திருத்தப்பட்டு விரிவாக்கம் பெற்ற இரண்டாம் பதிப்பு - சில விமர்சனக் குறிப்புகள்

முப்பத்தைந்து ஆண்டுக் கால நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2010இல் வெளிவந்துவிட்டது. பெரியார் எழுத்துக்களின் வெளியிட்டு உரிமைச் சிக்கலால், பெரியார் திராவிடர் கழகத்தின் குடிஅரசு பதிப்பு முயற்சிகள் முடங்கியிருந்த சூழலில் பதற்றத்தோடும் ஆவலோடும் இவ்வெளியீட்டைத் தமிழ்ச் சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர் பங்கேற்பார் என்னும் தகவலால் புத்தகம் வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்து பதற்றம் கொஞ்சம் தணிந்தது. வெளியீடு நிகழ்ந்த பிறகே அச்சம் முழுமையாக அகன்றது.

திருச்சிச் சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் 1974இல் வெளிவந்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் பதிப்பு வடிவத்தில் பெரியது (ராயல்). சென்னை பெரியார் ஈ.வெ.இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள இந்த இரண்டாம் பதிப்பு அளவில் (டெமி 1/8) சிறியது. வடிவ மாற்றம், புதிய சேர்க்கை ஆகியவற்றால் பக்க எண்ணிக்கை மிகுந்துவிட்டது. இரண்டும் வே.ஆனைமுத்துவின் பதிப்பில் உருவானவை.

பெரியாரின் சிந்தனைகளைத் தொகுக்கும் பணி, தடை செய்யப்பட்ட ‘குடி அரசு கலம்பகம்’ மூலம் 1930களில் இயல்பாகவே தொடங்கி விட்டது. 1974இல் வெளிவந்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இம்முயற்சியின் முக்கியக் கட்டம். மூன்று பாகங்கள் கொண்ட அந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (பெரியார் திடல்) மூலம் பெரியார் களஞ்சியம் 1976 முதல் வெளிவரத் தொடங்கியது. அது கடவுள், மதம், பெண்ணுரிமை, சாதி, தீண்டாமை ஆகிய தலைப்புகளில் இதுவரை 32 நூல்களாக 10,000 பக்கங்களைத் தாண்டிவிட்டது. 2009 முதல் குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களின் கட்டுரைகளை ஆண்டுவாரியாகக் காலவரிசையில் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 1925 ஆண்டினது ஒரு தொகுப்பாகவும், 1926 - 1934 வரை ஆண்டுக்கு (ஜனவரி முதல் ஜூன்; ஜூலை முதல் டிசம்பர்) இரண்டு தொகுப்புகளாகவும் இதுவரை 17 தொகுப்புகள் வந்துள்ளன. (நன்கொடை என்னும் நாகரிகப் பெயருடன் அதிக விலை கொண்டவை இவை.) இதற்கிடையில் (புதையலில் கிடைத்த செல்வம் போல) பெரியார் திராவிடர் கழகத்தினர், குடிஅரசு (1927-1949) இதழின் கட்டுரைகளை 27 தொகுதிகளாக அதிரடியாக ஜூன் 10, 11 தேதிகளில் சேலத்திலும் சென்னையிலும் வெளியிட்டுத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தனர். பெரியாரின் ஆங்கில இதழான சுநஎடிடவ தொகுப்பையும் இவர்கள் இவற்றுடன் வெளியிட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் பல இதழ், பல பொருள் அடிப்படையில் உருவாகி வெளிவந்துள்ள ஆனைமுத்துவின் பெரியார் சிந்தனைகள் தொகுப்பு முயற்சி முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமையர் காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர் ஆகியோருக்கு உருவாகியிருக்கும் அவர்தம் வாழ்க்கை, பணிகள், சிந்தனைகள் ஆகியவற்றின் ஆவணப் பதிவுகளைப் பார்க்கும் போது பெரியாருக்குச் செய்ய வேண்டிய ஆவண முயற்சிகள் ஏராளம் இருக்கின்றன எனத் தெரிய வரும். காந்தி எழுத்துக்களின் ஆதாரபூர்வத் தொகுதிகள் வெளிவந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன. காந்தியின் அளவுக்கு முழுமையும் பரவலும் இல்லை எனினும் நேருவின் ஆவணங்களும் இந்த வகையில் மிகுந்திருக்கின்றன. அம்பேத்கரின் முழுச் சிந்தனைகள் மராத்தி, ஆங்கிய மொழிகளில் நூலுருவாக்கப்பட்டுவிட்டன. இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை அரசாங்கமே எடுத்துக்கொண்டுள்ளது. இவ் வகையில் தமிழில் இதுவரை 25 தொகுதிகளுக்குமேல் வந்துள்ளன.

பெரியாருக்கு எழுத்து ஆவணங்கள் வெளி வந்திருப்பினும், 1974இன் பெரியார் சிந்தனைகள் தொகுப்புக்குப் பிறகு எதுவும் வெற்றியைத் தொடவில்லை. பெரியார் திடல் களஞ்சியங்கள் கட்சி, மற்றும் தொண்டர்கள் எல்லையைத் தாண்டவில்லை. எஸ்.வி. ராஜதுரை - கீதா உழைப்பில், வெளியான ஆவணங்கள் அல்லாத ஆனால், ஆவண மதிப்பைப் பெற்ற பிரசுரங்களால் பெரியாரின் சிந்தனைகள் கடந்த பத்தாண்டுகளில் அறிவுச் சூழலில் பெரும் பரவலைப் பெற்றன. 2003இல் தொடங்கிப் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குடி அரசுவின் மூன்று தொகுப்புகள் தனிச்சுற்றுப் சிறுபத்திரிகையின் நிலையை எய்தின. புதியனவற்றின் பரவலை இனித்தான் உணர முடியும். இந்தச் சூழலில் ஆனைமுத்துவின் புதிய பதிப்பு நல்வரவேற்பைப் பெறும் என நம்பலாம். ஆனாலும் முழுமையை நோக்கிய ஆவண முயற்சிகளின் முதற்கட்டப் பணிகளின் தொடக்கமே இவை.

பெரியார் எழுத்து மற்றும் சொற்பொழிவு களின் பிந்தைய காலம் அதாவது 1950 முதல் 1973ஆம் ஆண்டுக் காலப் பதிவுகளின் முழுமை, அதற்கு முந்தைய காலத்தில் (1925 - 50) விட்டுப் போனவை. அயலகப் பயணத்தில் நேர்ந்த பதிவுகள் (இவற்றை ஆனைமுத்துச் சிறப்பாகக் குறிக்கிறார்). அவர் நடத்தியது தவிர, மற்ற இதழ்களில் வந்த பெரியாரின் எழுத்துகள் என்னும் வகையில் தொகுக்க வேண்டியவை ஏராளம் உள்ளன. ஆனைமுத்துவின் அனுமானத்தில் அவை 300 நூல்களாக அமையும். இப்பணி முழுமைப்படின் முதற்கட்டப் பணி நிறைவுபெற்றதாகக் கொள்ளலாம்.

இங்ஙனம் உருவாகும் ஆவணங்களின் முழுத்தொகுப்புகள் முதலில் தமிழ் உலகில் பரவலாக வேண்டும். பிறகு அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். பின் தேவைப்படும் தென்னிந்திய, வட இந்திய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட வேண்டும். அதற்குரிய சிந்தனை வலு பெரியாரிடம் உண்டு. இந்தியாவின் மிகப்பெரும் சிந்தனையாளரின் தொகுப்பில் பெண்கள் சிந்தனைகள் பற்றிய பகுதியே இல்லை. ஆனால் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளுக்கு 1929 தொடங்கி நீண்ட வரலாறு இருக்கிறது. இன்னும் இதுபோல் பல உண்டு. காலத்திற்கு முன் கூவிய குரலைத் தொகுத்து வெளிப்டுத்தும்போது அதன் முன்னோடித்தன்மை தெரியவரும். இவை எல்லாம் நடைபெற ஆனைமுத்துவின் இத்தொகுப்புகள் முன்னோடும் பிள்ளை.

சமுதாயம், இயக்கங்கள், அரசியல், மதமும் கடவுளும், தத்துவம், கிளர்ச்சிகளும் செய்திகளும், Speeches and Writings எனப் பொருளடிப்படையில் ஏழு நூல் தொகுதியாக அமைந்தது பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரு வரிசைகளாய் அமைந்த இப் பெரும் தொகுப்பு மொத்தம் 20 நூல்களைக் கொண்டது. இதில் முதல் பதிப்பின் நூல்கள் ஒன்பது. இதில் ஒரு நூல் ஆங்கிலம். புதிய சேர்க்கைகளாக 11 நூல்கள். ஒவ்வொரு வரிசையின் முதல் நூலிலும் பதிப்பாசிரியரின் நீண்ட முன்னுரை உண்டு. தவிர ஒவ்வொரு நூலிலும் சிறப்பு முன்னுரையையும் அவர் எழுதியிருக்கிறார்.

பெரியாரின் புரட்சிகரச் சிந்தனைகளை முழுமையாகத் தொகுத்துவிட வாய்ப்புள்ள பொருள் பிரிவுகளைக் கொண்ட இத்தொகுப்பு அவரது சிந்தனைகளின் முழுப்பதிவுகளைப் பெற்றிருக்கவில்லை என்பது ஒரு பெரும் குறையாகத் தோன்றுகிறது. ஏறக்குறைய 1949 வரை முழுமைக்குப் பக்கத்தில் இருக்கின்றன பதிவுகள். அதற்குப் பிறகான செயல்பாட்டின் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவானவற்றின் பதிவுகளே இதில் உள்ளன.

1953இல் தமிழ்நாட்டின் இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரியார் மேற்கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியோ குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பற்றியோ இத் தொகுப்பில் தகவல்கள் முழுமை பெறாதிருக்கின்றன. பெரியாரின் பிற்கால வாழ்க்கையின் செயல்களும் சிந்தனைகளும் குறித்துத் தகவல் பெற ஏதுவான ஆவணங்கள் பதிப்புக்குக் கிடைக்காதிருக்கலாம். குறிப்பாக 1950 முதல் 1973 வரையிலான காலத் தகவல்கள் மிகக் குறைவு. 1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியாரின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய அரிய தொகுப்பு எனப் பெருமை பொங்கக் குறிப்பிடுகிறது இப்பதிப்பின் விளம்பரத் துண்டறிக்கை ஒன்று. இக்கோரிக்கை தகுதி பற்றியதன்று, விருப்பம் சார்ந்தது.

இரண்டாம் பெரும் குறை, இத்தொகுப்பு நூல்களின் வரிசை முறை. இருபது நூல்களுக்கும் வரிசை எண்களோ தொடர்ச்சியான பக்க எண்களோ இல்லாதது நூல்களைப் படிப்பதற்குப் பெரும் தடையாக உள்ளது. பார்வை நூல்களாகப் பயன்படும் இவற்றுக்குத் தொடர்ச்சியான வரிசை எண் எதற்கு எனத் தோழர் ஒருவர் வினவினார். பார்வை நூலாகப் பயன்படும் லெக்சிகனுக்குக் கூடத் தொடர்ச்சி எண் உள்ளது என்பது தோழருக்குத் தெரிந்திருந்தும் அப்படிக் கேட்டார்.

தொகுதியின் எண்களையும் பகுதியின் எண்களையும் நூற்புறத்தில் நூலின் அளவைப் பற்றிக் கருதாமல் ஒரே அளவில் அச்சிட்டிருக்கலாம். அதைவிட முக்கியம் 20 நூல்களுக்கும் சேர்த்து ஒரு தொடர் எண்ணை அளித்து அதை நூலின் முதுகில் அச்சிட்டிருக்கலாம். நூலகத்தில் நூலைத் தேடிப் படிப்பவர்களுக்கு இது உதவியாயிருக்கும்.

இத்தொகுப்பு நூலின் சிறப்புகளாக ஆறு அம்சங்களைப் பதிப்பாசிரியர் குறிக்கிறார். குறிப்பெண் விளக்கம், புதிய சேர்க்கைகள் ஆகியன முதலிரண்டு சிறப்புகள். பெரியாரின் சொற்பொழிவுகளை இரண்டாம் நிலையினதாகக் கருதும் பதிப்பாசிரியர் கட்டுரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள் ஆகியவற்றினால் அமைந்த எழுத்துகளையே முதல் நிலையினதாகக் கொள்கிறார். அதற்கேற்பவே இந்நூலை அமைத்ததாகவும் கூறுகிறார். இதையே மூன்றாம் சிறப்பம்சம் என்கிறார். நூலின் புறத்தோற்றமும் உள்ளமைப்பும் கண்ணையும் நெஞ்சையும் கவரும் தன்மை வாய்ந்தவை என்பது நான்காம் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. 1917 -19ஆம் ஆண்டுகளில் ஈரோடு நகராட்சித் தலைவராகப் பெரியார் விளங்கியபோது கூட்டத்தின் முடிவுகளை ஆங்கிலத்தில் கைப்பட எழுதியவற்றை முன்னுரையில் பதிப்பித்துள்ளது ஐந்தாம் அம்சம். ஆறாம் சிறப்பு ஒளிப்படங்கள்.

ஒவ்வொரு இயலின் முடிவிலும் அமையும் அடிக்குறிப்புகளைக் குறிப்பெண் விளக்கம் என்னும் புதிய பெயரில் கொடுத்திருக்கிறார் பதிப்பாசிரியர். இவை மிகுந்த எண்ணிக்கையில் அமைந்துள்ளன. பின் தலைமுறையினருக்கான இக்குறிப்புகளின் தேவையைப் பதிப்பாசிரியர் உணர்ந்துள்ளார். இது நன்று. எனினும் இவை இன்னும் கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இவற்றை வேகமாக வாசித்துக் கொண்டு போனபோது இடறிய ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்டுகிறேன்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1922இல் சௌரிசௌராவில் காவல் நிலையத்தைச் சத்தியாகிரகிகள் தாக்கி அழித்தது ஒத்துழையாமை இயக்க நிகழ்வில் ஒரு முக்கியச் சம்பவம். இதை, சட்ட மறுப்பு இயக்க நிகழ்வாகக் குறிப்பெண் விளக்கம் குறிக்கிறது (பக். 1701, இரண்டாம் வரிசை).

விடுதலைப் போராட்டத் தலைவர் ஜார்ஜ் ஜோசப் (1887-1938), ஆந்திரப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் கட்டமஞ்சி இராமலிங்க ரெட்டி ஆகியோரின் பிறப்பு - இறப்பு குறிப்புகள் முதல் எழுத்து ஆகியவை முறையே தவறாகத் தரப்பட்டுள்ளன. ஆதார வலுவும் வரலாற்றுப் பொருண்மையும் கொண்ட நூலில் இத்தகைய சிறு பிழைகள்கூடத் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது.

“லோக குரு சங்கராச்சாரி சுவாமி”களின் பாதத்திற்கு 1008 பவுன் கொண்டு, ஒவ்வொரு பவுனாய்ப் போட்டு அர்ச்சித்து (சஹஸ்திர நாமம் செய்து) அவரது பாத தீர்த்தம் சாப்பிட்டு “தர்ம பூஷணம்” ‘என்று கௌரவப் பட்டம் பெற்றவர்’ (பக். 3966, இரண்டாம் வரிசை) என்று பிரதியில் கிண்டல் செய்யப்படும் தி.நா. முத்தய்ய செட்டியார், குறிப்பெண் விளக்கத்தில் இதற்கு நேர் எதிராய்ப் பாராட்டுப் பெறுகிறார். அடிமைச் செயல் என்று கட்டுரை கிண்டல் செய்ததை, அறப்பணி எனக் குறிப்பெண் விளக்கம் புகழ்ந்துரைக்கிறது. இராமன், கிருஷ்ணன், திரௌபதை ஆகியோர் பற்றிய குறிப்பெண் விளக்கங்களும் இதைப் போன்று பொதுப்புத்தி சார்ந்தே உள்ளன. பெரியார் என்னும் புரட்சியாளரின் நூலில் கிடைக்கும் விளக்கங்கள் என்ற எண்ணம் துளிக்கூடத் தோன்றவில்லை.

“...ஆனாலும் புதுமையை வெளிப்படுத்தாத பத்திரிகை இருந்தென்ன? செத்தென்ன? இந்த நல்ல புதுமையை வெளியிடாத சித்திர புத்திரன் இருந்தென்ன? அந்தமானுக்குப் போயென்ன?” (பக். 3909, இரண்டாம் வரிசை) என வருகிறது ஒரு வசவுத் தொடர். இதில் போகிற போக்கில் குறிப்பிடப்பெறும் ‘அந்தமான்’ என்ற ஊர்ப்பெயருக்குக் கூடக் கர்ம சிரத்தையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில், மணிமேகலை என்னும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு வர, மணிமேகலை நூல் பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக். 4152, இரண்டாம் வரிசை). மணிமேகலைக் காப்பியத்தின் முக்கியக் கதாபாத்திரம் மணிமேகலை என்றாவது சேர்த்திருக்கலாம். இப்படிப் பசுவை, கடைசியாக அந்தப் பனைமரத்திலாவது இழுத்துவந்து கட்டியிருக்க லாம். பசு வயலில் திரிகிறது; பனைமரம் தனியாக வரப்பில் நிற்கிறது. குறிப்பெண் விளக்கம் கவனமாகத் தயாரிக்கப்படவில்லை என்பதற்கு இவை சான்றுகள். வேண்டாத அந்தமானுக்கும் குறிக்கப்படாத மணிமேகலை நூலுக்கும் விளக்கம் தரும் பிரதி, முக்கியச் சுயமரியாதைக் காரர்கள் சிலர் குறித்து முழுமையான விவரம் தேடித்தராது விடுகிறது.

எல்லோருக்கும் விளக்கம் எழுதப்போதிய பொருள் அறக்கட்டளைக்கு இல்லை என்ற சமாதானம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. எனினும் ராகு, கேதுகளுக்கெல்லாம் குறிப்பெண் விளக்கம் உள்ள நூலில் என்.வி.நடராஜன், எஸ்.வி.லிங்கம், ஒ. கந்தசாமி செட்டியார், திருமலைச்சாமி போன்றோருக்கு முழுமையான குறிப்பெண் விளக்கம் இல்லை. இந்து மகா சபையின் டாக்டர் மூஞ்சேவுக்கு இடம் உள்ள நூலில், தென்னிந்திய நல உரிமைச்சங்கத்தின் பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தத்துக்கு இடமில்லையே! குறிப்பிட்ட நபருக்கு / பொருளுக்கு எந்தப் பக்கத்தில் குறிப்பெண் விளக்கம் உள்ளது என்று அறிய இப்பார்வை நூலில் குறிப்பு இல்லை. தேடித்தான் தீர வேண்டும்.

கருத்தியல் சார்ந்து இத்தகைய குறிப்புகள் இருந்துவிடக் கூடாது என்ற பொது நடைமுறை இருப்பினும், பொதுப்புத்தி சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. எப்படியோ, குறிப்பெண் விளக்கங்கள் பொதுப்புத்தி சார்ந்தமைந்து, பெரியார் பிரதிக்கு எதிர் நிலையைக் கொண்டுள்ளன. ஆனால் கசப்பின் நிழல்கூட விழாது கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது கி. வீரமணி பற்றிய குறிப்பு!

‘எங்கள் மாகாணத்தில் இரண்டு பேர் பார்ப்பனரல்லாதார் கவர்னராகி விட்டார்கள். ஒரு சாயபும் ஒரு நாயுடுவும் கவர்னராகிவிட்டார்கள். ஒரு செட்டியாரும் ஆகக்கூடும்.” (பக். 4281, இரண்டாம் வரிசை). பிரதியில் இது ஒரு தொடர். மேற்கண்ட தொடரில் குறிப்பிடப் பெறும் சாயபும் நாயுடுவும் யார் எவர் என்று குறிப்பு எண் கொடுத்து விளக்கம் எழுதியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பிரதி மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். (சாயபு : முகம்மது உஸ்மான் (1934), நாயுடு : கே.வி. நாயுடு (1936) ஆகிய இரு பார்ப்பனரல்லாதாரும் பிரிட்டீஷ் ஆளுநர்கள் முறையே ஸ்டான்லி, எர்ஸ்கின் ஆகியோர் விடுப்பில் தாய்நாடு சென்றிருந்த குறைந்த காலத்தில் தற்காலிக ஆளுநர்களாகப் பணியாற்றியவர்கள், செட்டியார் எனப் பிரதி குறிப்பது ஆர்.கே. சண்முகம் செட்டியாரையாகும்.) சாதாரணமானவற்றுக்கும், எளிமையானவற்றுக்கும் விளக்கம் எழுதி நேரத்தைச் செலவிட்டிருக்கும் பதிப்பாசிரியர், மேலே கண்ட இது போன்றவற்றுக்கும் விளக்கம் எழுதியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பிரதியின் மதிப்பு மேலும் கூடி ஒரு காலகட்டத்தின் தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மூல ஆவணமாக மாறிவிட்டிருந்திருக்கும்.

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பெரியார் நடத்திய இதழ்களிலும் அவரது சமகால இதழ்களிலும் வெளி வந்தவை. விருதுநகர் முத்துநாடார் நடத்திய நாடார் குல மித்திரன் (1922) இதழில் வெளியான பெரியார் தொடர்பான கட்டுரைகள் முதன்முதலில் இத் தொகுப்பில் சேர்ந்துள்ளன. 1925இல் தொடங்கி 1949 வரை சிறிது இடைவெளியுடன் வெளிவந்த குடிஅரசுவின் பெரும் பகுதி, விடுதலை (1935)யின் சில இதழ்கள், புரட்சி, பகுத்தறிவு இதழ்களின் குறிப்பிட்ட கட்டுரைகள், சுதேசமித்திரன் (1923), கூhந ழiனேர (1924), சுநஎடிடவ (1928), திராவிடன் (1929), உண்மை (1970) சண்டமாருதம், புதுவை முரசு, கணையாழி என்று சில குறிப்பிட்ட இதழ்களின் ஓரிரு கட்டுரைகள் ஆகியவை இத்தொகுப்பில் உள்ளன. குடிஅரசு இதழ்களே இத்தொகுப்பின் மூலபலம், குடிஅரசு வின் பங்கு 95 விழுக்காடு எனில் மற்றவை எல்லாம் சேர்ந்து 5 விழுக்காடு எனக் கொள்ளலாம். இருந்தாலும் குடிஅரசின் அனைத்துக் கட்டுரைகளும் இத்தொகுப்பிற்குள் வந்துவிட்டன எனவும் சொல்லிவிட முடியாது. அதற்கு இரண்டு சான்றுகள்.

குடிஅரசின் சில தலையங்கங்களும் சொற்பொழிவுகளும் கொண்டநூல் குடிஅரசு கலம்பகம் (1930). அத்தொகுப்பின் 10 கட்டுரைகளுள் ஆறு மட்டுமே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆரிய மத வண்டவாளம் 3 (பக். 4018, இரண்டாம் வரிசை) என்ற 1940இல் வெளிவந்த படைப்பு இத்தொகுப்பில் உள்ளது. இத்தலைப்பிலான வரிசையில் மூன்றாம் எண் பெற்றுள்ள இக் கட்டுரையின் முதலிரு கட்டுரைகள் இருக்குமிடம் தெரியவில்லை. இந்த அகச் சான்றிலிருந்து இத் தொகுப்பில் இடம் பெறாதவையும் உண்டு என அறிய முடிகிறது.

பெரியாரின் சிந்தனைகளாக இடம்பெற்றுள்ள இத் தொகுதியின் கட்டுரைகள் அனைத்தும் பெரியார் எழுதியவைதாமா என்னும் கேள்வி எழுவது பெரியாருக்கோ பதிப்பாசிரியருக்கோ எதிரானது அல்ல. கவனத்துடன் பரிசிலித்து முடிவு செய்ததாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார். பெரும்பாலானவற்றைப் பெரியார் எழுதியிருக்கலாம். பெரியாரின் நேரடிப் பார்வையில் அவரது ஒப்புதலுடன் உருவான பல எழுத்துகளும் இருக்கலாம். மற்றவை பெரியாரின் பார்வையுடன் துணையாசிரியர்கள் எழுதியிருக்கலாம். இது மேலும் ஆராய வேண்டிய கருத்து.

சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும் என்ற கட்டுரை (பக். 4512, இரண்டாம் வரிசை) தத்துவம் என்ற தலைப்பிலமையும் முகாந்திரத்தைக் கட்டுரையை இரண்டு, மூன்றுமுறை படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘மற்ற இயக்கங்கள்’ என்பதிலோ ‘தன் விளக்கம்’ என்பதிலோ இதை அடக்கியிருக்கலாம். இப்படிப் பல கட்டுரைகள் தலைப்புக்கு அடங்க மறுத்துத் திமிறி நிற்கின்றன.

சுயமரியாதை வீரர் சி.நடராசனின் தாயார் மறைவிற்கான இரங்கல் குறிப்பின் தலைப்பு மாயவரம் தோழர் சி.நடராசன் என உள்ளது (பக். 4702, இரண்டாம் வரிசை). பெரிய தவறு என்ன என்றாலும் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் இயைபை விரும்பும் வாசகனுக்குப் பதிப்புத் தன்மை குறித்த நெருடலை இது தரக்கூடும். இன்னொரு இடத்தில் இத் தோழரின் மறைவுச் செய்தியும் தனியாகப் பதிவாகியுள்ளது.

ஈ.வெ.இராமசாமியும் வல்லத்தரசுவும் (பக். 4436, இரண்டாம் வரிசை) என்ற கட்டுரை 1933இல் விருதுநகர் நாடார் பரிபாலன சங்க ஆறாம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும். இக்கட்டுரைக்கு இத் தலைப்பு ஏன் எனத் தெரியவில்லை. சடங்குகள் ஒழிப்பு, சமதர்மம் ஆகியன பற்றிப் பேசும் அக்கட்டுரையில் வல்லத்தரசுவின் பெயர் சுட்டி எந்தத் தகவலும் இல்லை. மறைமுகச் சுட்டு இருப்பதாகவும் தெரியவில்லை. இது ஒரு சந்தேகம். இதேபோல், பக். 4765 முதல் 70 பக்கங்கள் வரை தொடரும் அறிமுகச் செய்திகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கும் அத் தலைப்பு பொருத்தமாக அமையவில்லை. பிரதியின் அரிய தன்மை இத்தகையவற்றைச் சலுகைகளாகப் பெற முடியாது.

பக்கம் 4557 உள்படப் பல இடங்களில் பாண்டியன் எனக் குறிக்கப்படுபவர் கழகத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவரான டபிள்யூ.பி.ஏ சௌந்திர பாண்டிய நாடார்தானா என்ற குழப்பமும் வாசகனுக்கு ஏற்படுகிறது. முன் குறிப்பிட்ட சந்தேகம், இப்போது குறிப்பிட்ட இந்தக் குழப்பம் இன்னும் இவை போன்று பிரதிக்குள் காணக் கிடைக்கும் பலவற்றை விவரிக்கவல்ல கட்சி அனுபவம் வாய்ந்தவர் இப்பதிப்பாசிரியர். அவர் இவற்றை விரிவாக்கி அடுத்த பதிப்பில் தரலாம்.

பெரியார் ஒரு கட்டுரையில் ஆர்.கே. சண்முகம் செட்டியாரைத் தூக்கிக் கொண்டாடுகிறார்; இன்னொன்றில் போட்டுத் தாக்குகிறார். இது ஏன் என்று தொகுப்பைத் தொடர்ந்து வாசிக்கும் சராசரி வாசகனுக்குத் தோன்றக்கூடும். ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் காரணத்தை யோசித்தால் அதில் ஒரு தொடர்ச்சி இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். பெரியாரின் நீண்ட பொதுவாழ்வில் அவரால் கண்டிக்கப்படாத தலைவர்கள் எவரும் இல்லை எனலாம். பல்வேறு அரசியல் சூழல்களில் செய்யப்பட்ட உடனடிப் பதிவுகள் இவை என்பதை மனத்தில் கொள்ளும் வாசகனுக்கு இவை சுலபமாகப் புரிந்துவிடும்.

இத்தொகுப்பின் சிறப்பாகப் பதிப்பாசிரியர் குறிப்பிடும் மற்றொன்று ‘அருஞ்சொற்பொருள் அகராதி’. இக்கால வாசகர்களுக்குப் பொருள் புரியாது எனப் பதிப்பாசிரியர் கருதும் பிரதியில் காணப்படும் கடினமான சொற்களுக்கான பொருளை ஆங்காங்கே குறித்துச் செல்கிறார். ஒரே இடத்தில் அகர வரிசையில் இச்சொல் பொருள் தரப்படாதிருக்க அகராதி என்று அதை ஏன் அழைக்கிறார் என்று தெரியவில்லை. பொருள் வழங்கப்பட்டிருக்கும் முறையை அறிய இரண்டு சான்றுகள் மட்டும் தருகிறேன்.

1931ஆம் ஆண்டில் ஆங்கில அரசுக்கும் காங்கிரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை விமர்சித்துக் குடிஅரசில் (8 மார்ச் 1931) வெளியான கட்டுரையின் ஒரு தொடர் பின்வருவது: “இராஜினாமா கொடுத்துவிட்ட உத்தியோக ஸ்தானங்கள் காயமாய் (ஏற்றுக்கொள்ளப்பட்டு - ப-ர்) பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இராஜினாமா கொடுத்தவர்களுக்கு மறுபடி உத்தியோகம் கொடுக்கப்படமாட்டாது” (பக். 2997, இரண்டாம் வரிசை). இதில் காயமாய் என வந்துள்ள அருஞ்சொல்லுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு எனப் பொருள் தந்துள்ளார் பதிப்பாசிரியர். இங்கு காயமாய் என்பது யீhலளiஉயடடல என்ற ஆங்கிலச் சொல் தரும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.

“சட்டமானது ஒரு வர்ஜாவர் ஜமில்லாமல் (வரையறை இல்லாமல் - ப-ர்) பத்ததி நிர்ணயம் (தெளிவான நோக்கம் - ப-ர்) ஆகியவை இல்லாமல்” என ஒரு தொடர் வருகிறது. (பக். 3007, இரண்டாம் வரிசை). இதில் வர்ஜாவர்ஜமில்லாமல் என்பதற்கு முழுப்பொருள் பதிப்பாசிரியர் குறிப்பிடுவது இல்லை

யென்றாலும் அதை விட்டுவிடலாம். (வர்ஜம் என்றால் விலக்கத்தக்கது எது, விலக்கத் தகாதது எது என்ற அளவுகோல் இல்லாமல் என்று பொருள்.) ஆனால் பத்ததி நிர்ணயம் என்பதற்குச் சரியான பொருள் முறை வரம்பிடுதல் அல்லது வரம்பிட்ட முறைகள் என்றல்லவா இருக்க வேண்டும்? இம்மாதிரியான சொற்களுக்கான பொருளைப் புரிந்துகொள்ளுவது வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு எளிது. ஆனால் இன்னும் வேறு பல சொற்கள் பிரதியில் பொருள் அவாவி நிற்கின்றன. உளமாந்தை, பச்சகானா, வேல் மிரவணை (பக். 4261, 4263) என்பவை அவற்றுள் சில. இத்தொகுப்பு, பார்வை நூலாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் பெயர்ச்சொல், பொருள் குறிப்பு அடைவுகள் ஆராய்ச்சியாளர்க்கும், குறிப்பிட்ட விடயத்தைப் படிக்க விரும்பும் சாதாரண வாசகனுக்கும் உதவுபவை. யார் எல்லாம், எவை எல்லாம் பெரியாரைப் பாதித்திருக்கிறார்கள், பாதித்திருக்கின்றன என்பதைப் பொதுவாக அறியக்கூட இந்த அடைவுகள் பயன்படும். பெரியாரால் 100 இடங்களுக்கு மேல் குறிப்பிடப்பெறும் நபர்களும் பொருள்களும் யார்? எது? என்ற விவரத்தை இந்த அடைவுகளிலிருந்து பெற முடியும். எந்தக் காலத்தில் யார் அவருக்குப் பொருள்படுத்தும் எதிரியாய், நண்பராய் அமைந்திருந்தார்கள்; எந்த விடயத்தை அவர் கடுமையாக எதிர்த்தார் - இப்படிப்பட்ட தகவல்களைச் சிறிய உழைப்பு கொண்டு இந்த அடைவுகள் கொண்டு ஒருவர் தயாரித்துவிட முடியும். தயாரிப்புக்குப் பெரும் உழைப்பைக் கோரினாலும் இவ்வடைவுகள் ஆயிரக்கணக்கில் பக்க எண்ணிக்கை கொண்ட இத்தகைய பார்வை நூல்களுக்கு மிகவும் தேவை. காந்தியின் தொகுப்புகள் போன்ற பெருந்தொகுப்புகளை அடைவுகள் இன்றி அணுகிப் பயன்பெறவே முடியாது. தமிழ் நூல்களில் இவை அத்திப்பூக்கள். பெயர் அடைவின் கீழ் உள்ள வரதராஜுலுநாயுடு பற்றி 1814, 2041, 2465, 2500, 2755, 3720 ஆகிய பக்கங்களில் உள்ள குறிப்புகள் கே.வி. நாயுடு, குப்புசாமி நாயுடு முதலியோரைக் குறிக்கின்றன.

‘பெரியாரின் எழுத்துதானா? பேச்சுதானா?’ என்ற உரைகல் ஒருபுற மிருக்க, எண்ணிக்கையில் மிக்க இக்கட்டுரைகளைத் திரும்பத் திரும்பப் பேசும் தன்மை கொண்ட இக்கட்டுரைகளைப் பொருள் அடிப்படையில் வகைப்படுத்துவது எளிதான பணி அல்ல, அதைப் பதிப்பாசிரியர் முடிந்தவரை நன்றாகச் செய்திருக்கிறார். எனினும் பரிசீலனைக்குச் சில புள்ளிகள்.

‘திருச்சியில் மாநாடு இரண்டாவது கூட்டம்’ என்ற கட்டுரை (பக். 4563, இரண்டாம் வரிசை). சேலம் மாநாட்டையும் அதன் சூழ்நிலையையும் பற்றித் தெரியாதவர்களுக்கு இது விளங்காது. திராவிடர் கழக வரலாறு தெரியாதவர்களால் இத் தொகுப்பின் பெரும்பான்மைக் கட்டுரைகளை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது.

காலந்தோறும் மாறிவந்த தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள், காங்கிரசுக்கும் இந்து மகாசபைக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் பெரியாருக்குமான உறவு நிலைகள், அவர் சார்ந்திருந்த கட்சியின் வரலாறு, கட்சி காலந்தோறும் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள், பொதுத் தேர்தலில் அவர் ஆதரித்த அரசியல் கட்சிபோன்றவற்றைப் பற்றிய முன் அறிமுகமில்லாமல் இந்தப் பிரதியை ஆழமாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. காலம் மற்றும் சூழல் பின்னணியை அறிமுக அளவிலேனும் தரவல்ல முன்னுரை இத்தகைய நூல்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று.

இத்தொகுப்பின் நீண்ட முன்னுரைகள் உள்ளடக்கத்தின் சில பத்திகளை நகல்செய்து, பிரதியின் சிறப்பை விளக்குவனவாக அமைந்துவிட்டன. பாவண்ணனின் தமிழ் மொழி பெயர்ப்பான நாக மண்டலம் நூலுக்கு எஸ்.வி. ராஜதுரை எழுதிய பின்னுரை போல இத்தொகுப்புகளுக்கு ஒரு முன்னுரை வேண்டும்.

திருப்தி தரும் வகையில் இல்லையென்றாலும் வாசிப்புக்கு நெருடல் அதிகமில்லாமல் மெய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதை பிரசார நிறுவன வெளியீடுகளான குடிஅரசு தொகுப்புகளைவிட நன்றாகப் பார்க்கப்பட்டிருக்கிறது எனச் சமாதானம் சொல்லலாம். பெரியார் உவமை கூறிய கம்பர் பாடல் ஒன்றை (யுத்த காண்டம் 7002ஆம் பாடல்) மெய்ப்புப் பார்த்திருக்கும் விதத்திற்குச் சான்றாகக் காட்டலாம். பக்கம் 2485, இரண்டாம் வரிசையில் அமைந்துள்ள அப்பாடல், குடிஅரசு தொகுதி ஐ -பக்கம் 90இல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொகுப்புகளின் முதல் பதிப்பு வெளியீட்டு விழாக்கள், பெரியார் வாழ்க்கை, பதிப்பாசிரியர் இயக்க உறவு, இத்தொடர்புகளில் அமைந்த ஒளிப் படங்கள் 100 பக்க அளவில் இடம்பெற்றுள்ளன. எவ்வளவு பழைய படங்களையும் ஒழுங்குசெய்து நேர்த்தியாக வெளியிடும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் 70களில் எடுக்கப்பட்ட படங்கள்கூடப் பார்க்கும்படியாக அச்சிடப்படவில்லை.

கறுப்பு அட்டையில் பொன்னிற எழுத்துகளுடன் ஒரே வடிவில் அமைந்த 20 நூல்களும் 1970களில் வெளிவந்த நூல்களின் அமைப்பை நினைவூட்டுகின்றன. பொதுவுடைமை பேசிய பெரியார் தன் சிந்தனைகள் அடங்கிய பிரதிகளின் அட்டையில் தங்கப் பூச்சுடன் ஒளிர்கிறார். பின்னட்டையில் மனைவி நாகம்மையுடன் தங்கமுலாமில் மிளிர்கிறார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் தொடரும் இந்தத் தங்க நிற அமைப்பை விவரிக்கும் போது தாடிக்குள் புதைத்த பதிப்பாசிரியரின் முகமும் கண்களும் மலர்வதை நூல் முன்பதிவின் பல கூட்டங்களில் கண்டேன்.

1944 முதல் இயக்கத்தில் செயலாற்றியவர், பெரியாரோடு மூன்று பத்தாண்டுகள் நெருக்கமாக இருந்தவர், லௌகீக லாபங்களுக்காகத் தன்னை இழக்காதவர், தான் செய்வதை உறுதியாக, உண்மையான நம்பிக்கை கொண்டு செய்பவர், இயக்கம், பெரியார் குறித்த பல முக்கியமான நூல்களை உருவாக்கியவர் எனத் தமிழ் அறிவுலகில் அறிமுகத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள வே. ஆனைமுத்து உழைத்துப் பதிப்பித்த நூல் இது. அவ்வகையில் பிரதியின் நம்பகத் தன்மையும் நூலின் பொருண்மை வழிப் பதிப்பாசிரியர் எய்தும் பெறுமதியும் மிகுதி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் பொருட்டு நூலைப் பற்றிக் கருத்து சொல்லாதிருப்பது பெரியாருக்குச் சிறப்புச் செய்வதாகாது.

நூலை விமர்சிக்கக் கூடாது என்பதற்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு வாராது வந்தது, ஒரு இயக்கத்தின் மூல ஆவணம், எளிதில் செய்ய இயலாத பணி எனப் பல காரணங்களைப் பட்டியலிடலாம். விமர்சகளின் தகுதிக் குறைவையும் இதோடு சேர்த்துக்கொள்ளலாம். எனினும் இந்த விமர்சனக் குறிப்பில் சுட்டப்பட்டவை பதிப்பாசிரியரை நோக்கியன அல்ல. முழுமையின் திசை நோக்கி நகர விரும்பும் வாசகனை நோக்கியவை. வாசிப்புக்கு உதவவும், பிழைகள் வழியாக வாசகன் பிரதியிலிருந்து வெளியே வந்து விடாதிருக்கவும் தரப்பட்ட குறிப்புகள், பிரதியை மேம்படுத்தச் சொல்லப்பட்ட எளிய குறிப்புகள்.

நன்றி : “காலச்சுவடு” - (இதழ் 130 : அக்டோபர் 2010)

Pin It