இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று 1909-இல் திருவிதாங்கூர் திரும்பிய ஜார்ஜ் ஜோசப், பெற்றோரின் விருப்பப்படி சூசன்னாவை மணந்து கொண்டபோது ஜோசப்புக்கு வயது இருபத்தி இரண்டுதான். அவருடைய படிப்புக்கேற்றபடி பிரிட்டீஷ் அரசு சப்-ஜட்ஜ் பதவி கொடுக்க முன்வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்ள சரியான இடம் தேடியபோது நண்பரின் ஆலோசனைப்படி மதுரையைத் தேர்வு செய்தார் ஜார்ஜ் ஜோசப்.

5.6.1887 அன்று கேரள மாநிலம் செங்கான்னூரில் பிறந்த ஜார்ஜ் ஜோசப், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். பின்னர் எடின்பரோ சென்று எம்.ஏ., முடித்து இலண்டனில் சட்டம் படித்து பாரிஸ்டர் ஆகிறார். முதல் இந்திய சுதந்தரப் போரின் ஐம்பதாம் ஆண்டு விழா லண்டனில் இந்தியர்களால் கொண்டாடப்பட்டதை அப்போது அறிந்தாலும் அவருடைய கவனம் அதில் ஈர்க்கப்படவில்லை.

மதுரை வந்து வெற்றிகரமாக வக்கீல் தொழில் நடத்தி நகரத்தில் அந்தஸ்துள்ள பிரமுகராக மாறுவதற்கு முக்கியமான காரணம் - குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட கள்ளர், மறவர் மற்றும் பிரமலைக் கள்ளர் போன்றோரின் வழக்குகளைத் தானே முன்னின்று நடத்தி அவர்களின் பாதுகாப்பிற்காக, சட்டத்தைப் பயன்படுத்தியதுதான். ஆலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தகள்ளர், மறவர் இனமக்களின் சுமுகமான நட்பினைக் கொண்டிருந்த ஜோசப், அவர்களுக்காக ‘மதுரை தொழிலாளர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சட்டரீதியான உரிமைகளுக்காக அவர்களோடு சேர்ந்து போராடினார்.

குற்றப் பரம்பரையினர் எனச் சந்தேகிக்கும் நபர்களின் கைரேகையைப் பதிவு செய்து கொண்டு, குற்றவாளிகளைப் போல் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதைத் தடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளில் பல வெற்றிகளைப் பெற்றார். ‘ரோஜாப்புத் துரை’ என்ற பெயருக் குச் சொந்தக்காரரானது அப்போதுதான். மதுரை ஆலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காகவும், வேலைப் பளுவைக் குறைக்கக் கோரியும் நடைபெற்ற நீண்ட போராட்டத்திற்குப்பின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. தலைமை ஏற்க ஜார்ஜ் ஜோசப்பை அழைத்தபோது அவர் அப்போது ஹோம்ரூல் இயக்கத் தலைவராயிருந்த பி. வரதராஜூலு நாயுடுவைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க வைத்தார். போலீஸார் சுட்டதில் நீலமேகம் சுப்பையா என்ற தொழிலாளி இறந்தார். எல்லாப் பத்திரிகைகளும் போலீஸாரைக் கண்டித்ததால் நிர்வாகம் பணிந்தது.

சம்பள உயர்வு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. ஆயினும் அரசுக்கு எதிராகப் பேசியதாக பி. வரதராஜூலு நாயுடு கைது செய்யப்பட்டு, அவர் மேல் ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. அவ்வழக்கை ஜார்ஜ் ஜோசப் மேற் கொண்டு நடத்தினார்.

பி. வரதராஜூலு நாயுடுவைத் தொடர்ந்து, ஜோசப் ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து அரசியல் களம் கண்டார். 1916 மார்ச்சில் அன்னிபெசன்ட் அம்மையார் தென்னிந்தியச் சுற்றுப்பயணம் வந்தபோது மதுரை வருகிறார். ஜார்ஜ் ஜோசப்பை நேரில் சந்தித்தபின் மதுரை தியாசாபிகல் சொசைட்டி ஹோம்ரூல் இயக்கத்தின் அலுவலகமாக மாறுகிறது.

இந்தியாவின் சுயநிர்ணயக் கொள்கையை விளக்க இலண்டனுக்குச் செல்ல ஹோம்ரூல் இயக்கம் மூவர் குழுவை அமைத்தபோது, சேலம் பி.வி. நரசிம்மய்யர், மஞ்சேரி இராமய்யர், மதுரை ஜார்ஜ் ஜோசப் என்ற அளவில் ஹோம்ரூல் இயக்கம் அவரைக் கவனத்தில் கொண்டது. இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றதில் ஜிப்ரால்டர் வரை சென்ற அவர்களால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. முதல் உலகப்போர் முடிந்தும் முடியாத சலசலப்பில் அவர்கள் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. பிராமண ஆதிக்கம் சூழ்ந்திருந்த ஹோம்ரூல் இயக்கத்தில் அவரால் நீடிக்க முடியவில்லை.

ரௌலட் சட்ட எதிர்ப்புப் பிரசாரத்திற்காக, காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, சத்தியாகிரகியாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1919 ஏப்ரல் 6 அன்று மதுரையில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை ஜார்ஜ் ஜோசப்பினுடையது. காந்தியாரின் முழு நம்பிக்கைக்குரிய நபராக மாறியது அப்போதுதான். காந்தியார் எரவாடா சிறைக்குச் செல்ல நேர்ந்த போது அவர் நடத்திய “யங் இந்தியா“ பத்திரிகையை ஜோசப்பிடம்தான் ஒப்படைத்தார்.

ஆனால் 1924இல் நடந்த வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் கலந்து கொண்டதை காந்தி ஏற்கவில்லை. இந்து மதத்தினர் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய, போராட வேண்டிய விஷயத்தில் கிறித்தவரான ஜோசப் பங்குபெறத் தேவையில்லை என்று காந்தி கருத்துரைத்தார். ஆனால் ஜோசப்பின் அணுகுமுறை வேறுவிதமாக இருந்தது.

வைக்கம் போராட்டம் என்பது கோயில் நுழைவுப் போராட்டம் அல்ல; கோயிலை அடுத்த சுற்றுப்புறப் பாதையில் முஸ்லீம்கள் செல்லலாம்; கிறித்தவர்கள் செல்லலாம்; ஏன் நாய்கள் கூடச் செல்லலாம் என்கிறபோது-தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட இந்துக்கள் செல்ல அனுமதிக்க மறுப்பது தீண்டாமைக் கொடுமையே தவிர வேறில்லை. பொதுவான மனிதாபிமானத்துடன் இதை நோக்க வேண்டும் எனக் கருதியே ஜோசப் கலந்து கொண்டார்; போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஆனால் காந்தியோ உயர்ஜாதி இந்துக்கள் மட்டுமே பிராயச்சித்தம் தேடவேண்டிய விஷயம் என்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கருணை கொண்டு வாதாடிய மனிதராக விளங்கிய மதுரை ஜோசப்பை, அவர்களது வாரிசுகள் அவரை ‘கேரள தேசியவாதி’ என்றே அடையாளப் படுத்துகின்றனர். அநேகமாக தமிழ்நாட்டு மக்கள் இன்று வரை அவரை அறிந்துகொள்ள முயலவில்லை. நவீன வாழ்க்கை நம்மை எங்கோ இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி இப்படித்தான் இருந்தது.

‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யின் சென்ற மே மாத நிகழ்ச்சியில் போட்டியாளரிடம் நடிகர் பிரகாஷ்ராஜ், “சென்ற மார்ச் ஐந்தாம் தேதி மறைந்த ஒரு நாட்டின் அதிபர் பெயர் என்ன?” என்று கேட்டு, நான்கு விடைகள் கொடுக்கப்பட்ட பின்னும், சரியான பதில் சொல்ல முடியவில்லை. தொலைப்பேசி மூலம் நண்பரிடம் பதிலைப் பெற்று, சென்ற மாதம் ‘செத்துப் போனவர் சாவேஸ்’ என்று உறுதி செய்கிறார். ‘செத்துப் போனவர்’ என்ற வார்த்தையைக் கேட்ட பிரகாஷ்ராஜுக்கு சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது. “தினசரி செய்தித்தாள் படிப்பதுண்டா? ஸ்டாலின் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள உங்களுக்கு ஸ்டாலினைப் பற்றியாவது தெரியுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கிறார். சாவேஸைப் பற்றி, தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்... புரட்சியாளர் என்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.

“பெரியார் திரைப்படத்தில் பெரியாரின் மனைவியாக நடித்த நடிகை யார்?” என்ற கேள்விக்கு, குஷ்பூ என்று உடனடியாக பதிலளித்த அதே போட்டியாளருக்கு, பெரியாரின் மனைவி மணியம்மை என்ற புரிதல்கூட இல்லை. அவருக்குத்தான் மூன்று இலட்சத்து இருபது ஆயிரத்திற்கான காசோலை பரிசுத் தொகையாக வழங்கியதை இடது கையால் பெற்றுக்கொண்டு வெற்றிக் களிப்பில் மிதந்தார். இன்றைய இளைஞர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

சென்ற மாத நிகழ்வும் தெரியாத, சென்ற நூற்றாண் டின் வரலாறும் அறியாதவர்கள்தான் நாளைய சமூகம் என்றால் நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. இதில் தகவல் தொடர்பில் அபரிமிதமான சாதனைகளைப் படைத்துவிட்டோம் என்ற பெருமை வேறு நமக்கு.

இன்றைய வாழ்வு எப்படியெல்லாம் ஏற்ற இறக்கங் களுக்கு உட்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள கடந்த காலத் தடங்கள்தான் நமக்கு அடையாளம் காண்பிக்கின்றன.

அய்ம்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் சில தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார். சமூக அவலங் களை, அடிமைச் சங்கிலியை உடைத்தெறியத் தனக்கென ஒரு புதிய திசைவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஜார்ஜ் ஜோசப்பின் பணி மகத்தானது. அந்தப் புதிய புதிய திசைகள் மேன்மேலும் நமக்குத் தேவைப்படுகின்றன.

வெள்ளையன் இன்றும் நம்மைவிட்டு அகலவில்லை என்ற கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் கூட இப்படித்தான் சொல்கின்றன :

“பாட்டன் நாக்கில்
வெடித்தது முழக்கம்
வெள்ளையனே வெளியேறு!
பேரன் நாக்கிலேயே
இருந்தான் வெள்ளையன்!”

(5.6.2013, ஜார்ஜ் ஜோசப்பின் 127வது பிறந்த நாள்)

(கட்டுரையாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர், தொடர்புக்கு நன்றி : ஜனசக்தி, ஜூன் 05, 2013.

Pin It