நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் மிக இழிந்த போக்காக உள்ளது.

கடந்த ஏப்பிரல் 2ஆம் தேதி இராமேசுவரத்தி லிருந்து மீன் பிடிக்கச் சென்ற விக்டர், மாரிமுத்து, அந்தோணிராஜ், ஜான்பால் ஆகிய நால்வரையும் பல நாட்களாகக் காணவில்லை. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிரிகெட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இந்த ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் இராசபக்சே இந்தியாவின் விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார். காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவிலும் அவர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றிருந்தார். கிரிக்கெட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி தோற்றது. ஏற்கெனவே இலங்கை அரசு இந்தியாவின் மீது மறைமுகமாய்ப் பகை கக்கி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் இலங்கை தோற்ற எரிச்சலில் வழக்கம்போல் மீன் பிடிக்கப் போன தமிழக மீனர்வர்கள் நால்வரையும் இலங்கைக் கடற்படையினர் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டிப் பரப்புரையாற்றிட சென்னை வந்த சோனியா காந்தி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்காக முதலைக் கண்ணீர் வடித்தார். இனி இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று பம்மாத்துப் பேசினார். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றினாரா? இல்லை.

கடந்த 18-04-2011 அன்று ‘இலங்கைக் கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துத் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார். அவருக்கோ, அவர் சார்ந்துள்ள கட்சிக்கோ, அக்கட்சியின் தலைவி சோனியா காந்திக்கோ துளியே னும் மானம், வெட்கம் உள்ளதா? கொட்டைப் பாக்கு அளவுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாடு, உலகின் மிகப் பெரிய வல்லரசாகத் துடிக்கும் இன்னொரு நாட்டைப் பார்த்து வாலாட்டுகிறதே! ஏன்? இலங்கைக்கு யார் கொடுத்தது இந்தத் துணிச்சலை? எல்லாம் சோனியா காந்தியின் - மன்மோகன் சிங்கின் இரட்டை வேடந் தான்!

பக்கத்தில் உள்ள நாடு பாக்கிஸ்தான். உள்ளூரில் சின்னதோர் ஊசிப் பட்டாசு வெடித்தாலும் எல்லை கடந்த பயங்கரவாதம், இசுலாமியத் தீவிரவாதிகளின் சதி என்றெல்லாம் கூச்சல்போடும் கூறுகெட்ட இந்தியா, 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களைச் சாகடித் துள்ள இலங்கையை ஏனென்றே கேட்பதில்லை. காரணம் இனவெறி படித்த சிங்கள அரசுக்கு இணை யாக, இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் மீது இனப் பகை பாராட்டுகிறது.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. அரசினால் முதல் தகவல் அறிக்கையும், கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றங்களின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்ட தில்லை.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் முன்வரை ‘தமிழக மீனவர்களை நாங்கள் கொல்வ தில்லை, புலிகள்தான் கொன்றுவிடுகிறார்கள். அப்படிக் கொன்றுவிட்டுப் பழியை எங்கள் மேல் போட்டு விடுகிறார்கள்’ என்று இலங்கை அரசு பிதற்றி வந்தது. இப்போது அப்படிச் சொல்ல வழியில்லை. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தச் சொல்லவேண்டும் என்ற பெயரில் இலங்கைக்கு அனுப் பப்பட்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் தெறித்து விழுந்த தோட்டாக்கள் இலங்கைக் கடற்படைக் குரியவை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆனால் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற தன்மையில் இந்திய அரசு எப்போதும் பேசுவதில்லை. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்வதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். எனவே எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று நமக்கே குழிவெட்டி னால் இலங்கைக்காரன் எப்படி அஞ்சுவான்? இங்குள்ள ‘இந்து’ராம் இராசபக்சேவின் உற்ற நண்பர். போரால் மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இப்போதுதான் மீன்பிடி தொழிலைத் தொடங்கி யுள்ளனர். ஆனால் தமிழக மீனவர்கள்தான் எப்போதும் எல்லை தாண்டி வந்து டிராலிங் முறையில் மீன் பிடித்து அவர்கள் பிழைப்பில் மண் போடுகிறார்கள் என்று இந்து ஏடு கூசாமல் புளுகுகிறது. பார்ப்பன நரி எப்போதும் இராசபக்சே கூட்டத்தின் மீது ஒருபடி கூடுதல் பாசங்காட்டுகிறது. இலங்கை மீனவர்க்காகப் பரிந்து பேசுகிறது.

இந்நிலையில் இராசபக்சேவைப் போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும் இலங்கைக்கு இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கிருட்டிணமூர்த்தி என்கிற இளைஞர் 18.04.2011 அன்று தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிருட்டிணமூர்த்தி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலையொட்டி வாக்களிப் பதற்காகத் தன் சொந்த ஊருக்கு வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றித் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு இறந்தார். இறப்புக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், இலங்கையில் சிங்களவரின் இனவெறித் தாக்குதலால் துன்புற்றுவரும் தமிழர்க்கு உதவிடல் வேண்டும். இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனிநாடு பெற வேண்டும். அதுவரை தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கக் கூடாது. ஈழத் தமிழர்க்காகப் போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

2009 மே மாதத்தில், மானுட இனமே வெட்கித் தலைக்குனியும் வண்ணமான ஒரு மாபெரும் இன அழிப்புப் போரை ஈழமண்ணில் இலங்கை அரசு நிகழ்த்தியது. உலக நாடுகள் பலவும் சிங்கள வெறியன் இராசபக்சேவுக்கு எதிராக ஒரு சொல்லும் பேசவில்லை. அப்போது ஐ.நா.சபையும் ஒப்புக்கு ஒரு சில நடவடிக் கைகளை மேற்கொண்டது. முள்ளிவாய்க்கால் அவலம், நந்திக் கடலில் புலிகளுக்கு எதிரான கொடும் போர், மறுவாழ்வு என்ற பெயரில் அகதிகள்படும் அளவிட முடியாத துன்பம் என்ற எதையுமே ஐ.நா.மன்றம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

மனச்சான்றுள்ள சில உலகநாடுகளின் ஓயாத வற்புறுத் தலை ஏற்று, போர் முடிந்து 13 மாதங்களுக்குப் பிறகு ஐ.நா. அவை இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தாரூஸ்மன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு ஆலோசனைகள் மட்டும் வழங்குமே தவிர எந்த வகையிலும் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது.

இக்குழுவின் அறிக்கை இப்போது ஊடகங்களில் கசிந்துள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும், மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை அரசு மீறியுள்ளதாக இக்குழுவின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. வன்னிப் பகுதியில் படிப்படியாய் முன்னேறிச் சென்ற சிங்கள இராணுவம் மிக அதிக அளவில் இரசாயனக் குண்டுகளை வீசி எண்ணிலடங்காத அப்பாவி மக்களை அழித்துள்ளது. பொதுமக்களைக் கொல்வதை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கை அரசால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ‘வெள்ளை ஊர்தி’களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் செயல் பட்டவர்கள் கடத்திக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போரின் போது பாதுகாப்பு வலையப் பகுதிக்குச் சென்றுவிடுமாறு அரசே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அப்படி அந்த இடங்களில் திரண்ட மக்கள் மீது கொடுந்தாக் குதல் நடத்திக் கொன்றுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து உணவு வழங்கச் சென்ற ஐ.நா. மையமும் செஞ்சிலுவைச் சங்கமும் கூடத் தப்பவில்லை. மருத்துவ மனைகள், பள்ளிகள் மீதும் குண்டு வீச்சு தொடர்ந் துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்காவண்ணம் இராணுவம் ஈவிரக்கமின்றித் தடுத்துவிட்டது.

இதேபோன்ற சில குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தியுள்ளது. இப்படி ஆயிரம் அறிக்கைகள் ஐ.நா. மன்றத்திடம் அளிக்கப் பட்டாலும் இலங்கை அரசு அவற்றைக் கண்டு அஞ்சப் போவதில்லை. இந்திய அரசும், இங்குள்ள ஆளும் வர்க்கங்களும் இலங்கை அரசுக்குத் துணையாக இருக்கும் வரை இராசபக்சே கழுத்தில் தொங்குங் தோள்துண்டைக்கூட யாராலும் தொட முடியாது. இலங் கையில் இனஅழிப்புப் போரை நடத்தியதும், எல்லா வகையான உதவிகள் செய்ததும் இந்தியாதான் என்று இராசபக்சே உலகறிய போர்முடிந்த கையோடு ஓங்கிச் சொல்லிவிட்டார்.

மனமறிந்து பொய் சொல்லும் மன்மோகன் அரசை யும், மாயக்காரி போலச் செயல்படும் சோனியா காந்தி யையும், இலங்கையின் வர்த்தகச் சந்தையைக் குறி வைத்து இலாபவேட்டைக்கு அலையும் ஆளும் வர்க்க ஓநாய்களையும் ஒழிக்காதவரை ஈழத் தமிழர்களுக்கும் வாழ்வில்லை. இங்குள்ள தமிழர்களுக்கும் விடிவில்லை!      

Pin It