தமிழகத்தில் கனன்று கொண்டிருக்கும் சிக்கல்கள் பல இருப்பினும் மதுஒழிப்பு, ஊழல்எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம் போன்ற சிக்கல்களே முன்னணியில் உள்ளன. இவைகளுக்கான போராட்டங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இதற்கு இதர சிக்கல்களை எடுக்கக்கூடாது என்ற பொருளில்லை. பகுதிசார்ந்து அனைத்து சிக்கல்களையும் முன்னெடுக்க வேண்டும்.

1. மது ஒழிப்பு

தமிழகத்தில் மது ஒழிப்பிற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சசிபெருமாள் இறப்பிற்குப் பிறகு உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜெ. அரசும் கடும் அடக்குமுறையை ஏவியது. மாணவர்களை தூண்டியதாகக் கூறி பேராசிரியர் மணிவண்ணனை துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. ம.க.இ.க. பாடகர் கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது.

மது தனிநபர் ஒழுக்கத்தை மட்டும் சீரழிக்கவில்லை. குடும்ப ஒழுங்கு, சமூக ஒழுங்குகளை சிதைக்கிறது. போதைக்கு அடிமையானவர்கள் இளமையிலேயே இறக்கின்றனர் அல்லது குடும்பம் பிரிகிறது. இதனால் பெண்களுக்கு முழுக்குடும்பச் சுமை ஏற்படுகிறது. பெண்கள் தனியாக குடும்பச் சுமையை ஏற்றுக்கொள்வது அதிகப்படியாக இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலில் உள்ளது.

இவர்களால் சமூகச் செயல்பாடுகளில் அந்நியமான நிலை நிலவுகிறது. ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதில்லை. சீர்கேடுகளும் சீரழிவுகளுமே அதிகமாகிறது. அரசு எதிர்ப்புத் தன்மை முற்றிலும் மழுங்கடிக்கப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் திட்டமிட்டே இதை செயல்படுத்தி வருகின்றன. இது அரசுகளால் திட்டமிட்டு இளைய சமுதாயத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இது புரட்சிகர அணித்திரட்டலுக்கு தடையாக இருக்கிறது.

மேற்கண்ட காரணங்களால் மதுவிலக்கை உடனடியாக நடை முறைப்படுத்த உறுதியான போராட்டம் தேவைப்படுகிறது.

2. ஊழல் எதிர்ப்பு

மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊழல் விரவி இருக்கிறது. இது திட்டமிட்ட முறையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் அனைத்து அரசியல்வாதிகள் அதாவது சிறிய கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சொத்தை பறிமுதல் செய்வது இணைத்துக்கொள்ள வேண்டும். ஊழல் என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதையும் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.

3. விலைவாசி ஏற்றம்

ஒருபக்கம் விளைபொருளுக்கு விலையை விவசாயிகள் தீர்மானிக்க முடியாத நிலை நிலவுகிறது. மறுபக்கம் ஆன்லைன் வர்த்தகம், முன்பேர வர்த்தகம் மூலம் கள்ள வியாபாரிகள்வரை முறையற்ற விலையை நிர்ணயிக்கிறார்கள்.

எனவே, சந்தை அராஜகம் ஒழிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயத்தை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், முன்பேர வர்த்தகம் போன்றவை ஒழிக்கப்பட்டு பதுக்கல்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட முக்கிய சிக்கல்களுக்கும் இதர சிக்கல்களுக்கும் அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்ட வேண்டும்.

மேற்கண்ட குறிப்பானத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நமது செயலுத்தி வகுக்கப்பட வேண்டும்.

- துரை.சிங்கவேல்

Pin It