இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதிகளில் கிரேக்க நாட்டின் அலெக்சாண்டர் தொடங்கி பல்வேறு இனக்குழுக்கள் தொடர்ந்து 2500 ஆண்டுகளாகப் படையெடுத்தனர். இந்தியாவின் வற்றாத செல்வத்தைக் கொள்ளையடித்தனர். பண்டைய போர்களில் இந்தத் துணைக் கண்டத்தில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள் பலப்பல. இருப்பினும், இந்தியா வினுடைய ஊர்ப்புறப் பொருளாதார அமைப்பும், வேளாண் மையும், கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளும், அணிகலன்களும் அய்ரோப்பிய நாடுகளின் பொருட்களோடு 18ஆம் நூற்றாண்டு வரை போட்டியிட்டன. இவை இந்த 18ஆம் நூற்றாண்டில் மாறியது.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளை வெள்ளையர்கள் கைப்பற்றி இப்பகுதிகளில் உற்பத்தியான மூலப் பொருட்களை அய்ரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வரி, வட்டி, ஊதியம், இலாபம் என்கிற பலவிதமான பொருளாதாரச் சுரண்டல்களை மேற்கொண்டு அந்தந்த நாடுகளுக்குக் கோடிகோடியாக எடுத்துச் சென்றனர். இந்தியத் துணைக் கண்டத்தின் காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங் களை உருவாக்கி அடித்த இலாபம் எவ்வளவு என்பதை இன்று வரை கணக்கிட முடியவில்லை. இந்தத் தொடர் கொள்ளையால் தற்போது இந்தியாவில் உள்ள காடுகள் இயற்கையான தன்மையையே இழந்துவிட்டன என்றும், உண்மையான காடுகளுக்குரிய இலக்கணத்தின்படி இக்காடுகள் இல்லவே இல்லை என்றும் சுற்றுச்சூழல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறாக, இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமமும், இங்கிலாந்து அரசும் அடித்த கொள்ளை பற்றிப் பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக, இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமத்தின் மேலாதிக்கம் ஊன்றப்பட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம் சுரண்டப்பட்டதை இரண்டு காலக்கட்டமாகப் பிரிக்கிறார்கள். முதல் காலக்கட்டம் 1757ஆம் ஆண்டு முதல் 1857 வரையிலும்; இரண்டாம் காலக்கட்டம் என்பது 1858 முதல் 1947 வரை ஆகும். இந்த இரு காலக்கட்டங்களில் தனிப்பட்ட முறையில் வெள்ளையர்கள் அடித்த கொள்ளைகள் எண்ணிலடங்கா. எடுத்துச்சென்ற பொருட்களின் மதிப்பும் கணக்கிலடங்கா.

இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமத்தின் சார்பில் 24 வயதில் இந்தியாவிற்கு வந்து இராணுவ வீரராகவும், வணிகராகவும் பல பகுதிகளைக் கைப்பற்றி கிழக்கிந்தியக் குழும ஆட்சியை நிறுவியவர்களில் ஒருவர் இராபர்ட் கிளைவ். 34 வயதில் இங்கிலாந்திற்குத் திரும்பிய போது, தனிப்பட்ட முறையில் அவர் கொள்ளையடித்து எடுத்துச் சென்ற செல்வத்தின் இன்றைய மதிப்பு பல இலட்சம் கோடி என்று கணக்கிடப் படுகிறது. அன்றைய இங்கிலாந்து அரசு, இலண்டன் நகரில் இராபர்ட் கிளைவ் சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களுக் காக வழக்கு ஒன்றினைப் பதிவு செய்தது. இறுதியில் தற்கொலை செய்து கொண்டு கிளைவ் மாண்டார். அறிஞர் அண்ணா அவர்கள் தனக்கே உரிய ஆங்கிலப் புலமையோடு இந்நிகழ் வினைப் பற்றி “இராபர்ட் கிளைவாக இந்தியாவிற்கு வந்து, ‘திருடர் கிளைவ்’ ஆக இங்கிலாந்திற்குத் திரும்பினார்” (Robert Clive came to India and returned to England as Robber Clive) என்று குறிப்பிட்டார். 

இதற்குப் பின்னர் வந்த மற்றொரு உயர் அலுவலரான வாரன் ஹேஸ்டிங்சு அடித்த கொள்ளையைப் பற்றி 1789இல் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிஞர் எட்மண்ட் பெர்க் தனது உரையில் விளக்கியுள்ளார். 1757 ஜூன் 23அம் நாளில் நடந்த பிளாசிப் போரில் வென்று, வாரன்ஹேஸ்டிங்சு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி தோன்று வதற்கு அடித்தளம் அமைத்தார். இத்தகைய சிறப்பை ஹேஸ்டிங்சு பெற்றிருந்தாலும், அவர் கொள்ளையடித்துச் சேர்த்த செல்வத்தை அறிஞர் பர்க் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நாடாளுமன்றத்தில் ஹேஸ்டிங்சை நீக்குவதற்கு ஒரு குற்றச் சாட்டுத் தீர்மானத்தை முன்மொழிந்தார். “மிகத் தவறான குற்றச் செயல்களையும், நடவடிக்கைக ளையும் வாரன்ஹேஸ்டிங்சு செய்துள்ளார் என்று குற்றம் சுமத்துகிறேன். நாடாளுமன்றம் அவர் மீது வைத்த நம்பிக் கைக்குத் துரோகம் இழைத்ததற்காக இங்கிலாந்து நாடாளு மன்றத்தின் சார்பாக ஹேஸ்டிங்சு மீது குற்றம் சுமத்துகிறேன்.

நாட்டினுடைய மதிப்பைக் களங்கப்படுத்தியதற்காக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். இந்திய மக்களின் சுதந்தரம், உரிமைகள், சட்டங்களைப் பாழாக்கியதற்காகவும், அவர்க ளுடைய சொத்துக்களை அழித்ததற்காகவும், வீணாக்கியதற் காகவும் இந்திய மக்கள் சார்பில் அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். நிலைத்து நிற்கின்ற நீதி, சட்ட நெறிகளை மீறியதற்காக அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். எல்லா வயதினர் மீதும், ஆண், பெண் மீதும், எல்லா நிலைகளிலும், எல்லாத் தன்மைகளிலும் மிக மிகக் கொடுஞ்செயல்களை நிறைவேற்றி, வடுக்களை ஏற்படுத்தி, அடக்குமுறைகளை ஏவி மக்களைத் துன்புறுத்தி யதற்காக மானுட நீதியின் பேரால் அவர் மீது குற்றம் சுமத்துகிறேன்”. இந்த நிகழ்வுகள் எல்லாம் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போன்று வெள்ளையர் அடித்த கொள்ளைகளையும், அவர்கள் செய்த வன்கொடுமைகளையும் எடுத்துரைக்கின்றன.

1947இல் வெள்ளையன் வெளியேறி, கொள்ளையன் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் காலகட்டத்தில் அடிக்கப்பட்ட, தொடர்ந்து அடிக்கப்படுகிற கொள்ளைகளை எடுத்தியம்பு வதற்கு ஏடுகளில் பக்கங்கள் கிடைக்காது. பல புள்ளிவிவ ரங்கள் குறைந்த அளவில் இந்த கொள்ளையைப் பற்றி மதிப்பீடு செய்து கொள்வதற்கு உதவுகின்றன. ஒரு கணக்கு ஆசிரியரைக் கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட பண மதிப்பை எண்களால் கரும்பலகையில் எழுத விரும்பினால் ஆசிரியர், மாணவர்கள் முகம் சுளிக்கிற அளவிற்குப் பல சுழிகளைப் போட்டுக் கொண்டே செல்ல வேண்டும். புதுமையான கொள் ளையர்கள் இந்நாட்டில் ஈட்டிய கொள்ளை இலாபம், உறிஞ்சிய வட்டி, கையூட்டுகளின் வழியாகக் குவித்தத் தொகை, கள்ள வணிகம், ஊக வணிகம், சட்ட விரோத நடவடிக்கைகளின் வாயிலாகத் திரட்டப்பட்ட திருட்டுப்பணம் ஆகியன சுவிஸ் வங்கி உட்படப் பல அயல்நாடுகளின் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பணத்தைக் கொண்டுவந்து சமூக நலத் திட்டங்களுக்காகச் செலவிட்டால் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலிலும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளிலும் முதன்மை நிலைக்கு வந்துவிடும்.

1947இல் தொடங்கி இன்றுவரை இந்தியப் பொருளாதார அரங்கில் பல அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. முதல் கதையின் முதல் நாயகர் நேரு. முதல் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்று நேர்மையுடன், மனசாட்சியுடன் செயல்பட்டார். தனியார் துறை சுரண்டலைத் தடுப்பதற்குப் பொதுத் துறையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றார். சுரங்கத் தொழில் முதல் கனரகத் தொழில் வரை எல்லாப் பெருந்தொழில்களும் பொதுத் துறையில் இயங்கு வதற்கு வழிகண்டார். தனியார் துறை மேலாதிக்கம் செலுத்தக் கூடாது, பொதுத் துறையின் கீழ்தான் தனியார் துறை இயங்க வேண்டும் என்றார். இவ்வித அணுகுமுறையால் பொதுத் துறையில் அரசு முதலீடுகள் பெருகின. காப்பீட்டுக் கழகங்கள், பெரும் வங்கிகள் பொதுத் துறையில் வளர்ந்தன. பன்னாட்டு மருந்து உற்பத்தியாளர்களின் ஆதிக்கம் இந்தியா விலிருந்து வெளியேற்றப்பட, உள்நாட்டு மருந்துத் தொழில்கள் மேன்மையுற இந்தியக் காப்புரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இவ்வித நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலைகொண்டிருந்தாலும், அந்நியச் சக்திகளின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. விலைவாசி உயர்வும் கட்டுக்குள் வைக்கப்பட்டது.

1966இல் இந்திரா காந்தி, பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தக் காட்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இந்தியாவின் பண மதிப்பு எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் நடைபெறாத அளவிற்கு, நள்ளிரவில் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய்க்குத் தெரியாமலேயே உலக வங்கியின் அழுத்தத் தால் 33 விழுக்காடு குறைக்கப்பட்டது. விலைவாசி தொடர் உயர்வுக்கு இந்நடவடிக்கைதான் கால்கோளிட்டது. இதைத் தட்டிக்கேட்ட காங்கிரசு இயக்கத்தின் மூத்த தலைவர்களை நீக்குவதற்காக 1969இல் சோசலிச நாடகம் ஒன்று அரங்கேற்றப் பட்டது. மக்களைத் திசை திருப்புவதற்காக 14 வணிக வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது. ஆனால், இந்திரா காந்தி இந்தியாவின் மகாராணியாகப் பட்டம் சூட்டிக்கொண்டார்.

இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு, விபத்துக் காலத்தில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பது போன்று இராஜிவ் காந்தி தலைமை அமைச்சரானார். எல்லாமே தலைகீழாயிற்று. உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் தாராளமயமாக்கல் என்ற பெயரில் பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

1991இல் காங்கிரசு ஆட்சியின் தலைமை அமைச்சராக இருந்த நரசிம்மராவ், இராஜிவ் காந்தி தொடங்கிய ‘திருப்பணி யை’ப் “புதிய பொருளாதாரக் கொள்கையாக” அறிவித்தார். உலக வங்கியின் ஊழியராகப் பணியாற்றி மத்திய அரசின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன்சிங், ஏகாதிபத்திய நாடுகளின் முகவராக இக்காலக்கட்டத்தில்தான் செயல்படத் தொடங்கினார். உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இந்தி யாவின் பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் தலைமைப் பீடங்களாக மாறின. “தாராளமயமாக்கல், தனியார்மய மாக்கல், உலகமயமாக்கல்” என்ற முகமூடியை இந்தத் திட்டத்தை வகுத்தோர் அணிந்து கொண்டனர். நேர்முக, மறைமுக வரிச்சலுகைகள் பல இலட்சங்கோடி அளவிற்குத் தனியார் துறைக்குத் தாரைவார்க்கப்பட்டன.

கடந்த பத்தாண்டுகளில் தனியார் துறைக்கு அளிக்கப் பட்ட வரிச்சலுகையின் மதிப்பு 60 இலட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் ‘திருப்பணிகள்’ எல்லாம் ஆட்சித் தலைமை மாறினாலும், மாற்றுக் கட்சியினர் ஆட்சியமைத் தாலும் மாறாது; மாறவில்லை.

1999இல் வாஜ்பாய் தலைமை அமைச்சரானார். இந்தத் ‘திருப்பணி’ இவர் காலத்தில் மேலும் செவ்வனே முடிக்கப்பட்டு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று முழக்கமும் ஒலிக்கப்பட்டது. ஒரு காலத்தில் “இந்தியனாக இரு, இந்தியப் பொருட்களையே வாங்கு” என்று முழக்கமிட்ட காங்கிரசுத் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, 2004இல் பொறுப்பேற்றது. அந்நிய முதலீடுகளுக்கு இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. தனியார் துறைக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கின்ற கொள்ளை இலாபங்களைக் கண்டுகொள்ளாதே, உள்நாட்டு சிறு குறுந்தொழில்கள் நசிந்து போவதைப் பற்றிக் கவலை கொள்ளாதே, இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் துறைக்குத் தாரைவார்த்துப் பெற்ற கையூட்டுப் பணத்தை சுவிஸ் வங்கிக்கு எடுத்துச் செல், ஹவாலா பணத்தைப் பல நாடுகளில் பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்காதே என்று - அறிவிக்கப்படாத ‘புதிய பொருளாதாரக் கொள்கைகளை’ நிறைவேற்றுவதுதான் மத்தியில் ஆளும் ஆட்சியினரின் கடமையாயிற்று. இதனால் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவுத்தரகர் கோவிந்தாச் சார்யா - பா.ஜ.க.விற்கும், காங்கிரசிற்கும் பொருளாதாரக் கொள் கைகளில் வேறுபாடே இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.

100 விழுக்காடு அந்நிய முதலீட்டோடு இயங்கிக் கொள்ளையடிக்கும் எல்.ஜி. எலக்ட்ரானிக்; 16 ஆயிரம் கோடி, அமெரிக்கக் கணினி நிறுவனமான ஐ.பி.எம்.; 14 ஆயிரம் கோடி, நோக்கியா நிறுவனம்; 23 ஆயிரம் கோடி, ஹூண்டாய் நிறுவனம்; 20 ஆயிரம் கோடி, சாம்சங் நிறுவனம்; 16 ஆயிரம் கோடி, 50 விழுக்காட்டுக்கு மேல் முதலீட்டில் பங்கு வைத்துள்ள சுசூகி நிறுவனம்; 30 ஆயிரம் கோடி, 67 விழுக்காடு பங்கு வைத்துள்ள வோடாபோன்; 22 ஆயிரம் கோடி, 52 விழுக்காடு பங்கு வைத்துள்ள யூனிலிவர் நிறுவனம்; 18 ஆயிரம் கோடி அளவிற்குப் பொருட்களை விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளன. இந்த விற்பனை எல்லாம் ஒரே ஆண்டில் நீண்ட வரிசைப் பட்டியலில் உள்ள முதல் 10 அந்நிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்று ஏழை, நடுத்தர மக்களின் பணத்தைச் சூறையாடித் தங்கள் நாடுகளுக்கு இலாபமாக எடுத்துச் சென்றன என்பதையே பறைசாற்றுகின்றன. இந்த நிறுவனங் களில் பல, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பைச் செய்துள்ளன என்ற உண்மை அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் வழியாக வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மூலவளங்கள், காட்டுவளங்களைக் கொள்ளையடிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. மன்மோகன் சிங், உலகமயமாதல் என்றால் இந்தியக் காட்டு வளங்களையும், நாட்டு வளங்களையும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அந்நிய நிறுவனங்களுக்குக் குத்தகை விட்டுக் கொள்ளையடிக்க அனுமதிப்பதுதான் - ‘9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சிக்கு’ வித்திடும் என்று வாதிடுகிறார். 2011இல் வெளிவந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின்படி, தனியார் நிறுவனங்கள் நாளொன்றுக்குப் பெறும் வரிச்சலுகை 150 கோடியாகும். இவ்வாறு ஏழை, எளிய மக்களின் வரிப்பணமும், இந்தியாவின் பொதுநிதியும் தனியார் துறை கொழுப்பதற்காகச் சூறையாடப்படுகின்றன.

அமெரிக்க நாட்டின் பொருளாதார அறிஞரும், 2009ஆம் ஆண்டு வரை உலகமயமாதல் கொள்கையை ஆதரித்தவரும், இக்கொள்கையைப் பற்றிப் பல நூல்களை எழுதியவரும், நோபல் பரிசு பெற்றவருமான உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான ஜோசப் ஸ்டிக்லிசு, பிப்ரவரி 21, 2011 அன்று இந்தியாவிற்கு வந்து, தில்லியில் ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கை எவ்வாறு தோல்வி யடைந்து வருகிறது என்று குறிப்பிட்டள்ளார். பன்னாட்டு மூலதனத்தில் வெளிவரும் Times of India என்ற அந்த முதலாளித்துவ ஏடுதான் ஸ்டிக்லிசிடம் பல கேள்விகளை எழுப்பி மத்திய அரசின் நெறிகெட்ட, நேர்மையற்ற செயலை வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிசிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏழை மக்களையும் பொருளாதாரத்தில் இணைத்து இயைந்த வளர்ச்சியை (inclusive Growth) இந்தியாவில் கொண்டு வர முடியுமா? என்ற கேள்விக்கு அவர், “தற்போது சுரங்கங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங் களில் உள்ளூர் மக்களுக்கு இயற்கை வளங்களின் பயன்கள் கிட்டவில்லை. இதற்கு மாறாக, கட்டுப்பாடற்ற சுரங்கம் தோண்டும் பணிகளாலும், சுற்றுச்சூழல் கேடுகளாலும் அம்மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படு கின்றன. தோற்றுப்போன அரசாட்சி முறையையும், கட்டற்ற முதலாளித்துவத்தின் போக்கினையும் இந்நிகழ்வுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றன. இந்தியாவின் வளங்கள் மக்களுக்குச் சொந்த மானவை. அரசுகள் மக்களைத்தான் பிரதிபலிக்க வேண்டும், இதற்கு என்ன விளக்கமென்றால், பொது வளங்களைப் பறித்துக் கொள்வதற்குத் தனியார் துறைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்பதே ஆகும்” என்று ஸ்டிக்லிசு தனது பதிலில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். இவர் ஒரு மாவோயிஸ்டோ அல்லது புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயோ அல்ல. உலகமயமாதல் கொள்கை இயங்குவது பற்றி, அதுவும் குறிப்பாக இந்தியாவில் செயல்படுவது பற்றி அறிந்து, தெளிந்து வெளியிட்ட ஆழமான கருத்துகள். இப்பொழுது புரிகிறதா இந்தியக் கொள்ளைக்காரர்கள் பற்றி அமெரிக்க வெள்ளைக்காரர் அளித்த சான்றிதழ்?

இதைத்தான் நுண்மாண் நுழைபுலத்தோடு 25 வயது இளைஞரான புரட்சி வீரன் பகத்சிங், ‘மன்மோகன் சிங் போன்றோர், சோனியா போன்றோரின் ‘வழிகாட்டுதலோடு’ ஆட்சியமைப்பார்கள், முதலாளித்தவத்தைப் போற்றிச், சுரண்டல் முறையை நிரந்தரப்படுத்துவார்கள் என்பதை அன்றே சரியாகக் கணித்துள்ளார். பகத் சிங் தனது தாய்க்கு எழுதிய மடலில், “அம்மா, என்னுடைய நாடு ஒரு நாள் விடுதலை அடையும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் வெள்ளை துரைமார்கள் விட்டுச் செல்லும் நாற்காலிகளில் பழுப்பு நிற துரைமார்கள் அமரப் போகிறார்களே என்பது பற்றித்தான் எனக்கு அச்சமாக இருக்கிறது. மக்களின் துன்பம் ஒருபோதும் மாறப் போவதுமில்லை. பழைய முறைகளை முற்றாக அழித்தாலொழிய எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

Pin It