தன்வாழ்நாளெல்லாம் தந்தை பெரியாரின் கொள்கை வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், தனித்தமிழ், திராவிட இயக்கத்தில் பற்று கொண்டவருமான புலவர் குறளன்பன் (79) 23.11.2023 கோவை சூலூரில் இயற்கை எய்தினார். இவர் தமிழ் அறிஞர் புலவர் செந்தலை கவுதமன் அவர்களின் சம்மந்தியும் ஆவார். 1965ல் இந்தி எதிர்ப்பில் கலந்துகொண்டவர். இவரது மனைவி திருச்சி கலாவதி மகள் இசைஅமுது, மகன் இளந்தமிழன். சிந்தனையாளன் முதல் இதழில் “விழி,எழு, செயற்படு” திருக்குறளின் ஈர்ப்பால் கோவிந்தசாமி என்ற தன் இயற்பெயரை “குறளன்பன்” என்று மாற்றியவர். திருச்சி தமிழ்நாடு தனிப் பயிற்சி (கூ.சூ.கூ.ஊ) கல்லூரியில் பணியாற்றியபோது அறிஞர் ஆனைமுத்து சொல்ல, சொல்ல “இந்திய அரசியல் சட்டம் ஒருமோசடி' என்ற நூலை ஒரு வாரத்தில் தன் கைப்பட எழுதிகொடுத்தவர்.

1973இல் தமிழ்முனை என்ற மாத இதழையும், கவிஞர்மடல், ஈரோட்டு சிந்தனைகள், பெண்ணுரிமையும் பெரியாரும், கேள்விகணைகள், விடுதலைக் கேள்விகள், பெரியார் பாட்டு, பெரியார் பாவை, பாரதிதாசன் கேட்கிறேன், கம்பனின் மணக்கோலம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி 30.7.2004இல் ஓய்வு பெற்றபோது “பெரியார் அழைக்கிறார்!, என்ற படைப்பிலக்கியமும் - பாராட்டு இலக்கியமும்” நூல் வெளியிடப்பட்டது. எளிமையான தோற்றமும் இனிமையாக பழகும் இயல்புகொண்ட புலவர் குறளன்பன். எச்சூழலிலும் தாம்கொண்ட கொள்கையிலிருந்து எள்ளவும் மாறாதவர், தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் வழியில் பகுத்தறிவுவாளாராக வாழ்ந்தவர்.

புலவர் குறளன்பன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.

- திருச்சி ந.கருணாகரன்

***

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தொழிலாளர்கள் தலைவர், பத்திரிகை ஆசிரியர், பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்.சங்கரய்யா மறைவு

1941இல் மதுரை அமெரிக்கன் கல்லூரி இளங்கலைப் பட்ட இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாட் களுக்கு முன் பிப்ரவரி கடைசி நாளன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மாணவர் சங்கச் செயலாளர் என்.சங்கரய்யா, 18 மாத சிறை வாழ்க்கைக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

காந்தியாரின் ‘வெள்ளையனே வெளியேறு’ அறிவிப்பைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்த மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் நடத்தியத் தடியடியினால் பலத்த அடிகளுக்கு ஆளானார் சங்கரய்யா. மீண்டும் கைது செய்யப்பட்டு தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டவர் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சங்கரய்யா கண்ணூர் சிறையில் இருந்தபோது அங்கு பொதுவு டைமைக் கொள்கையர் நால்வர் தூக்கிலிடப்பட்டனர். விடுதலைக்குப் பின் தொழிலாளர் சங்க நடவடிக் கைகளில் ஈடுபட்டார். 1946இல் ‘மதுரைச் சதிவழக்கில்’ கைது செய்யப்பட்டவர்களின் முதல் குற்றவாளி பி.இராமமூர்த்தி, இரண்டாவது குற்றவாளி சங்கரய்யா.

14.08.1947இல் சிறையில் இருந்து விடுதலை யான பின் பொதுவுடைமைக் கொள்கைக் குடும்பத் தைச் சேர்ந்த கிறித்தவரான நவமணி அவர்களும் சங்சரய்யாவும் இல்வாழ்க்கைத் துணை ஏற்றனர்.

1948 முதல் 1951 வரை பொதுவுடைமைக் கட்சித் தடை செய்யப்பட்டிருந்தபோது 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சங்கரய்யா 1951இல் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் 1965இல் இந்திய ஆட்சியினரால் பொது வுடைமைக் கட்சியினர் நசுக்கப்பட்டனர். அப்போது சங்கரய்யா 16 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.

ஆக இவரது வாழ்வில் 8 ஆண்டுகள் சிறையில். 1966இல் பொதுவுடைமைக் கட்சி ஏடான ‘தீக்கதிர்’ நாளோட்டின் ஆசிரியரானார்.

1940இல் மதுரையில் பொது வுடைமைக் கட்சித் தொடங்கிய போது உறுப்பினர்களான 9 பேர் களில் ஒருவரான சங்கரய்யா 1986இல் இ.பொ.க.(மா) கட்சியின் நடுவண் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 முதல் 2002 வரை கட்சியின் தமிழ் நாட்டுச் செயலாளராகச் செயல்பட் டார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டதால் பட்டம் பெறமுடியாமல் போன சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கத் தீர்மானித்தும் ஆளுநர் ஆர்.எஸ்.இரவி ஒப்புதலளிக்க மறுத்ததனால் அது இயலாமல் போனது.

15.07.1922இல் பிறந்து 15.11.2023இல் தனது 102ஆம் அகவையில் மறைந்த தோழர் என்.சங்கரய்யாவுக்கு புதிய சிந்தனையாளன் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறது. 

***

கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற சி.பாலசுப்பிரமணி மறைவு

ஒரிசா பாலு எனப் பலராலும் அறியப்படும் சி.பால சுப்பிரமணி, தமிழின்-தமிழர்களின் தொன்மையை உலக அளவில் கடல்வழியில் தேடியவர். 1963இல் திருச்சி, உறையூரில் பிறந்த இவர் வரலாற்றை, புவி யியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பொறியாளர் ஆவார்.

ஒருங்கிணைந்த பெருங்கடல் ஆய்வு நடத்தியவர். குமரிக்கண்ட (இலெமுரியா) கடல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான ஆய்வு களைத் தொடர்ந்து செய்து வந்தவர். ஒரிசா புவனே சுவர் தமிழ்ச் சங்கத்தில் இணைந்து அங்குள்ள தமிழர் களை ஒருங்கிணைத்தவர்.

‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்-ஆதிச்ச நல்லூர்ச் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்’ என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் முன்னெடுப்பில் 2009 மார்ச்சு 4, 5, 6 ஆகிய நாள்களில் சென்னையிலும் 2010 சனவரி 22, 23, 24 ஆகிய நாள்களில் திருநெல்வேலியிலும் நடத்திய கருத்தரங்குகளில் கடலியல் ஆய்வாளர், பொறியாளர் சி.பாலசுப்பிரமணி (ஒரிசா பாலு) அவர்கள் பங்கேற்று 'கடலில் மூழ்கிய தமிழகப் பகுதிகள்” என்ற பொருளில் கருத்துரைகள் நிகழ்த்தினார். அவர் 06.10.2023 அன்று தம் 60ஆம் அகவையில் மறைவுற்றது பேரிழப்பாகும்.

புதிய சிந்தனையாளன் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துகிறது.

Pin It