ஏழைகளின் உயிருக்கும், வேலைக்கும் இந்தியத் தொழிற்சாலைகளில் எப்போதுமே பாதுகாப்பு இல்லை. இது வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட, இந்தியக் கொள்ளையர்களின் ஆட்சியில் பன்மடங்கு கொடூர வடிவத்தை எடுத்துவிட்டது.

நெய்வேலி அனல்மின் நிலையம் பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட ஒரு பொதுத் துறை நிறுவனம் ஆகும்.

அங்கு பழைய வாழ்விட ஊரான மந்தாரக் குப்பத்தை அடுத்து, அஜீஸ் நகர் என்ற ஒரு புதுக்குடியிருப்பு உள்ளது. மானத்தோடு வாழவழியற்ற பல ஊர் ஏழைகள் வேலை தேடி அங்கு வந்தார்கள். அவர்களை அந்த இடத்தில் குடி அமர்த்தியவர் கடலூரில் மாவட்ட ஆட்சியராக இருந்த அஜீஸ் என்ற மாமனிதர் ஆவார்.

இராஜ்குமார், அஜீஸ் நகரில் குடியிருந்த ஒப்பந்தத் தொழிலாளர். ஒன்றாவது சுரங்கத்தில் தனியார் ஒப் பந்தக்காரரிடம் கூலிக்கு வேலை செய்தார். அவருடைய கண்காணிப்பாளர் (Supervisor) இரண்டாவது சுரங்கத்தில் வேலை செய்கிறார். தன் வேலையின் நிமித்தம் அவரைப் பார்ப்பதற்காகவே சுரங்க வாயிற்படிக்கு அவர் வந்தார். எப்போதும் வாயிலின் உட்பக்கம் பூட்டப் பட்டிருக்கும்; அங்கு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆயுதத்துடன் காவல் இருப்பார்கள். அவர்களிடம் தன் கோரிக்கையைச் சொல்லி வாயிலைத் திறந்து உள்ளே விடும்படிக் கேட்டார். வாயிலைத் திறக்க முடியாது என்று துடுக்காகக் கூறி மறுத்துவிட்டனர்.

அவசரத்துக்குத் தொலைப்பேசி செய்ய வசதியாக, வாயிலில், உள்ளூர்த் தொலைத்தொடர்பு (Landline) இருக்கிறது. அதன்மூலம் தன் கண்காணிப்பாளரோடு பேசவாவது அனுமதி கேட்டார்; அந்தத் தொலைப்பேசி யைத் தொட்டார். அவ்வளவுதான். அதன்பேரில் எழுந்த வாக்குவாதத்தில், மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் சரமாரியாக மூன்று தடவைகள் துப்பாக்கியால் சுட்டு இராஜ்குமாரை அந்த இடத்தி லேயே கொன்றுவிட்டார்.

மூளை சிதறிக் கொல்லப்பட்ட அவருக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு வெளியிலிருந்த தொழிலாளர்களும், அந்நேரம் பணிமுடிந்து வெளியில் வந்த தொழிலாளர்களும் மத்தியப் பாதுகாப்புப் படையினரைத் தட்டிக்கேட்டனர்.நடந்தது இவ்வளவுதான்.

அஜீஸ் நகர் மக்களும் அங்கு திரண்டு வந்து ஆத்திரத்துடன் வாதாடினர். அவர்கள் அனைவர் மீதும் மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் தமிழகக் காவல் படையினரும் சேர்ந்து கொண்டு கண்மண் தெரியாமல் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் அடித்து நொறுக்கி 50, 60 பேர்களைப் படுகாயப்படுத்தி விட்டனர்.

தெருவில் இருந்த வீடுகளுக்குள் ஓடி-நுழைந்தவர்களையும் துரத்திச் சென்று தாக்கினர். படுகாயம் அடைந்தவர்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த உரிமையுள்ள தொழிற்சங்கத் தலைவர்களும்கூட, கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஓர் அரசுப் பொதுத்துறை நிறுவனத்தில் இப்படிப் பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைக் கொல்லவும், எதிர்த்துக் கேட்டவர்களைத் தாக்கவும் மத்தியத் தொழிலகக் காவல்படையினர் எந்த மேலதிகாரியிடம் அனுமதி பெற்றனர்? தமிழகக் காவல் துறையினர் தடியடி நடத்திட எந்த உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றனர்?

இந்தக் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலுக்குக் காரணமான பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப் பட்டு வழக்குத் தொடுத்தால் மட்டும் போதுமா? இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு இடங்கொடுத்த சுரங்க மேலதி காரிகள், வாயிற்படிகளில் இருந்த மேலதிகாரிகள் ஆகியோர் பேரிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

கொல்லப்பட்ட இராஜ்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான ஒரு வேலை கொடுப்பதும், அவருடைய குடும்பத்துக்குப் பெரிய அளவில் இழப்பீடு தருவதும் உடனடித் தேவையாகும்.

நல்ல இலாபத்தில் இயங்குவது நெய்வேலி அனல் மின்நிலையம். அங்குப் பல ஆயிரம் பேர் தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலம் தொழிலாளர்களை அமர்த்தி வேலை வாங்க வேண்டிய தேவை என்ன? எத்தனை ஆண்டுகளுக்கு ஒருவர் ஒப்பந்தக் கூலிக்காரராக இருப்பது? ஏன் நிரந்தரத் தொழிலாளராக ஆக்க ஆவன செய்யவில்லை?

எல்லா ஆட்சிக்காலங்களிலும் சுரங்கப் பொறுப்பு அதிகாரிகளும், அவ்வப்போது ஆட்சியிலிருப்பவர்களும் கூட்டுக்கொள்ளையடிப்பது ஊர் அறிந்த இரகசியம்.

1987-1991 காலக்கட்டத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒரு நாராயணன் என்கிற தஞ்சைப் பார்ப்பனர் கொள்ளையடித்துவிட்டு, கண்டவர் காலில் விழுந்து காப்பாற்றிக் கொண்டதை நாம் நன்றாக அறிவோம். நிற்க.

இனியும் நெய்வேலி நிலக்கரித் தொழிற் சங்கத்தினர் கட்சி அடிப்படையில் பிரிந்து பிரிந்து இயங்காமல் - “ஒரு தொழிலுக்கு ஒரே சங்கம்” என்று இயங்கும் திசைநோக்கிப் பயணிப்பதும் மிக இன்றியமையாத தாகும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதைப்போன்றே கொடுமையாக, இதே 18-3-2014 செவ்வாய் அன்று, ஈரோட்டை அடுத்த பெருந்துறையில் இயங்கும், கோயம்புத்தூர் கே.பி. இராமசாமி என்பவருக்குச் சொந்தமான, “கே.பி.ஆர். நெசவு ஆலை”யில், சாயம் தோய்க்கும் கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட பழுதுநீக்கப் பணிக்குச் சென்ற தொழிலா ளர்கள், தொட்டியிலிருந்து மீத்தேன் நச்சுக்காற்றை வெளியேற்றும் குழாயின் வாயை அடைக்கத் தெரியாமல், ஒருவர் பின் ஒருவராக, ஏழு பேர், அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மூச்சுத் திணறி, சில மணித்துளிகளில் உயிரிழந்த கொடுமை நடந்துவிட்டது.

இத்தொழிற்சாலையில் துணிக்குச் சாயந் தோய்த்து, பல ஊர்களுக்கும் அனுப்பும் தொழில் நடைபெறுகிறது; 400 தொழிலாளர்கள் மூன்று மாற்று நேரங்களில்(three shifts) பணியாற்றுகின்றனர். சாயந்தோய்த்த பின்னர் தொட்டியில் தங்கும் கழிவுநீரைத் தூய்மைப் படுத்தித்தான் வெளியேற்ற வேண்டும்; அது மண்ணில் உஞ்சி நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் தடுப்பதற்காக, சாயப்பட்டறைக் கழிவை வெளியேற்றும் கால்வாயில் விடப்பட்டு, சேகரிக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு வெளியே விடப்பட வேண்டும்.

இதற்கு முன் தொட்டியிலிருந்து வெளியாகும் காற்று வெளிவருகிற வாயை (Valve) அடைப்பதற்கு உரிய பயிற்சி பெற்றவர்களே அவ்வேலையைச் செய் திருக்க வேண்டும்.

பெருந்துறை சாயப்பட்டறையில் அப்படிச் செய்யாமல் போனதால், சில மணித்துளிகளில், ஏழு தொழிலாளர்கள் விலைமதிக்க முடியாத தங்கள் இனிய உயிரைப் பறிகொடுத்துவிட்டனர். இது கொடுமையிலும் கொடுமை.

இவர்கள் அலறுவதைக் கேட்டு அங்கு ஓடிச்சென்றவர்களிலும் பதினோரு பேர் நச்சான மீத்தேன் காற்றை உட்கொண்டு, மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் வைத்தியம் செய்து கொள்ளுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆலை உரிமையாளர்கள் 13 இலட்ச உருபா வீதம் இழப்பீடு தர முன்வந்துள்ளனர்.

இவ்வளவும் நடந்த பிறகு, அரசு அதிகாரிகள், குதிரை ஓடிய பிறகு கொட்டடியைப் பூட்டுகிற மடையனைப் போல், 19-3-2014 அன்று ஆலைக்கு வந்து ஆய்வு செய்து, அந்தப் பகுதி இயங்குவதற்கு மட்டும் தடைவிதித்துள்ளனர்.

இந்தியர்கள் - வெள்ளையனை நல்லவனாக ஆக்கும் கொள்ளைக்காரராகவும், கொலைகாரர்களாகவும் மாறிவருகிறார்கள் என்பதற்கு - நெய்வேலி துப்பாக்கிச் சூடு கொலையும், பெருந்துறை மீத்தேன் நச்சுக் காற்றுப் பலியும் எடுத்துக்காட்டுகளாகும்.

Pin It