மோடியின் மிகுமதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேலான நிலையில் இத்திட்டத்தால் மக்கள் எவ்வகையிலும் எவ்வித நற்பயனையும் அடையவில்லை என்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கிடக் காவிக்கயவர் கூட்டத்தால் தீட்டப்பட்ட தீயதிட்டம் இது. பல இலக்கம் பேரின் வாழ்வாதாரமான சிறு தொழில் களையும் அவர்கள் வாழ்வையும் நிலைகுலையச் செய்துவிட்டது. இதன் பலனாகக் கள்ளப்பணத்தாள்கள் அழியும். கறுப்புப் பணம் ஒழிக்கப்படும். கள்ள, கறுப்புப் பணப் புழக்கத்தால் நாட்டு எல்லையில் நடைபெற்று வந்த வன்முறை பயங்கவாதச் செயல்கள்  அற்றுப் போகும். கையூட்டுக்கள் களையப்படும் என்ற மோடி, அருண்சேட்லி கூட்டத்தின் கூற்றுக்கள் முற்றிலும் வெற்றுக் கூச்சல், பொய் என்றாகிவிட்டன. இதை ரிசர்வ் வங்கி தரும். பல்வேறு புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி காவிக் கூட்டத்தின் கூட்டாளி சிவசேனாவும், ஏன் இவர்களின் பொருளாதார மேதாவிகள் எனப்படும் யசுவந்சின்கா, அருண் சோரி, சுப்பிரமணியன்சாமி, குருமூர்த்தி போன்றோர் இத்திட்டம் திடுமென அவசர அவசரமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. முற்றிலும் மக்களுக்கு எதிராகவே சென்றுவிட்டது மட்டு மின்றி நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கவும் சீர்குலைக்கவும் வழிகோலிவிட்டது என்ற அவர்தம் கருத்துகள் இது தீயதிட்டம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இது அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் 21ஆம் விதியில் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையை மறுத்து நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கி விட்டது. அவ்வகையில் இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஓர் அரச பயங்கரவாத வன்கொடுமைத் திட்டம் என்றுதான் சொல்லமுடியும். விதி 21 சட்டப்படியாக நிறுவப்பட்ட வரைமுறையின்றி எவரொருவரின் வாழ் வையும், அவரின் தனிப்பட்ட விடுதலை உணர்வு உரிமையையும் பறிக்கக்கூடாது. (Art 21 of the(Art 21 of theConstitution of India says “No person shall bedeprived of his Life and Personal Liberty exceptaccording to procedure established by Law) உண்மையில் அரசுத் திட்டத்தால் நிகழ்ந்துவிட்ட உயிர்ப் பலிகளுக்கு மய்ய அரசைக் குற்றவாளியாகக் கருதி உச்சநீதிமன்றம்; உயர்நீதி மன்றங்கள், தேசிய மனித உரிமை ஆணையம் தம்மூப்பாக வழக்கு தொடர்ந் திருக்க வேண்டும்.

மோடி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் 8.11.16 நள்ளிரவிலிருந்து செல்லுபடியாகாது என அறிவித்து விட்டு ‘இவ்வறிப்பால் கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் களையப்படும் என்ற நிறைமனதுடன் ஏழை-எளிய மக்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், ஏனையோர் அப்பணத்தாள்களை மாற்றிட வங்கி வாயில்களில் கால்கடுக்க நாள் கணக்காக நின்று கொண்டிருக்கிறார்கள்’ என மனமறியப் பொய்யுரை களைப் பொழிந்தார். இதையே அருண் சேட்லியும் பிற நடுவணரசு அமைச்சர்களும் பின்பாட்டுக் பாடி வந்தனர். ஆனால் நடந்ததென்னவோ இதற்குத் தலை கீழாக ஏழை-எளிய பாட்டாளி, தொழிலாளி, விவசாய மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களுக்குத் தங்களிடமிருந்த ஒரிரு மிகுமதிப்புத் பணத்தாள்களைப் பயன்படுத்த முடியாமலும், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றாகக் செல்லும் பணத்தாள்களைப் பெற முடியாமலும் வங்கிகளில் இருந்த தங்கள் பணத்தைப் பெறுவதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். களிலும் பல மணி நேரம் காத்திருந்து தேவையான பணம் பெற முடியாமல் எல்லையற்ற இன்னல்களில் உழன்றனர். பலர் இன்னுயிரையும் இழந்தனர்.

இவற்றையெல்லாம் அச்சு, ஒலி. ஒளி ஊடகங்கள் வெளியிட்டு வந்ததைக் கவனமில்லாதோர் போல் பா.ச.க. காவிக்கூட்டம் கபடநாடகம் நடத்தினர். மோடிக்கு வெளிநாட்டுப் பயணம் அதிகம் என்பதால் கவனிக்க வில்லை போலும்.

இதில் என்ன வேதனையென்னவென்றால், இத் திட்டத்தின் கேடுகள் பலவாறாகப் பேச, எழுத்தப்பட்ட போதிலும், இதனால் நூற்றுக்கும் மேலான மக்கள் காவு வாங்கப்பட்டது பற்றி இடதுசாரிகள், காங்கிரசு, தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்பு கள் எனப் பலராலும், ஊடகங்களாலும் மேம்போக் காத்தான் அவ்வப்போது பேசு பொருளானதேயன்றி கடுமையான எதிர்வினையாற்றிடவில்லை என்பதுடன் உயிரிழந்தோரின் உற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்த நடுவணரசுக்கு நெருக்கடி தந்து அதைத் பெற்றுத் தந்திடவும் தவறிவிட்டார்கள். இனி யேனும் இதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். இதில் இன்னும் பெருங்கொடுமை என்னவென்றால் இவ்வளவு மக்கள் பலிகொடுக்கப்பட்ட பின்னரும் இத்திட்டத்தை அறிவித்தபோது இதனால் மக்கள் சில இன்னல் அடைய நேரிடும். நூறு நாள்களுக்குள் நிலைமை சீரடையும் என்றெல்லாம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என மோடியும், காவிக் கூட்டமும் சற்றும் மனிதப் பற்றின்றி, ஈவு இரக்கமின்றி சப்பைக்கட்டு விளக்கம் வைத்து வருகின்றனர். இதிலிருந்து இவர்கள் எவ்வளவு கொடுங் கயவர்கள் என்பதை உறுதி செய்துவிட்டனர்.

கடும்புயல், சூறாவளி, பெருவெள்ளம், பெருமழை, இடி, மின்னல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் முன்னறிவிப்புகள் முன்னேற்பாடுகள் செய்யப்படாததின் விளைவால் ஏற்பட்டு விடுகின்ற உயிரிழப்புகள் போன்று நடுவணரசின் இத்திட்டத்தின் செயல்பாட்டால் நூற்றுக்கும் மேலான மக்கள் பலிவாங்கப்பட்டதற்கு சில இன்னல் நேரிடலாம் எனச் சொல்லிவிட்டோம் என விளக்கமளிக்க முற்படும் கொடுஞ்செயல் உலக வரலாறு காணாத அரசு பயங்காரவாதச் செயல் என்றுதான் சொல்லவேண்டும்.

இதற்கு நடுவணரசு முழுப்பொறுப்பேற்றுக் கொண்டு உயிரிழப்புக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் இயற்றி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன் பலியா னோர் குடும்பத்தினர்க்கு தக்க இழப்பீடு உடனே அளித்திட ஆவன செய்யவேண்டும்.

இத்திட்டத்திற்கான இவர்கள் சொல்லுகின்ற நோக் கங்கள் உண்மைத் தன்மை உடையதா என்று ஐயுற வேண்டியுள்ளது. ஆனால் நாடுமுழுக்க நாட்டின் ஒட்டு மொத்த வெகுமக்களுக்கும் கொடுமையை இழைத்து விட்டு நாட்டின் கவனத்iயே இதில் குவிய வைத்து இதுபற்றியே பேசவைத்து திசை திருப்பிவிட்டு வேறெதுவோ சூதான, மறைவான, கமுக்கமான திட்டங்கள் எதையும் நிறைவேற்றி கொண்டனரோ என்ற அய்யமும் எழாமலில்லை.

இவர்கள் சொன்னதுதான் உண்மையான நோக்கம் என்றால் நடுவணரசு கீழ்க்காணும் செயல்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.

மிகுமதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்பு என்று சொல்லிவிட்டு ரூ.2000/- பணத்தாள் அச்சடித்திருக்கக் கூடாது. இது இவர்கள் சொல்வதற்கு நேர்எதிர்மறை யான விளைவுகளையே ஏற்படுத்தும். ரூ.2000 பணத் தாள் பெருமளவு கையூட்டுக்கு, கள்ளப் பணத்திற்கு, கறுப்புப் பணத்திற்கு அவற்றைப் பதுக்கி வைப்பதற்கு எளிதான வழியாகிவிடும். காட்டாக ரூ.2000/- தாள்கள் வெளிடப்பட்டதிற்கு முன்னும் பின்னும் கர்நாடகாவில் ரூ.500 கோடிச் செலவில் பா.ச.க. தலைவர் தனது மகள் திருமணம் எவ்வித அரசு நடவடிக்கையின்றி நடத்தியமை தமிழ்நாடு ராமமோகனராவ் பல கோடி ரூ.2000/- தாள்கள் பதுக்கி வைத்தமை, பொதுப் பணித்துறையின் ஒப்பந்தப் பணி மேற்கொள்வோரான சேகர்ரெட்டி பலநூறு  கோடிக்கு ரூ.2000/- தாள்கள் பதுக்கி வைத்தமை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.2000 தாள்கள் வெள்ளம் போல் பாய்தோடி யுள்ளமை போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. இத்திட்டம் பதுக்கலுக்கு, கையூட்டுக்கு, கள்ளக்கறுப்புப் பணத்திற்கானது என்பதற்கான கணக்கீடு. ஒரு கோடி ரூபாய்க்கு ரூ.2000 கட்டு 50 கட்டுக்கள் போதும் (2,000,00 ஒ 50 = ஒரு கோடி) ஆனால் இது 100 ரூபாயில் ஆயிரம் 100 ரூபாய் கட்டுகள் வேண்டும். எனவே ரூ.2000 பணத்தாள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது.

பழைய ரூ.1000 தாள்களைச் செல்லாதவையாக ஆக்கப்பட்டிருந்ததை அடுத்து ரூ.200 பணத்தாள் அச்சிடப்படாமல் மாற்றாக புதிய ரூ.500 தாள்களைப் போன்றே புதிய ரூ.1000 தாள்களை அச்சிட்டுப் புழக் கத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். மிகுமதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்புத் திட்டம் நடைமுறைக்கு வரு வதற்கு மிகவும் முன்கூட்டியே முறையாகத் திட்டமிட்டு புதிய ரூ.500 தாள்களைப் பெருமளவில் அச்சிட்டு புழக்கத்திற்குவிட்டிருக்க வேண்டும். உடன் பணம் பெறும் கருவிகளைப் புதிய பணத்தாள்களைப் பெறத்தக்க வகையில் முன்கூட்டியே மாற்றியமைத்திருக்க வேண்டும். இதனுடன் ரூ.100 தாள்கள், ரூ.50 தாள்களை பல இலக்கம் கோடி ரூபாய் மதிப்பில் பெருமளவுக்கு முன்பே அச்சிடுவதற்குத் திட்டமிட்டு அச்சிட்டு வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

எழை-எளிய மக்களுக்குப் பொருளாதார முன்னேற் றத்திற்குப் பணத்தாள் வழியில் உண்மையில் செயல் படுவதென அரசு எண்ணுமெனில் மேற்கொள்ள வேண்டியப் பணிகள். இரண்டு டிரில்லியன் டாலர் அதாவது ரூ.135 இலக்கம் கோடியளவிலான நம் நாட்டைப் போன்று 9 மடங்கு பெரிய பொருளாதார மாக மட்டுமின்றி தனிமனித சராசரி உள்நாட்டு உற் பத்தி மதிப்பு (உநா.உ.ம) 9 மடங்கு அளவுள்ள அமெரிக்கா, அதேபோன்று நம் அளவிலான பொருளாதாரமாகவும் மட்டுமின்றி தனிமனித சராசரி உ.நா.உ.ம. 8 மடங் குக்கு மேலுள்ள சப்பான் மற்ற பல அய்ரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகள் கூட மிகுமதிப்பு பணத்தாள்களின் அளவை வெறும் 100 என்ற அளவி லேயே வைத்திருக்கும்போது இந்தியாவும் படிப்படியாக மிகுமதிப்பு பணத்தாள் ரூ.100 என்ற அளவிலே வைத்துக் கொண்டு ரூ.500, ரூ.1000, ரூ.2000 இனி வரவிருக்கும் ரூ.200 போன்ற பணத்தாள்களை ஒழித்துக்கட்டவேண்டும். குறைவான மதிப்புப் பணத்தாள் களான ரூ.50, ரூ.20, ரூ.10, ரூ.5 ஆகியவற்றை பல இலக்கம் கோடிகளில் அச்சிட்டு புழக்கத்தில் விடவேண்டும்.

மேலும் டாலரின் பணவீக்கம் ஒரு விழுக்காட் டாளவிலேயே கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் பணவீக்கம் கட்டவிழ்த்துவிடப் பட்டுக் கொண்டே வருகின்றது. இதை விரிவாக பின்பு தனியே விவாதிப்போம். அதனால்தான் 1947இல் ஒரு டாலருக்கு இணையான மதிப்பு ஒரு ரூபாய் என்ற அளவில் இருந்தது. இப்போது 70 ஆண்டு சுதந்தர இந்திய ரூபாய் மதிப்பு ஆண்டுக்கு ஒரு மடங்கு என 70 மடங்கு வரை கிடுகிடுவெனச் சரிந்து வருகின்றது. இதே தன்மையில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு சப்பானின் ‘யென்’, சீனாவின் ‘யான்’ கனடாவின் ‘டாலர்’ போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் கடும் சரிவையே தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றது. இதற்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தின் இடைவெளி இந்தியாவுக்கு எதிராக இருக்கிறது என்பதுடன் அந்த நாடுகளின் ஆக மிகுமதிப்பு பணத்தாள்கள் குறைந்த மதிப்பு அளவிலேயே வைக்கப்பட்டுள்ளதும் ஆகும்.

பணத்தாளில்லா இணைய வணிகப் பரிமாற்றம் இதற்குக் காரணியாக அமைந்துள்ளது. அந்த இலக்கை எட்ட நினைக்கும் இந்தியா எதிர்மறையாக ஆக மிகு மதிப்பு பணத்தால் ரூ.1000 என்று இருந்ததை இரண்டு மடங்கு உயர்த்தி இப்போது ரூ.2000/- பணத்தாளாக புழக்கத்தில் கொண்டு வந்துள்ளது. இதை எந்த வகை யில் அறிவுடைமை பொருளாதாரம் எனக் கொள்ள முடியும். ஒன்றுமட்டும் உறுதி, இது பணவீக்கத்தையும், கையூட்டுக் கலாச்சாரத்தையும், கள்ளப் பணப்பெருக் கத்தையும் கறுப்புப் பணப் பதுக்கலையும் கட்டுங்கடங் காத அளவுக்கு ஊக்குவிக்கும் என்பதற்குக் காட்டு இந்த மிகுமதிப்பு பணத்தாள் மதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்த சில நாள்களில் நிகழ்ந்த அவலங்கள் சமூகத்தின்  பொது ஒழுக்க நெறிகளைச் சீர்குலைத்தன.

*             கோவில் உண்டியல்கள் கொள்ளை உண்டியல் களாக ஆக்கப்பட்டன.

*             வங்கிப் பணியாளர்கள் சிலர் கள்ள நோட்டுக் கயவர்களுடன் கைகோத்துக் கொண்டு புதிய பணத் தாள்களைப் பல கோடிகளில் பதுக்கி வைத்து கையூட்டுப் பெற்று அவர்களுக்குக் கொடுத்தனர்.

*             எளிய மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவர் களைத் தரகர்களாக்கி பணமுதலைகள் பழைய பணத்தாள்களை மாற்றிக் கொண்டனர்.

*             தன்நிதிக் கல்லூரிகள் மாணவர்களைக் கள்ளப் பணமாற்றத்திற்குப் பயன்படுத்திப் பகடைக் காய் களாக்கிக் குற்றச்செயல் புரிய வைத்தனர்.

*             பெரும் ஆலை நிறுவனங்கள் தம் தொழிலாளர் களைப் பலிகடாக்களாக்கி பல ஆயிரம் கோடி மதிப்பிலான மதிப்பிலுள்ள பணத்தாள்களைப் புதிய புதிய பணத்தாள்களாக மாற்றிக் கொண்டனர்.

*             எளிய மக்களுக்கு அரசு வங்கிக் கணக்குத் தொடங்கி அதனைப் பண முதலைகளின் புகலிடங்களாக மாற்றி கொள்ள வழிகோலப்பட்டது.

இவர்களுக்கும் இவர்கள் போன்று வருங்காலத் தில் நடவடிக்கை எடுப்போருக்கும் வேளாண், நெசவு, ஆலைகள், நிறுவனங்கள், பலவகை அரசு நிறு வனங்கள் போன்றவற்றில் உழைப்பை நல்கி உருக் கொலைக்கப்பட்ட தொழிலாளி, பாட்டாளி மக்கள் ஒன்று திரண்டு தக்க பாடத்தையும், தண்டனையையும் அளித் திடுவர். காலம் கனிய சற்று காலமாகலாம். இந்தக் கொடுங்கோன்மைகள் காலவரையின்றி தொடரமுடியாது என்பதை அரசு எந்திரங்களும் உணர்ந்து மக்களைப் போராட்டத்திற்கும், வன்முறைக்கும், புரட்சி வெடிப்ப தற்கும் தூண்டிவிடாத வகையில் தம் செயல்திட்டங் களையும் நடவடிக்கைகளையும் வகுத்துக்  கொள்ளு மாறு பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பலாம்.

இதில் மிகவும் விந்தையானதும் வேடிக்கையா னதும் என்னவெனில் இத்திட்டத்தின் வாயிலாகக் கறுப்புப் பணம் பதுக்கலைக் கருவறுப்போம் என்று கொக்கரித்தார் மோசடி மோடி. இந்த இந்திய அரசு நடுவண் புலனாய்வுத் துறை (CBI-Central Bureauof Investigation) நடுவண் புலனாய்வு முகமை (CIA-Central Intelligent Agency) நடுவண் கூர் நோக்கு ஆணையம் (CVC-Central Vigilence(CVC-Central VigilenceCommission) எனவும் 29 மாநிலங்களிலும் உள்ள, புலனாய்வு நிறுவனங்களும் நாட்டில் எவனெவன் கொள்ளைக்காரன், மோசடிப் பேர்வழிகள், பதுக்கல் பேர்வழிகள் என்று அறியாமல் கைசூப்பிக் கொண்டிருக் கிறார்களா? இவர்களால் எளிதில் அக்கொடுங்கோலர் களைச் சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து அவர்களிடம் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற முடியும்.

ஆனால் அவர்களைக் கடும் தண்டனைக் குள்ளாக்கி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கொண்டு, இணையான பொருளாதாரத்தைத் தங் களின் கறுப்புப்பணப் பேரரசை நடத்திக் கொண்டிருப் பதைக் கண்டும் காணாதது போல் விட்டுவிட்டு அவர் களையெல்லாம் இத்திட்டத்தின் வழி தப்பவிட்டுவிட்டு, ஏழை எளிய பாட்டாளி உழைக்கும் மக்களாக உள்ள நாட்டின் 80-90 விழுக்காடு மக்களைக் கொடுந் துயருக்கும் இன்னலுக்கும் உள்ளாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோரை உயிர்ப்பலி வாங்கிடத்தான் இந்த மிகுமதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்புத் திட்டத்தை மனமறிந்து செயல்படுத்திவிட்டது மோடியின் நடுவண் அரசு. எனவே இத்திட்டம் மொத்தத்தில் வெகுமக் களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இதை உச்சநீதிமன்றம் கோடிட் டும் காட்டியதோடு நிறுத்திக்கொண்டு இதை இரத்து செய்யாமல்விட்டது பெரும் அவலம்.

இவையெல்லாமின்றி நாட்டில் நிலவும் பணப்புழக் கத்தைக் கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி 500, 1000, 5000 கோடி ரூபாய் என அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து பெரும் அளவு கடன் களை வாங்கியுள்ளோர் வங்கிகளை ஏய்த்துவிட்டு மொத்தம் 10 இலக்கம் கோடிவரையில் வராக் கடான ஆக்கிவிட்டுள்ளதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இவ்வாறு பெருங்கடன் வாங்கியோர் யார் யார் என்று தெரிந்திருக்கும் அரசு இவர்களில் யார் யார் வாங்கிய கடனை முறையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை எல்லாம் கண்காணிக்காமல் அக்கயவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து நாட்டின் செல்வம் கொள்ளை போவதெல்லாம் தடுத்திருக்கமுடியும்.

ஆனால் இக்கயவர்களுடன் கள்ள உறவு கொண்டு பல கோடிகளில் கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து கொண்டு அவர்கள் தத்தம் குடும்பங்களுடன் நாட்டைவிட்டே, ஓடவிட்டு விட்டனர். நாட்டின் 80-90 விழுக்காடு மக்களை அவர்களின் அடிப்படைத் தேவையான செலவினங் களை மேற்கொள்ளக்கூட அவர்கள் பணத்தையே அவர்களுக்குக் கிடைக்காதவாறு இத்திட்டத்தைக் கொண்டு வந்து சீர்குலைத்து, சின்னாபின்னப்படுத்தி, அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் குலையுண்ட கொடுங்கோன்மை அரசு கறுப்புப் பணத்தைப் பிடிப்போம். கள்ளப்பணத்தை ஒழிப்போம் என்று கள்ள ஓலமிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இன்றும் நகைப்புக் குரியது பல இலக்கம் பேரின் வங்கிக் கணக்குகளில் முறைகேடுகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்கின்ற னரன்றி அவற்றில் இறுதி நடவடிக்கை எடுத்து முடிக்க பலப்பல ஆண்டுகளாகும் என்றும் சொல்கிறது. என்ன பயன்? அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவர். வழக்குகள் முடிய பல பத்தாண்டுகளும் ஆகலாம். என்ன கொடுமையிது.

நடைமுறைப்படத்தப்பட்ட சில கிழமைகளில் நாடே கொலைக்களமாக ஆக்கப்பட்டு எக்குற்றமும் புரியாமல் வங்கிப் பணியாளர்கள், எளிய நடுநிலை மக்கள் 100 பேருக்கு மேல் தம் இன்னுயிரை இழக்கச் செய்து பலிவாங்கிவிட்டு அவர்களின் குடும்பங்களையும் கொடுந்துயரில் ஆழ்த்திவிட்டு இந்த அரசு இன்னும் அதிகார மமiதையில் கொக்கரித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

Pin It