“நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தால் நான் இந்தியாவிற்குச் சென்று கர்நாடக இசையைப் பற்றித் தெரிந்து கொள்வது என்னுடைய இசை அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்று நினைக்கிறேன்” ஹென்றி ஜார்ஜ், சத்தியமூர்த்தி-இராதிகா இணையரிடம் கூறினான்.

“நிச்சயமாக, கர்நாடக இசை தெய்வீகமானது. அதை நீ கற்றுக்கொண்டு மேற்கத்திய இசையுடன் கலந்து பாடினால் திருச்சபையில் உன் புகழ் மேலோங்கிவிடும். மற்ற இசைக்கலைஞர்களிடையே நீ உயர்ந்து காணப்படுவாய்” என்று சத்தியமூர்த்தி தன் நண்பன் ஹென்றி ஜார்ஜ் இடம் கூறியதும், ஹென்றி ஜார்ஜ் “மற்ற இசைக்கலைஞர்களிடையே உயர்ந்து நிற்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. என் இசையின் மூலம் மக்களை ஏசுபிரானிடம் பக்தி கொள்ள வைக்க முடிந்தால் அதையே பெரும் பேறாகக் கருதுவேன்” என்று தன் உள்ளக்கிடக்கையைக் கூறினான்.

ஹென்றி ஜார்ஜ் தொழில் முறையில் ஒரு கட்டடக் கலைஞன் (ஹசஉhவைநஉவ). இருப்பினும் இசைக் கலை அவனுடைய உயிருடன் பிணைந்து இருந்தது. திருச்சபையில் அவனுடைய பாடல்களைக் கேட்பதற்கு என்றே பெருங்கூட்டம் கூடும். கட்டடக் கலையிலும் அவன் சிறந்த நிபுணன். கட்டடக் கலையிலும், இசைக் கலையிலும் வல்ல அவனைத் திருமணம் செய்து கொள்ளப் பல பெண்கள் விரும்பினர். அவன் தான் தனக்கு உகந்த பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் செய்து கொண்டு இருந்தான்.

சத்தியமூர்த்தியும் ஹென்றி ஜார்ஜூம் ஒரே அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந் தார்கள். சத்தியமூர்த்தி ஹென்றி ஜார்ஜைவிட சுமார் பதினைந்து ஆண்டுகள் மூத்தவர். அவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிப்பு முடித்த பிறகு இலண்டனில் இருந்த தம் உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் வேலை கிடைத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். அவருக்கும் அவர் மனைவிக்கும் இசையில் புலமை இல்லாவிட்டாலும் நாட்டம் இருந்தது. அவர்களுடைய கருத்துப்படி கர்நாடக இசை தெய்வீக மானது. ஆகவே கர்நாடக இசையை விடச் சிறந்த இசை எதுவும் இல்லை. மேற்கத்திய இசைக் கலையில் நிபுணனான ஹென்றி ஜார்ஜ் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டால், அவ்விசை அவனை ஆட்கொண்டு விடும் என்றும் அவன் மூலமாக இங்கிலாந்து முழுமைக் கும் கர்நாடக இசை பரவும் என்றும் நினைத்தார்கள். ஆகவே கர்நாடக இசையின் மேன்மையைப் பற்றி அவனிடம் ஓதி ஓதி இந்தியாவிற்குச் சென்று அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

அவர்களின் தூண்டுதலின்பேரில் கர்நாடக இசையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டபின், ஹென்றி ஜார்ஜ் திருச்சபையின் பாதிரியார்களிடம் தன் ஆர்வத்தை வெளியிட்டான். பாதிரியார்களோ இசைகளில் ஒன்று உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று இல்லை என்றும் தெய்வீகம் என்பதும் தெய்வீகம் இல்லை என்பதும் ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றும் கூறினார். ஆனால் கர்நாடக இசையைப் பற்றிய வருணனையில் மயங்கிப் போயிருந்த ஹென்றி ஜார்ஜ், புதிய கலை ஒன்றைக் கற்றுக் கொள்வதில் தவறில்லையே என்று வாதம் செய்தான். இவ்வாறு வாதம் செய்ய வேண்டும் என்றால் அவனுடைய மனதில் அவ்வாசை ஆழமாக இருக்கிறது என்று புரிந்துகொண்ட பாதிரியார்கள் அவன் இந்தியாவிற்குச் சென்று, கர்நாடக இசையைப் பற்றிக் கற்றுக்கொண்டு வர ஒப்புக் கொண்டார்கள். அவன் இல்லாத காலத்தில் திருச்சபைக்கு வருவோர் நல்ல இசையைக் கேட்கும் வாய்ப்பை இழப்பார்கள் என்று வருந்துவதாகக் கூறி, முடிந்த மட்டும் விரைவில் திரும்பும்படி கூறினார்கள்.

ஹென்றி ஜார்ஜ் இந்தியாவிற்குச் செல்ல முடிவு செய்தவுடன் சத்தியமூர்த்தியும் இராதிகாவும், அவன் சென்னை, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம் முதலிய இடங்களில் தங்கி, தன் பணியைச் செய்வதற்கு உதவி செய்யும்படி, அவ்வூர்களில் உள்ள தங்கள் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பிக் கேட்டுக் கொண்டார்கள். கர்நாடக இசை, இங்கிலாந்து முழு வதும் பரவப் போகிறது என்ற எதிர்பார்ப்பிலும், அவ் வாறு நடந்தால், இங்குள்ள கர்நாடக இசைக் கலைஞர் களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கனவிலும், சத்தியமூர்த்தி-இராதிகா இணையரின் உறவினர்கள் ஹென்றி ஜார்ஜை வரவேற்க ஆயுத்த மாகிவிட்டார்கள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ஹென்றி ஜார்ஜ் சென்னை வந்து சேர்ந்தான். சத்தியமூர்த்தி-இராதிகா இணையரின் உறவினர்களில் பலர் போட்டி போட்டுக் கொண்டு அவனைத் தங்கள் விருந்தினராக வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால் ஹென்றி ஜார்ஜ் அதை விரும்பவில்லை. ஒரு நடுத்தரமான தங்கும் விடுதியில் தங்குவதாகவும், அதுதான் தனக்கும் மற்றவர்களுக்கும் வசதியாக இருக்கும் என்றும் கூறினான். அவ்வாறு செய்தால் செலவு அதிகம் ஆகும் என்றும் கலாசேத்திரா நிறுவனக் கட்டடத்தில் தங்கி னால் நல்லது என்றும் அந்நிறுவன உறுப்பினர் கூற, அப்படியே ஏற்பாடு செய்யப்பட்டது.

கலாசேத்திராவில் தங்கிய ஹென்றி ஜார்ஜ் பல இசைக் கலைஞர்களைச் சந்தித்து நிறைய விஷயங் களைத் தெரிந்துகொண்டான். முக்கியமாக தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவர் இவ்விசையின் மூலவர்கள் என்றும் அதிலும் தியாகப்பிரும்மம் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றும் அவரிடம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக இசை ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு விருந்து அளிக்கும் மார்கழி மாதம் வந்தது. சென்னை நகரின் இசை நாடக அரங்குகள் அனைத்திலும் கர்நாடக இசைக் கச்சேரி களைகட்டி யது. ஹென்றி ஜார்ஜை ஒவ்வொரு கச்சேரியாக அழைத்துச் சென்று வந்தனர். இந்த இசை விழாவுக் கான தலைப்பாக “சென்னையில் திருவையாறு” என்று இருப்பதைப் பார்த்த ஹென்றி ஜார்ஜ் அதைப் பற்றி விசாரித்து அதன் பொருளையும், திருவையாறு என்ற ஊரில் தான் தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த தாகவும், திருவையாறில் இசை விழா இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிந்து கொண்டான். உடனே திருவையாறு சென்று பார்க்கலாமே என்று தன் ஆசையை வெளியிட்டான்.

கர்நாடக இசையின் மீது ஹென்றி ஜார்ஜூக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தையும், அதனால் திருவையாறு செல்ல வேண்டும் என்று அவனுக்குள் உண்டான ஆசையையும் கண்டவர்கள் உடனே அதற்கு ஒப்புக் கொண்டார்கள். அவனுடன் திருவையாறு செல்வதற்கு ஒரு பெரிய கும்பலே திரண்டுவிட்டது. ஒவ்வொரு வரும் ஹென்றி ஜார்ஜ் இங்கிலாந்தில் கர்நாடக இசையைப் பரப்பப் போவது பற்றியும், அதன் விளை வாகத் தாங்கள் இங்கிலாந்து சென்று பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கப் போவது பற்றியுமான கனவில் மிதந்து கொண்டிருந்தனர்.

ஹென்றி ஜார்ஜ் ஒரு பெரும் கும்பலுடன் தஞ்சாவூர் போய்ச்சேர்ந்தான். திருவையாறில் ஹென்றி ஜார்ஜ் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் போதுமான வசதி கிடைக்காது என்பதால், தஞ்சாவூரில் தங்கிக்கொண்டு திருவையாறு சென்று வரலாம் என்று அவனை அழைத்துச் சென்றவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அவ்வாறே செய்து கொண்டும் இருந்தார்கள்.

ஹென்றி ஜார்ஜ் அடிப்படையில் கட்டடக் கலைஞன் என்று தெரிந்து கொண்ட சிலர் தஞ்சாவூர் பெரிய கோயிலையும், அக்கோயில் கோபுரத்தின் நிழல் நிலத்தில் படாதவாறு வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டு இருப்பதையும் கூறி அக்கோயிலைச் சுற்றிக் காண் பித்தார்கள். அவ்வாறு பார்த்துக்கொண்டு இருந்த போது எதிரில் வந்த ஒருவரைப் பார்த்து வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடினான்.

“மனோகரன் நீ...எங்கே...இங்கு... இருக்கிறாய்?” ஹென்றி ஜார்ஜ் வார்த்தைகள் வராமல் திணறினான்.

“ஆ! ஹென்றி! நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாயே? இது என்னுடைய சொந்த ஊர். நீ எங்கே இவ்வளவு தூரம்?” மனோகரன் திரும்பிக் கேட்டான்.

மனோகரனும் ஹென்றி ஜார்ஜூம் வகுப்பறை நண்பர்கள். இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பார்ட்லெட் கட்டடக் கலைப் பள்ளியில் கட்டடக் கலையில் பட்ட வகுப்பு படித்தவர்கள்.

மற்ற யாரும் ஹென்றி ஜார்ஜை நெருங்கி விடாதபடி பார்த்துக் கொண்டு இருந்த கர்நாடக இசை ஆர்வலர்களின் கும்பல், இப்பொழுது மனோகரனுக்கு வழிவிட வேண்டியதாயிற்று மட்டுமல்ல; நீண்டநாட் கள் கழித்து வெகுதொலைவில் இருக்கும் நண்பர்கள் தனியே பேசிக்கொள்வதற்கு வாய்ப்பும் கொடுக்க வேண்டியதாயிற்று.

மனோகரனும் ஹென்றி ஜார்ஜூம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஹென்றி ஜார்ஜ் இந்தி யாவிற்கு வந்த நோக்கத்தை மனோகரன் அறிந்து கொண்டான்.

“கர்நாடக இசையைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறாய்?” மனோகரன் வினவினான்.

“என்னுடன் வேலை செய்யும் சத்தியமூர்த்தி என்பவரும் அவருடைய மனைவியும் தான் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கிவிட்டார்கள். இவ்விசை தெய்வீகமானது என்று கூறினார்கள்” ஹென்றி ஜார்ஜ் பதிலளித்தான்.

“இதுவரைக்கும் உனக்கு ஏதாவது அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு இருக்கிறதா?”

“இல்லை மனோகரன், எல்லா இசையும் ஒன்றுதான் என்று எங்கள் திருச்சபைப் பாதிரியார்கள் கூறினார்கள். சத்தியமூர்த்தியும் இராதிகாவும் தான் இதில் தெய்வீகம் நிரம்பி வழிவதாகத் திரும்பத் திரும்பக் கூறி எனக்கு ஆர்வத்தை உண்டாகும்படி செய்தார்கள். இங்கு வந்து நான் பெற்ற அனுபவத்தில் எங்கள் பாதிரியார்கள் கூறியதுதான் சரி என்று நினைக் கிறேன். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரமாட்டேன். நான் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கும் அல்லவா?”

“நிச்சயமாக ஹென்றி. இதுவரைக்கும் நீ என்னென்ன தெரிந்துகொண்டு இருக்கிறாய்?”

ஹென்றி ஜார்ஜூம் சங்கீத மும்மூர்த்திகள் என்று கர்நாடக இசை ஆர்வலர்களால் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரைப் பற்றியும், மகாராஜபுரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாச அய்யர், பாலமுரளி கிருஷ்ணா, சௌம்யா என்று இன்னும் பலரைப் பற்றியும் கூறினான்.

“வேங்கடரமண பாகவதரைப் பற்றி ஏதாவது கூறினார்களா?” என்று மனோகரன் கேட்கவும் “வேங்கட ரமண பாகவதரா? அப்படி என்றால் என்ன?” என்று ஹென்றி எதிர்வினா தொடுத்தான்.

“நாசமாகப் போக. அப்படி என்றால் என்னவா? அவர் ஒரு இசை மேதை. அஃறிணைப் பொருளைப் போல் கேட்கிறாயே. அவரைப் பற்றி உனக்கு ஒன்றுமே சொல்லவில்லையா? அவர் இல்லை என்றால், உன்னைச் சுற்றி உள்ளவர்கள் தலையில் வைத்துக் கூத்தாடும் தியாகராஜ சுவாமிகளும் சரி! அவருடைய கர்நாடக இசையும் சரி வெளி உலகிற்குத் தெரியாமலேயே போயிருக்கும்.”

“மனோகரன்! நீ சொல்வது புதிராக இருக்கிறதே? அவரைப் பற்றி விவரமாகச் சொல்லேன்.”

“வேங்கடரமண பாகவதர் செய்யும் தொழிலால் ஒரு நெசவாளி. ஆனால் கர்நாடக இசைக் கலையில் ஒரு மாமேதை. நீங்கள் - அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பிராம்மணர்கள் மட்டுமே கல்வியைப் பெற முடியும். மற்றவர்கள் விதிவிலக்காகவும், தவிர்க்க முடியாத நிலைகளிலும் மட்டுமே கல்வியைப் பெற முடியும்” என்று மனோகரன் கூற ஆரம்பித்தவுடன் ஹென்றி ஜார்ஜ் இடைமறித்து “பிராம்மணர்களா! அப்படி என்றால் யார்? ஏன் அவர்கள் மட்டுமே கல்வி பெற முடிந்தது? மற்றவர்கள் ஏன் கல்வி பெற முடியாது?” என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்தான்.

மனோகரனும், இந்தியாவில் உள்ள சாதிய அமைப்பு பற்றியும், திறமை இருந்தாலும் இல்லா விட்டாலும் பிராம்மணர்கள் கல்வி பெற வழி இருப்பது பற்றியும், மற்றவர்கள் எவ்வளவுதான் அறிவுத்திறன் கொண்டிருந்தாலும் கல்வி மறுக்கப்பட்டு, கீழ்நிலை வேலைகளையே செய்ய வேண்டும் என்று கட்டாயம் இருப்பதைப் பற்றியும் விளக்கினான். ஆங்கிலேய ஆட்சியின்போது சாதி வேறுபாடு பாராமல் கல்வி அளிக்கப்பட்டதால், சாதி அமைப்பின், மேல் கட்டு மானத்தில் சிறு கீறல் ஏற்பட்டதையும், ஆனால் அடித் தளம் சிறிதும் பாதிக்கப்படாமல் வலுவாக இருப்பதைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட ஹென்றி ஜார்ஜ் - முழு விவரங்களையும் செரிக்க முடியாமல் திணறினான். சிறிது நேர அமைதிக்குப் பின் “சரி! வேங்கடரமண பாகவதர் என்று கூறினாயே அவரைப் பற்றி விவரம் கூறேன்” என்று கேட்டான்.

“வேங்கடரமண பாகவதர் ஒரு சௌராஷ்டிரர். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் (1781-1874) வாழ்ந்தவர். சௌராஷ்ட்ரர்களில் பெரும்பாலோர் நெசவாளிகள். வேங்கடரமண பாகவதரும் அப்படியே. ஆனால் அவர் கர்நாடக இசையில் மாபெரும் மேதை. அவருடைய காலத்தில் உன்னிடம் மிக உயர்வாகக் கூறப்பட்டு இருக்கும் தியாகராஜசுவாமிகள் வாழ்ந்தார். அவர் பிராம்மணர். சௌராஷ்டிரர்களும் தங்களைப் பிராம் மணர்கள் என்று கூறிக்கொண்டனர். பிராம்மணர்கள் மனித குலத்திற்கு அவசியமாகத் தேவைப்படும் தொழில் எதையும் செய்யமாட்டார்கள். ஆகவே மனிதகுலத் துக்கு அவசியம் தேவைப்படும் நெசவுத் தொழில் செய்யும் சௌராஷ்டிரர்களை அவர்கள் பிராம் மணர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே வேங்கடரமண பாகவதர் யாரிடமும் மாணவனாகச் சேர்ந்து இசைக் கலையைப் பயில முடியவில்லை. ஆனால் தியாகராஜ சுவாமிகளின் வீட்டிற்கு வெளியில் இருந்து அவருடைய இசையை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் கொட்டும் மழையில் நனைவதைப் பொருட்படுத்தாமலும் தான் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வேங்கடரமணர் மேல் பரிதாபம் கொண்டு தியாகராஜ சுவாமிகள் வீட்டிற்குள் அழைத்தார். அவரிடம் குடிகொண்டிருந்த தணியாத இசை வேட்கையைக் கண்டு கொண்ட தியாகராஜர் அவரை மாணவனாக ஏற்றுக்கொண்டார். அதுதான் தியாகராஜருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. தியாக ராஜரின் பாடல்களை மற்ற மாணவர்கள் கேட்பதுடன், மனனம் செய்வதுடனும் மட்டுமே இருந்தனர். ஆனால் வேங்கடரமணரோ அப்பாடல்களை ஓலைச் சுவடிகளிலும், காகிதங்களிலும் எழுதி முறைப்படி ஆவணப்படுத்தினார். அவை தான் சென்னை, திருவையாறு என்று மட்டுமல்லாமல் கர்நாடக இசை அனைத்துக்கும் மூலாதாரமாக இருக்கிறது.” மனோகரன் சற்று நிறுத்தினான்.

“அது சரி! உனக்கு இந்த விபரங்கள் எல்லாம் எப்படி தெரிந்தன?” ஹென்றி ஜார்ஜ் குழப்பத்துடன் கேட்டான்.

“நானும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவன். சொல்லப் போனால் வேங்கடரமண பாகவதரின் குடும்பம் என் குடும்பத்திற்கு தூரத்து உறவு. ஆகவே இவ்விவரங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். மேலும் வேங்கடரமண பாகவதர் ஆவணப்படுத்திய தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் அடங்கிய ஓலைச் சுவடிகள், காகிதக் குறிப்புகள் மற்றும் அவர் பயன் படுத்திய பொருள்கள், சௌராஷ்டிர மக்கள் மிகுதியாக வாழும் மதுரையில் உள்ள சௌராஷ்டிர சபையின் பாதுகாப்பில் உள்ளன” என்று மனோகரன் விளக்கி னான்.

“ஆனால் இதைப் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே?” ஹென்றி ஜார்ஜ் பரிதாபம hகக் கூறினான்.

“இந்தப் பிராம்மணர்கள் எப்போதுமே இப்படித் தான். பிராம்மணர்கள் மட்டுமே அறிவாளிகள் என்றும் மற்ற சாதியினர் அனைவரும் திறமையற்றவர்கள் என்றும் மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று படாதபாடு படுவார்கள்” என்று மனோகரன் கூறிக் கொண்டிருக்கும் போதே ஹென்றி ஜார்ஜ் இடை மறித்து, “இதென்ன அர்த்தம்? திறமை உள்ளவர் களும், திறமை இல்லாதவர்கள் எல்லாப் பிரிவுகளிலும் இருக்கத்தானே செய்வார்கள்?” என்று கேட்டான்.

“உண்மை தான். ஆனால் இந்தப் பிராம்மணர் கள் இந்த எளிய உண்மையை யாரும் உணரக் கூடாது என்பதற்காகப் பலப்பல தகிடுதத்தங்களைச் செய்வார்கள். மற்ற சாதிகளில் உள்ள திறமைசாலி களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள். ஒன்றுக்கும் பயன்படாதவர்களாக இருந்தாலும் பிராம் மணர்களை வானளாவப் புகழ்வார்கள். உண்மை புரிந்து கொண்டு எதிர்வினா தொடுத்தால், மழுப்பு வார்கள். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்களுடைய உயர்நிலையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்; மற்றவர்களை உயர்நிலைகளில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று கூறிய மனோகரனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே, “இதை எல்லாம் எதிர்த்துப் போராடவே மாட்டீர்களா?” என்று ஹென்றி ஜார்ஜ் சற்று ஆவேசத்துடன் கேட்டான்.

“போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கல்வியை, அதிலும் ஆட்சி அதிகாரக் கல்வியை மற்ற சாதியினர் அடைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். ஆகவே மற்ற சாதியினரின் போராடும் திறன் மிகவும் குறைவாக உள்ளது. கல்வி அறிவை யும், அரசு அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ள பிராம்மணர்களை எதிர்க்கும் போராட் டத்தின் முன்னேற்றம் மிக மிக... மிக மெதுவாகவே இருக்க முடிகிறது. மேலும் சாதிகளுக்கு இடையே படிநிலைகளை அவர்கள் உருவாக்கி வைத்து இருப்ப தால், ஒடுக்கப்பட்ட சாதி மக்களே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு உண்மையான எதிரியான பிராம்மணர்களை எதிர்க்காமல் தவறிவிடுகின்றனர். அதைப்பற்றி எல்லாம் உனக்கு விளக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் தேவைப்படும்” என்று மனோகரன் பதிலளித்தான்.

சற்றுநேரம் அமைதி நிலவியது. பின் ஹென்றி ஜார்ஜ் மெதுவாகக் கூறினான். “நான் உடனே இலண்டனுக்குத் திரும்புகிறேன்.”

Pin It