மனித வாழ்வு தனியாக இயங்கும் தனி வாழ்வு அல்ல. புற உலகைப் புறந்தள்ளிவிட்டு ஒரு மனிதன் இயல்பான வாழ்க்கை வாழ இயலாது. புற உலகில் நிகழும் நிகழ்வுகள் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அதன் அழுத்தத்தைத் திணித்து பாதிப்பை பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பாதிப்பு ஏற்படுத்தும் தாக்கமே தாம் பெற்ற துன்பம் பிறரும் படக்கூடாது என்று எண்ணி உலகினைச் செதுக்கும் உளியாகப் பலரும் மாறி, பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுகின்றனர். அவ்வாறு பொதுநலம் பேணுதல் புண்ணியம் என்று மதம் சொல்கிறது. அது விரிந்து கடவுள், பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், மறுபிறவி என சமூகத்தில் நிலைபெற்றுவிட்டது. எனினும் இதற்கு எதிர்த்திசையில் பயணம் செய்யும் பொதுநலம் பேணுபவர் உலகில் உள்ள மனித இனம் படு கின்ற துன்பத்தினை உள்வாங்கி, அவற்றினைப் போக்கிட தத்துவங் களையும், சித்தாந்தங்களையும் அவரவர் இயல்பில் விதைத்து மறைந் துள்ளார்கள்.

அவ்வாறு எதிரெதிர்த் திசையில் பயணிக்கும் தத்துவங்களும், சித்தாந்தங்களும் எல்லா காலகட்டத்திலும் மனித சமூகத்தை வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையில், அவற்றை வடித்தெடுத்தவர்கள் இயக்கம், கழகம், கட்சி மற்றும் பல்வேறுபட்ட நிறுவனங்களை நிலைபெறச் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். மதம், கடவுள் அவற்றையொட்டிய நிறுவனங்கள் அனைத்தும் மனிதனின் ஆசையைத் தூண்டிவிட்டு அவனை விட்டில் பூச்சியாக்கி விளக்கொளியில் விழுந்து மடியும் தனிமனித வாழ்க்கை முடித்து வைத்து விடுகின்றது. மாறாக, எதிர்த்திசையில் பயணிக்கும் சிந்தாந்தவாதிகள் உலகம், நாடு, மாநிலம், சமூகம், குடும்பம், சுற்றம், தனிமனிதன் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வியலைக் கணக்கில் கொண்டு உலகைச் சரியான பாதையில் இயக்கி இருக்கின்றனர்.

அவ்வாறு இயக்கங்களைப் படைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்; மேலை நாடுகளில் காரல்மார்க்சு, ஏங்கல்சு, ஸ்டாலின், லெனின்; இந்தியாவில் புலே, வள்ளலார், அயோத்திதாசர், அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர், ஈ.வெ. இராமசாமி, நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரைக் குறிப்பிடத் தக்கவர்களாகக் கொள்ளலாம். தென்னகத்தில், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவருடைய சித்தாந்தங்கள், சிந்தனைகள், பேச்சு, எழுத்து, இவற்றை அவர் காலத்திலேயே அவரின் குடியரசு, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளில் பதி விட்டுச் சென்றார். இவ்வியக் கத்தில் ஈர்க் கப்பட்டவரும், பெரியாரோடு இணைந்து பணியாற்றியவருமான திருச்சி. வே.ஆனைமுத்து பெரியாரின் சிந்தனைகள், பேச்சுகள் இவற்றினை உலகில் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பிலேயே பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் என்ற மூன்று தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்தவர். அதன் தொடர்ச்சியாக அவர், சிந்தனையாளன் பெரியார் சமஉரிமைக் கழகம் (பின்னர் மாற்றப்பட்டு மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி), சிந்தனையாளன், பெரியார் சமஉரிமைக்கழகம் (மா.பெ.பொ.க.) அனைத் திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வகுப்பினர்-பழங்குடியினர் மதச் சிறுபான் மையினர் பேரவை, பெரியார் அச்சிடுவோர், வெளியிடுவோர் குழுமம், பெரியார் இரா (யீநசலையச நுசய-ஆங்கிலம்) பெரியார் ஈ.வெ. ராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக் கட்டளை என இயக்க ரீதியாகச் செயல்படும் நிறுவனங்களைத் தன் வாழ்நாளில் நிறுவியுள் ளார்.

இந்நிறுவனங்களில் பெரியார் ‘இரா’ மாத ஏடும், பெரியார் அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர் குழுமமும் பொருளாதார நலிவால் காலவோட்டத்தில் கரைந்துவிட்டன; எனினும் கட்சி, அறக்கட்டளை, சிந்தனை யாளன் மாத ஏடு இவை மூன்றும் தோழர் வே. ஆனைமுத்துவின் அர்ப்பணிப்பால் இது நாள் வரை எல்லாக் காலங்களிலும் உயிர்ப்புடன் தடம்பதித்துக்கொண்டு நடைபோடுகின்றன.

கட்சி அகில இந்திய அளவில் சமூக நீதியை வென்றெடுக்க மண்டல் குழுவை அமைத்திடவும், அதன் அறிக்கையை வெளியிட வைத்தும், அதன் விளைவாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மைய்ய அரசு பணிகளில் இடஒதுக்கீடு பெற்றது, பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீடு பெற வழி செய்தது, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு (பிற்படுத்தப் பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கு 20 விழுக்காடு) பெற வழி செய்தது. நீர்மேலாண்மை, மொழித் தன்னுரிமை இவற்றில் தொடர்ந்து களம் கண்டுள்ளது. சிந்தனையாளன் நாளேடு தொடர்ந்து பெரியார், அம்பேத்கர், மார்க்சு இவர்களின் சித்தாந்தங் களைப் பாமர மக்களிடையே இடைவிடாது கொண்டு சேர்த்து வருகிறது.

அறக்கட்டளைக்கு நிரந்தர இடம் தேவை என்பதை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகள் தொடர்ந்து பாடுபட்டு சென்னை - திருவள்ளூர் சாலையில் சர்வே எண்.277/2 என்ற அரசு இடத்தை தேர்வு செய்ததில் தோழர் தே. முத்து அளித்த பங்கு ஈடு இணையற்றதாகும். இதனை ஆண்டு குத்தகை ரூ.10,000/-க்கு 1997-இல் தமிழக அரசு அரசாணை பெற்றிட உதவியவர் மறைந்த எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் ஆவார்; அவர் அன்னாளைய வருவாய் துறை அமைச்சர். இதில் 920 சதுர அடியில் தரைத் தளம் கட்டப் பட்டு 2009-இல் திறப்பு விழா நடைபெற்றது. இக்கட்டடம் கட்டத் தொடக்கக் காலத் திலிருந்தே பொறியாளர் இரா. சிவப்பிர காசம் முழுப்பொறுப்பேற்று பல தோழர் களின் துணையுடன் கட்டடம் முழுமை பெறச் செய்தார். இதில் முதல்தளம் கட்டடம், அடுத்து கட்டப்பட்ட நூலகம் இவைகள் அனைத்தும் முழுமைபெற பொறுப்பேற்றுக் கொண்டவரும் அவரே.

இந்நிலப்பரப்பை அறக்கட்டளையின் நிரந்தர இடமாக்கிட அரசுக்கு 2010-இல் விண்ணப்பித்து தொடர்ந்து முயற்சி செய்தது திரு. வே. ஆனைமுத்து. இதற்கு உறுதுணையாக இருந்து உதவியவர் திரு. இராசமாணிக்கம், ஐ.ஹ.ளு. அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நேர்முகச் செயலாளர். இவ்விடத்தை முழுவதும் விலைக்குப் பெற, அல்லது 99 ஆண்டு நீண்டகாலக் குத்தகைக்குப் பெற முயற்சிகள் மேற்கொண்ட போது, கலைஞர் அவர்கள் அனைத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, 30 ஆண்டுகள் காலத்திற்குக் குத்தகைக்கு அளித்து அரசாணை பிறப்பித்திட ஒப்புதல் அளித்தது பெருமைக்குரியது.

அதற்கு அடுத்ததாக நூலகக் கட்டடம் அமைந்துள்ளது. இதனை அறக்கட்டளைக்கு அளித்திட கருப்பொரு ளாக அமைந்தவர் தொழிற்சங்கத் தலைவர் திரு. இரா.குசேலர், அசோக் லைலண்டு தொழிற் சங்கம் இக்கட்டடத்தை தன் முழு பொறுப்பில் கட்டிக்கொடுத்துள்ளது.

அறக்கட்டளை ஆற்றிய

முக்கிய பணிகள் :

  1. பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் நூலை விரிவு செய்து மறுமதிப்பு செய்தது.
  2. தனெஞ்செய்கீர் எழுதிய டாக்டர் அம் பேத்கர் வாழ்க்கை வரலாறை தமிழ்ப் மொழிபெயர்ப்பு இரண்டாம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.
  3. ஓராண்டு முழுவதும் விடுமுறை நாள்களில் 11 தலைப்புகளில் பௌத்தம், வள்ளுவம், மார்க்சியம், லெனினியம், காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், பாவேந்தம், தமிழ்மொழித் திறன், மெய்ப்புத் திருத்துதல், கணினி அறிமுகப் பயிற்சி என சித்தாந்தங்கள், மொழித்திறன் வளர்த்தல் இவற்றினை பயிலரங்கம் வழியாகப் பல தோழர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
  4. புரட்சிகர இயக்க நூல்களைத் திரட்டி வெகுமக்கள் பயன்பெற நூலகம் அமைத் துள்ளது.

இவ் அறக்கட்டளை 1993-இல் தோழர்கள் வே. ஆனைமுத்து - மேலாண்மை அறங்காவல ராகவும், தே. முத்து-அறக்கட்டளைச் செயலாள ராகவும், மறைந்த மா.முத்துசாமி, மறைந்த து. தில்லைவனம் மற்றும் க.முகிலன், இரா. பச்ச மலை, துரை கலையரசு அறங்காவலர்களாகவும் பொறுப்பில் அறக்கட்டளை பதிவு செய்யப் பட்டது.

அறக்கட்டளை 1993இல் பதிவு செய்த நாளிலிருந்து, அதனைத் தொடர்ந்து 1997-இல் இருந்து ஆண்டுக் குத்தகைக்கு அரசிடமிருந்து அம்பத்தூரில் நிலத்தை பெற்றிடவும், 2010-இல் அதையே நீண்டகால குத்தகைக்குப் பெற்றிடவும், அறக்கட்டளையில் நிலைபெற் றுள்ள கட்டடங்கள் கட்ட எல்லாத் துறை களிலும் அனுமதி பெற்றிடவும், தோழர் வே.ஆனைமுத்துவுக்கும் அம்பத்தூர் மேட்டுக் குப்பம் தோழர் தே.முத்து மற்றும் தோழர் சீர்காழி ம. முத்துசாமி ஆகியோருக்குப் பல தோழர்களும் தோன்றாத் துணையாக நின்றனர்.

பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் முதல் பதிப்பு 1974-இல் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் திருச்சியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதில் விடுபட்ட பெரியாரின் பேச்சு, எழுத்து இவற்றினைத் தொகுத்து இரண்டாம் பதிப்பு 2010-இல் கலைஞரின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் 21.03.2010 அன்று வெளியிடப்பட்டது. இதனை கலைஞரால் அறிவாலயத்தில் வெளியிடப்பட உறுதுணை யாக அமைந்தவர் சிந்தனையாளன் மாத ஏட்டில் கொள்கைப் பதிவுகளைப் பதித்த வருமான பேராசிரியர் மு.நாகநாதன். இவ்விழா விற்குத் தலைமைதாங்க கலைஞரை நேரில் சென்று தோழர் வே. ஆனைமுத்துவும் நானும் வேண்டுகோள் விடுத்தபோது கலைஞர் “வாங்க ஆனைமுத்து, நலமாக உள்ளீர்களா?” எனத் தோழமையுடன் மனிதநேயத்துடன் பேசியதும் விழாவிற்குத் தலைமை தாங்க இசைவு அளித்தது, சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடியது என அனைத்தும் இன்றும் என் மனக்கண்முன் நிழலாடுகிறது.

அடுத்து அறக்கட்டளை வெளியிட்டது டாக்டர் - அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பதிப்பாகும். தனெஞ்சைகீர் ஆங்கிலத்தில் எழுதிய இதன் மூலநூலைத் தமிழில் மொழிபெயர்க்க ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் தோழர் க.முகிலன், தோழர் ஆனைமுத்துவுடன் தன்னை அர்ப் பணித்துக் கொண்டவர். இதன் தமிழ்மொழி நடை தமிழறிஞர்களாலும் மிகவும் பாராட்டப் பெற்றது.

இனிவரும் காலத்தில், மார்க்சு, புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா இவர்கள் காட்டிய அடையாளப்படுத்திய பாதையில் தோழர் வே. ஆனைமுத்துவின் அடியொற்றி தமிழ்ச் சமூகத்திற்கு இந்த அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றும்!

Pin It