இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடந்த பெரும்போராகும். 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் நாள் போர் முடிவுற்றபோது நடந்த மானுடப் பேரழிவையும், பொருளாதார இழப்பையும் கண்டு உலகமே நடுங்கிற்று. 27 நாடுகளைச் சேர்ந்த 5 கோடியே 90 இலட்சத்து 28 ஆயிரம்பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டின் அடிமை நாடாக இருந்த இந்தியாவில் 36 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
1945ஆம் ஆண்டு அக்டோபர் திங்களிலிருந்து அய்க்கிய நாடுகள் மன்றம் (அய்.நா.) செயல்படத் தொடங்கியது. பொது அவை, பாதுகாப்பு அவை, பொருளாதார, சமூக அவை, பன்னாட்டு நீதி மன்றம் ஆகியவை முதன்மையான அமைப்புகளாக இயங்கிவருகின்றன. தொழில், அறிவியல் வளர்ச்சி, தொழிலாளர் நலன், குழந்தை நலன், மனித உரிமைகள், மக்கள் நல்வாழ்வு போன்ற துறைகளுக்காகத் துணை அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்தத் துணை அமைப்புகள் பல்வேறு மானுட மேம்பாட்டுப் பணிகளைச் சிறப்புறச் செய்து வருகின்றன. இந்தப் பணிகளால்தான் அய்க்கிய நாடுகளின் மன்றத்தின் மதிப்பு இன்றும் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
பன்னாட்டு அரசியல் ஆயுதப் போட்டிகளுக்கு கலனாக இருக்கும் பாதுகாப்பு அவையில் இடம்பிடிப்பதற்குத்தான், நாடுகளுக்குள்ளே பெரும் போட்டி உள்ளது. 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 தற்காலிக உறுப்பினர்களும் இந்த அவையில் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுக்கால அளவு தற்காலிக உறுப்பினராக இடம்பெறுவதற்குத்தான் இந்தியாவிற்குத் தற்போது தகுதி உள்ளது என்று ஆதிக்க நாடுகள் சுட்டுகின்றன. எல்லா அவமானங் கேளையும் தாங்கும் வல்லமை படைத்த பிரதமர் மன்மோன்சிங், அமெரிக்கா சொன்னால் சரியென்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, இந்தியாவின் வளங்களை அமெரிக்க முதலாளிகளுக்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என்ற உறுதியான முடிவோடு இந்திய நாடாளுமன்றத்தில் பேருரை நிகழ்த்தி ஏமாற்ற முனைந்திருக்கிறார். இந்தியாவிற்கு அய்க்கிய நாடுகளின் மன்றத்தின் பாதுகாப்பு அவையின் தற்காலிக இடத்திற்கு அமெரிக்கா ஆதரவு தருமென்று அருள்பாலித்திருக்கிறார்.
இந்தப் பாதுகாப்பு அவை என்னதான் செய்கிறது? என்பதைப்பற்றிப் பல கருத்துகள், ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டால் அதைத் தவிர்க்கும் நோக்கோடுதான் இந்த அவை உருவாக்கப்பட்டது. அய்க்கிய நாடுகள் மன்றம் தொடங்கியபோது இந்த அவையில் அமெரிக்கா, சோவியத்து யூனியன், இங்கிலாந்து, பிரான்சு, தைவான் போன்ற நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றனர். சின்னஞ்சிறு தீவு நாடான தைவான், தொடக்க உறுப்பினர்களில் ஒன்றாக ஆனபோதே இந்த அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவை என்று உலகம் அறிந்துகொண்டது.
அய்ரோப்பாவின் வலிமைமிக்க நாடுகளில் ஒன்றான பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவர் சார்லஸ் டிகாலே 1958 இல், அமெரிக்காவும் இங்கிலாந்தும் பாதுகாப்பு அவையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று முழங்கினார். சமநிலையில் மற்ற உறுப்பினர்கள் மதிக்கப்படுவதில்லை என்று சாடினார். அமெரிக்காவிற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் 1959ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் எந்த வெளிநாட்டு அணு ஆயுதத்தையும் வைத்துக்கொள்வதற்குத் தடைவிதித்தார். இது அமெரிக்காவிற்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.
இத்தகைய பின்னணிகளோடு இயங்கிவரும் இந்தப் பாதுகாப்பு அவையில், 1971ஆம் ஆண்டு மக்கள் சீனம் நிரந்தர உறுப்பினராக தைவானுக்குப் பதிலாக இடம்பெற்றது. 1971வரை 21 முறை அய்.நா.வில் இடம்பெறச் சீனாவை மற்ற நாடுகள் முன்மொழிந்தபோது அமெரிக்காவின் எதிர்ப்பால் மக்கள் சீனம் அய்க்கிய நாடுகள் மன்றத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுயநலத்திற்காக எந்த நாட்டையும், எப்போதும் எந்த நேரத்திலும் தூக்கி எறியும் என்பதற்கு அடையாளமாகத்தான் எடுத்த எடுப்பிலேயே அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நுழைந்த நிகழ்வாகும்.
இரண்டாம் உலகப் போரைவிட அதிக எண்ணிக்கையில் பறிக்கப்பட்ட மானுட உயிர்களும், பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுத் தற்போது பாதுகாப்பு அவையின் ஆதரவோடு மூன்றாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்றாம் உலகப்போரில் பலன் பெற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் யார் என்றால் இந்த அவையில் இடம்பெற்றுள்ள 5 நாடுகள்தான். உலகின் பல நாடுகளுக்குப் பயங்கரத்தை விளைவிக்கும் ஆயுதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கின்றன.
உலகில் பொருளாதார மந்தம் ஏற்பட்டு அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவருகிற இச்சூழலில்கூட அமெரிக்கா வளருகின்ற நாடுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2009ஆம் ஆண்டில் கொடிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இரஷ்யா 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு அவையின் மற்ற நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, பிரான்சு, சீனா இந்தக் கொலை ஆயுதங்களை விற்பனை செய்வதில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. பிரேசில், வெனிசுவேலா, தைவான், அய்க்கிய அரபுக் குடியரசு, ஈராக், எகிப்து, வியட்நாம், குவைத், இந்தியா போன்ற நாடுகள் இந்தக் கொலை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் உலக நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா 188 நாடுகள் வரிசைப்பட்டியலில் 134ஆம் இடத்தில் உள்ளது. எனவேதான், நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் அமர்த்தியா சென் ‘வாதிடும் இந்தியன்’ என்ற நூலில் இந்த நாடுகளை ‘மரண வியாபாரிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிஞர் அமர்த்தியாசென், அய்.நா. மன்றத்தின் முதல் மனித மேம்பாட்டு அறிக்கையை எழுதிய பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞரும், தமது நண்பருமான மறைந்த மஹபூப் உல்ஹக் இந்த நாடுகளைப்பற்றி என்ன எழுதினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
“அய்.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அணு ஆயுதம் வைத்துள்ள வல்லரசு நாடுகள் 1988 - 1992ஆம் ஆண்டுகளில் இராணுவத் தளவாடங்களை உலகின் மற்ற நாடுகளுக்கு 86 விழுக்காடு அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன.” என்பதைத்தான் மஹபூப் உல்ஹக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அமர்த்தியா சென் “ஆச்சரியப்படத்தக்க வகையில் அய்.நா. பாதுகாப்புக் குழு, இந்த மரண வணிகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்விதத் தீவிர முயற்சியையும் மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிஷ், லிண்டா பிலிம்சு ஆகியோர் இணைந்து 2009ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்கப்போர் (Three Trillion Doller War) என்ற நூலைப் படைத்துள்ளனர். மேற்கூறிய தொகையை 2005 வரை அமெரிக்கா ஈராக்கில் செலவிட்டுள்ளது என்று இந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களும், அண்மையில் வெளிவந்த அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விவரங்களும் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. அமெரிக்காவின் கடன் அந்நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த வருவாயை விட அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்க அரசு கடனாளியாகிறது. ஆனால், அமெரிக்க நாட்டின் தனியார் துறை ஆயுத வியாபாரிகளோ, வளருகின்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று வளங்கொழிக்கிறார்கள். போர்களுக்குத் துணை போகிறார்கள். இதுதான் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ள 5 நிரந்தர உறுப்பினர்களின் அமைதிக்கான செயல்பாடா?
இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளனவா? குட்டி நாடான இலங்கைக்குத் தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதம் கொடுத்தது, ராடார் கொடுத்த சிறப்பான தகுதி உள்ளது. இன்றைக்கு நடுநிலையான பல செய்தி ஊடகங்களும், ஆய்வாளர்களும் காஷ்மீரில் 6 இலட்சம் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இராணுவத்தின் அத்து மீறல்களால் சிறார்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உட்பட கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுட்டுகின்றனர். இந்த வன்கொடுமைச் செயல்கள்தான் காஷ்மீர் மக்கள் இந்திய அரசுக்கு எதிராகப் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளதற்கு அடிப்படை என்று நாடும் ஏடும் சுட்டுகின்றன.
போர் ஒரு கொடிய செயல், வன்முறை அதைவிடத் தீதானது என்று போரில் பாடங்கற்று உலகிற்கு உரைத்த மாமன்னர் அசோகரின் சக்கரம் இந்தியத் தேசியக் கொடியில் சுழல்கிறது. சுழல்வது சுழலட்டும்; நாம் நினைத்ததையே நடத்தி நசுக்கி முடிப்போம் என்ற வெறியோடு உயர் ஆளும் வர்க்கத்தினர் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம் பெற வேண்டும். என்று துடியாய்த் துடிக்கின்றனர். இதைவிட இந்தியாவிற்கு வேறு என்ன தகுதி தேவை? தந்தை பெரியார் வழியில் குறிப்பிட வேண்டுமென்றால் அசோகச் சக்கரமாவது, வெங்காயமாவது? என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.