அரசியல் என்றால் இப்புவியில் இருக்கும் பொருள் களையும் ஆற்றலையும் மனிதர்கள் தங்கள் மற்றும் பிற உயிரினங்களின் நீடித்த நிலையான நலன்களுக்காக ஒழுங்கமைவான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் முறைமை ஆகும். ஆனால் மனிதன் வர்க்கமாகப் பிரிந்தபின் ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டுவதும், அதை எதிர்ப்பதுமான போராட்டமே அரசியலாயிற்று. அதாவது ஒரு பிரிவினர் ஒழுங்கமைவிற்கு எதிராக நடந்து கொள்வதும், மறுபிரிவினர் அதற்கு எதிராக நடந்து கொள்வதே அரசியலின் முக்கிய உள்ளடக்கம் ஆகிவிட்டது.

இப்போராட்டம் உலகின் எல்லா நாடுகளிலும் வர்க்கப் போராட்டமாக இருக்கையில், இந்தியாவில் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் போராட்டமாகவே இன்னும் நிலை கொண்டு உள்ளது. பார்ப்பனர்களும் மற்றும் அச்சத்தினாலோ, ஆசையினாலோ பார்ப்பனர்களின் அடிமைகளாக இருப்பவர்களும் “நிலைமை மாறிவிட்டது” என்று கூறுகின்றனர்.

அடிப்படையில் மாற்றம் இல்லாமல் வெளிப்பூச்சு மாற்றங்களைக் காட்டித் தங்கள் வாதத்தை வைக்கின்றனர். ஆனால் அதிகாரம், பணம், உடலுழைப்பு அற்ற தன்மை கொண்ட தொழில்களில் பார்ப்ப னர்களும், அதற்கு நேர் எதிர்த் தன்மை கொண்ட தொழில்களில் ஒடுக்கப்பட்ட மக்களும் இருக்கும் நிலைமை பற்றிப் பேச மறுக்கின்றனர். இந்த நிலைமை முகம்மதியர்களின் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் மாறவில்லை. சில காலம் பௌத்தர்கள் / களப்பிரர்கள் ஆட்சியில் கட்டுக்குள் இருந்தது. இதையே இருண்ட காலம் என்று பார்ப்பனர்களும் அவர்களுடைய அடிமைகளும் கூறுகிறார்கள்.

அதாவது இந்தியாவில் பார்ப்பனர்கள் அதிகாரம், பணம், உடலுழைப்பு இல்லாத தொழில்களை எளிதாக அடைய வேண்டும் (மற்றவர்கள் இதற்கு நேர் எதிரான தொழில்களில் நிலைக்க வேண்டும்) என்று போராடுவது ஒரு புறமும், இதற்கு எதிராகப் போராடுவது மறுபுறமுமாக இருப்பதே அடிப்படை அரசியல் நிகழ்வாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகப் போராடுவது இன்னலை மேற்கொள்வதும், சோர்வூட்டுவது மாக இருக்கிறது. இதைத்தான் பெரியார் விடாப்பிடியாகச் செய்து கொண்டு இருந்தார். இத்திசையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பொதுக் கருத்தை உருவாக்குவதுமே சரியான அரசியல் நடவடிக்கை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார்.

ஆனால் சிலர் தேர்தலில் பங்குகொண்டு ஆட்சியில் அமர்ந்தால் நம் நோக்கத்தை எளிதில் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தனர்; பெரியாரை விட்டுப் பிரிந்து தேர்தலில் பங்கு கொண்டனர். தேர்தலில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். பார்ப்பனர்களின் பன்முக வலிமையை ஒப்பிடும்பொழுது, இவ்வெற்றிகள் எல்லாம் ஓடும் ஆற்றில் பிடிப்பிடியாக மணலைப் போட்டு வெள்ளத்தைத் தடுப்பதற்கு ஒப்பாகும். பார்ப்பனர்களை வெற்றி கொள்வதற்கு முதலில் பின்வரும் விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும்.

திறமையுள்ளவர்களும் திறமைக் குறைவானவர்களும் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கையில் பொதுப் போட்டியிலும் அது எதிரொலித்து அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் அல்லவா?

அப்படி இல்லாமல் பொதுப் போட்டி முறையில் உயர்நிலைகளில் மிகப்பெரும் அளவு பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும், கீழ் நிலைப் பணி களைச் செய்வதில் இருந்து பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் தப்பிவிடுகிறார்கள் என்றால் அதில் கொடூரமான சூழ்ச்சி உள்ளது அல்லவா?

இச்சூழ்ச்சியை வென்றெடுக்க, அனைத்து வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைக் குறைவானவர்களும் கீழ் நிலைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்க, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல் படுத்த வேண்டும் அல்லவா?

மேற்கண்ட பணி முடியாத வரையில் ஆட்சியில் பங்கு கொள்வதினால் என்ன பயன் ஏற்படப் போகிறது?

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பெரியார் தேர்தலில் பங்கு கொள்வதைத் தவிர்த்து வந்தார். தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற்றால், முதல் வேலையாக அரசு, மற்றும் தனியார் துறைகளிலும் சமூக, பொரு ளாதார நடவடிக்கைகளிலும் விகிதாச்சாரப் பங்கீட்டை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.

அந்த அளவிற்கு விழிப்புணர்வும், பொதுக் கருத்தும் எட்டி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவசரப் பட்டுத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டதன் விளைவு என்னவாயிற்று?

பெரியாரின் பெயரைச் சொல்பவர்கள் பார்ப்பன அடிமைத்தளையில் இருந்து வெளிவர முடியவில்லை.

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமைச் செயலகக் கட்டடத்தைக் கட்டி முடித்து, சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார்கள். அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் அதை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்து, கட்டடத்தில் அதற்கான மாற்றங்களையும் செய்தார்கள்.

அந்த மருத்துவமனையில் மருத்துவர்களை நிய மிப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது என்று அரசு அறிவித்தது.

உடனே தி.மு.க.தலைவர் தமது கட்சி இதை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தும் என்றும், இடஒதுக்கீட்டை ஊனப்படுத்துவதை எப்படியும் தடுத்தே தீரும் என்றும் கூறினார். பா.ம.க.நிறுவனர் இராமதாசும் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணியும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருந்த முதல்வர் ஜெயலலிதா, சில நாள்கள் கழித்து மருத்துவர்கள் நியமனத்தில், தான் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றுவதாக அறிவித்தார். உடனே நமது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தலைவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இன்னும் செயல்படத் தொடங்காத இம்மருத்துவ மனையில் 23.1.2014 அன்று 55 மருத்துவர்கள் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர்.

இந்நிகழ்வு சில சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது. உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்படி இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்ற வலுவான விசை பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரிய வருகிறது. இதைப் பற்றி விரிவாக மக்களிடம் நமது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எடுத்துக் கூறவே இல்லை. எடுத்துக் கூறவே இல்லை எனும்பொழுது, அதற்கு எதிரான விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் ஏற்படுத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இடஒதுக்கீடு பின்பற்றப்படும் இடங்களைச் சுட்டிக்காட்டி இத்தலைவர்கள் நம்மை அமைதிப் படுத்த முயலலாம். அவையெல்லாம் பார்ப்பனர்கள் தங்க ளுக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்த, முக்கியத்துவம் இல்லாதவை அல்லது பார்ப்பனர்களின் கட்டுக்கு மீற முடியாதவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்ய வேண்டும்? அனைத்து அரசு, தனியார் துறைகளிலும்; பெட்ரோல், எரிவாயு விநியோகம் போன்ற வணிக-தொழில் நடவடிக் கைகளிலும்; கலை, இலக்கியம் போன்ற சமூக நட வடிக்கைகளிலும் மற்றுமுள்ள அனைத்து நிலைகளிலும் விகிதாசாரப் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் நாம் வற்புறுத்த வேண்டும்.

மக்களின் ஆதரவைக் கேட்கும் அரசியல் கட்சியினர்யாராய் இருந்தாலும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை ஏற்காதவர்களை, அரசியல் களத்தில் இருந்தே விரட்ட வேண்டும்.

கட்சிகளில் இருக்கும் தொண்டர்கள், இப்பிரச் சினையைமையமாகக் கொண்டு விவாதம் செய்து, தங்கள் தலைவர்களை இதற்கு ஒப்புக்கொள்ளும்படிச் செய்தால் அவர்கள் உண்மையிலேயே மக்கள் தொண்டர்கள் ஆவார்கள்.

Pin It