தாருகாவனம்
என்றொரு அடர்வனம்;
தாடிவைத்த முனிவர்கள்
தவமியற்றும் பெருவனம்!
அவ்வனத்தில்
முற்றும் துறக்காத
முனிவர்களின் இரவுகளை
முத்தத்தில் நனைத்திடப்
பூவையரும் உண்டு!
அவர்களின்
கற்பைச் சூறையாட
பித்தம் தலைக்கேறி
பிச்சாடணன் ஆனான்
உமையொரு பாகன்!
சிவனின்
யாசகப் பாத்திரத்தில்
பிச்சைப் பொருளானது
ரிசிபத்தினிகளின் கற்பு!
ஆதிசிவன் தொடங்கிய
வன்புணர்ச்சி தொடர்கின்றது
இன்றும்!
கௌதமனின் அகலிகையை
இந்திரன் புணர்ந்ததும்
சந்திரன் குருபத்தினியைத்
தன்வயப் படுத்தியதும்
புனித பாரதத்தின்
புரையோடிய கதைகள்!
இன்று
ஓடும் பேருந்தில்
காம வல்லூறுகள்!
காதலன் கண்ணெதிரில்
கற்பழிப்பு அரங்கேற்றம்!
தய்வங்களின் பெயரால்
சிற்றின்பக் காதைகள்!
வணங்கப்படும் கடவுளரே
வல்லுறவில் ஈடுபட்டால்
வணங்கிடும் மாக்கள்
வழிதவறல் வியப்பில்லை!
ஐவரைப் புணர்ந்தவளின்
அபயக்குரல் கேட்டு
துகில்தர விரைந்தவனால்
எப்பாவமும் அறியாத
அபலையருக்காய் ஓடிவர
ஏன் முடியவில்லை?
கேட்டால் கலியுகமாம்!
பக்தி பக்தியென்று
பைத்தியமாய் அலையும்
மகளிர் கூட்டம்
பகுத்தறிவைத் தத்தெடுத்தால்
நவயுகத்தின் சிவலிங்கங்களை
நறுக்கி விடலாமே?
புதுமைப் பெண்கள் நினைத்தால்
புதுயுகம் பிறந்துவிடும்
அறிவைத் துணைகொண்டால்
ஆணாதிக்கம் மடிந்துவிடும்!
வீரமும் துணிவும்
வெற்றியின் படிகள்;
சோரர்களை வென்றிடும்
சமருக்கான வழிகள்!
விடியாத இரவல்ல
பெண்களின் வாழ்க்கை;
சரியாகச் சிந்தித்தால்
தரணியே பூப்படுக்கை!

Pin It