வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடை பெற்ற தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி வெற்றி பெற்றது. நடுவண் அரசில் கடந்த 25 ஆண்டு காலமாக இருந்துவந்த கூட்டணி ஆட்சிமுறைக்கு ஒரு முடிவுகட்டி, பா.ச.க. தனிப்பெரும்பான்மை யுடன் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது.
இந்த வலிமையின் பின்னணியில் சங் பரிவாரங்கள் இந்துத்துவ வெறிச்செயல்களை அரங்கேற்றத் தொடங்கின. இந்துத்துவக் கொள்கைக்கு எதிராகப் பகுத்தறிவுப் பரப்புரை செய்துவந்த தபோல்கர், கல்புர்கி, பன்சாரி ஆகியோரைக் கொலை செய்தனர். ‘கர்வாப்சி’ என்கிற - தாய் மதத்துக்குத், திரும்புதல் என் பெயரால் இசுலா மியர்களை இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பல இடங்களில் அச்சுறுத்தினர். ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரால் முசுலிம் இளைஞர்கள் இந்துப் பெண் களை ஏமாற்றித் திருமணம் செய்துகொள்ள முனைவ தாகக் கூறி, முசுலீம் இளைஞர்களைத் தாக்கினர்.
பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் இசுலாமியர் களையும் தலித்துகளையும் தாக்கி வருகின்றனர். 2015 செப்டம்பரில் உத்தரப்பிரதேசத்தில் தாத்திரியில் முகம்மது அக்லக் என்பவர் தன் வீட்டில் மாட்டிறைச் சியை ஒளித்து வைத்துள்ளார் என்று கூறி அவருடைய வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றனர். அவருடைய மகனையும் கடுமையாகத் தாக்கினர். இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் முகமது அக்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. முகமது அக்லக்கின் சாவுக்கு யார் பொறுப்பு?
2016 சூலை 11 அன்று குசராத் மாநிலம் கிர்சோம் நாத் மாவட்டத்தில் உனா நகருக்கு அருகில் உள்ள மோடா சமந்ரியாலா என்ற சிற்றூரில், செத்த பசுவின் தோலை நான்கு தலித் இளைஞர்கள் உரித்துக் கொண்டி ருந்த போது, பசுப் பாதுகாப்புக் குண்டர் படை அவர்களைப் பிடித்து மகிழுந்தில் கட்டி, உனா நகரில் தடியாலும் இரும்புக் குழாய்களாலும் பொது மக்கள் முன்னிலை யில் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து தலித்துகள் அகமதாபாத்திலிருந்து உனா நகருக்கு 370 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாபெரும் பேரணியை நடத்தினர்.
1.4.2017 அன்று அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் இராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் 36 மாடுகளை வாங்கி, அவற்றை 6 வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் இராஜஸ்தான் மாநிலத்தின் அல் வார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, பசுப் பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.
அரியானாவில் பால் வணிகரான 55 அகவை யினரான பெகலுகான் படுகாயமடைந்தார். இவர் தாக் கப்பட்ட வீடியோ காட்சிகள் குருதியை உறையச் செய்வன வாக உள்ளன. பெகலுகான் விலா எலும்புகள் நொறுக்கப் பட்டதால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையால் பெகலுகான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான்கு நாள் கழித்து இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் தாக்கப்பட்டனர்.
அல்வாரில் பசுப் பாதுகாப்புப் படையினரால் ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டது குறித்து, 6.4.2017 அன்று மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நவி, அவ்வாறு ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை என்று மறுத்தார். அப்போது காங்கிரசுக் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், “நியூயார்க் டைம்ஸ்” ஏட்டில் இதுகுறித்து செய்தி வந்திருப்பதை அவையில் காட்டினார். அதன்பிறகு மாநிலங்கள் அவையின் துணைத் தலைவர் பி.ஜெ. குரியன், உள்துறை அமைச்சரிடம் உரிய தகவலைப் பெற்று இந்த அவiயில் தெரிவிக்க வேண்டும் என்று முக்தர் அப்பாஸ் நவிக்கு அறிவுறுத்தினார்.
இராஜஸ்தான் மாநில அரசு அல்வாரில் பெகலுகான் தாக்கப்பட்டது குறித்து நடுவண் அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் “அல்வார் முசுலீம்கள் தாக்கப்படுவதை அறிந்தவுடன் காவல்துறை விரைந்து அங்கு சென்றது. படுகாயமடைந்திருந்த பெகலுகானை மருத்துவமனையில் சேர்த்தது. மற்ற நான்கு பேரை யும் மீட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ பதிவைக் கொண்டு காவல்துறை மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இராஜஸ்தான் மாநில அரசு அனுப்பிய அறிக்கையில், சட்ட விரோதமாகப் பசுக்கடத்தலில் ஈடுபட்டதாக இராஜஸ்தானில் கடந்த ஏழு ஆண்டுகளில் 6000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களில் 3000க்கும் மேற்பட்டோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றம் 40 பேரைத் தண்டித்துள்ளது. 59 பேரை விடுதலை செய்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநில அரசின் அறிக்கையின் விவரங்கள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இசுலா மியர்களும், தலித்துகளும் எந்த அளவுக்கு அச்சுறுத் தப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. செத்த மாடுகளை அகற்றுதல், அவற்றின் தோலை உரித்தல், தோலை விற்றல் என்பவற்றை தலித்துகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் காலங்காலமாகச் செய்து வருகின்றனர். மாட்டிறைச்சி குறைந்த விலையில் அவர் களுக்குக் கிடைக்கும் சத்தான உணவாக இருந்து வருகிறது. அதேபோன்று இசுலாமியர் மாடுகளின் தோலை வாக்குதல், தோல் பதனிடுதல், பதனிடப்பட்ட தோலிலிருந்து பலவகையான பொருள்களைத் தயாரித் தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர். இசுலாமியரும் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உடை யவர்கள். எனவே தலித்துகளுக்கும், இசுலாமியருக்கும் வாழ்வாதாரத்திற்கான தொழிலாகவும், உணவாகவும் இருக்கின்ற பசு உள்ளிட்ட கால்நடைகளைக் கிடைக்க விடாமல் இந்து மதத்தின் பெயரால் தடுப்பது அவர் களின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதாகும்.
பால்மடி வற்றிய பசுக்களையும், ஏர் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும் இயலாத நிலையை அடைந்து விட்ட எருதுகளையும் இறைச்சிக்காக உழவர்கள் விற்பது என்பது, நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் சமூக நடைமுறையாகும். இவ்வாறு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கன்றுகளை, காளைகளை உழவர்கள் வாங்குவது வழக்கமாகும். பயன்பாட்டை இழந்துவிட்ட பசுக்களை, காளைகளை இறைச்சிக்காக விற்காமல் வைத்திருந்தால் அவற்றுக் குத் தீனி போடுவது பெருந்திண்டாட்டமாகிவிடும். அதனால் கறவைப் பசுக்களுக்கும், உழைக்கும் காளைகளுக் கும் போதிய தீனி கிடைக்காமல், இரண்டுங்கெட்டான் நிலை ஏற்படும்.
தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமை அமைச்சரானபின், பா.ச.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையான வையாக ஆக்கப்படுகின்றன. குசராத் மாநில சட்டப் பேரவையின் வரவு-செலவுக் கூட்டத் தொடரின் இறுதி நாளான 30.3.2017 அன்று, எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமல் செய்துவிட்டு, 2011ஆம் ஆண்டின் பசுவதைத் தடுப்புச் சட்டத்தில் மேலும் கடுமையான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
குசராத்தில் 1956இல் முதன்முறையாக பசுவதைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 2011இல் நரேந்திர மோடி குசராத் முதலமைச்சராக இருந்தபோது இதில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, பசுவதைக் குற்றத் திற்குக் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் உருவா தண்டமும் விதிக்கப்படும், 30.3.2017 அன்று நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, பசுவதைக் குற்றத்துக்குக் குறைந்தது பத்து ஆண்டுகள் சிறையும்; வாழ்நாள் தண்டனையும் விதிக்கலாம். தண்டம் ஒரு இலட்சம் உருவா முதல் 5 இலட்சம் வரை விதிக்கப்படும், இந்தியா விலேயே பசுவதைக் குற்றத்துக்கு முதன்முதலாக வாழ்நாள் தண்டனை விதித்த பெருமை குசராத்தைச் சாரும் என்று குசராத் முதலமைச்சர் பெருமிதமுடன் கூறியுள்ளார். மேலும் அவர் பசுக்கள், பகவத் கீதை, கங்கை ஆகியவற்றைக் காத்திட பா.ச.க. உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். 2017ஆம் ஆண்டு திசம்பர் மாதம் குசராத் மாநிலச் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை மனதிற்கொண்டே இச்சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
குசராத் சட்டப் பேரவையில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்து இணை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா பேசிய போது, “மத அடிப்படையில் மட்டும் பசுக்கள் முக்கியமானவை அல்ல; பொருளாதார நோக்கிலும் நமது சமூகத்தில் பசுக்கள் மிகவும் முதன் மையானவை; எனவே பசுவதையில் ஈடுபடுவோர்க்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.
பொருளாதார அடிப்படையை மட்டுமே காரணி யாகக் காட்டி பசுவதைத் தடுப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற வரலாற்றைப் பார்ப்போம்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டவரைவு 1947 பிப்பிரவரி 21 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் முன்மொழியப்பட்டது. அதில் பசுப் பாதுகாப்புக் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லை. அதனால் பசுப்புனித வெறியர்கள் வெகுண்டெழுந்தனர். இந்துத்துவ வெறியர்களான பண்டித தாக்கூர்தாஸ் பார்கவா, சேத் கோவிந்தாஸ் ஆகிய இருவரும் அரசமைப்புச் சட்டத்தில் பசுப் பாதுகாப்பு குறித்து 38ஏ என்கிற பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று ஒரு திருத்தத்தை முன்மொழிந்தனர்.
அவர்கள் கொடுத்த திருத்தம் : “வேளாண்மை யையும் கால்நடை வளர்ப்பையும் நவீனமாக்கவும், அறிவியல் அடிப்படையில் மேம்படுத்தவும் குறிப்பாக, பயன்பாட்டில் உள்ள கால்நடைகளின் இனவகை களைப் பேணவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும், பால்தரும் மாடுகளையும், கன்று ஈனும் அகவையில் உள்ள மாடுகளையும், இளம் கன்றுகளையும், உழைக் கும் வலிமையும் உள்ள காளைகளையும் கொல்லப் படுவதைத் தடுக்கவும் அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
மேலே கண்டுள்ள சட்டத் திருத்த வரைவில் மத அடிப்படையோ, பசு புனிதமானது என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. பொருளாதார அடிப்படையில் தான் இத்திருத்தம் அமைந்துள்ளது. பால்மடி வற்றிய பசுக்களை, உழைக்கும் வலிமையை இழந்த வயதான எருதுகளை இறைச்சிக்காக வெட்டப்படுவதற்குத் தடை ஏதும் இதில் கூறப்படவில்லை.
இந்துத்துவ வாதிகள் இச்சட்டத்தை அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்த்திட வேண்டுமென அவை உறுப்பினர்களிடையே ஆதரவு திரட்டினர். அந்நிலையில் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத் 1947 ஆகத்து 7 அன்று பிரதமராக இருந்த நேருவுக்கு ஒரு மடல் எழுதினார். அம்மடலில், “பசுக்கள் கொல்லப்படுவதைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும் என்று நாள்தோறும் எனக்கு எண் ணற்ற மடல்களும் தந்திகளும் வந்துகொண்டே இருக் கின்றன. பசுப் பாதுகாப்பு என்பது இந்துக்களின் உள்ளங் களில் நெடுங்காலமாக வேரூன்றியுள்ள மத நம்பிக்கை யாகும். எனவே இதைப்பற்றி நாம் விரைவில் முடி வெடுக்க வேண்டும்” என்று கூறி நேருவுக்கு அழுத்தம் கொடுத்தார், இராசேந்திர பிரசாத்.
பசுவதைத் தடுப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான கருத்தை அம்பேத்கர் கொண்டிருந்த போதிலும், அடிப் படை உரிமைகள் பகுதியில் இச்சட்டம் இடம்பெற்றால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேராபத்தை கருத்தில் கொண்டு, அரசுக் கொள்கைகள் வழிகாட்டும் நெறிகள் (னுசைநஉவiஎந யீசinஉiயீடநள டிக ளுவயவந யீடிடiஉல) பகுதியில் வைத்திட முடிவு செய்தார். எனவே இச்சட்டத்தைத் தீவிரமாக ஆதரிப்போரை அம்பேத்கர் தன் அலுவலகத் திற்கு அழைத்துப் பேசி அவர்களை இதற்கு இணங்கச் செய்தார்.
அதனால்தான் வழிகாட்டும் நெறிகள் பகுதியில் 48ஆவது பிரிவாகப் பசுவதைத் தடைச் சட்டம் சேர்க் கப்பட்டது. இதன் மீதான விவாதம் அரசமைப்புச் சட்ட அவையில் நடந்தபோது, தாக்கூர்தாஸ் பார்கவே பேசிய போது, “அம்பேத்கர் நயமாகப் பேசி இச்சட்டம் வழிகாட்டும் நெறி பகுதியில் சேர்த்திட எங்களை இணங்கச் செய்துவிட்டார். இது நல்லெண்ணத்தின் பேரில் நாங்கள் செய்த தியாகம்” என்று கூறினார்.
வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாடு என்கிற போர்வையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அம்பேத் கரின் முயற்சியால் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனால்தான் இன்று பல மாநிலங் களில் பால்மடி வற்றிய பசுக்களையும், உழைப்புக்குப் பயன்படுத்த முடியாத எருதுகளையும் இறைச்சிக்காக வெட்ட முடிகிறது. எனவேதான் இப்போது ஆர்.எஸ்.எஸ். இன் தலைவராக இருக்கும் மோகன் பகவத் இச் சட்டத்தை மாநிலப் பட்டியலிலிருந்து பறித்துப் பொதுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறிவருகிறார்.
பசுவதைத் தடைச் சட்டத்தை நடுவண் அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். 1966 நவம்பர் 7 அன்று தில்லியில் நிர்வாணசாமியார் களைக் கொண்ட பேரணியை நடத்தியது. இது பெரும் கலவரத்தில் முடிந்தது. 1979இல் மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராக இருந்தபோதும், 2003இல் வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்த போதும் பசுவதைத் தடைச் சட்டத்தை பொது அதிகாரப் பட்டியலில் சேர்த்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது நிறைவேறாமல் போனது. இப்போது தனிப்பெரும்பான் மையுடன் வலிமையான தலைவரான நரேந்திர மோடி யின் ஆட்சி நடப்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பசுவதைத் தடைச் சட்டத்தை இந்தியா முழு மைக்கும் பொருந்தும்படியான வகையில் பொது அதிகாரப் பட்டியலில் சேர்த்திட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்.
தற்போது கேரளம், மேற்குவங்காளம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் இல்லை. பசுவதைத் தடைச் சட்டம் ஒவ்வொரு மாநிலத் திற்கும் ஒவ்வொரு வகையாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் பால்மடி வற்றிய பசுக்கள், எருமைகள், உழைப்புக்கு உதவாத எருதுகள், எருமைகள் ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்குத் தடையோ, எதிர்ப்போ இல்லை. மேலும் எந்தவொரு உழவரும் பால்தரும் பசுவையோ, எருமையையோ உழவு செய்யும் - வண்டி இழுக்கும் எருதையோ, எருமையையோ இறைச்சிக்காக விற்க மாட்டார் என்கிற சாதாரண உண்மையைப் புரிந்து கொண்டால் பசுவதைத் தடைச் சட்டம் என்பதற்கான தேவையே இல்லாமல் போய்விடும்.
பசுவதைத் தடைச் சட்டம் பற்றிக் கூச்சலிடும் மோடி ஆட்சியில்தான் மாட்டிறைச்சி அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. அதன் விவரம் :
உலக அளவில் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் நீர் எருமை (றுயவநச க்ஷரககயடடி) இறைச்சியை மற்ற நாடுகள் விரும்பி வாங்கு கின்றன. பசுப் பாதுகாப்பு குண்டர் படையின் அட்டூழியத் தால் எருமை இறைச்சி எற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரரான யோகி ஆதித்தியா முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் மாட்டிறைச்சிக் கூடங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தார். இந்தியாவில் உற்பத்தியாகும் எருமை இறைச்சி யில் 46.78 விழுக்காடு உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தில் அரசின் வழிகாட்டும் நெறிப்பகுதியில் 48ஆவது விதியில், “நவீன மற்றும் அறிவியல் அடிப்படையில் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் அமைக்கவும், குறிப்பாக, கால்நடை இனங்களைப் பேணவும், மேம்படுத்தவும், மற்றும் பசுக்களையும், கன்றுகளையும் மற்ற பால் தரும் மாடுகளையும், உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காளைகளையும் இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடுக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.
இதன்படி, பால்மடி வற்றிய பசுக்களையும், உழைப் புக்குப் பயன்பட முடியாத நிலையை அடைந்துவிட்ட எருதுகளையும் இறைச்சிக்காக வெட்டலாம் என்பது தெளிவாகிறது. 1958இல் உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை முசுலீம்கள், தலித்துகள் தவிர, இந்துக்களிலே பல சாதியினர் உண்கின்றனர். எனவே கோடிக்கணக்கான மக்களுக்குக் குறைந்த விலையில் சத்தான உணவாக மாட்டிறைச்சி அமைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகத் தோல் தொழில் இருக்கிறது. இந்தியாவில் 75 விழுக்காட்டினர் புலால் உணவு உண்கின்றனர். நட்சத்திர உணவு விடுதிகளில் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எதை உண்பது என்பது மக்களின் சனநாயக உரிமை.
முசுலீம்களை எதிரிகளாகக் காட்டவும், இந்துக்களின் வாக்குகளைப் “பசு-புனிதம்” என்ற பெயரால் திரட்டிக் கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. முன்னிறுத்தும் பசுவதைத் தடுப்பு என்ற பொய்மையின் முகத்திரை யைக் கிழித்தெறிவோம்.