கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

புதுடெல்லி. நமது நாட்டின் தலைநகரம். இந்தியாவின் இருதயம். அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இம்மாநகருக்கு இப்படி ஏகப்பட்ட பட்டப் பெயர்கள் உண்டு. இம்மாநகரைப் பற்றி உங்களுக்கு ஏராளம் தெரிந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் கூட இன்னமும் கொடூரமானதும் சட்ட விரோதமுமான மனிதக்கழிவை மனிதரே அப்புறப்படுத்தும் நடைமுறை அதாவது, அடுத்தவர்கள் கழிந்த மலத்தை கைகளில் அள்ளிச் சுமந்துதான் பிழைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு – சில குறிப்பட்ட மக்களை உட்படுத்தியிருக்கும் அந்த கொடிய நடைமுறை – இம்மாநகரில் இன்னமும் தொடரும் சங்கதி தெரியுமா உங்களுக்கு? அதுவும் கூட எப்படி? இதே டெல்லியில் கூடிய இந்நாட்டின் நாடாளுமன்றத்தில்தான்

மனிதரைக் கொண்டு கழிவு அகற்றும் வேலையை ஒழிப்பது மற்றும் அம்மக்களுக்கான மறுவாழ்வு வழங்க வழி செய்யும் சட்டம்  1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

நாடு தழுவிய அளவில் மனிதக் கழிவகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை, அக்கொடுமையில் இருந்து விடுவிப்பது மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் மீது 2005 ஆம் ஆண்டில்  747 கோடி  ரூபாய் செலவிடப்பட்டது. கோடிக்கணக்கில் செலவானதுதான் மிச்சமே தவிர, சூழ்நிலை என்னவோ மாறிடவே இல்லை. நாட்டில் தொலைதூரத்தில் இருக்கிற ஊர்களைக் கூட விட்டுவிடுங்கள். இங்கு இந்த தலைநகர் டெல்லியிலும் அதன் அருகிலும் உள்ள காசியாபாத், மீரட் முதலான ஊர்களிலும் இவ்வேலை பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தோடு நின்றுவிடவில்லை அந்நகரத்தின் சோகக்கதை."இந்த மக்கள் இன்னும் ஏன் அந்த கொடுமையான வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்?விட்டுவிட்டு ஏன் வரக்கூடாது?' என்று எங்களிடம் பலர் எளிதாகக் கேட்பதுண்டு. நாங்கள் நந்த்நகரியில் சர்மிளா என்ற முப்பது வயது பெண்ணை மலம் அள்ளும் இதர மக்களுடன் சேர்ந்து சந்தித்தபோது அதே கேள்வியை அவரிடம் கேட்டோம். இவ்வேலையை எளிதாக தூக்கியெறிந்துவிட்டு போய்விடலாமே என்று அப்பெண்ணிடம் வெளிப்படையாகக் கேட்டேன்.

அதற்கு அவர்,  "விட்டால் வேறு வேலை?' என்று கேள்விக்கணையை திருப்பி எய்தார் பதிலாக. ""உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் சாதாரணமாக ஒரு வீட்டுக்குப் போனால் எங்களை வீட்டுக்குள் விடுவதற்கு முன் எங்களின் சாதியைத்தான் விசாரிப்பார் அந்த வீட்டுக்காரர். சாதியை மறைத்து பொய் சொல்லி  உள்ளே மறைந்துவிட்டால், எப்போது நமது குட்டு வெளிப்பட்டு விடுமோ  என்று சதா சர்வ காலமும் நாங்கள் அஞ்சிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.''

ஒருவனின் மரியாதையை அவன்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் மீது இருக்கும் ஜாதி அடையாளத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகப் பாடுபடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது வெட்டவெளிச்சமாகப் பளிச்சிடுகிறது. அதனால் சாதி அடையாளத்தை மறைப்பதினாலோ, விலகி ஓடுவதினாலோ எந்தப் பயனும் இல்லை என்பது மட்டும் எங்களுக்கு தெளிவாகப் புரிந்து போயிற்று.

நாங்கள் உரக்கவே சொல்கிறோம்: நாங்கள் பாங்கி ஜாதியினர்தான். அடுத்தவர்களின் மலம் வாரி சுத்தம் செய்து வாழ்க்கை நடத்துபவர்கள்தான். எங்களுக்கு பிழைக்க வேறு வழியைக் காண்பியுங்கள் இப்போது!...''

அவர்கள் கவுரவத்தையும், மறுவாழ்வையும் பெற்றிட நீண்டதொரு போராட்டம் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு முன் இன்னமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. சாதிய அடிப்படையிலான இந்த ஒடுக்குமுறையின் சின்னதொரு சுவடு கூட தங்களின் குழந்தைகளின் கண்களுக்கு தட்டுப்படுவதை இப்பெண்கள் விரும்பவில்லை.

அதனாலேயே மலம் அள்ளும் துப்புரவுப் பெண்கள் அனைவருக்கும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு ஒதுக்கும் அந்தக் கோடிக்கணக்கான ரூபாய் அவர்களை உண்மையிலேயே சென்றடைய வேண்டும் என்றும் அப்பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் தலைநகரிலேயே இதுதான் நிலைமை என்றால் நாட்டின் மற்ற இடங்களின் நிலவரம் எத்தனை பயங்கரமாக இருக்குமென்று ஒருவரால் எளிதில் யூகித்து விட முடியும்.

மீனாவும் அவரது தாயார் சாரதாவும் மற்றும் இச்சமுதாயத்தின் இதர மக்களும் அரசு எந்திரத்தின் பார்வைக்கு தென்படாதவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும் மீனா, சாரதா போன்ற துணிச்சல்காரப் பெண்கள் தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. கண்ணியமான வாழ்க்கை நிலையை தாங்கள் அடைந்திட அப்பெண்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்பினருடன் சேர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான கழகம் (Schedule castes corporation), உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் முதலமைச்சரின் அலுவலகம் ஆகியவற்றை பெரும் நம்பிக்கையுடன் நாடினர். இவற்றின் மூடிய கதவுகளை பல முறை தட்டினர்.ஆனால் இவர்களின் குரலோ காது கொடுத்து கேட்கப்படவே இல்லை.

இதற்கிடையில் மீனா வெறுமனே இருந்து விடவில்லை.மறுவாழ்வு நடவடிக்கையாக டெல்லி அரசிடமிருந்து ஆட்டோ ரிக்ஷா பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஆட்டோ ஓட்டவும் கற்றுக் கொண்டார்.  ஆனால் எஸ்.சி. கழகத்தின் அதிகாரிகள்  2012 ஆம் ஆண்டு மீனாவின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். நிராகரிப்புக்கு அவர்கள் கூறிய காரணம், மீனாவுக்கு பிணையாளர் இல்லை; அவருக்கு அசையா சொத்துக்கள் என்றோ, அசையும் சொத்துக்கள் என்றோ எதுவுமில்லை என்பதே. ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சிறிய கடன் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அவருக்கு யோசனையும் கூறினர்.ஆனால் தைரியசாலிப் பெண்ணான மீனா, இதற்கெல்லாம் அசரவில்லை. தன்னுடைய கனவை இந்த அதிகாரிகள் சிதைக்க அவர் அனுமதிக்கவில்லை.

இறுதியில் "சபாய் கரம்சாரி அந்தோலன்'  உதவியுடன் இ – ரிக்ஷா (Electric Rickshaw) ஒன்றை வாங்கிவிட்டார். அதன்மூலம் அவர் எவ்வாறு சரித்திரத்தை திருத்தங்களுடன் திரும்ப எழுதினார் என்பதை அறிந்து  கொள்ளலாம். எந்த சாலைகளில் மீனா பீ வாளிகளை சுமந்து கொண்டு சென்றாரோ அதே சாலையில் இன்று அவர் பேட்டரியால் இயங்கும் தனது இ– ரிக்சாவை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.  இருப்பினும் ஆட்டோ ரிக்ஷா வாங்கும் கனவை அவர் இன்னும் விட்டுவிடவில்லை. இ – ரிக்சாவை ஓட்டியவாறே ""இந்த ஆட்டோ மூலம் கிடைக்கும் வருவாயை சேமித்து ஒருநாள் ஆட்டோ ரிக்சாவை நான்  வாங்கியே தீருவேன் என்கிறார்!

இது விந்தையாக இல்லை. இவருக்கோ அல்லது இவரைப் போன்ற சூழ்நிலையில் சிரமப்படும் மற்ற பெண்களுக்கோ உதவிக்கரம் நீட்ட அரசாங்கம் இன்னும் கூட தயாராக இல்லை. ஆனாலும் இப்பெண்களோ கவுரவமான வாழ்க்கையை நோக்கி பேரணியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.எல்லாப் புகழும் இந்நாட்டில் உள்ள அனைத்து மீனாக்களுக்குமே