உலக மயமாக்கலில் நெசவுத் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. நடந்த நான்கு மாதங்களாக பெரும்பான்மையான ஜவுளித் தொழில்கள் முடங்கிப் போய்விட்டது. இதற்கானக் காரணம், நூல்பஞ்சு ஏற்றுமதிதான். இதன் விளைவு உள்நாட்டு உற்பத்திக்கு நூல் பஞ்சு கிடைப்பதில்லை. பல மடங்கு விலை உயர்வால் பதுக்கல்காரர்களும் பெருகிவிட்டனர்.

பஞ்சு விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு நன்மை என்பது போன்ற கருத்தை அரசு உருவாக்கி வருகிறது. உண்மையில் தற்போது விவசாயிகள் இலாபம் அடைந்தாலும் இது தற்காலிகமானதுதான். அரசு பஞ்சு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட ஆதார விலையை நிர்ணயம் செய்ய வில்லை என்றால், நாளை விவசாயிகளின் நிலை சிக்கலானதாக மாறும்.

ஏனென்றால், தற்போதுள்ள நூல் விலையேற்றம் செயற்கையானதுதான். வெளிநாடுகளுக்கு இந்தாண்டு டிசம்பருக்குள் 55 இலட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நெருக்கடியை உலகமயக் கொள்கை உருவாக்கித் தந்திரப்பதால், உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் உற்பத்தியாகும் பஞ்சினை மொத்தமாக ஏற்றுமதி செய்வதிலே இலக்காக உள்ளது இந்திய அரசு.

இதன் விளைவு இன்று இலட்சக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தமிழகத்தின் முதன்மைத் தொழில்களில் ஒன்றான நெசவு முற்றாக அழிக்கப்படும் அபாயமும் இதிலிருக்கிறது. மின்னலாடை, ஆயத்தாடை, விசைத்தறி உற்பத்தி என இந்தியாவின் 80 சதவீத தேவைகளை தமிழகம் நிறைவு செய்கிறது. மேலும் 60 சதவீத உள்நாட்டு வணிகத்தையும் கொண்டுள்ளது நெசவுத் தொழில்.

இதைச் சார்ந்து பல இலட்சம் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் நெசவு சார்ந்த துணைத் தொழில்கள் என அனைத்தும் முடங்கும் நிலையில் உள்ளன. தமிழகத்தின் தொழில் வளத்தில் 40 சதவீதம் நெசவைச் சார்ந்த தொழில்கள்தான்.

இந்நிலையில் சீனா, வங்கதேசம், பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பஞ்சும், நூலும் ஒப்பந்தத்தை விட அதிகமாகவே ஏற்றுமதி செய்கிறது இந்தியா. இதனால் தமிழகத்தின் ஆதாரத் தொழிலான ஜவுளி தலை நிமிர வாய்ப்பேதுமில்லை. வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாகும் பருத்தி, ஆயத்தாடை யாகவோ, பின்னல் ஆடையாகவோ, துணியாகவோ மீண்டும் இந்தியச் சந்தைக்கு வருவதில் எந்த தடையுமில்லை. அப்படி வரும் சூழலில் உள்நாட்டு உற்பத்தியையும், உள்நாட்டு சந்தையையும் இழந்து நிற்கும் நிலை உருவாகும். இது நாளையே நடக்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் கடந்து துணி வணிகம் செய்த தமிழனின் வரலாற்று பெருமை வெரும் பதிவாக மட்டுமே இருக்கும்.

நமது சொந்த உற்பத்தியையும், வணிகத்தையும் இழந்த பிறகு நமது பஞ்சு விவசாயிகள் வெளிநாட்டு ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்படும். பஞ்சு விலையைத் தீர்மானிப்பவர்களாக அவர்களே இருப்பார்கள். இன்றைய கரும்பு விவசாயி களின் நிலை, நாளை பஞ்சு விவசாயிகளுக்கும் வந்து விடும். உலகமயமாக்கலில் முதலில் பாதிக்கப்படு பவர்கள் விவசாயிகள்தான்.

விவசாயிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது சில்லறை வணிகத்தில் பன்னாட்டு பெருவணிகக் குழுமங்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய ஆட்சி யாளர்கள், இதனால் விவசாயிகள் பயனடைவார்கள். மக்களுக்கு தரமான, குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்று பரப்புரை செய்கின்றனர். இது மோசடியான கருத்து. இதை ஏற்கக் கூடாது. உலகமயமாக்கல் முதலில் பொதுமக்களையும், விவசாயிகள், சில்லறை வணிகர்கள், தொழில் முனைவோர்கள் என படிப்படியாக எல்லோரையுமே பாதிக்கக் கூடியதுதான்.

எனவே ஆட்சியாளர்கள் உருவாக்குகின்ற முரண்பாடுகளை நம்பாமல் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் தொழில் வளங்களை காப்பாற்ற முடியும்.

அந்த வகையில் பஞ்சு ஏற்றுமதியை உடனே தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்குப் போக மீதமுள்ளதை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

பஞ்சு பதுக்கலை தடை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு விலையை நிர்ணயித்து எப்போதும் இழப்பில்லாமல் பஞ்சு விலையை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக இந்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டியதும், வெளிநாட்டுக் கொள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.

Pin It