வகுப்புரிமை, இனஉணர்வு, சமதர்மம், பகுத் தறிவு போன்ற பல்வேறு தளங்களில் தன் வாழ் நாளில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி யவர் பெரியார். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரி லேயே இயங்கினார். எந்த மனிதனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் தன் மதிப்பு என்பது முக்கியம் என்பதுதான் அவரது கொள்கை. மனித உரிமைகளும் உணர்வுகளும் நசுக்கப்படும் இடங்களிளெல்லாம் பெரியாரியம் பேசப்படும்.

தமிழ்நாடு என்றால் இடஒதுக்கீடும் கடவுள் மறுப் பும் அதையொட்டிய மாற்றங்களுக்கும் முதன்மை யான காரணமானவர் பெரியார்தான் என உலகத்தார் பார்க்கின்றனர். கல்வி, பகுத்தறிவு, கலை, அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுத் தளங்களில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நடந்தன. காலங்காலமாகப் பின் பற்றப்பட்ட பழக்கவழக்கங்களெல்லாம் கேள்விக்குட் படுத்தப்பட்டன. மறுக்கப்பட்ட மனித உரிமைகளெல் லாம் மீட்டெடுக்கப்பட்டன. சமத்துவத்துக்கும் சமஉரி மைக்கும் அடித்தளமிடப்பட்டன. பெரியாரும் அவரது இயக்கமும் கண்ட வெற்றிகள் அவை.

இழிவைப் போக்கி அறிவும் மான உணர்ச்சியும் ஏற்படுத்த உருவானதுதான் Self Respect Propaganda

Institution என்ற ஆங்கிலப் பெயரில் தொடங் கப்பட்ட சுயமரியாதை இயக்கம். சோவியத் இரசியா வைப் போல் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே அவரது கனவு. அந்த அடிப்படையிலேயே பாகிஸ்தான் பிரிவினையின்போது இவரும் தனிநாடு கேட்டார். சுரண்டிலின் வடிவமான பார்ப்பனியம் ஒழிக்கப்பட அடித்தட்டு மக்களின் விடுதலைக்காகவே வாழ்நாளெல் லாம் உழைத்தார். கல்வி, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் போன்ற துறைகளில் பெரியாரின் உழைப் பால் பெரிதும் பலன் பெற்றவர்கள் இடைநிலைச் சாதியின் மேல்தட்டு மக்கள்தான்.

“நெல்லுக்கு இறைத்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது” என்பதுபோலச், சாதி இறுக்கத்தில் ஏற்பட்ட நெகிழ்வுத் தன்மையால் அடித்தட்டு மக்கள் விடுதலை உணர்ச்சி பெற்றனர். அதனால் நடுத்தர வர்க்கம் என்ற பிரி வினர் கொஞ்சம் கூடுதலாக உருவானது. பன்னாட்டு நிறுவனங்களின் காலூன்றல் தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கல்வி, அரசியல் அறிவு பரவலாக்கப்பட்டது. மக்களின் வாங்கும் சக்தி மற்ற மாநிலங்களைவிட இங்கு அதிகம். அரை நூற்றாண்டுக்கு மேல் பெரியார் உழைத்த உழைப்பு தான் இவ்வளவுக்கும் அடிப்படை காரணம். தன் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளும் துணிச்சல் இங்கு எவருக்கும் இருப்ப தில்லை. பெரியார்தான், சுயமரியாதை இயக்கம்தான் அதற்கு முழுப் பொறுப்பு.

சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் இன்றைக்கு மற்ற மாநிலங்களைவிடத் தமிழர்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம் என்றால், அதற்கு விடை தேட வேண்டியிருக்கிறது. வீண் பெருமை பேசுவதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறோம். இன, மொழி, பண்பாட்டு வளர்ச்சியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல்தான். சாதி, மதச் சச்சரவு களில் நாமென்ன மற்றவருக்குச் சளைத்தவர்களா? ஆண், பெண் பாலின வேறுபாட்டில் எங்காவது முன் மாதிரியாக இருக்கிறோமா? தீண்டாமை ஒழிப்பதில், தலித் உரிமை மதிப்பதில் எத்தனை அடி முன் னெடுத்து வைத்திருக்கிறோம்? இப்படி நமக்கு நாமே கேள்விகள் கேட்டுப் பார்த்தால் இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பது தெரியவரும்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதைத் திருமணம் என்ற பண்பாட்டுப் புரட்சியைப் பெரியார் இயக்கத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. 1968இல் இத்திருமணங்களை அங்கீகரிக்கின்ற சட்டப்பிரிவும், தமிழ்நாட்டில்தான் இயற்றப்பட்டது. அதுநாள் வரை யில் பார்ப்பனக் குருக்கள் மந்திரம் ஓதி நடத்தப்படாமல் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணங்கள்கூட அப்போ திலிருந்தே செல்லும்படியாயின. அவ்வளவு அழுத்த மான வரலாறு கொண்ட சாதி மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு கொண்ட சுயமரியாதைத் திருமண முறை தமிழகத்தில் வளராமல் போனதற்கு என்ன காரணம்?

சுயமரியாதைத் திருமணம் என்றால், பார்ப்பனத் தலைமையை, பார்ப்பனியப் பண்பாட்டை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதுதான். தாலி கட்டுவது, நேரம்-காலம் பார்ப்பது, சாதியைப் பிசகாமல் காப்பது, ஆடம் பர விருந்துகள், அலங்காரங்கள் எல்லாம் செய்துவிட்டு அய்யரை மட்டும் அழைக்கவில்லை என்றால் அது எப்படிச் சுயமரியாதைத் திருமணமாகும்? மாறாக, பார்ப்பனியமயமாக்கப்பட்ட தமிழர் திருமணம் என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பனியக் கலாச்சாரத் தில் சற்றும் குறையாமல் திருமணம் நடத்தப்பட்டு பிறகு பார்ப்பான் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? இதுதான் இன்றைக்குத் திராவிட இயக்கத் தலைவர் களால் பெரிதும் நடத்தப்படுகின்ற திருமண முறையாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் என்பது கொள்கை சார்ந்தது; பண்பாட்டுப் புரட்சி சார்ந்தது என்பதை இவர்கள் உணரவில்லை.

சீர்திருத்த, சடங்குகள் மறுத்த, சாதி மறுத்த புரட்சிகரத் திருமணங்களின் நோக்கம் என்ன? சாதி ஒழிப்புதான். சாதியைத் தக்கவைத்துக் கொண்டு நடத்தப்படுகின்ற எந்த சீர்திருத்தத் திருமணமானாலும் அது வெற்று மேல்பூச்சுதான். சாதி மறுப்பிலே கூட மென்மையான, ஆபத்தான இரண்டு வகைகள் இருக் கின்றன. மேல்சாதி உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் திருமணங்கள் மென்மையான வகைப்பட்டவை. வர்க்கம் சார்ந்தவை. மேல்சாதி - கீழ்ச்சாதிக்கிடையே நடைபெறும் திருமணங்கள் ஆபத்தான வகையைச் சார்ந்தவை. அவை கொலையில் போய் முடிவது. திருமணம் செய்துகொண்ட ஆண் மேல்சாதியைச் சேர்ந்தவனாகவும் பெண் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவளா கவும் இருந்தால் கீழ்ச்சாதிப் பெண்ணைக் கொலை செய்வதோடு நிறுத்திவிடுவார்கள். அதேவேளை, ஆண் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவனாகவும், பெண் மேல்சாதியைச் சேர்ந்தவளாகவும் இருந்துவிட்டால், அவளைக் கொன்றுவிட்டு, அவனையும் கொல்வதோடு மட்டும் அல்லாமல், அவன் சார்ந்த சமூகத்தையும், அவர்களின் உடைமைகளையும் சேர்த்து அழிப்பார்கள்.

இதுபோன்ற கொலைகளுக்குச் சமூகம், அரசு, நீதிமன்றம் எல்லாம் சேர்ந்து ஒரு பெயர் வைத்திருக் கிறது. அதுதான் “கௌரவக் கொலை”. சாதியக் கொலை களைச் செய்துவிட்டு அதற்குக் கௌரவக் கொலை என்று பெயர் சூட்டுகிறார்கள். கௌரவம் என்ற வடச் சொல்லுக்குத் தமிழில் மானம், மரியாதை என்றுதான் பொருள், தனிமனித அல்லது சமூக மாண்பினை, நாகரிகத்தைக் குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடுவாரானால் அதனால் ஏற்படக்கூடிய அவமானம்தான் கௌரவத்திற்கு எதிரான, அவமான மாகக் கொள்ளலாம். அதற்குத் தண்டனையும்கூட இருக்கலாம்; தவறில்லை. ஒரு உயிரையே எடுப்பது என்பது எந்த வகையைச் சார்ந்தது?

2010-ஆம் ஆண்டில் உலகில் 5000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும், அதில் 1000 கொலை கள் இந்தியாவில் நடந்தவை என்று அய்.நா. மன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 90 விழுக்காடு கௌரவக் கொலைகள் நடைபெறுவதாகச் சொல்லப் படுகிறது. இவை பெரும்பாலும் ‘காப் பஞ்சாயத் துகளின்’ தீர்ப்புகளை ஒட்டியே நிகழ்த்தப்பட்டவை.

வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் ‘காப் பஞ்சாயத்துகள்’ எனும் சபைகள் இயங்கி வருகின்றன. உள்சாதி ஒழுங்க மைவுகளைக் கட்டிக்காப்பதே இச்சபைகளின் முக்கிய செயல்பாடு. 12, 24, 84 போன்ற எண்ணிக்கையி லுள்ள கிராமங்களை உள்ளடக்கியது ஒரு காப். காதல் மணம்புரியும் இணைகளைப் பிரித்து வைப்பது, ஊர் நீக்கம் செய்வது, கௌரவக் கொலை செய்வது, இல்லையேல் தற்கொலைக்குத் தூண்டுவது இதுதான் இச்சபைகளின் செயல்பாடு. இச்செயல்பாடுகள் மூலம் காப் சபைகள் சாதிய, கோத்திரத் தூய்மையைக் காக்கின்றன எனச் சொல்லித் திரிகின்றனர்.

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் இல்லையா? என்றால், அதன் வேறு வடிவமான கட்டப்பஞ்சாயத்து வடிவில் செயல்படுகிறது. இவைகூடச் சமூக விலக்கம், சாதி நீக்கம், கௌரவக் கொலைகள் வாயிலாகச் சாதிய, கோத்திரத் தூய்மையைப் பேணி பாதுகாக்கப்படுகிறது எனச் சொல்லித் திரிகின்றனர். அவரவர் பகுதியில் பெருவாரியாக இருக்கும் சாதிகளுக்குத் தகுந்தாற் போல் சங்கம் வடிவிலும் அதன் அரசியல் வடிவிலும் ஆதரவு அளித்துக் காத்து வருகின்றனர் இங்கிருக்கும் சாதி அரசியல் கட்சித் தலைவர்கள். யாராவது எங்கா வது வெட்டிக் கொல்லுங்கள்; கட்டிக் கொல்லுங்கள். எங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லை எனக் கள்ள மவுனம் காப்பவர்கள்தாம் திராவிட இயக்க அரசியல் கட்சியினர்.

சாதி மறுப்புக் காதல் உறவுகள், திருமணங்கள், ஒரே சாதிக்குள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவினர்களுக்குள்ளான உறவுகள்/திருமணங்கள் ஒரே சாதித் திருமணங்களில் வர்க்க வேறுபாடுகள், ஆண்-பெண் உறவுமுறைக்குள் வராத ஒருபாலர் உறவுமுறைகள், பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத் தப்பட்ட காரணங்கள் மற்றும் வேறு சில காரணங் களினாலும் கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன. 2008-லிருந்து 2010 வரையிலும் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 1971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். தற்கொலை செய்துகொண்டவர்களில் கௌரவக் கொலைகளும் அடங்கியிருக்கலாம். கௌரவக் கொலைகளைத் தற்கொலைகள் என்று மூடி மறைப்பதற்குக் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

பாட்டிக் கதைகள், இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்தோமேயா னால் சாதிய, வர்க்கப் பகைகளினால் ஏற்பட்ட எண் ணற்ற கொலைகளை நியாயப்படுத்தி வந்ததைப் பார்க்கலாம். நீதி, நேர்மைக்கு மனித உரிமைகளை நிலைநாட்ட போராடியவர்களின் தiலைகள் உருண் டோடியதைத்தான் வரலாறு நெடுகிலும் காண முடிகிறது. பறையரான காத்தவராயன் பார்ப்பனத்தியான ஆரிய மாலாவை காதலித்து அவளுடன் ஊரைவிட்டு வெளி யேறுகிறான். இவ்வழக்கு அரசனுக்கு வருகிறது. இணையர் இழுத்து வரப்படுகின்றனர். முதலில் விடுதலை செய்யப்படுகின்றனர். பார்ப்பனர்களின் போராட்டத்தினால் மன்னன் தீர்ப்பை மாற்றுகிறான். மணமக்கள் இருவரும் உயிரோடு கொளுத்தப்படு கிறார்கள். இது கதையாக இருந்தாலும், சொல்லும் சேதி என்ன? கௌரவக் கொலை என்பது இந்துப் பண்பாட்டில் இன்று நேற்றல்ல, காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் கொளுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தலித்துகள் தான்.

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வேன், வரதட் சணை வாங்கமாட்டேன் போன்ற உறுதிமொழிகளைப் பெரியார் இயக்க மேடைகளில் உணர்ந்தோ, உணரா மலோ முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதே பெரியார் பிறந்த கொங்கு நாட்டு மண்ணில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார்கள். அங்கிருக்கும் கொங்கு வேளாளர் அமைப்பினர் தமக்கிருக்கும் அரசியல் செல்வாக் கினைப் பயன்படுத்திக் கலப்புத் திருமணங்களைத் தடைசெய்யக்கோரித் தீர்மானம் நிறைவேற்றுகின்ற னர். ஆதிக்கசாதியின் கொடுமைகளிலிருந்து தலித்து களைப் பாதுகாக்கும் பெயரளவிலான வன்கொடுமைத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி பல ஆண்டு களாக வலியுறுத்துகின்றனர். தலித் இளைஞர்கள் இடைநிலை சாதிப் பெண்களுடன் இணைந்து படிக் கிறார்கள்; பழகுகிறார்கள்; காதல் திருமணங்கள் தவிர்க்க முடியாததாகின்றது. இதன் மூலம் சாதியமைப்பு உடை வது கண்டு சாதிக்கட்சிகள் அலறுகின்றன. மாதொரு பாகன் நாவலாசிரியர் பெருமாள்முருகன் மீது தொடுத்த தாக்குதல்கூட இந்தப் பின்னணியில்தான் என்பதை யும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இருக் கும் இவர்களது குரல்களின் அடிப்படையே தலித் எதிர்ப்புதான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் இவர்களைப் பெயரளவிற்குக் கூட எதிர்ப் பதற்கு வலிமையற்றுக் கிடக்கின்றன. திராவிட இயக்க அமைப்புகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும். அதாவது மேற்சொன்ன சாதி வெறியர்களின் கிளைகள் இந்த அமைப்புகளிளெல்லாம் பரவி இருக்கின்றன. சாதி ஆதிக்கவாதிகளுக்குப் பெரியாரின் பேரன்கள் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் பெரியாரை ஒழுங்காகப் படிக்கவில்லையா? அல்லது பெரியாரைத் தங்களது சுயநலத்துக்குப் பயன் படுத்திக் கொண்டிருப்பதா? அன்றைக்கும் அப்படித் தான் நடந்தது. இன்றைக்கும் இப்படித்தான் நடக்கிறது.

மக்களுள் கால்பங்கு மக்கள் தொகை கொண்ட தலித் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கருதிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள். அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரம், வளர்ச்சி இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. விலங்குகளைவிடக் கீழாகவே நடத்துகிறார் கள். அவர்களும் மனிதர்கள் என்பதை மறந்துவிடு கிறார்கள். மனித உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசும் அட்டைக்கத்தி பயில்வான்கள், ஏனோ தலித்து களைப் பொறுத்தமட்டில் ஊமையாகிவிடுகிறார்கள். அய்.நா.வின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை : 1. குடிமையியல், 2. அரசியல் உரிமைகள், 3. பொரு ளாதார உரிமைகள், 4. சமூக உரிமைகள், 5. கலாச் சார உரிமைகள் என ஐந்து வகைகளாகப் பிரித்திருக் கிறார்கள். இதில் ஏதாவது ஒன்றிலாவது அவர்களை மதிக்கிறார்களா?

தமிழகச் சட்டமன்ற விவாதத்தின் போது “தமிழ கத்தில் கௌரவக் கொலைகள் நடைபெறவில்லை. இரு சமூகத்தைச் சேர்ந்த இருபாலர் இடையே ஏற்படும் காதல் சம்பவங்களில் ஏற்படும் பிரச்சனை களில் தற்கொலை செய்துகொள்வது, சந்தேக முறை யில் மரணம் அடைவது போன்றவை எப்போதாவது நடக்கின்றன” எனக் காவல்துறை எழுதிக்கொடுத்ததை அப்படியே வாசிக்கிறார், மாண்புமிகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள். அய்ரோப்பாவிலிருந்து ஐந்து நாள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தவன் கூட இப்படி பேசமாட்டான். தலித் விரோதிகள் எங்கு எந்தப் பதவியில் இருந்தால் என்ன? குரல் ஒரே மாதிரிதானே ஒலிக்கும்.

அம்பேத்கர் படத்தை வெட்கமில்லாமல் போட்டுக் கொள்ளும் அரசியல் கட்சிகள், சாதிக்கட்சிகள் அவரைக் கொஞ்சமாவது படிக்கவேண்டாமா? ஒருவேளை, படித்தாலும் அதைக் கட்சியில் பேச வேண்டாமா? அவர்களின் ஓட்டு வேண்டும்; அவர்கள் வேண்டாம். தலித் பெண்களின் உடல் வேண்டும்; உறவு வேண் டாம். இதுதான் இந்துக் கலாச்சாரம். காதலியாக இருந்த வள், மனைவியாகக் கூடாது. காதலனாக இருந்தவன் கணவனாகக் கூடாது. அப்படி நடப்பதை இந்து மதம் அனுமதிக்கவில்லை. மீறி நடந்தால் கௌரவக் கொலைதான் தீர்வு. இதை நடத்துகின்ற இந்துத்துவா காவலர்கள் எல்லாக் கட்சிகளிலேயும் இருக்கிறார்கள். ஆண்-பெண் விகிதத்தை எல்லாக் காலங்களிலேயும் ஒரே சீராக வைத்திருப்பதுதான் சாதியத்தின் அடிப் படை. இந்து மதத்தின் சூட்சமத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மேதை அம்பேத்கர்.

அம்பேத்கர் 1916-இல் கொலம்பியா பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில் “இந்தியாவில் சாதிகள் - அவற்றின் நுட்பம், மூலக் காரணம், வளர்ச்சி” என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். இக்கட்டுரையின் பிழிவாக அகமண முறைதான் சாதியம் நீடிப்பதற்கு அடிப்படைக் காரணம் எனக் குறிப்பிட்டார். ஒத்தக் குழுவில் ஆண்-பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள் மீது திணிக்கப்படும் விதவைக்கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகள் இதன் தொடர்ச்சி என்றார். 1936இல் சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையில் கூட “சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி கலப்பு மணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதைத்தவிர வேறு எதுவும் சாதியைப் பலவீனப் படுத்த முடியாது” என்றார்.

அந்த அச்சத்தினால்தான் இந்திய அறிவாளிகள் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கக்கூடத் தயங்கு கிறார்கள். அவரைப் பற்றிப் பேசினால் சாதி ஒழிப்பைப் பற்றி பேசவேண்டும். சாதி ஒழிப்பைப் பற்றி பேசினால் தலித்துகளுடன் சமரசமாக உறவாட வேண்டிவரும். சாதி அடுக்கில் இத்தனை நாள் மேலேயிருந்து சுரண்டியவன் நிலை கேள்விக்குறியாகும். தானாகக் கிடைத்த அதிகாரத்தை ஏன் இழக்க வேண்டும்? அந்த நிலைக்குச் சோதனை வந்தால், வன்முறைதான்; கொலைதான். மேல்சாதியில் இருப்பவன் கீழ்ச்சாதி யில் இருப்பவனைக் கொல்வதைக் குற்ற உணர் வாகக் கொள்ளவில்லை. அதனால்தான் அக்கொலைக் குக் “கௌரவக் கொலை” என்று பெயர் வைக்கிறான். உறவுக்குள் நுழையவரும் தீண்டப்படாதவர்களை அழிப்பதற்குப் பெயர்தானே கௌரவக் கொலை. அப்படியானால், முற்போக்காளர்கள் சாதி ஒழிப்புக்குத் தீண்டாமை ஒழிப்பை முன் நிபந்தனையாகக் கொள்ள வேண்டும். அதற்குக் களம் காணவேண்டும்.

இந்து மதத்தை நிர்-நிர்மாணம் (De-Constrution) செய்வதே அம்பேத்கரின் இலக்கு. அந்த இலக்கு நோக்கியே தனது தீண்டாமை ஒழிப்புப் பணியைத் தொடங்கினார். சமூக இயக்கக் கோட்பாட்டின்படி, “எது முதலில் தோன்றியதோ, அது கடைசியில் அழியும்; எது இடையில் தோன்றியதோ அது இடையில் அழியும்; எது கடைசியில் தோன்றியதோ அது முதலில் அழியும்.” கவுரவத்தைக் காப்பதற்குக் கொலை செய் பவனும், கொலையையே தொழிலாகச் செய்பவனும் வேறு வேறு அல்ல. சாதியைக் காப்பாற்றுபவர்கள் எல்லோரும் கொலைகாரர்களே!

அரசியல் அதிகாரத்தை நோக்கித் தலித்துகள் முன்னேற வேண்டும் என்ற அம்பேத்கரின் சிந்தனை யையும், பார்ப்பனியப் பழக்கவழக்கங்களை விட் டொழித்தால்தான் சூத்திரர்களுக்கு விடுதலை என்ற பெரியாரின் சிந்தனையையும் பாதிக்கப்படும் அப்பாவி தலித் மக்களும் கவுரவக் கொலைகாரர்களும் பாடமாகக் கொள்ள வேண்டும்.

Pin It