1991 முதல் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையை நடுவண் அரசும், மாநில அரசுகளும் ஏற்றுச் செயல்படுத்தி வருகின்றன. அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் என்கிற மாயை முதலாளிய ஊடகங்களால் இங்குப் பரப்பப்பட்டுள்ளது. முப்பது விழுக்காட்டினராக உள்ள மேல்தட்டு நடுத்தர வகுப்பினரிடையே அதிகரித்து வரும் வாங்கும் சக்தியைக் குறிவைத்தே அந்நிய நேரடி முதலீடுகள் பாய்கின்றன.

இந்தியாவின் பெரு முதலாளிய நிறுவனங்களான டாடா, பிர்லா, ரிலையன்சு ஆகியவை சில்லறை வணிகத்தில் வலிமையாகக் காலூன்றி வளர்ந்து வருகின்றன. தென் மாநிலங்களில் பேரங்காடிகளை (சூப்பர் மார்க்கெட்) நடத்திவரும் நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்தரா போன்ற நிறுவனங்கள் இவற்றுடன் போட்டியிட முடியாமல் பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

மொத்த வணிகத்தில் மட்டும் அந்நிய முதலீடு நூறு விழுக்காடு அளவுக்கு அனுமதிக்கப்படும் என்று 1997இல் அறிவிக்கப்பட்டது. சில்லறை வணிகத்தில் உலகில், எட்ட முடியாத உயரத்தில் முதல் நிலை நிறுவனமாக உள்ள அமெரிக்காவின் வால்மார்ட்டும், செருமனியின் மெட்ரோவும் இந்தியாவில் மொத்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. கடைகளைத் திறந்துள்ளன. இவை, தனி ஒருவருவர்க்கு விற்பனை செய்யக் கூடாது. மொத்தமாக விலைக்கு வாங்கும் சில்லறை வணிகர்களுக்கோ, வேறு பெரிய நிறுவனங்களுக்கோ மட்டும் விற்கவேண்டும் என்பது விதி. ஆனால் ரூ. 500க்கு ரூ. 1000க்கு அடையாள அட்டை கொடுத்துத் தனியாட்களுக்கும் விற்பனை செய்கின்றன.

சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீட்டிற்குக் கதவுகள் திறக்கப்பட்டன. 2006 ஏப்பிரல் முதல், 51 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஒற்றை வணிக முத்திரை கொண்ட பொருள்களை சில்லறை வணிகத்தில் விற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. இதனடிப்படையில் பெரு நகரங்களில் அமைக்கப்பட்ட அங்காடிகளில், எல்லாப் பொருள்களையும் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களாகக் காட்டிக்கொண்டு, தங்கள் விற்பனை முத்திரையில் பொருள்களை விற்கின்றன. இந்த முறைகேடுகளைக் கண்காணித்துத் தடுத்திட எந்த ஒழுங்குமுறை ஏற்பாட்டையும் அரசு உருவாக்கவில்லை.

இந்தியாவின் ஏழை எளிய மக்களை உய்விக்க, இத்தாலியிலிருந்து ‘அவதாரம்’ எடுத்து வந்துள்ள அன்னை சோனியா காந்தி 2007 இல் நடுவண் அரசுக்கு ஒரு மடல் எழுதினார். ஒரே வணிக முத்திரை என்கிற வரை முறையை மாற்றிப் பல்வேறு வணிக முத்திரை கொண்ட பொருள்களையும் சில்லறை வணிகத்தில் விற்பனை செய்வதில் அந்நிய நேரடி முதலீடு செய்வோரையும் அனுமதிக்கலாம் என்று அம்மடலில் எழுதியிருந்தார்.

சோனியா காந்தியின் கருத்தை ஆராயுமாறு, நடுவண் அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சகம், சர்வதேச பொருளாதாரத் தொடர்புகள் பற்றிய ஆய்வுக்கான இந்தியக் குழுமத்திடம் கேட்டுக் கொண்டது. இக்குழுமம், ‘அந்நிய முதலீடுகளுடன் செயல்படக் கூடிய சில்லறை வணிகமும், தற்போது நடைமுறையில் உள்ள அமைப்புசாரா சில்லறை வணிகமும் இணை கோடுகள் போல் செயல்படவும், பல்கிப் பெருகவும் வாய்ப்பு உள்ளது.’ என்று பரிந்துரை செய்தது.

நடுவண் அரசின், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை என ஒன்று இருக்கிறது. இத்துறைதான் அந்நிய முதலீட்டைத் தீர்மானிக்கிறது. பாதுகாப்புத் துறையில் 75ரூ அந்நிய முதலீடு இருக்கலாம்; தேவைப்படின் 100ரூ கூட இருக்கலாம் என்று முன்பு பரிந்துரைத்தது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் அந்நிய முதலீட்டு வரம்பு தற்போதுள்ள 26ரூ என்பதை உயர்த்தக் கூடாது என்று கூறிவிட்டது.

06.07.2010 அன்று தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, ‘பல்வேறு வணிக முத்திரை கொண்ட பொருள்களைச் சில்லறை வணிகத்தில் விற்பனை செய்வதில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற விவாதக் குறிப்பு அறிக்கையை வெளியிட்டு, இதன் மீதான கருத்தைக் கோரியுள்ளது.

“இந்தியாவில் வேளாண் விளைபொருள்களை அறுவடைக்குப் பின், சேமித்தல், பாதுகாத்தல், சந்தைப்படுத்தல், தரப்படுத்தல் முதலானவற்றில் நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றாததால் பெரும் சேதம் ஏற்படுகிறது. காய்கறிகள், பழவகைகள் அறுவடைக்குப் பின் 25ரூ-30ரூ வரை இவ்வாறு அழிகின்றன. தானியங்களில் 5ரூ-7ரூ வீணாகின்றன. ஓராண்டில் இவ்வாறு அழியும் பொருள்களின் மதிப்பு ஓர் இலட்சம் கோடி உருபா ஆகும்.

இவ்வாறு உணவுப் பொருள்கள் அழிவதைத் தடுக்க அறுவடைக்குப்பின் பாதுகாப்பாகச் சேமிக்க நவீன வசதிகள் கொண்ட கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் தேவை. திட்டக் குழுவின் ஆய்வின்படி, சங்கிலித் தொடர் போன்ற குளிர்பதனக் கூடங்களை அமைப்பதற்கு மட்டும் ரூ. 64,312 கோடி தேவை. எனவே, இவ்வளவு பெருந் தொகையை அரசால் அளிக்க முடியாது. ஆகவே, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தாராளமாக அனுமதிப்பதன் மூலம் சேமிப்புக் கிடங்குகளையும், குளிர்பதனக் கூடங்களையும் உருவாக்கலாம்.

இவ்வாறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதால், விளைபொருள்கள் பாழாவது பாதியாகக் குறையும். சில்லறை வணிகத்தில் ஈடுபடும் உள்நாட்டு - அயல்நாட்டு நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யும் நிலை ஏற்படும். தற்போது விற்பனை விலையில் - நுகர்வோர் தரும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே விவசாயிகள் பெறுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயிகள் இறுதி விற்பனை விலையில் மூன்றில் இரண்டு பங்கு பெறுகிறார்கள். எனவே இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலமும், அறுவடைக்குப்பின் உள்ள பல கட்டங்களிலும் நவீன தொழில் நுட்பத்தைக் கையாள்வதன் வாயிலாகவும் இந்திய விவசாயிகளும் விற்பனை விலையில் மூன்றில் இரண்டு பங்கு பெறுவார்கள்.

அந்நிய மூலதனத்துடன், நவீன தொழில் நுட்பமும் கிடைக்கும். நுகர்வோரின் தேவைக்கு ஏற்பப் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகளைக் குறிப்பிட்ட பயிர்களைச் சாகுபடிச் செய்யுமாறு கூறும். இதனால் உழவர், நுகர்வோர் இருதரப்பினருமே பயனடைவர். உழவர்களின் வருவாய் பெருக்கத்துக்கும், வேளாண் வளர்ச்சிக்கும், நுகர்வோர் குறைந்த விலையில் தரமான பொருள்களைப் பெறுவதற்கும், விலைவாசி குறைவதற்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்” என்று விவாதக் குறிப்பு அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தின் மதிப்பு இருபது இலட்சம் கோடி உருபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது விரைவில் முப்பது இலட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு மக்கள் நகரங்களிலும், நகரங்களைச் சார்ந்தும் வாழ்கின்றனர். இவர்களிடையே நுகர்விய மனமயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தச் சூழலை நன்கு பயன்படுத்தி, இந்தியப் பெரு முதலாளிகளும் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை இலாபம் ஈட்ட முனைந்து நிற்கின்றன.

உலகில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் உள்ள வால்மார்ட்டும் சுனில் மிட்லின் பார்தியும் கூட்டுச் சேர்ந்து உள்ளன. உலகில் இரண்டாம் நிலையில் உள்ள பிரான்சு நாட்டின் கரேபோர் நிறுவனமும் இந்தியாவில் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்சும் கூட்டாகச் சில்லறை வணிகத்தில் ஈடுபட உள்ளன. டாடா நிறுவனமும் ஆஸ்திரேலியாவின் உல் வொர்த் நிறுவனமும் இதுபோன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஆதித்திய பிர்லாவின் ‘மோர்’ தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும் பேரங்காடிகளை நடத்துகிறது. செருமனியின் மெட்ரோவும் இங்கிலாந்தின் டெஸ்காவும் இங்குக் கால் பதித்துள்ளன.

தமிழ்நாட்டில் 50 இலட்சம் சில்லறை வணிகர்கள் உள்ளனர். இந்திய அளவில் ஆறு கோடிப் பேர் உள்ளனர். இவர்கள் தவிர சுமை தூக்குவோர், சரக்கு வாகனங்களை ஓட்டுவோர் என ஒரு கோடிப்பேர் இருக்கின்றனர். ஆகவே சில்லறை வணிகத்தில் ஏழுகோடி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களையும் இவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து 17 கோடிப்பேர் சில்லறை வணிகத்தை நம்பி வாழ்கின்றனர்.

சில்லறை வணிகத்தில் மூன்று வகையினர் உள்ளனர். பல இலட்சம் உருபா முதலீடு செய்து பெரிய அங்காடியாக அமைத்து எல்லா வகையான பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள் முதல் வகையினர். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமின்றிச் சிறு வணிகர்களும் பொருள்களை வாங்குகின்றனர். சில இலட்சம் முதல் பல ஆயிரம் உருபா முதலீடு செய்து கடை வைத்திருப்போர் இரண்டாம் நிலையினர். பெரும்பாலும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இக்கடைகளில் வேலை செய்கின்றனர். சிறிய நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் தம் வீட்டின் முன் பகுதியையே கடையாக மாற்றி வணிகம் செய்வோரும் இதில் அடங்குவர். பெட்டிக் கடைகள் வைத்திருப்போரும் இப்பட்டியலில் இடம் பெறுவார்கள். சில ஆயிரம் முதல் நூறு உருபா வரை முதலீடு செய்து தலைச் சுமையாகக் கூடைகளில், மக்கள் நடமாட்டம் மிக்க வீதியோரங்களின் நடை பாதைகளில் மிதிவண்டியில், தள்ளுவண்டியில், இரு சக்கர மூன்று சக்கர வாகனங்களில் கூவிக் கூவி விற்போர் மூன்றாம் வகையினர். இந்த வகையினருள் ஏழை எளிய பெண்களே அதிகமாக இருக்கின்றனர்.

இந்தியாவில் 120 கோடி மக்கள் உள்னர். இவர்களில் 7-இல் 1-பங்கினரின் வாழ்வாதாரமாக விளங்கும் சில்லறை வணிகத்தைச் சீரழிக்க இந்தியப்பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கைகோத்து நிற்கின்றன. இவர்களின் நலன்களைக் காப்பதிலும் பேணுவதிலும் அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. இப்பெரு முதலாளிகளுக்காகப் பொய் மூட்டைகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுகின்றன.

இடைத் தரகர்கள் இல்லாமல் உழவர்களிடம் நேரடியாக வாங்குவதால் விலை குறையும் என்று கூறப்படுகிறது. ஆன்-லைன் வணிகம் என்று சொல்லப்படுகிற முன்பேர ஊக வணிகம்தான் சந்தையில் விலைகளைத் தீர்மானிக்கிறது. இந்த நிலை நீடிக்கின்ற வரையில் விலைவாசி குறையாது. பன்னாட்டு நிறுவனங்களைச் சில்லறை வணிகத்தில் பெருமளவில் பங்கேற்க அனுமதித்தால், முன்பேர ஊக வணிகம் மேலும் பெருகும். செயற்கையான தட்டுப்பாடு ஏற்படும். அதனால் விலைகள் மேலும் உயரும்.

சில்லறை வணிகம் பெருமுதலாளியக் குழுமங்களின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும்போது, கொள் முதல் விலையையும், விற்பனை விலையையும், தீர்மானிக்கும் அதிகாரம் இவைகளின் கையில் இருக்கும். அய்ரோப்பிய ஒன்றியத்தின் 15 நாடுகளில் 2007ஆம் ஆண்டில், சில்லறை வணிகத்தின் விற்பனையில் 50 விழுக்காட்டிற்கு மேல் ஐந்து பெரிய நிறுவனங்களிடமே இருந்தன. பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இது 70% - 80% வரை இருந்தது. சொந்த தயாரிப்புகளில் விற்பனை இங்கிலாந்தில் 43% டென்மார்க்கில் 40% பெல்ஜியத்தில் 42% என்று இருந்தது. இவ்வாறு சில்லறை வணிகத்தில் ஏகபோக - ஏகாதிபத்திய நிலையைப் பெருமுதலாளியக் குழுமங்கள் அடைவதால், எல்லா வகையிலும் அவை வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்படுகிறது.

உழவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என்பதும் உண்மை நிலையைத் திரித்துக் கூறுவதாகும். மலேசியாவில், பிரான்சு நாட்டின் கரேபோர் பன்னாட்டு நிறுவனம் காய்கறிகள் - பழங்களில், 41% மொத்த வணிகர்களிடமும், 18% உழவர்களிடமும் கொள்முதல் செய்கிறது. மீதி 41 விழுக்காட்டை இடைநிலையில் இருப்பவர்களிடம் வாங்குகிறது. இந்தியா போன்ற பரந்த பெரிய நாட்டில் - விவசாயிகளில் 75 விழுக்காட்டினர் சிறு - குறு விவசாயிகளாக உள்ள சூழ்நிலையில், விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.

இந்தியாவில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி முதலாளியக் குழுமங்களின் பேரங்காடிகளுக்கான (சூப்பர் மார்கெட்) வேளாண் விளை பொருள்கள் பெரும்பாலும் ‘தொடர்பு விவசாயி’ என்பவரிடமே கொள்முதல் செய்யப்படுகின்றது. இந்தத் ‘தொடர்பு விவசாயி’ என்பவர், ஊரகப் பகுதிகளிலும் நகரங்களிலும் உள்ள இடைத்தரகர்களேயாவர். எனவே இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்பது வெற்று முழக்கமேயாகும். அதனால் விலை குறையும் என்பதும் ஒரு ஏமாற்றே!

காய்கறிகள் பழங்களைப் பொறுத்த அளவில், அவை தரம் பிரித்தே வாங்கப்படுகின்றன. முதல்தரம் என்பவை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. மீதியை உழவர்கள் நகரங்களில் மண்டிகளில் விற்க வேண்டியுள்ளது.

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ள மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட, குழுமங்கள் உழவர்களிடம் எழுத்துவடிவிலான ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை. இந்தியாவிலும் இதே நிலைதான் உள்ளது. அதனால் என்ன விலையில், எந்த அளவு கொள்முதல் செய்யப்படும் என்பது விவசாயிக்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. அதனால் அறுவடை காலத்தில் நிலவும் சந்தை விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் நிருணயிக்கப்படுகிறது. தாராளமயச் சந்தையின் சூதாட்டத்தில் உழவர்கள் தொடர்ந்து பலியிடப்படுகிறார்கள்.

கொள்முதல் செய்த பொருளுக்குக் காலம் தாழ்த்திப் பணம்தருவது, கடைசி நேரத்தில் விலையைக் குறைப்பது, அதன்மூலம் கொண்டுவந்த பொருளை விற்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு உழவர்களை உள்ளாக்குவது, தரம் மற்றும் வாங்கும் அளவு ஆகியவற்றை விருப்பம்போல் மாற்றுவது, சேமித்து வைப்பதைத் தவிர்ப்பதற்காக, கேட்கும்போது மட்டுமே பொருளை விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறுவது, சரியான காரணத்தைக் கூறாமல் கொள்முதல் செய்வோர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவது போன்ற முறைகேடுகளை இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் முதலாளியக் குழுமங்கள் செய்து வருகின்றன.

இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டதற்காக 2005 ஆம் ஆண்டு தென்கொரிய நாட்டில், கரேபோர் நிறுவனத்துக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்து கொண்டவரிடம் பொருளை வாங்க மறுத்ததற்காக இந்தோனேசியாவில் கரேபோர் நிறுவனத்துக்கு 1,70,000 டாலர் தண்டம் விதிக்கப்பட்டது. இந்தியாவில் இதுபோல் பெருமுதலாளியக் குழுமங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை செய்யப்படவில்லை. அவ்வாறு விதிகளை உருவாக் கினாலும் பன்னாட்டு நிறுவனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப் படாது என்பதற்குப் போபால் நச்சுவளிக் கசிவு நிகழ்வும், அணு விபத்து இழப்பீட்டுச் சட்டமும் சான்று பகர்கின்றன. உள்நாட்டு வணிகர்கள் செய்யும் சட்ட விரோதச் செயல்களையே கட்டுப்படுத்த முடியாத அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் முன் பல்லிளித்து நிற்கும்!

சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தைத் தடையின்றி அனுமதிப்பதால், வேளாண்மையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருகும். கிராமப்புறப் பொருளாதாரம் வளரும் என்று சொல்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக வேளாண்மை அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நீர்ப்பாசனத்தில் முதலீடு செய்வது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. மொத்தச் சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது. இறைவைப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மின் தட்டுப்பாட்டால் பந்தாடப்படுகின்றனர். கூட்டுறவுச் சங்கங்கள் சீரழிந்துவிட்டன. வேளாண் இடு பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. வேளாண் சந்தையில் தனியார் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளை நிலங்கள் மனைகளாக மாறி வருகின்றன. இத்தகைய குறைபாடுகளைப் போக்குவதற்கான முதன்மையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல் வேளாண்மையை உயிர்ப்பிக்க முடியாது. இத்தகைய முதல் நிலை கட்டமைப்புகளை உருவாக்கிட அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர மாட்டா! சேமிப்புக் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் கட்டுவதால் மட்டுமே வேளாண்மை வளர்ச்சி அடைந்து விடாது. இவை உழவர்களை மேலும் சுரண்டுவதற்கான கருவியாகவே பயன்படும்.

‘மோர்’ நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11,000 பேர்க்கு வேலை கொடுத்திருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. அமைப்புச் சாரா சில்லறை வணிகத்தில் பத்து பேரின் வேலையைப்பலியிட்டே முதலாளியக் குழுமத்தின் பேரங்காடியில் ஒரு வேலை உருவாக்கப்படுகிறது. எல்லா நாடுகளிலும் இப்படித்தான் நடக்கிறது. என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. எனவே, கிராமப்புற இளைஞர்களுக்கும் நகர்ப்புற இளைஞர்களுக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தொழில் மற்றும் வணிக அமைச்சர் ஆனந்த சர்மா கூறுவது ஒரு பித்தலாட்டமே! தொழில் துறையில் அந்நிய முதலீட்டால், உயர்தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதுதானே உண்மை. அதனால்தானே இதை ‘வேலையை உருவாக்காத வளர்ச்சி’ என்று கூறுகிறோம்.

சில்லறை வணிகத்தில் உணவு தொடர்பான பொருள்களின் பங்களிப்பு 70 விழுக்காடாகும். எனவே சில்லறை வணிகமும் வேளாண்மையும் பின்னிப்பிணைந்துள்ளன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது இவர்களின் வாழ்வைச் சூறையாடுவதாகவே அமையும்.

பன்னாட்டு நிறுவனங்களைச் சில்லறை வணிகத்தில் கட்டுப்பாடு இன்றி நுழைய விடுவதால், வெளிநாட்டுப்பொருள்கள் இந்தியச் சந்தையில் குவியும். இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் விலை வீழ்ச்சியடையும். இவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் நசிந்துவிடும். இதனால் வேலையின்மை அதிகமாகும்.

வேளாண்மை மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. ஆனால் நடுவண் அரசில் உள்ள ஒரு துறை வேளாண்மை தொடர்புடைய சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு எடுப்பதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு!

இந்தியாவை மறு காலனியாக்கச் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதாகும் என்கிற உண்மையை மக்களுக்கு உணர்த்தி, அணிதிரட்டிப் போராடுவோம்.

(*இக்கட்டுரை எழுதுவதற்கான சில ஆதாரங்கள் Economic and Political Weekly, August 21, 2010 இதழிலிருந்து எடுக்கப்பட்டன.)

Pin It