தேசிய இனக்குழு சபையின் தலைமையில் தேசிய இனங்களின் மக்கள் ஒரு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பர்மியப் பிரச்சனையை ராணுவ ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையேயான பிரச்சனையாக மட்டும் பார்ப்பதால் அதற்குத் தீர்வு காண முடியாது என்பதையே அவர்கள் இதன்மூலம் உணர்த்துகிறார்கள். பர்மா ஒன்றியம் என்பது அரசியல் அடிப்படையில் உறுதியான நாடாக ஆக வேண்டும். அதற்கு முன்பாக, பர்மன் அல்லாத இனங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சனைக்கு அரசியல் அடிப்படையிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் உறுதியான தீர்வு காண்பது மிகமிக அவசியம் என்று நம்புகிறார்கள்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக 1994-ல் ஐ.நா. ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அந்த முத்தரப்புப் பேச்சுவார்ததையில் இனச்சிறுபான்மை யினரின் பிரதிநிதியாகக் யார் கலந்து கொள்வது என்ற பிரச்சனை எழுந்தது. இதற்குத் தீர்வு காண்பதற்காக, ‘இனக்குழு தேசிய இனங்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்புக் குழு’ (இ.என்.எஸ்.சி.சி) என்ற ஒரு பணிக்குழுவை இனச் சிறுபான்மையினர் அமைத்தார்கள். பின்னர், ‘இனக்குழு தேசிய முன்னணி’ என்று அதன் பெயர் மாற்றப்பட்டது. அதில் தேசிய ஜனநாயக முன்னணி (என்.டீ.எப்), ஜனநாயக-சுதந்திர பகுதிகளுக்கான ஐக்கிய தேசிய இனங்கள் லீக் (யு.என்.எல்.டீ-எல்.ஏ), கரேனீ தேசிய முற்போக்குக் கட்சி (கே.என்.பி.பி) போன்ற மியான்மர் அரசுடன் சண்டை நிறுத்தம் தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ளாத, உடன்பாடு செய்து கொண்டுள்ள அனைத்துக் குழுக்களும் இடம்பெற்றிருந்தன.....

 இந்த விஷயத்தில் இந்திய மக்களும் ஜனநாயக சக்திகளும் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் இ.என்.சி பிரதிநிதிகளுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்தியர்கள் பலரும், பர்மா பிரச்சனையை தேச ஒற்றுமைக்கும் பிரிவினைவாதத்துக்கும் இடையேயான பிரச்சனையாகவே பார்க்கிறார்கள்; அத்துடன் புதிய பாங்லாங் முன்முயற்சிக்கு மேற்கத்திய அரசுகளும் மேற்கத்திய நன்கொடையாளர்களின் நிதியில் இயங்கும் அரசு சாரா நிறுவனங் களும் ஆதரவளிப்பது பல இந்தியர் களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி யுள்ளது என்று அவர்களிடம் கூறினேன்.

பாங்லாங் முன்முயற்சி ஒரு போராட்ட அடையாளமா அல்லது பர்மிய மக்களைப் பிளவுபடுத்த நவீன காலனியாதிக்கம் பயன்படுத்தும் கருவியா? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால், புதிய பாங் லாங் முயற்சி ஏற்படக் காரணமாக இருந்த சூழல்களைப் புரிந்து கொள்வது அவசியம். ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட்கார்ந்து கொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரேனியர் களுக்காவும் ஆரக்கானியர்களுக்காவும் வாதாடுகிறேன். ஆகவே, அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வரலாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்.

வஞ்சக உளவாளி : நந்தா ஹக்கர்

தமிழில் : அ. குமரேசன், கிழக்கு பதிப்பகம், சென்னை-18, பக்.286|ரூ. 170

Pin It