மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து 2 மாணவர்கள் தீக்குளித்ததாக வந்த செய்திகள் திட்டமிட்ட நாடகம் என்று தெரிய வந்துள்ளது. தில்லியில் தீக்குளித்தவருக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு முடிவைக் கண்டித்து சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை மத்திய அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அவர்களுக்கு சில உறுதி மொழிகளும் வழங்கப்பட்ட.ன. அதை ஏற்று தில்லியில் நடைபெற்ற பேரணிக்குப் பின் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி அறிவிப்பதாக மாணவர்களும், மருத்துவர்களும் உறுதி அளித்திருந்தனர்.

அதன்படியே போராட்டம் இரத்து தொடர்பான செய்தி வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் போராட்டத் தீயை ஆரம்பம் முதலே தூண்டிவிட்டு வரும் வடமாநில ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பரபரப்பான ‘பிளாஷ்’ செய்திகள் இடம் பெறத் தொடங்கின.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து தில்லியிலும் கட்டாக்கிலும் இரண்டு மாணவர்கள் தீக்குளித்து விட்டனர் என்பதுதான் அந்த செய்தி. அவர்கள் எதிர்பார்த்தபடியே இந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்க இருந்த மாணவர்கள் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிக் கொண்டு போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஆனால் உண்மை என்ன வென்றால் தில்லியில் தீக்குளித்த ரிஷி குப்தா என்பவருக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான். தில்லி இராம் லீலா மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது தீக்குளித்ததாகக் கூறப்படும் ரிஷி குப்தா உண்மையில் ஒரு சாலையோர பீடா வியாபாரி.

பீகார் மாநிலம் தகாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தில்லி சென்று அங்கு சாலையோரத்தில் பீடா விற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் தில்லியில் அவர் மர்மமான முறையில் தீக்குளித்தார். அவரது உடலில் 30 விழுக்காடு அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ரிஷி குப்தா எதற்காகத் தீக்குளித்தார் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை எனக் காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஆனால், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தைத் துண்டிவிட்டு வரும் சிலரோ இடஒதுக்கீட்டுக்கு எதிராகத்தான் அவர் தீக்குளித்ததாகக் கூறுகின்றனர். இதிலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய செய்ய வேண்டும் என்ற நோக்குடன் சிலர் திட்டமிட்டே இந்த தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் கட்டாக்கில் தீக்குளித்ததாகக் கூறப்படும் மருத்துவர் சுரேந்திமொகந்தி, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டவர்தான். அவர் தீக்குளித்ததாகக் கூறப்பட்ட போதிலும் அவரது உடலில் தீக்காயங்கள் எதுவுமே இல்லை என்று அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சாரங்கி தெரிவித்துள்ளார். மொகந்தி தற்போது மிகவும் பயந்த நிலையில் இருப்பதாகவும் அதற்குத் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதைப் பார்க்கும்போது எழும் சந்தேகம் இதுதான். போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் நோக்கில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மொகந்தியைத் திட்டமிட்டே சிலர் தீக்குளிக்க செய்து அதன் காரணமாக அவர் பயந்த நிலைக்கு சென்றிருக்கிறார்; இதுதான் நடந்திருக்கிறது.

மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அமுல்படுத்தியபோது, அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஒரு மாணவர் “தீக்குளித்து” மரணமடைந்தார். அவர் தனது மரண வாக்குமூலத்தில் தன் மீது யாரோ தீ வைத்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது, நினைவு கூரத்தக்கது.

Pin It