் வந்தார்களாம். ‘ராமையா கதைகள்’ புத்தகம் போட வைத்திருந்த பணம் இருபதினாயிரமும் பலவழிகளில் செலவாகிவிட்டது. ஆனால் அவர் சாகவில்லை. வெறும் எலும்புக்கூடாகக் காட்சித் தருகிறார். ஆயினும் ஒரு அபிவிருத்தி. எழுந்து நின்று வீட்டினுள் நடக்க முடிகறது. உற்சாகமாக இருக்கிறார். அவருடைய மன உறுதி போற்றப்பட வேண்டியது. உங்கள் கடிதம் வந்தது பற்றிச் சொன்னார்.

Pin It