இலக்கிய வகைப்பாடுகளில் பயண இலக்கியம் முக்கிய இடம் வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் எல்லோரும் உலகின் எல்லா நாடு களுக்கும் சென்று வர இயலாது. தாங்கள் நேரில் பார்க்காத மக்களை, பெருநகரங்களை, இயற்கை வழங்கும் இனிய காட்சிகளை வாசகன் கண் முன் நிறுத்தும் பணியைப் பயண இலக்கியப் படைப் பாளி செவ்வனே செய்கிறார். தமிழில் இத்துறையின் முன்னோடி என ஏ.கே. செட்டியார் அவர்களைக் கூறலாம். அவரை ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று சிறப்பித்துச் சொல்வதுண்டு. போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம் போதிய வளர்ச்சி பெறாத ஒரு கால கட்டத்தில் அவர் ஏறத்தாழ உலகின் எல்லா முக்கிய நாடுகட்கும் பயணம் செய்து, தன் அனுபவங்களை அழகாகப் பதிவு செய்துள்ளார்.

subrabharathi_400உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நிறைய பயண நூல்கள் வெளி வருகின்றன. நாவலாசிரியர் சுப்ரபாரதி மணியன் தன் இங்கிலாந்து, ஐரோப்பியப் பயண நிகழ்வுகளை ‘மண் புதிது’ நூலில் சுவைபடச் சொல்லி உள்ளார்.

ஏர் இந்தியா, குமுதம் நடத்திய இலக்கியப் போட்டியில் பெற்ற வெற்றி அவருக்கு இந்த அரிய வாய்ப்பினை நல்கி இருக்கிறது.

வெளிநாடு செல்ல விரும்புவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? இங்கிலாந்து தூதரக அலுவலகத்தில் கால் கடுக்க நின்று, விசா வாங்குவதற்கு அவர் பட்டபாடு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

எப்படியோ லண்டன் போய் இறங்கிவிட்டார். அங்கு வசிக்கும் 85 ஆயிரம் ஈழத்தமிழர்கள் நிலை மெச்சும்படியாக இல்லை. ஹோட்டல்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் கடுமையாக உழைக் கிறார்கள். “உலகத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடு அமைய வேண்டும். அது ஈழ நாடு” என்பது அவர்கள் நீண்ட நெடுங்கனவு. அங்கு வாழும் இந்தியத் தமிழர்களோ நாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை என்று சிவன், முருகன், விநாயகர் கோவில் களில் அடைக்கலமாகிறார்கள். இது எவ்வளவு பெரிய முரண்! லண்டனிலிருந்து மட்டும் 30 கவிதை இதழ்கள் வெளிவருவது சற்று ஆறுதலான விஷயம்.

லண்டனில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் இருப்பினும், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தருவது போராட்டமே என்று வாழ்க் கையை நிதானப்படுத்திக் கொண்ட மார்க்ஸின் கல்லறையைப் பார்க்கத் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டார் நூலாசிரியர். அங்குச் செல்ல மெட்ரோ ரயில் வசதி இல்லாத போதிலும், எழுத்தாள நண்பர் யமுனா ராஜேந்திரனுடன் காரில் சென்று அம்மாமேதையின் கல்லறையைக் கண்ணுற்றதை நெஞ்சம் நெகிழக் குறிப்பிடுகிறார். மார்க்ஸ் கல்லறை பிற பொது ஜனங்களுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிறது. அவரது வாழ்க்கையைப் போலவே அவர் கல்லறையும் எளிமையின் சின்னமாகத் திகழ்வது மனதிற்கு சந்தோஷம் தருகிறது என்கிறார்.

இங்கிலாந்தை விட ஜெர்மனியில் நிறவெறி குரூரமாய் உள்ளது என வேதனையுடன் குறிப்பிடு கிறார். கம்யூனிஸ்ட் நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியுடன் இணைந்த பின்னால், இடையில் இருந்த பெர்லின் சுவர் உடைபட்டது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு. இட்லரின் நாஜிக் கேம்ப் கொடுமையின் சாட்சியங் களாக ஜெர்மனியர்கள் நாகரிகத்திற்கு இழுக்கு என்று பலர் நினைத்த போதிலும், அங்கு முளைத் துள்ள புதிய நாஜிக் கட்சியின் ‘வெளி நாட்டவரை வெளியேற்று’ என்ற கோஷம் ஆப்பிரிக்க ஆசிய இனத்தவரைக் குலை நடுங்க வைக்கிறது. பெர்லினில் நடுநிசியில் இரவுக் காட்சி முடிந்து, பஸ் நிலையம் வந்தபோது, அங்கு நிறைய இலங்கைத் தமிழ்க் குரல்கள்! ரெஸ்டாரண்ட்களில் 15 மணி நேரம் உழைத்துவிட்டு, இவர்கள் வீடு திரும்பும் நேரம். அகதிகளாய் இங்கு வரும் அவர்களிடம் அனுதாபம் காட்டக் கூட யாருமில்லையே என ஆசிரியர் தன் உள்ளக் குமுறலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அடுத்து ஆசிரியர் நம்மைக் கலைகளின் தலைநகரான பாரிசுக்கு அழைத்துச் செல்கிறார். பத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை, பிரமிப்பூட்டும் ஈபிள் டவர், விஞ்ஞான ஆய்வு மையம், ஓவியர்கள், சிற்பக் கலைஞர்களின் கூடம், நவீன கண்ணாடி பிரமிடு, நூல் நிலையம் என நிறைந்து கிடப்பதால் தான் என்னவோ, “நீ உண்மையான அமெரிக்கனாக இருந்தால், பாரிசைப் பார்க்காமல் செத்துவிடாதே” என்று அமெரிக்காவில் சொல்வார்களாம்! சுத்தம், ஒழுங்கு, சுற்றுச்சூழல் குறித்த பெரும் அக்கறை ஆகியவை பாரிசின் அழகிற்கு அழகு சேர்க்கின்றன என வியக்கிறார். ஜெர்மனியிலும், பிரான்சிலும் ஆங்கிலம் பேசுபவர்கள் வெகு சொற்பம். ஏனென்றால் அவர்கள் தங்கள் தாய்மொழியைப் பெரிதும் நேசிக்கிறார்கள். நமது ஆங்கில மோகம் தாய் மொழியைத் தின்று, கொன்று வருவது வேதனை தரும் விஷயம்.

உலகத்தின் செல்வக் களஞ்சியமாக இருந்த ஐரோப்பா இன்றைக்கு முந்தின கனவுகளுடன் இல்லை. அங்கும் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. பெல்ஜியத்தில் சமீபத்தில் மூன்று மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். பிரான்சில் இது 25 விழுக்காடாக உள்ளது. இதனால் சுவிஸ் அரசாங்கம் இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நினைக்கிறது. நார்வேயிலும் இதே நிலை நீடிக்கிறது. இங்கிலாந்து அகதிகளுக்கான உதவித் தொகையை நிறுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கேட்கும் அகதிகளில் 90ரூ விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்படுகின்றன. இதனால் தோன்றும் தங்கள் வாழ்நிலை அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்வதே புலம் பெயர்ந்தோர் இலக்கியமாக வடிவம் பெறுகிறது.

நூலாசிரியர் தன் பயணத்தின் போது ஆங் காங்கே பங்கு கொண்ட இலக்கியக் கூட்டங் களைப் பற்றிக் கோடிட்டுச் செல்கிறார். லண்டன் தமிழ்ச் சங்கம் நடத்திய இரு கூட்டங்களில் கலந்து கொண்டார். மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்புத் தரும் விவாதங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது என்கிறார். நாடகத் துறையில் அங்குக் காணப் படும் வளர்ச்சி நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. விக்டர் ஹியூகோவின் ‘லெஸ் மிஸரபிள்’ (ஏழை படும் பாடு) நாடகம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டும், இவர் அதைப் பார்க்க முடிய வில்லை! ஏனென்றால் 6 மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன வாம்! அமெரிக்க சினிமாவிற்கு எதிரான, நிறவெறிக்கு எதிரான இயக்குநர் ஸ்பெக்லீயின் ‘மால்கம் எக்ஸ்’ என்ற படம் ஒரு கறுப்புப் போராளியின் வாழ்வைச் சித்திரிப்பதை ‘கறுப்பு சினிமா’ என்னும் தலைப்பில் விவரித்துள்ளார். ஈழத்தமிழர்களின் குறும் படங்கள் பல அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

ஆசிரியர் தன் பயணத்தின்போது சந்தித்த ஒரு தமிழ்ப் பெண்ணிடம் கேட்ட இரு கேள்விகளும், அதற்கு அவள் தந்த பதிலும் நமக்கு அதிர்ச்சி யூட்டிய போதிலும், அங்கு நிலவும் சமூக நிலை மையைப் படம் பிடிக்கிறது.

முதல் கேள்வி: உங்களுக்கு பாய் பிரண்ட் உண்டா?

பதில் : எனக்கு பாய் பிரண்ட் உண்டு.

15 வயதிற்குப் பின்பு, குடும்பங்களை விட்டுப் போய் கல்யாணம் செய்து கொண்டோ, செய்து கொள்ளாமலோ வாழ்வது என்பது இங்கு சர்வ சாதாரணம். டேடிங் சாதாரணம்.

இரண்டாம் கேள்வி: இவர்கள் நம்மை எப்படி மதிக்கிறார்கள்?

பதில் : அவர்கள் நம்மை ‘பாக்கீ’ என்று தான் கூப்பிடுவார்கள். அது மிகவும் கேவலமான கெட்ட வார்த்தை போன்றது. கல்லூரியில்கூட அவர்கள் என்னைப் பார்த்துச் சொன்ன போதெல்லாம் கண்ணீர் வந்துவிட்டது.

சிறந்த கதை சொல்லி சுப்ரபாரதி மணியன் தன் இங்கிலாந்து, ஐரோப்பியப் பயண அனுபவங்களைத் தனக்கே உரிய எளிய, இனிய நடையில் விவரித்திருக்கும் ‘மண் புதிது’வெறும் பயண நூல் மட்டுமல்ல; புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வுச் சிக்கல்களைப் பதிவு செய்துள்ள ஆவணம்.

மண் புதிது

சுப்ரபாரதி மணியன்

வெளியீடு : அறிவுப் பதிப்பகம்

விலை : ரூ. 65.00

Pin It