என் மதம்
உன் மதம் என்று
மதம் பிடித்து
மல்லுக்கு நிற்கும்
மன்பதையில்
எனக்குச் சம்மதமில்லை
எம்மதமும்.
சீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றென,
ஆதிசங்கரரின் அத்வைதம்
சொல்கின்றது
சீவனுள்ள மனிதனைச்
சாதிவெறி
சாகடிக்கும் போது
பரமாத்மா பரதேசமா
போயிருந்தார்?
ஏழு வானுக்கப்பால்
இறைவன் இருப்பதால்
அவன் பூமியை
வந்தடையக்
கிடைக்கவில்லையா
பயணச்சீட்டு?
அதனால்
உழைப்பவன் பசித்திருக்க
உழைப்பிலான் சுவைத்திருக்க
பூமியோ சுற்றுகின்றது
பொழுது போக்காமல்!
போதைக்கும் போதையூட்டி
நாம் பயணிக்கும்
பாதையையும்
திசை திருப்புவது
மதமெனும் மாயாவாதம்
வருணபேதங்களெனும்
நச்சரவங்களைத்
தூக்கிச் சுமக்கும்
நச்சுப் பேழையே
மதம்.
ஆகவேதான்
சொல்கின்றேன்
எனக்குச் சம்மதமில்லை
எம்மதமும்!
எல்லோருக்கும் சம்மதமாய்
எல்லாமும் மாற
சாதியை மதத்தை
சமத்துவத் தடைகளை
வீதிக்குக் கொண்டுவந்து
வெங்கனலில் பொசுக்கிடுவோம்!
கீற்றில் தேட...
சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2013
எம்மதமும் சம்மதமில்லை
- விவரங்கள்
- வெற்றியூர் வேலு சதானந்தம்
- பிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2013